இணையத்தள முறைப்பாடுகளை பதிவு செய்ய வட்ஸ் அப் மற்றும் வைபர் முறைகள் அறிமுகம்!!

Viber

இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளை 077 322 00 32 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும். மேலும், தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக குறுந்தகவல், வட்ஸ் அப் அல்லது வைபர் மூலமோ தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதிவரை இந்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.

103 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு!!

Dengu

டெங்கு பரவும் வகையில் வீட்டு சூழலை வைத்திருந்த 103 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் உள்ளவர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான வைத்திய நிபுணர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 8075 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருந்த 103 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பை பொருத்தமட்டில் விரைவாக டெங்கு பரவும் வகையில் நாரஹேன்பிட்டி பிரதேசம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் போது சூழல் பாதுகாப்பு பொலிஸார் உள்ளிட்ட 9000 பேர் பங்கெடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தின் போது 5 பாடசாலைகள் மற்றும் 14 கட்டுமான வேலைத்தளங்களில் டெங்கு நுளம்பு பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வந்தால் பெறுபேறுகள் ரத்து : பரீட்சைத் திணைக்களம் எச்சரிக்கை!!

Exam

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.

எதிர்வரும் இரண்டாம் திகதி உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலத்திரனியல் சாதனங்களை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக அவதானிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையரின் உடலை சவுதியிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனுமதி!!

Srilankan

சவுதி அரேபியாவில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினரின் அனுமதி கிடைத்துள்ளது.வெளியுறவு அமைச்சின் ஆலோசனைப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது

கெக்கிராவையை சேர்ந்த 32 வயதான இந்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர்கொல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து இன்னும் பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் அரப் செய்தியின்படி கொல்லப்பட்டவர் பணியாற்றிய யன்பு என்ற பிரதேசத்தின்பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் யேர்மனியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்!!

Flight

சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ ஏ.என்.32 என்ற விமானம் மாயமானது. இதில் பயணம் செய்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தாம்பரம் விமானபடைத் தளத்தில் இருந்து நேற்று காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானத்தை காணவில்லை. ஏ.என்.32 என்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, பதட்டமடைந்த அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

விமானத்தை தேடும் பணியில் மேலும் 4 டார்னியர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில், 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மாயமான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சம்பா மூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, சின்னா ராவ் உள்ளிட்ட 8 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அது நொறுங்கி விழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

எனவே சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆறு வயது சிறுமி!!

Former-Contestant-Of-America-Got-Talent-Peforms

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பாட்டு பாடி அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளார் ஹெவன்லி ஜாய் என்ற ஆறு வயது சிறுமி.

America Got Talent என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹெவன்லி ஜாய். இவர் நேற்றிரவு கிளீவ்லான்டில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.

அதாவது, ”உலகத்தில் பரவிவரும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து உலகத்தில் அமைதி பரவ வேண்டும்” என்ற பாடல் ஒன்றை பாடினார்.

மேலும் இதன் போது பேசிய டொனால்டு டிரம்ப், நான் ஜனாதிபதியானால் விரைவில் குற்றங்களும் வன்முறைச் சம்பவங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும். மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

நாய்க்கு ஐஸ்கிரீம் கொடுத்ததால் சிக்கலில் மாட்டிய இங்கிலாந்து அரச குடும்பத்தினர்!!

Baby Jorge

இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் வில்லியம்-கேத்தின் மகன் ஜார்ஜ் பிறந்தநாளில் நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் குட்டி இளவரசர் ஜார்ஜின் மூன்றாவது பிறந்தநாளை வில்லியம் மற்றும் கேத் வெகு விமர்சியாக கொண்டாடினர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை தனது வெளியிட்டார்கள்.

இந்நிலையில், அந்த புகைப்படங்களில் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் குட்டி இளவரசன் ஜார்ஜ் நாய்க்கு சொக்லெட் ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற இருந்தது.

பால் பொருட்களால் செய்த சொக்லெட் ஐஸ்கிரிம் விலங்குகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் சமூக விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெர்வித்துள்ளார்கள்.

மேலும் குட்டி இளவரசன் நாயை கொல்ல முயற்சித்தாக சிலர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலையில் சிக்கிய கண்ணாடி பாறை மீன்கள்!!

Fish

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு செல்வது வழக்கம்.

மக்களும் புதிய மீன்கள் கிடைக்கும் என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், வழக்கம் போல நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடல் சென்று திரும்பிய பொழுது மீனவர்களின் வலையில் சுமார் 2 கிலோ மதிக்கதக்க கண்ணாடி பாறை மீன்கள் அதிகமாக சிக்கியிருந்தன. இவை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தேசிய கீதத்தை தவறாக பாடியதாக நடிகை மீது புகார்!!

sunny-leone

தேசிய கீதத்தை தவறாக பாடியதாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது டெல்லியில் உள்ள புதிய அசோக் நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. பிரபல பொலிவுட் நடிகை சன்னி லியோன் இந்த விழாவில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சன்னி லியோன் மீது தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறி புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து டெல்லியில் உள்ள புதிய அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடியது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!!

