ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் குழந்தைப் பருவ நண்பர் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குகத்பல்லி உள்ள Moosapet பகுதியிலே இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு நண்பர்களும் பயணித்த பைக் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், மென்பொருள் பொறியாளர் ஹரிகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பைக் ஓட்டி வந்த ரமேஷ் உயிர்பிழைத்துள்ளார்.
நண்பன் இறந்த சோகத்தில் ரமேஷ் அருகிலுள்ள பாரத் நகருக்கு சென்று தற்கொலை செய்துள்ளார்.
ரமேஷின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுத்ததாக பொலிசார் தெரவித்துள்ளனர். மேலும், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
20 வயதுடைய இளைஞர்கள் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் குகத்பல்லியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.
இத்துயர சம்பவத்தினால் இரு குடும்பங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பீகாரில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் கடிகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக கங்கை நதியில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் அழுகிய நிலையில் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து அந்த உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் மறுநாள் வரை பிரேத பரிசோதனை செய்யாத மருத்துவர்கள், உடலை அருகிலுள்ள பாகல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
அவரது உறவினர்கள் தங்களிடம் பணம் இல்லாத காரணத்தால், அம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர், ஆனால் எந்தவித வசதியும் மருத்துவர்கள் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இறந்தவர் உடலை அவரது உறவினர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு தூக்கி சென்றுள்ளனர். வழியில் கூட அவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
சாதாரண மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கூட கிடைக்காத இது போன்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என இரண்டு பேர் பெற்றோராக இருப்பர். ஆனால், தற்போது 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பெற்றோர் இணைந்து ஒரு குழந்தையைப் பெற்றுள்ளனர்.
தாய், தந்தை, கரு தானம் செய்தவர் ஆகிய மூவரும் இந்த முயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
சிலருக்கு மரபணு குறைபாடு காரணமாக குழந்தைகள் பிறப்பதில்லை. குழந்தை உருவானாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. சிலவேளை குழந்தை பிறந்தாலும் ஒரு விதமான விநோத நோயினால் குழந்தை இறந்துவிடுகிறது.
இக்குறைபாட்டைப் போக்கவே 3 பெற்றோர் மூலம் கருத்தரிக்கச் செய்து ஒரு குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயின் மரபணுவில் உள்ள அரிய நோய் குழந்தையைப் பாதிக்காமல் இருப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அனைவரது உடலிலும் உள்ள செல்களில் மைட்டோ காண்ட்ரியாக்கள் உள்ளன. இவை ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு உணவை சக்தியாக மாற்றி எடுத்துச்செல்கின்றன. ஆனால், சில பெண்களுக்கு அந்த மைட்டோ காண்ட்ரியாக்களில் மரபணு குறைபாடுகள் உள்ளன. அதனால் தான் குழந்தைகள் பிறப்பு தடுக்கப்படுகிறது. அதைப்போக்க நல்ல உடல் நலத்துடன் கூடிய மற்றொரு பெண்ணின் மைட்டோ காண்ட்ரியாவை கருவுற்ற பெண்ணின் கருமுட்டையுடன் இணைக்கின்றனர். அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோயில் இருந்து காக்கப்படுகின்றன.
இது போன்ற குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது. ஜோர்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்தது. அவருக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாகப் பெறப்பட்டு ஜோர்தான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் ஜோர்தான் பெண்ணின் கணவர் விந்தணு கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருத்தரிக்க செய்யப்பட்டது. அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அது 5 மாத குழந்தையாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
இந்த முயற்சியில் அமெரிக்க மருத்துவர்கள் குழு ஈடுபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை மெக்சிக்கோவுக்கு வரவழைத்து உலகில் முதன்முறையாக 3 பெற்றோர் இணைந்து பெற்றெடுத்த குழந்தையை உருவாக்கியுள்ளனர். ஏனெனில் மெக்சிக்கோவில் இதுபோன்று குழந்தை பெற தடைச்சட்டம் எதுவும் இல்லை.
மருத்துவத்துறையில் இது ஒரு புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.
இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெரு நகரங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான் எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்து வந்தது. இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது. பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டுபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது.
லேசர் ஒளியை பாய்ச்சுவது, கமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டின் அரசு ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், அத்துமீறலாக சில வேளைகளில் இதுபோல் சில ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்களும் இங்கு நிகழந்தவாறுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி இதேபோல் பறந்த ஒரு ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் டுபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 70 நிமிடங்கள் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி மாட்டி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் மாட்டி வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள்.
வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து வைத்தார்கள். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியில் தற்காலத்தில் போட்டோக்களில் முன்னோர்களின் உருவத்தினை காண்கிறோம்.
