சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது
நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன.
இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு ரயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான ரயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது சேவையிலுள்ள ரயில்கள் மேலதிக பெட்டிகளை இணைத்து போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசேட திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அதிகளவான பயணிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கும், அங்கிருந்து கொழும்பிற்கும் இந்த ரயில் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுமென ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று என்னை தொடர்புகொண்ட நண்பர் ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் இருந்து தன் நண்பர்களுக்கு தானாகவே “Hi” என்ற Message செல்வதாகவும், ஆனால் அதை தான் அனுப்பவில்லை எனவும் கூறி தன் கணக்கு ஒருவேளை யாராலும் ஹாக் செய்யப்பட்டிருக்குமா என கேட்டார். இந்த பிரச்சினை அவருக்கு மட்டுமல்ல பலருக்கு ஏற்பட்டிருக்கும். அப்போ உங்கள் கணக்கு ஹக் செய்யப்பட்டுள்ளதா?
பேஸ்புக் கணக்கை ஹக் செய்வது சாத்தியமா? இலகுவானதா?
உண்மையில் அவ்வளவு இலகுவாக பேஸ்புக்கை ஹக் பண்ணமுடியாது. தற்போது பேஸ்புக் சிறிது சிறிதாக பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. Professional ஹக்கேர்ஸால் மட்டுமே ஓரளவு சாத்தியம்.
சாதாரணமாக பேஸ்புக்கை நான்கு வழிகளில் ஹக் செய்யலாம்.
Phishing
Key Logging
Social Engineering
Primary email hack
இதில் Social engineering அவ்வளவு ஆபத்தானதல்ல. மிகுதி மூன்று தொடர்பிலும் கொஞ்சம் அவதானமாக இருத்தல் அவசியம். Phishing என்பது பேஸ்புக் போலவே ஒரு போலியான பக்கத்தை உருவாக்கி அதை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள். அதுவும் பேஸ்புக்கில் இருந்து அனுப்புவது போலவே அனுப்புவார்கள்.
நீங்கள், அந்த மின்னஞ்சல் பேஸ்புக்கினால் அனுப்பப்பட்டதுதான் என்று நினைத்து அதை திறந்தால் அந்த பக்கம் Original பேஸ்புக் பக்கம் போலவே இருக்கும். அதில் உங்கள் பயனர் பெயர், பாஸ்வேர்ட் போன்றவற்றை உள்ளிட்டதும் அது Phishing மின்னஞ்சலை அனுப்பியவருக்கு சென்றுவிடும்.
இப்போது இதில் உள்ள ஆறுதலான விடயம் என்னவென்றால் பெரும்பாலான இணைய உலவிகள் இத்தகைய Phishing தளங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. Google Chrome உலாவி இத்தகைய தளங்களுக்குள் நுழையும்போது எச்சரிக்கை செய்கின்றது.Firefox உலாவு முற்றுமுழுதாக தடை செய்துவிடுகிறது.
அடுத்து Keylogging. இது கொஞ்சம் ஆபத்தானது. நெற்கஃபே போன்ற பொது இடங்களில் பேஸ்புக்கை பாவிப்பவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். இத்தகைய இடங்களில் Key Logger மென்பொருள்களை நிறுவிவைத்திருப்பார்கள். அவை நிறுவப்பட்டிருப்பது எமக்கு தெரியாது. நாங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடும்போது அவற்றை பதிவு செய்து வைத்திருக்கும். மென்பொருளை நிறுவியவர் தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம்.
பொது இடங்களில் இணையத்தை பாவிக்கும்போது கீபோர்ட் கணினியுடன் இணைக்கும் Port ஐயும் ஒருமுறை அவதானியுங்கள். காரணம் இப்போது Key Logger Hardware ஆகவும் வருகிறது. கீழுள்ள படத்தை அவதானியுங்கள்..
