உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பிரேங் டோஸ் 500 யார் தூரத்திற்கு இதனை செலுத்திச் சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இதற்கு முதல் உலகில் மிகப்பெரிய சைக்கிளாக 860 கிலோ நிறையுடைய சைக்கிலே பெயர் பதித்திருந்தது. அந்த சைக்கிளை உருவாக்கியவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜெப் பீட்டர்ஸ் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில் 70 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டிசினோ மாகாணத்தில் யூலை முதல் திகதியில் இருந்தே குறிப்பிட்ட சில பகுதிகளில் புர்கா உடைக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அமைப்பு ஒன்று நாடு முழுவதும் புர்கா உடைக்கு தடை கோருவது குறித்து சுவிஸ் மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 15,824 பேர் கருத்து தெரிவித்துள்ள இந்த ஆய்வில் 55 சதவிகிதம் பேர் முழுமையாக ஆதரித்துள்ளனர். மேலும் 16 சதவிகிதம்பேர் தடை இருந்தால் சிறப்பு என கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜேர்மானியர்கள் அதிகம் கொண்ட பகுதியில் வாழும் மக்களில் 72 சதவிகிதத்தினர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி பிரஞ்சு மக்கள் அதிகம் வாழும் பகுதியில் 70 சதவிகிதம் பேர் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் அரசியல் சார்புடையவர்களும் அதிகம் கலந்துகொண்டது மட்டுமின்றி பெருவாரியான எண்ணிக்கையில் புர்கா உடை தடைக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதில் கிரீன் கட்சி ஆதரவாளர்கள் மட்டும் 33 சதவிகிதம் பேர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Christian Levrat, புர்கா உடை என்பது பெண்களுக்கு நடமாடும் சிறை போன்றது எனவும், இதை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அது தடை விதிப்பதால் அல்ல கல்வி மற்றும் ஆதரவினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புர்கா தடை குறித்து ஆய்வு மேற்கொண்ட குறிப்பிட்ட அமைப்பானது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக 100,000 கையெழுத்துக்களை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பிற்கு முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
பரீட்சை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் 12 பாடசாலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திலக் ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள், அவர்களின் வதிவிடங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்தால் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், அவ்வாறான மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதேவிதமான முறைப்பாடுகள் குறித்து வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து நேற்று கல்வி அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் கொண்ட குழுவினரால் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் அடங்கிய குழுவினர் உதயநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பிரகாசித்த இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் BMW கார்களை பரிசாக வழங்கினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு ஐதராபாத் நகரில் நேற்றுமுன்தினம் மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மேற்படி மூன்று வீராங்கனைகளும் BMW ஆடம்பர கார்களை சச்சின் டெண்டுல்கர் பரிசளித்தார்.
மேற்படி 3 வீராங்கனைகளுக்கும் BMW ஆடம்பர கார்களை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர், இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ‘உங்களால் இந்த நாடு பெருமையடைகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எவ்வளவு துடியாய் இருந்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்.
நீங்கள் இந்த நாட்டுக்கு அளிக்கவிருக்கும் ஆச்சரியகரமான தருணங்களுக்காக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வென்றுகொண்டேயிருங்கள்’ என்றார்.
அதேவேளை பட்மிண்டன் பயிற்றுநர் கோபிச்சந்திடம் ‘எப்போதும் சாம்பியன்களை உருவாக்குவதில் உங்கள் பணி அபூர்வமானது. பயிற்சியாளராக அபாரமான குணநலன்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் ரோல் மொடல்’ என சச்சின் கூறினார்.
இந்நிகழ்வில் பட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பேசுகையில், கடந்த தடவை சச்சின் தனக்கு கார் பரிசளித்த போது, ஒலிம்பிக் பதக்கம் வென்றால் இன்னொரு கார் பரிசளிப்பதாகக் கூறியதை நினைவு கூர்ந்தார்.
எனது கனவு நிஜமானது, அனைவருக்கும் நன்றி, கோபிசந்துக்கும் மிக்க நன்றி என்றார். சாக்ஷி மாலிக், திபா கர்மாகர் ஆகியோரும் சச்சினுக்கு நன்றி தெரிவித்தனர்.
2015 புவி அழகு ராணியான (Miss Earth 2015) பிலிப்பைன்ஸை சேர்ந்த ஏஞ்சலியா ஒங் மற்றும் மிஸ் வோட்டர் 2015 அழகுராணியான அமெரிக்காவின் பிரிட்டனி ஆன் பெய்னே ஆகியோர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள தெரண மிஸ் ஸ்ரீலங்கா 2016 அழகு ராணி போட்டிகளில் அதிதிகளாக கலந்துகொள்வதற்காக தெரண தொலைக்காட்சியின் அழைப்பின் பேரில் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் மரம் நடும் நிகழ்விலும் ஏஞ்சலியா ஒங் மற்றும் பிரிட்டனி ஆன் பெய்னே ஆகியோர் பங்குபற்றினர்.