இந்த படங்களை வீட்டில் அவர்கள் நினைவாக வைத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோல அவர்கள் படங்களை தென்திசை நோக்கிதான் மாட்டி வைக்க வேண்டும் என்பதில்லை. எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் மாட்டலாம். முன்னோர்களின் படங்களை பூஜையறையில் வைப்பது மட்டும் கூடாது. பூஜையறை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் எந்த திசை நோக்கியும் மாட்டி வைக்கலாம். இதில் எந்தத் தவறும் இல்லை.
நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது.நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைக்கும் மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்படுவது திட்டமிட்ட மின் தடை அல்ல எனவும் அவை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களாகும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை, பொதுவாக இந்த மாதங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என்ற போதிலும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும் என இலங்கை மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி கூறியுள்ளார்.
இதனால் மின்சாரத் தடைபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் வரட்சி நீடித்தால் மின்சார விநியோகம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் சுமையை குறைப்பது தொடர்பில் தலையிட உலகின் முக்கிய நாடுகள் சில இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் இவ்வாறு இணங்கியுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழு நேற்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த வேளை இதனை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்போது இலங்கையின் கடன் தொகை 8500 பில்லியன் ரூபாய் வரை உள்ளதாகவும் அவற்றில் 42 வீதம் வௌிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரிய யோசித, தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி காரணமாக யோசிதவின் கடவுச்சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற ஏக்கத்துடன் அவர்களின் பொழுது விடிகின்றது.
அப்படி தனது வாழ்க்கை துணைவரை இறுதி யுத்ததில் தொலைத்துவிட்டு தனது மகன் ஒருவரை தேச விடுதலைக்காய் மாவீரனாக கொடுத்து விட்டு வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் என்னும் கிராமத்தில் வசித்து வருகின்றார்.
இவர்களால் நாளந்தம் தங்களுடைய அடிப்படைத்தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடிய வில்லை. குறிப்பாக உணவு மற்றும் உடைகளை கூட இவர்களால் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றது.
இவர்களின் வாழ்க்கை போராட்டத்தில் தொடரும் துயரங்களுக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
69 வயதான இராமாயி தனது இரண்டு வாய்பேச முடியாத மூளை நலிவுற்ற மகன்மார்களையும் தனிமையில் வீட்டில் விட்டு கூலிவேலைக்கு கூட போகமுடியாத துயர நிலையை அனுபவிப்பதாக விபரிக்கிறார்.
இவ்வாறு தான் வேலைக்கு சென்றால் மகன்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கான உணவைக்கூட தன்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அந்த தாயின் ஏக்கமாக காணப்படுகின்றது.
கருணை உள்ளம் கொண்ட அன்பிற்குரிய உடன் பிறப்புக்களே உங்களின் உடன் பிறப்பாய் இவர்களை நினைத்து உங்களால் முடிந்தளவு இவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வாருங்கள்.
இது அன்பான எமது வாசகர்களுக்கான வேண்டுகோள்.
குடும்ப விபரம்
மாரிமுத்து இராமாய்-தாய்
மாரிமுத்து பழனிச்சாமி- மகன்
மாரிமுத்து உதய குமார்-மகன்
வங்கி:- இலங்கை வங்கி
வங்கி கணக்கு இலக்கம்:79695457
தொலைபேசி இலக்கம் :0770286668 (சுபாஸ்)
திருகோணமலை – கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலங்கேணிப் பகுதியை சேர்ந்த சந்திரலிங்கன் யுகன் (வயது 29) என்பவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த படி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளார்.
கண்டல்காட்டுப் பகுதியிலுள்ள மாட்டுப் பட்டியிலிருந்து பால் எடுத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோதே விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.இதேவேளை, வானில் சென்றோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண் முதலில் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர், அவர்களை தங்குமிட விடுதிகளுக்கு செல்ல அழைப்பு விடுத்துள்ளார்.தங்குமிட விடுதிகளுக்கு அழைத்துச் செல்லும் ஆண்களுக்கு சக்தி மருந்து மாத்திரை எனக் கூறி மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தமக்கு நித்திரை ஏற்பட்டதாக பெண்ணிடம் சிக்கிய ஆண்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். தமக்கு நித்திரை ஏற்பட்ட பின்னர், தம்மிடம் இருந்த பெறுமதியான பணம் உட்பட அனைத்தையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த பெண் ஆண் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் காணொளி, அங்குள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்தி பொலிஸார் மீரிகம ஹக்குருகும்புர பிரதேசத்தில் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.பெண்ணை கைது செய்யும் போது அவர் கொள்ளையிட்ட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று28.09.2016 காலை இடம்பெற்றது .
ஆலய பங்குதந்தை தலைமையில் காலை பூசை வழிபாடுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது . தொடர்ந்து இடம்பெற்ற திருச்சொரரூப பவனியில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சகாய அன்னையை சுமந்தபடி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளால் வலம் வந்தனர்.