Keylogger-hardware-PS2-example-connected.jpg
அடுத்து Primary email hack. நீங்கள் பேஸ்புக்கிற்கு உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரியை முதலில் ஹக் செய்வார்கள். அதன் பின்னர் பேஸ்புக்கில் உள்ள Forget Password ஒப்ஸன் மூலம் இலகுவாக ஹக்செய்துவிடுவார்கள். இதற்கு பேஸ்புக்கில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி மறைத்துவிடுங்கள்.
இதில் Key Logging மட்டுமே கொஞ்சம் ஆபத்தானது. அவதானமாக இருந்தால் ஆபத்தை குறைக்கலாம். ஏனைய வழிகள் இப்போது கடினம்.
சரி அப்படியானால் எம்மையறியாமல் எப்படி எமது நண்பர்களுக்கு “Hi” என்ற Message சென்றது என்று கேட்கிறீர்களா? அதற்கு காரணம் பேஸ்புக்கில் நீங்கள் பாவிக்கும் அப்ளிகேஷன்கள்தான். இப்போது Rockmelt என்னும் இணைய உலாவியை பெரும்பாலானவர்கள் உபயோகித்து வருகிறார்கள்.
இந்த இணைய உலாவியானது உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் பெயரில் உங்கள் நண்பர்களுக்கு Message அனுப்புகிறது. அடுத்து பெரும்பாலான Facebook Application கள் உங்கள் அனுமதியில்லாமலேயே உங்கள் நண்பர்களுக்கு Message அனுப்புகிறது. உங்கள் பேஸ்புக் கணக்கில் சென்று Account Setting > Apps என்ற வழியே சென்று தேவையற்ற Application களை நீக்கிவிடுங்கள்.
ஆகவெ இது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. Rockmelt உலாவி பாவிப்பதை குறைத்துக்கொண்டால் நல்லது. ஏனெனில் அந்த உலாவி சிறந்த உலாவியும் அல்ல. அதேவேளை எமது பெயரில் நண்பர்களுக்கு அடிக்கடி Message சென்றால் அவர்களை அநாவசியமாக எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.
நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான், அருண் விஜய் தப்பிச் சென்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறையினர் வேண்டுமென்றே அவரை தப்பிக்க விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
வழக்கை விசாரித்த போக்குவரத்து உதவி ஆணையர் ஜெகதீசன், விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் சதீஷ், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற அருண் விஜயை தனிப்படை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வவுனியா A9 வீதி கனகராயன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று நேற்று (29.08.2016) நள்ளிரவு இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 வது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தை உறுதிப்படுத்திய கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் இன்று(30.08.2016) காலை மாவட்ட செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டடோர் தினத்தில் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தா.சலசலோசன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் சர்வதேச விசாரணையே தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று இடம்பெற்ற காணாமற்போனோர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது காணாமற்போன உறவுகள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சைகளில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் இரகசியப் பொலிஸாரிடம் விசாரணைகள் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
வேறு மாவட்ட மாணவர்களை மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பரீட்சை எழுத அனுமதித்த போது இலஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதால் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த முறைகேடுகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்,இது தொடர்பில் இதுவரை இரண்டு பாடசாலை அதிபர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த யோகட் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
40 ரூபா விலையுள்ள 80 கிராம் நிறையுடைய இந்தப் பனம் யோகட்டை , இயற்கை உணவை விரும்பும் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் சுவைத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
பனங்களி, பால்மா, சீனி என்பவற்றை முக்கிய உள்ளடக்கங்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பனம் யோகட்டை குறிப்பாகச் சிறுவர்கள் அதிகமாக விரும்பி சுவைக்கின்றனர்.
கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவுத் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களினால் இந்த யோகட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு விஷேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யோக்கட்டின் விற்பனையை யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கையான பனம் பழம் வாசமும், அதன் தனித்துவமான சுவையும் தம்மைப் பெரிதும் கவந்துள்ளதுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிம்பாப்வே நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 31 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எனினும், எவ்வித பதக்கமும் பெற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன், எந்த வீரரும் 8 வது இடத்திற்கு குறைந்து வரவில்லை. இந்நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதக்கம் வெல்லாத ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 31 வீரர் வீராங்கனைகளையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.
