சைக்கிளோட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் மீது மான் ஒன்று மோதிய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ட்ரையத்லன் எனும் மூன்றாம் போட்டியின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிறன்று சைக்கிளோட்டப் போட்டியொன்றில் வீரர்கள் பங்குபற்றிக்கொண்டிருந்தனர்.
இதன்போது, பீனிக்ஸ் பாக் எனும் பூங்காவுக்கூடாக போட்டியாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை மான் கூட்டமொன்று எதிர்கொண்டது.
அவற்றில் ஒரு மான் வீதியை பாய்ந்து கடக்க முயன்றபோது, ஷேன் ஓ ரெய்லி எனும் வீரர் மீது மோதியது. 30 வயதான ஷேன் ஓ ரெய்லி, அந்த பாரிய மான் தன் மீது மோதியதால் நிலை தடுமாறி வீழ்ந்தார்.
இக்காட்சிகளை அங்கிருந்த புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் படம்பிடித்துக்கொண்டார். போட்டியின் எல்லைக்கோட்டிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.
பின்னர் சுதாகரித்துக் கொண்டு எழுந்து மீண்டும் போட்டியில் பங்குபற்ற ஆரம்பித்து 2 மணித்தியாலங்கள், 25 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்தார்.
இப்பூங்காவில் சுமார் 300 மான்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்போட்டியின் பின்னர் ஷேன் ஓ ரெய்லி கருத்துத் தெரிவிக்கையில், “இச்சம்பவத்தால் எனது தோளிலும் தலையிலும் வலி ஏற்பட்டது. தலைக்கவசம் என்னைக் காப்பாற்றியது” என்றார்.
ரஷ்ய நகரமொன்றில் பாரிய காளான் போன்ற உருவம் கொண்ட முகில் தோன்றியமை அந்நகர மக்களை அச்சமடையச் செய்தது.
மேற்கு சைபீரிய பிராந்தியத்திலுள்ள கேமேரோவோ நகரில் கடும் இடிமின்னலுக்கு மத்தியில் இந்த முகில் தென்பட்டது. ஆனால், அணுகுண்டு வெடிப்புகளின் போது இத்தகைய பாரிய காளான் உருவிலான புகை ஏற்பட்டதை அறிந்திருந்த மக்கள், இந்த முகிலைக் கண்டு அச்சமடைந்தனராம்.
அந்நகருக்கு சற்று தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ எனவும் சிலர் அச்சம் கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இடிமின்னல் காரணமாகவே இந்த விசித்திர முகில் உருவம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காரணத்துக்காக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்கனைகளான கிறிஸ்டினா மிலாடேனோவிக், கரோலின் கார்சியா ஆகிய மூவரே தடைக்குள்ளானவர்களாவர். இந்த மூவரினதும் நடத்தை சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா முடிவடைந்த பின்னர் பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனத்தின் குழு இந்த மூவர் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தது.
இவர்கள் சம்மேளனத்தின் விதிகளை மீறியுள்ளதுடன் சம்மேளனத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ என அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது சுற்றில் இத்தாலியின் ஃபேபியோ ஃபொஞ்ஞினியிடம் தோல்வி அடைந்த பாய்ரே, ஒலிம்பிக் வீரர்கள் கிராமத்திலிருந்து நெடு நேரம் வெளியே இருந்தமைக்காக உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே அவரக்கு பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்துள்ளது.
மிலடேனோவிக், கார்சியா ஆகிய இருவரும் தங்களது சீருடை தொடர்பாக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனத்தை கடுமையாக விமர்சித்தமைக்காக தடை செய்யப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம்வரை இவர்கள் மூவரும் பிரான்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ரஜினி அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்து கோலிவுட்டில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், பா.ரஞ்சித் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது மட்டும் பரபரப்பு செய்தியாக பரவி வந்தது. விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பா.ரஞ்சித் தரப்பிலிருந்து தான் யாருக்கும் கதை சொல்லவில்லை என்றும், தற்போது தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று தனுஷ், ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘2.ஓ’ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கப்போவதாகவும் அறிவித்தார்.
‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாவது ரஜினி இரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினி ‘2.ஓ’ படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது பிறகுதான் தெரியவரும். மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியினருகேயுள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 58). இவரது மகன் மகேஷ் (31). திருச்சியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், ஆரணி எஸ்.வி. நகரை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர்.
இவர்களிருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் சேவூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணத்தை நடத்தவிருந்தனர். இரு வீட்டாரும் திருமண வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வந்தனர்.
இதற்காக முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முகூர்த்த நேரமும் நெருங்கியது. மணமேடையில் மகேஷ் அமர்ந்திருந்த நிலையில், அவருடைய செல்போனிற்கு ஆரணி தசராபேட்டை பகுதியைச் சேர்ந்த விநாயகம், என்பவர் ‘வட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவலை அனுப்பியிருந்தார்.
மகேஷ் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குறுஞ்செய்தியில், மணமகள் மீனாவும், விநாயகமும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் இருந்தன.
மேலும் விநாயம் கூறியதாவது, எனக்கும், உங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது.
அதன்போது நாங்களிருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இவை. நான் திருமணம் செய்த பெண்ணை நீங்கள் எப்படி திருமணம் செய்ய முடியும் என அவர் கூறியிருந்தார்.
