நிக்கி கல்ராணி நடிப்பில் அண்மையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா என பல படங்கள் கைவசம் உள்ளன.இப்போதெல்லாம் இவர் தன்னுடன் நடித்த ஹீரோக்கள் மட்டுமில்லாமல் நடிக்காத ஹீரோக்களிடமும் நட்பு வளர்க்கிறாராம்.
அதோடு அவர்கள் நடித்து வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்தும் கூறிவருகிறாராம்.இதன் காரணமாகவே பெரும்பாலான ஹீரோ, டைரக்டர்களுக்கு பிடித்தமான நாயகியாகி வலம் வருகிறார் நிக்கி கல்ராணி.
தமிழ் சினிமாவின் குயின் நயன்தாரா. இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஜோடி சேர்ந்து தான் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஜோடி இல்லாமல் சோலோவாக டோரா படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இப்படத்தில் திகில், மர்மம், சஸ்பென்ஸ் ஆகியவை ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் ரொமான்ஸ், காமெடிக்கு படத்தில் இடமில்லை என்று இயக்குனர் தாஸ். ராமசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.
கயல் சந்திரன் அஞ்சனாவை திருமணம் செய்து பிறகு தனது திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் நாளைய இயக்குனரில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்ற சுதர் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை கேட்டு உடனே ஒப்புக்கொண்டுள்ளாராம்.இப்படம் 4 திருடர்களை பற்றிய டார்க் ஹுமர் படமாக உருவாகவுள்ளது, கிட்டத்தட்ட சூதுகவ்வும் ஸ்டைலில் ஒரு புதுவிஷயத்தை கையளவுள்ளார் இயக்குனர் சுதர்.
இப்படத்தில் பார்த்திபனும், சந்திரனும் பக்கா திருடர்கள் நடிக்கவுள்ளனர், அதுமட்டுமில்லாமல் சந்திரனின் சித்தப்பாவாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பார்த்திபன் .மேலும் பிச்சைக்காரன் படத்தில் நடித்த satna titus சந்திரனுக்கு ஜோடியாகவும் , நடிகர் சாம்ஸ் மற்றும் டேன்னி நண்பரகளாக நடிக்கவுள்ளனர். இப்படத்தை 2mb என்ற புது நிறுவனம் சார்பில் ரகுநாதன் சுப்ரமணியும் தயாரிக்கவுள்ளார்.
டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது.
இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.
இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர்.இதில் நேற்று திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும் என்று கன்சர்வேடிவ் கட்சிக்குழு தலைவர் கிரஹாம் பிராடி அறிவித்தார்.இந்தநிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை புதன்கிழமை பதவி விலகுகிறார். அன்றே தெரசா புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.59 வயதான தெரசா இங்கிலாந்தின் 2–வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.
மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் சர்ச்சைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அரசின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினருடன் நேற்று மாலை ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே இதற்கு இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 6 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், குறித்த கலந்துரையாடல் மூலம் நல்ல பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றிரவு நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை நாமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி விசாரணைப் பிரினால் நேற்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். முக்கிய பிரபுக்கள் தடுத்து வைக்கப்படும் சிறைச்சாலையில் ஈ வார்டில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசே பாதுகாப்பு வழங்கப்படும் சில கைதிகளுடன் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.சிறைச்சாலையில் வழங்கப்படும் இரவு உணவை நாமல் சாப்பிடவில்லை என்பதனை சிறைச்சாலை ஆணையாளர் உறுதி செய்துள்ளார்.
வவுனியாவில் புகையிரதக் கடவைக்காப்பாளர் சங்கம் இன்று முதல் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று(12.07.2016) காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட புகையிரத கடவைக் காப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டுள்ளார்.
புகையிரத கடவைக் காப்பாளர்கள் இம் மாதம் 3ம் திகதி வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் புகைத்தல், மதுபோதை, இலஞ்ச ஊழல் போன்றவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி இன்று (12.07.2016) காலை 11 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடு இடம்பெற்றதுடன் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வெளிச்செயற்பாட்டு இளைஞர்கள், யுவதிகள் இளையோர் தலைமைத்துவ கற்கைநெறி மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலுள்ள பொது மலசலகூடம் சுத்தம் இன்றி காணப்படுகின்றது. பிரதான பகுதியில் காணப்படும் இக் கழிவறையினை பல பொதுமக்கள் தூர இடங்களிலிருந்து வந்து பாவிக்கின்றனர்.