சிம்பாப்வே தேசிய இடைக்கால அதிகார சபை வெளியிட்டு உள்ள தகவலின் படி ஹராரே விமான நிலையம் வந்து இறங்கும் ஒலிம்பிக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஜிம்பாப்வே வீர வீராங்கனைகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அனைவரும் நாட்டின் பணத்தை வீணத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை எனவும் சிம்பாப்வே ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, வடகொரிய வீரர்கள் மீது அதிருப்தியில் இருந்த அந்த நாட்டு ஆட்சியாளர் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையிலிருந்து கொழும்புபை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சிவஞான வடிவேல் அனோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது. பாடசாலை நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது. விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம்.
இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா?
மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏ என் – 225 மிரியா பற்றியும் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 பற்றியும் சில தகவல்கள்.
அன்டனோவ் ஏ.என்225 மிரியா
சோவியத் கூட்டமைப்பில் செயல்பட்டு வந்த அன்டோனோவ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வகை விமானங்கள் 1988 முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவே இந்த வகையிலான விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. சோவியத் ராணுவத்திற்கும் பெருமளவில் பயன்பட்டு வந்தது.
உலகிலேயே மிகவும் அதிகமான எடை கொண்ட விமானம் இது தான். சரக்குகள் இல்லாமல் இதன் மொத்த எடை 2,85,000 கிலோ கிராம். அன்டோனோவ் ஏ என்225 விமானத்தின் மொத்த நீளம் 275 அடிகள்.
இதன் உயரம் தோராயமாக 59 அடி . ஒரு விமானத்தில் மொத்தம் ஆறு என்ஜின்கள், 32 சக்கரங்கள் விமானத்தில் உள்ளன. இந்த விமானத்தின் இறக்கைகளின் நீளம் மொத்தம் 290 அடிகள். மிரியா என்பதற்கு உக்ரைன் மொழியில் ‘கனவு’ என்று அர்த்தம்…!
ஏர் பஸ் ஏ380
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர் பஸ் ஏ380. ஏர் பஸ் விமானம் பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவன தயாரிப்பாகும். ஏர் பஸ் விமானத்தில் ஒரே நேரத்தில் சுமாராக 600 பயணிகள் பயணிக்க முடியுமாம்.
மொத்தம் நான்கு என்ஜின்கள் செயல்படுகின்றன. அதில் இரண்டு இன்ஜின்கள் மட்டுமே விமானம் தரையிறங்கும் பொழுது செயல்பாட்டில் இருக்குமாம்.
போயிங் ரக விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டதே ஏர் பஸ் 380 ரக விமானங்கள். தோராயமாக 580 தொன் எடை கொண்டது ஏர் பஸ் விமானம்.
ஏர் பஸ் விமானங்கள் அதிகபட்சமாக 40,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். சூப்பர் ஜம்போ ரக விமானங்கள் என்றழைக்கப்படும்.
இவற்றை எல்லா ஓடுபாதைகளிலும் தரையிறக்க முடியாது. அதற்காக வடிவமைக்கப்பட்ட விமான ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபை தமிழர் வரலாற்றில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சட்ட ரதியான சபையாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபை உருவாக்கப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் மாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே என்ன குற்றம் செய்தார்கள் என்ற விபரங்களை தெரியப்படுத்தாமல் அவர்களுக்கெதிராக விசாரணை நடாத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.
வழமையான அரசாங்க உள்ளக விசாரணைப்பொறிமுறைகள் மாகாணத்தில் உள்ளபோதும் அதைவிடுத்து வெளியக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்று தசாப்த யுத்தத்தின் மூலம் எல்லாவழிகளிலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட எமது சமூகத்திற்கு கிடைத்த தற்காலிக தீர்வே மாகாணசபை முறைமையாகும்.
அதிகாரமற்ற சபையாக இருந்தபோதும் கொடிய யுத்தத்தால் துவண்டுபோயுள்ள எமது மக்களுக்கு தற்காலிக ஓய்வாகவே இந்த மாகாணசபையை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்தோம்.