உடனே மகேஷ், அவரது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து மகேஷின் குடும்பத்தினர், மணமகளின் பெற்றோரிடம் உங்கள் மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி நீங்கள் ஏன் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என கேட்டதற்கு பெண்ணின் பெற்றோர் பதில் எதுவும் கூறவில்லை என தெரிகிறது. இதைத் தொடர்ந்து மகேஷின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து மணி தாலுகா பொலி ஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதில் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து பெண் வீட்டார் மோசடி செய்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட திருமண ஏற்பாடுகளுக்காக 5 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது.
குறித்த பணத்தை மணமகள் வீட்டாரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என க் கூறியிருந்தனர். முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸ் அதிகாரி சின்னராஜ், அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்தநிலையில், வட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளைஞர் விநாயகம் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சடலத்தை மாவனல்லை பகுதிக்கு கொண்டு செல்ல உதவிய கூலித் தொழிலாளிகள் உட்பட எழுவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் செய்யப்பட்ட வர்த்தகரின் கொடுக்கல் வாங்களுடன் தொடர்புடைய அவரது சேவையாளர் ஒருவர், சகீபின் தந்தையிடம் கப்பம் பெறும் நோக்கில் இக்கொலையை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியை வெற்றிக்கொண்டதன் மூலம் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பகலிரவு ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனஞ்சய டி சில்வா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.
எனினும் உபாதையின் மத்தியிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 71 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஆஸி அணி சார்பில் ஹேஸ்டிங்ஸ் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
213 என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 31 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்டு 4 விக்கட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.
ஆஸி அணி சார்பில் ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, ஆரோன் பின்ச் 19 பந்துகளில் அரைச்சதம் கடந்து 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸி அணியின் ஹேஸ்டிங்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 3-1 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் ரெயில் நிலையத்தில் தினமும் நிறைய திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து குவாலியர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை ரெயில்வே பொலிசார் தீவிரப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் குவாலியர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் பணத்தை திருடன் பிக்பாக்கெட் அடித்தான். அவனை ரெயில்வே பொலிஸ்காரர் கையும் களவுமாக பிடித்தார்.
ஆத்திரம் தீரும் வகையில் அந்த திருடனை ரயில்வே பொலிஸ்காரர் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் அந்த திருடன் மயங்கி விழுந்தான்.
அதன் பிறகும் அந்த ரெயில்வே பொலிஸ்காரர் கோபம் தீரவில்லை. அவனது சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.
தரையில் உடல் உரசி ரத்தம் வழிந்தோட அந்த திருடனை அவர் இழுத்துச் சென்றார். இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டார்.
ரயில்வே பொலிஸ்காரர் அந்த திருடனை தரதர வென்று இழுத்து செல்வதை ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் யாரும் தடுக்கவில்லை. மாறாக எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோ காட்சியாகவும் பலரால் பகிரப்பட்டது.
இதையடுத்து அந்த ரயில்வே பொலிஸ்காரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ரெயில்வே பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். திருடனை தரையில் போட்டு இழுத்துச் சென்ற பொலிஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியே, இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் தம்புள்ளை – குருநாகல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா இன்று(31.08.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா நடைபெற்றது.
இக் கண்கொள்ளாக் காட்சியினை நாட்டின் பல பாகங்களில் இருக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுமாக பக்திப் பரவசத்துடன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர்.
இந்த திருவிழாக்களில் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன மிக முக்கியமானவை.
கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் இன்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார்.
இதில், வலி தாங்க முடியாத சோனாலி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின்னர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் தான் கல்லூரிக்குள் புகுந்த இவர் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளார்.
சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்த உதயகுமார், தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார், ஆனால் சோனாலி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட உதயகுமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவனை கைது செய்துள்ள பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கல்லூரிக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கேலி செய்த ஆசிரியரை இரு மாணவிகள் அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழக மாணவிகளை அங்குள்ள தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கேலி செய்துள்ளார்.
அதில் கோபமடைந்த இரு மாணவிகள் ஒன்று சேர்ந்து, குறித்த ஆசிரியரை மண்டியிடச் செய்து அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும், காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். தம்பதியரான இவர்கள், மே 23ல், அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்ததாக கூறி, அதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
ஆனால், ‘அவை, திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள்’ என, சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர்; இருப்பினும், பொலிஸ் தம்பதி, எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக, நேபாள சுற்றுலாத் துறை சான்றிதழ் அளித்தது.
அதேசமயம், சக வீரர்கள் எழுப்பிய சந்தேகம் தொடர்பாக, நேபாள அரசு விசாரணையும் மேற்கொண்டது. தற்போது அந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பொலிஸ் தம்பதி அளித்த புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, இந்த தம்பதிக்கு, 10 ஆண்டுகள் தடையை, நேபாள அரசு விதித்துள்ளது.
இதனிடையே இந்த ஆண்டு மட்டும் மார்ச் முதல் மே மாதம் முடிய 454 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பனிப்பொழிவு காரணமாக வீரர்கள் எவரும் மலை ஏறுவதை நேபாள அரசு தடை செய்திருந்தது.
மட்டுமின்றி காலநிலை மாறுதல் குறித்த போதிய தகவல்கள் சேகரிக்காமல் சென்ற பல குழுக்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மட்டுமின்றி கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமும் மலை ஏறுவதற்கு தடை விதிக்க காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.