இந்தியாவில் பெங்களூருவில் ஆண்களை கடத்தி அவர்களின் ஆண் உறுப்புகளை துண்டித்து அவர்களையும் திருநங்கைகளாக மாற்றும் திருநங்கை குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் திருநங்கைகள் சில இளைஞர்ளை கடத்தி சென்று அவர்களின் ஆணுறுப்புகளை துண்டித்து, அவர்களை தங்கள் இனத்தவர்களாக மாற்றி கொள்ளுவதாக குற்றம் சாட்டு எழுந்து வந்தது.
அண்மையில் பெங்களூருவின் பெற்றோர் ஒருவர், தனது மகனை திருநங்கைகள் கடத்தி சென்று அவரின் ஆணுறுப்பை துண்டித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், பின்னர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.குறித்த விசாரணையின் போது புலிகேசிநகரில் அமைந்துள்ள கோவில் பூசாரியான துளசியப்பா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதன்படி துளசியப்பாவை கைது செய்து விசாரணை செய்தபோது அவர், “கடத்தப்பட்ட இளைஞர் ராஜேஷ் தனது கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார். அவரின் தோற்றத்தை பார்த்து, மூளை சலவை செய்து, சிக்கப்பள்ளாபூரை சேர்ந்த திருநங்கையிடம் சேர்ப்பதற்கு முயற்சித்தார்.
ஆனால் குறித்த இளைஞர் மறுப்பு தெரிவித்தார். ஆனால் நான் ஆனந்திக்கு தகவல் தெரிவித்து, பெங்களூரு வரவழைத்தேன். அவர்கள் இளைஞனை ராஜேஷை அழைத்து சென்றனர்” என கூறியுள்ளார்.அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிடைத்த தகவலை வைத்து, ஆனந்தி குழுவை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான ஆனந்தி மற்றும் அவரது நண்பர்கள் ஐசு, ஸ்ரேயா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் கையடக்கத்தொலைபேசியின் அழைப்புகளை வைத்து புலிகேசிநகரில் அமைந்துள்ள திருநங்கை ராஜேஸ்வரி என்பவரது வீட்டில் ஆனந்தி, தனது நண்பர்களுடன் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஆனந்தி, ஐசு, ஸ்ரேயா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெ ளிவந்துள்ளன. இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, பெங்களூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் திருநங்கை தோற்றமளிக்கும் இளைஞர்களை, மூளை சலவை செய்து, தங்களுடன் அழைத்து செல்வதாக கூறினர்.
வற்புறுத்துதலுக்கு மறுக்கும் இளைஞர்களை கடத்தி சென்று, அவர்களின் ஆணுறுப்பை துண்டித்து திருநங்கையாக மாற்றிவிடுவதாக கூறினர். இளைஞர்கள் மாயமான தகவல் அறிந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விடுவார்கள் என பயந்து, திருநங்கையாக மாற்றியவர்களை உடனே ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு விற்பனை செய்துவிடுவார்கள்.
அங்குள்ள குழுவினர் இளைஞர்களை அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து, பணம் சம்பாதித்து கொள்வார்கள். அதேபோன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களை, பெங்களூரு அழைத்து வந்து, இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதுவதாக தெரியவந்தது.
விசாரணையில் கொடுத்த தகவலின்படி ஆனந்தி மற்றும் அவரது குழுவினரிடம் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. முறைப்பாடு வரும் தருணத்தில் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு, சிக்கியுள்ள இளைஞர்ளை மீட்க வழியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடலை எழுதியவர் கவிஞர் அண்ணாமலை. மேலும் பிச்சைக்காரன் படத்தில் நெஞ்சோரத்தில், ஒருவேளை சோற்றுக்காக, மற்றும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பன்னாரஸ் பட்டுகட்டி’ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை எழுதியவர்.
இவர் 1992ம் ஆண்டு புதுவயல் என்ற திரைப்படத்துக்காக தனது முதல் பாடலை எழுதினார். அதன்பின்னர், 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு கவிஞர் அண்ணாமலைக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதன்பின்னர், சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த அண்ணாமலைக்கு வயது 49. இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 5 வயதில் ரித்திகா என்ற மகளும் இருக்கின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை சினிமாவில் பாடல் எழுத வருவதற்கு முன் பத்திரிகையாளராக பணியாற்றிவர்.
எம்.பில் முடித்த இவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 20 படங்களுக்கும் மேல் அவர் பாடல் எழுதி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
மறைந்த அண்ணாமலைக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார்.
குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்த வேளை இன்று காலை குளியலறையில் வழுக்கி வீழ்ந்ததினால் தலையில் பலமாக அடிபட்டதினாலேயே மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்(AL 2010) ஆவர்.
இவருக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தினர் ஆழந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றனர்.