எனினும் இக்கழிவறை சுத்தம் இன்றி காணப்படுவதால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளனர். குறிப்பாக பணம் அறவிடப்படும் இக் கழிவறையில் சுத்தமாக இல்லாமை வவுனியா நகரசபையின் செயற்பாடுகளை பொது மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
வவுனியா நகர மத்தியில் காணப்படும் இக்கழிவறை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வவுனியா நகரசபையினரால் கேள்வி கோரல் அறிவித்தல் ஊடக தனியார் ஒருவர் மலசலகூடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தற்போது சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று கழிவறையினை பார்வையிட்ட வவுனியா நகரசபை செயலாளர் ஏற்கனவே இரு தடவைகள் குறிப்பிட்ட கேள்வி கோரல் மூலம் பெற்றுக் கொண்ட நபருக்கு அறிவுறுத்தியபோதும் சுத்தம் இன்மை காரணமாக காணப்பட்ட கழிவறையினை தற்காலிகமாக மூடிவிடுமாறும் சுத்தப்பணிகளை மேற்கொண்டபின்னர் நகர சபையின் சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் மறுபடியும் திறக்குமாறும் அதுவரையில் கழிவறையினை தற்காலிகமாக மூடி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கழிவறையினை பொதுமக்கள் பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.
பஸ் கட்டணம் அதிகரிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவையில் ஒப்படைக்கப்படவுள்ளது.
நேற்றறைய தினம் இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் கலந்துறையாடியதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தா்ர் .
பஸ் ஊழியர்கள் சங்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அமைச்சரவைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் ஐூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணம் அதிகரிப்டும், 2013 ஆம் ஆண்டு 13 வீதத்தினால்
அதிகரிக்கப்பட்டது.
பின்னர் 2015 ஆம் ஆண்டு பெற்றோல் விலை குறைவடைந்ததன் காரணமாக அது 8 வீதத்தினால் குறைவடைந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.
தற்போதை நிலைமையை கருத்தில் கொண்டு 6 வீதத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலத்தில் 22,799 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் 7369 டெங்கு நோயாளரகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ,நீர்கொழும்பு வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை 200 நோயளர்களுக்கு காய்ச்சல் நிலைமை காணப்படுவதுடன் அதில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அடையாளங்கள் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகபடியாக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல்,கண்டி, மாத்தளை, காலி, மாற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது.
பாணின் விலை உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்பட நேரிட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கான விலைகள் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
அதன்படி பொருட்களுக்கான வரி அதிகரப்பு காரணமாக பாம் எண்ணெய், மாகரீன், உப்பு, சீனி உள்ளிட்ட பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளோம்.
பேச்சுவார்த்தையின் பின்னர் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடமாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள்.
பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வேண்டுமென அடம் பிடித்தார்கள்.
இதனால் இவ்வமைவிடம் எங்கு அமைய வேண்டுமென்பதை தீர்மானிப்பதற்காக 03.07.2016ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகாண சபையின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுக்க முடியாத காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தி தீர்மானம் எடுக்குமாறு முதலமைச்சர் அவர்களை இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
இவ் வழிகாட்டலின் அடிப்படையில் 30 மாகாணசபை உறுப்பினர்கள், 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்டு நேற்று 11.07.2016ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வாக்குச்சீட்டுக்கள் பெறப்பட்டன.
இவ்வாக்குச்சீட்டுக்களின் முடிவுகளின் படி 30 மாகாண சபை உறுப்பினர்களில் 21 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஓமந்தைக்கும் 03 பேர் தாண்டிக்குளத்திற்கும் வாக்களித்துள்ளனர்.
09 மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 05 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 03 பேர் ஓமந்தைக்கும் 02 பேர் தாண்டிக்குளத்துக்குமாக வாக்களித்துள்ளனர். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதனடிப்படையில் ஓமந்தைக்கு சார்பாக 21 வாக்குகளும் தாண்டிக்குளத்திற்கு சார்பாக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் வாக்குச் சீட்டுக்கள் பதிவுத்தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் அனுப்பப்பட்டன.