கபாலியின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி – ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது. இத்தகவலை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்திற்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இப்படம் கபாலி – 2 ஆக இருக்குமோ என்கின்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கபாலி படத்தை தாணு தயாரித்ததால் அவர் அனுமதி அளித்தால் மட்டுமே கபாலி என்கிற பெயரை வைத்து மற்றொரு படம் தயாரிக்கமுடியும். அல்லது ஒருவேளை இது புதிய கதை கொண்ட படமா என்றும் தெரியவில்லை.
படம் குறித்த மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஊடுருவி, அதிலுள்ள தரவுகளை மாற்றியமைக்க முற்பட்டமைக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், இளம் வயதுடைய பாடசாலை மாணவரை நன்னடத்தைக்காக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பாடசாலை மாணவர் கடுகண்ணாவை பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் மொரட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அவரை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இணைக்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான்காவது போட்டி தம்புளையில் நாளை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. போட்டிக்கான இரண்டு அணிகளின் வீரர்களும் நேற்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெற்ற திலகரத்ன டில்ஷானுக்கு பதிலாக, சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டதாக அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்தார்.
கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவருடன் ஆலோசித்து இன்றய போட்டிக்கான இறுதி அணியை தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிண்ணியா – குட்டிக்கராச்சி இஹ்ஸானியா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிண்ணியா – புது நகரத்தைச் சேர்ந்த 25 வயதான அப்துல் ஹஸன் இர்ஷாட் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் இஹ்ஸானியா மகளிர் மகா வித்தியாலயத்தின் கூரை மீதேறி புறாக்களைப் பிடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கால் தவறி வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் (Trent Bridge) நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக, இதுவரை 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி குவித்த 443 ஓட்டங்களே இருந்தது.
இந்தநிலையில் இன்று இங்கிலாந்து பெற்ற 444 ஓட்டங்களில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத் தொடரில், ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இன்றைய போட்டியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடியாக ஆடி 171 ஓட்டங்களையும், பட்லர், ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஜோ ரூட் 85 ஓட்டங்களையும் விளாசினர். இதன்படி இந்தப் 445 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
445 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42. ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்று 169 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர்.
இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவில் கூட்ட மிகுதியின் காரணமாக படகு நகர முடியாமல் தத்தளித்துள்ளது.
இதனால், படகுகளில் இருந்த சில ஆண்கள் தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்வதற்காக கடலுக்குள் குதித்துள்ளனர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்வதென்று அறியாமல் படகுக்குள்ளேயே அமர்ந்துகொண்டனர்.
இதில், தந்தை ஒருவர் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டே, பரிதவித்தபடி நின்றுகொண்டிருந்தார்.
மேலும் படகானது கடலிலேயே தத்தளித்துக்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா கப்பல்படை அதிகாரிகள் விரைந்து வந்து, பெரிய படகின் உதவியுடன் அவர்களை அதிலிருந்து மீட்டனர்.
இந்த படகில் பயணித்த 1,100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் வழி பயணத்தில் பல்லாயிரம் உயிர்கள் காவு வாங்கப்பட்டாலும், மக்களின் செவிகள் இதனை ஏற்க மறுக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உயிர் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றவர்களில் இதுவரை 2,726 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச குடியேறிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் படும் துன்பங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மருத்துவமனை நிர்வாகம் அவசர ஊர்தி அளிக்கவில்லை, சிகிச்சை அளிக்கவில்லை என்பதை தான் அவர்கள் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது,
கான்பூரை சேர்ந்த சுனில் குமார் என்பவரின் 12 வயது மகன் அன்ஷுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவனை கான்பூரிலுள்ள லஜ்பத் ராய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை தர மருத்துவர்கள் மறுத்ததாகவும், எப்படியாவது அங்கேயே சிகிச்சை தருமாறு அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொண்டும் அவர்கள் கேட்கவில்லை என்றும் சுனில் குமார் கூறியுள்ளார்.
எனவே, தனது மகனை தோளில் சுமந்துகொண்டு மற்றொரு மருத்துவமனைக்கு நடந்து செல்லும் வழியில், தந்தையின் தோளிலேயே மகனின் உயிர் பிரிந்துள்ளது.
ஆனால் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் கிர்தின் நி்த்தியானந்தம்.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான்.
இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை டமோக்சி பென் என்ற மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். வளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர, புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
இந்நிலையில் இதற்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
இதுகுறித்து கிர்தின் கூறுகையில், இதுவரையிலும் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.
குறிப்பாக, இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த கூகுள் அறிவியல் கண்காட்சியில் கிர்தினுக்கு, அல்ஜீமர் நோயை முன்கூட்டியே கண்டறியும் முறையை கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.