Dead Body

நேற்றைய தினம் (22.07.2016) காலை பாடசாலைக்கு சென்ற சிறுவனை காணவில்லையென பெற்றோரால் தேடப்பட்டு கொண்டிருந்த போதே அதேபகுதியில் இரவு ஒன்பது மணியளவில் கிணறு ஒன்றினுளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு (டிப்போ பின்பகுதி) பகுதியை சேர்ந்த மவிது நின்சர என்ற எட்டு வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

சடலம் தற்பொழுது வவுனியா பொதுவைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன்  இணைந்திருங்கள்

ஜெர்மனி வணிகவளாகத்தில் துப்பாகி சூடு : 9 பேர் உயிரிழப்பு, தாக்குதலாளிகளை துரத்தும் காவல்துறை!!

G1

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் காவல்துறை அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மூனிக் நகரின் வடமேற்கு மாவட்டமான மூஸச் மாவட்டம் முற்றாக காவல்துறையால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நகரின் எல்லா பொதுப்போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பவேரிய மாநில அரசாங்கம் நெருக்கடிகால கூட்டத்தை நடத்திவருகிறது.

ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவத்தை இடத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.

மேலும் தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வீணாக பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமையன்று பவேரியாவில் குடியேறி ஒருவர் ரயிலில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து நாடளாவிய அளவில் பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

G2 G3

ஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் : விசித்திரமான சில உண்மைகள்!!

Male

ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்

தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.

அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதியை வழங்க திட்டமிடும் பேஸ்புக்!!

FB

முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது.

தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது.

பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமென சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய நிறுவனமான பேஸ்புக் கூறியுள்ளது.

இதே போன்ற திட்டத்தை கூகுள் நிறுவனமும் செயல்படுத்துவதில் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கபாலி பட விமர்சனத்தை ரஜினி எதிர்பார்ப்பது யாரிடம் தெரியுமா?

kabali

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

ஒருபுறம் படம் குறித்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கபாலி படத்தின் நிறை, குறைகளை அலசி ஆராய்கின்றார்கள் விமர்சகர்கள்.

இந்நிலையில், கபாலி பட விமர்சனம் பற்றி ஒருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள ரஜினி ஆவலுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் வேறு யாரும் அல்ல. ரஜினியின் ஆருயிர் நண்பர் ராஜ் பகதூர். தற்போது அவர் பெங்களூரில் வசிக்கிறார்.

ரஜினி நடத்துனராகப் பணிபுரிந்த பஸ்ஸில் ராஜ் பகதூர்தான் ஒட்டுனர். பெங்களூரில் 10A பேருந்தில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 3 வருடங்கள், ரஜினியும் அவரும் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளார்கள்.

ரஜினியின் நடிப்பாற்றலை வெளிக்கொணர ராஜ் பகதூர் ரஜினியை சென்னைக்கு அனுப்பி நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படிக்க வைத்து அதற்கான முழு செலவுகளையும் ஏற்றார்.

இதனால் ரஜினிக்கு எப்போதும் இவர் மேல் அலாதியான நட்பும், பிரியமும் உண்டு. எப்போது ரஜினி பெங்களூர் சென்றாலும் இவரின் வீட்டிற்குச் சென்று விடுவார்.

சென்னை வந்து தன்னுடன் தங்குமாறு ரஜினி பலமுறை அழைத்தும், நட்பு பாதித்துவிடும் என்பதால் ராஜ் பகதூர் அதை மறுத்துவிட்டார்.

ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், இவரின் விமர்சனத்துக்காக ரஜினி காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான், அதுபோல் கபாலிக்காகவும் காத்திருக்கிறார்.

Rajani

மலேரியாவை தடுக்க புதிய வழி கூறும் விஞ்ஞானிகள்!!

Malaria

மலேரியாவை சுமந்துவரும் கொசுக்கள் சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் இரத்தத்தை காட்டிலும், மனித இரத்தத்தையே பெரிதும் விரும்பவதாக எத்தியோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இது கால்நடைகளான ஆடு மற்றும் வெள்ளாடுகளிலிருந்து இரத்தத்தை அவ்வப்போது உறிஞ்சுகிறது. ஆனால், கோழிகளை மட்டும் தவிர்த்துவிடுகிறது.

இந்த கண்டுபிடிப்பானது மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக கொசுக்களின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் – எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு 12 பேர் போட்டி : 6 பேர் பெண்கள்!!

UN

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர்.

பொதுச்செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. ஐ.நா வின் தற்போதைய பொதுச் செயலர் பான் கீ மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், அடுத்த பொதுச் செயலரை 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு தேர்ந்தெடுக்கவுள்ளது.

இப்பதவிக்குப் போட்டியிடுபவர்களில் 8 பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். மேலும் போட்டியாளர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஐ.நா வின் பொதுச் செயலராக பெண் ஒருவர் பதவி வகிக்கவில்லை என்பதால், இம்முறை பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.