இவ் வாக்கெடுப்பின் மூலம் ஆரம்பத்திலிருந்தே பலரும் விருப்பம் தெரிவித்த படி ஓமந்தை தான் பொருத்தமான அமைவிடம் என்பது உறுதியாகியுள்ளது. இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
அத்துடன் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு தூண்டு கோலாக தமது கருத்துக்களை அச்சமின்றியும் எந்த விதமான எதிர்பார்ப்புக்களின்றியும் வெளியிட்ட பொதுமக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், விவசாய அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
குறிப்பாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா அவர்களுக்கும், கௌரவ உறுப்பினர் வை.தவநாதன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டமைக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டும், நிபுணர்களின் கட்டுரைகளை வெளியிட்டும், கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை ஏற்படுத்திய சகல பத்திரிகைகள், இணையத்தளங்கள், சகல ஊடகங்களுக்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
போலாந்து வார்சாவில் உள்ள மாரியட் ஹொட்டலில் உள்ள ஜிம்மில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடற்பயிற்சி செய்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஜனாதிபதி பராக் ஒபாமா கறுப்பு நிற ஆடை அணிந்துக் கொண்டு, இளஞ் சிவப்பு நிற ஹெட் செட் போட்டுக் கொண்டு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்.
அவர் ஹொட்டலிற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களின் முன்னிலையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஒபாமாவுடன், பாதுகாப்பு குழுவின் ஐந்து பேர் இருந்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் இந்த உடற்பயிற்சி செயற்பாடு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக இருக்காது என இரகசிய சேவை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பராக் ஒபாமா, வார்சாவில் உள்ள மாரியட் ஹொட்டலிற்கு கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே ஹொட்டலில் தங்கியிருப்பதாகவும், போலிஷ் சுதந்திர தினத்தின் 25வது வருடாந்த விழாவை கொண்டாடுவதற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாமியத்தை அவமதித்த வழக்கில், அந்நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவரை தீவரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாசிர் பஷீர் என்ற நபர் பொலிசில் அளித்துள்ள புகாரில், நதீம் ஜேம்ஸ் என்னும் தனது கிறிஸ்துவ நண்பன் வட்ஸ் அப்பில் ஒரு கவிதை அனுப்பியதாகவும், அது, நபி முகம்மது உட்பட மற்ற புனித நபர்களை இழிபடுத்தும் வகையில் இருந்தாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார், நதீம் ஜேம்ஸ் மீது மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது சம்பவம் அறிந்து தலைமறைவாகியுள்ள ஜேம்சை பொலிசார் தீவரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஜேம்ஸின் உறவினர்கள் சிலரை பாதுகாப்பு காவலில் வைத்துள்ளதாகவும், நகரத்தில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செயல்களால், நாட்டில் அடி தடி மற்றும் வன்முறைகள் ஏற்படடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இது போன்று மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி என்பவர் 50 கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய பதிவு,
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை.
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் சந்தேகங்களும் இவையே.
ராம்குமார் என்ற நபரை கொலையாளி என்று காவல்துறை கைது செய்துள்ளது. உண்மைக்கும் இவர்தான் குற்றவாளி எனில் கண்டிப்பாக இவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணையின் நகர்வுகளைக் காணும் பொழுது உண்மையிலேயே ராம்குமார்தான் கொலையாளியா என்ற சந்தேகம் எழுகிறது.
அப்படியே ராம்குமாருக்கும் ஸ்வாதியின் கொலைக்கும் தொடர்பு இருப்பின் அவர் மட்டுமே இந்த கொலையில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பது எந்தளவு உண்மை?
கொலைக்கு காரணமாக கூறப்படும் ஒருதலை காதல் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்றா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்த இவ்வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க நான் எடுத்துள்ள முயற்சி இந்த பதிவு.
இந்த வழக்கைப் பற்றி முகநூலில் நான் எழுதுவதால் எந்தவொரு இனத்திற்கோ மதத்திற்கோ ஆதரவானவன் அல்லது எதிரானவன் என்று யாரேனும் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு வழக்கறிஞரான நான் பொதுப்படையாக, வெளிப்படையாக எழுப்பும் கேள்விகள் இவை.
ராம்குமார் கைதாவதற்கு முன்
ஜூன் 24 அன்று காலை நேரம் சுமார் 6.40 மணி அளவிற்கு ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலையை பார்த்த நேரடி சாட்சிகள் பலர் அங்கு இருந்துள்ளனர். ஒருவரும் கொலையாளியைப் பிடிக்க முயலவில்லை. கொலையாளி தப்பித்து விடுகிறான்.
சுமார் இரண்டு மணி நேரங்களாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கிடந்த ஸ்வாதியின் சடலம் காவல்துறையின் சம்பிரதாயங்கள் முடிவடைந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நொடி கொலையாளியின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது.
ஸ்வாதியின் செல்போன் காணவில்லை என்று தெரிய வருகிறது. காதல், குடும்ப பிரச்சனை, அலுவலக பிரச்சனை போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
தொழில்நுட்பங்களின் உதவிகளோடு (சமூக வலைதளங்கள், சி.சி.டி.வி, செல்போன் டவர்) தேடுதல் நடக்கிறது. சி.சி.டி.வி.யில் பதிவான இருவேறு உருவங்கள் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன.