தொழில் ரீதியாக மருத்துவராக பூரண திருப்தியுடன் மக்களுக்காக கடந்த 20 வருடங்களாக சேவை செய்துள்ளேன்.
வடக்கில் ஏற்பட்ட இயற்கை, செயற்கை பேரவலங்களின்போது நானாக முன்வந்து அரச கட்டுபாடற்ற பிரதேசங்களில் சவால்களுக்கு மத்தியில் பணியாற்றியுள்ளேன்.
நான் ஒருபோதும் அரசியலுக்கு வருவேனென்று சிந்தித்ததே இல்லை. காலத்தின் தேவை கருதி அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டேன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னமே எனது தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் எனது குடும்பதேவைகளை பூர்த்தி செய்து வசதிவாய்ப்புகளுடன் வாழ்க்கை நடத்தியவன்.
கௌரவமான மருத்துவர் பணியை விட்டு மக்களுக்கு பணியாற்ற அரசியலுக்கு வந்த எனக்கு அரசியல் மூலம் எந்த தனிப்பட்ட தேவையையும் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
அதற்காக நான் அரசியலுக்கு வரவும் இல்லை. எனினும் சிலரின் கபடநோக்கங்கள் நிறைவேறுவதற்காக அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தியுள்ளனர்.
சந்தேகம் என்பது பொல்லாத நோய். அது நாட்டுக்கும் பொருந்தும், வீட்டுக்கும் பொருந்தும். அதை முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது.
அந்த வகையில் விசாரணைக்குழுவொன்றை அமைத்து உண்மையை வெளிக்கொண்டுவருவது நல்லவிடயம்.
எனினும் எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது விடின் அதற்கு வகைசொல்வது யார். சட்டத்தின் பிடியிலிருந்து ஓர் குற்றவாளி தப்பினாலும் நிரபராதி தண்டிக்கப்டக்கூடாது என்பது மரபு.
கொடிய யுத்தத்தின் பின்னர் அதன் வடுக்களையும், ரணங்களையும் மனதில் சுமந்தவர்களாக எமது மக்கள் ஏங்கித்தவிக்கும் நிலையில் அவர்களுக்கு செய்யவேண்டிய எவ்வளவோ பணிகள் எம்முன்னே உள்ளன.
அவற்றை விடுத்து நம்மில் சிலர் பதவிக்காகவும், சுயநல அரசியல் காரணங்களுக்காகவும் மற்றவர்கள் மீது வீண்பழிசுமத்த முற்படுவது துரதிஷ்டவசமானது. 13வது திருத்தம் தமிழ் மக்கள் இழந்தவைக்கு ஒருபோதும் நிவாரணத்தை கொடுக்காது.
அரைகுறை அதிகாரமுடைய மாகாண சபையை வைத்து மக்களின் பிரச்சனைகளில் சிறிய பகுதியையாவது தீர்க்க முயலும் எமக்கு மன உளைச்சலை தருவதாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சைபொறுத்த வரை துறைசார்ந்தவன் என்ற வகையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் சுகாதார துறைக்கே முன்மாதிரியான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
இலவச நோயாளர் காவு வண்டிச்சேவை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம், கணனிமயப்படுத்தப்பட்ட தரவு வங்கி, மாகாண சுகாதார சேவைக்கான ஐந்தாண்டு திட்டம் இப்படி பல புதிய விடயங்கள் நாட்டின் வேறு எந்த மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் நாம் ஆரம்பித்துள்ளோம்.
வெறும் சட்டத்தில் மட்டுமுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்துமுகமாக பல நியதிச்சட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. மக்களின் தேவைக்கும், மாகாண சபையின் இயலுமைக்கும் பாரிய இடைவெளியுள்ளது.
இதற்கு காரணம் அமைச்சர் அல்ல. சட்டத்திலுள்ள பிரச்சனை. அரசியல் முதிர்ச்சியுள்ள யாவருக்கும் இதுபுரியும்..
இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்காது, செய்யும் நல்லகாரியங்களை பாராட்டாதவர்கள் மற்றவர்கள் மீது குறைகளை சொல்லும் தங்கள் பழக்கத்தை மாற்ற முயலவேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.