இரண்டு படங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன என்று அவற்றைப் பார்த்தாலே நமக்கு புலப்படுகின்றது. கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று ஒரு அரிவாள் கண்டெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிலால் மாலிக் என்பவர்தான் கொலையாளி என்ற தகவல் பரவுகிறது. கொலைக்கு காரணம் லவ் ஜிகாத் என்று புரட்சி எழும்ப கோஷம் இடப்படுகிறது. பிலால் மாலிக்கை காவலில் எடுத்து விசாரித்ததாக தெரியவில்லை. மாறாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.
பேட்டி அளித்தவர் ஸ்வாதியின் நண்பர் பிலால் என்பது தெரியவருகிறது. ஸ்வாதியின் தோழி ஒருவரும் அவரது குடும்பத்தாரும் ஸ்வாதியை யாரோ சில காலமாக பின்தொடர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
கொலையை நேரில் பார்த்த ஒருவர் ஸ்வாதி கொலையாவதற்கு சில நாட்கள் முன் யாரோ ஸ்வாதியை ரெயில் நிலையத்தில் வைத்து அறைந்ததாகவும் ஆனால் அறைந்த நபர் கொலை செய்தவர் இல்லை எனவும் கூறுகிறார்.
ஸ்வாதியின் முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. ஸ்வாதியின் தந்தை விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணவேண்டாம் என்று முதலமைச்சருக்கு மனு செய்கிறார்.
ராம்குமாரின் கைது
ஜூலை 1 அன்று நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையின் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பண்பொழில் கிராமத்தில் ராம்குமார் என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கைது செய்யப்படுகிறார். அவர்தான் கொலையாளி என்று புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன.
ராம்குமார் சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டிற்கு அருகில் ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருந்ததாகவும் அவருடன் தங்கி இருத்த நடேசன் என்பவர்தான் அடையாளம் காண்பித்து ராம்குமாரை கைது செய்ய உதவியதாகவும் கூறப்படுகிறது.
ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றுவிட்டதாகவும், ராம்குமார் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ஒருதலைக்காதல் தான் கொலைக்கான காரணம் என்றும் காவல்துறை சார்பாக பேட்டிகள் வெளியாகின்றன.
ராம்குமாரின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியின் செல்போனும் ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராம்குமார் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். வழக்கறிஞர் ஒருவர் ராம்குமாரின் சம்மதம் இன்றி அவர் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்தது பெரும் சந்தேகத்திற்கு இடமாகி பின்னர் அந்த வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகுகிறார். ராமராஜ் என்ற வழக்கறிஞர் ராம்குமாரை சந்தித்து ராம்குமாரின் கைதில் நிறைய மர்மங்கள் இருப்பதாக பேட்டியளிக்கிறார்.
வழக்கின் சூழ்நிலைகள் இப்படி இருக்க எனக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்னவென்றால்,
சி.சி.டி.வி.யில் பதிவான அந்த உருவம் மட்டுமே கொலையாளியை நெருங்குவதற்கான கருவியாக கருதப்பட்ட நிலையில் அந்த உருவம் ராம்குமார்தான் என்று எதன் அடிப்படையில் போலீசார் முடிவெடுத்தனர்?
சிகிச்சையில் இருந்த ராம்குமாருக்கு சரிவர மயக்கம் தெளியாத பொழுதே வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கொலைக்குற்றத்தை அவர்ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே குற்றவாளி என்றும் போலீஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது. வேறு யாரும் ராம்குமாருக்கு உடந்தை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தெளிவான விசாரணை நடத்தாமலேயே ஒரு விசாரணை கைதியை குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் அறிவித்ததன் காரணம் என்ன?
கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் ஜூலை 2ஆம் தேதியே ராம்குமாரால் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடிந்தது? ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராம்குமார் நன்றாக பேச 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தது உண்மை எனில் நிஜமாகவே வாக்குமூலம் பெறப்பட்டதா?
முறையாக அடையாள அணிவகுப்பு நடத்தாமல் ராம்குமாரின் புகைப்படத்தை கொலையாளி என்று கூறி ஊடகங்களில் வெளியிட்டது ஏன்?
சி.சி.டி.வி.யில் உருவம் பதிவான அதே இடத்தில் ராம்குமாரை கொண்டு போய் நடக்க வைத்து உருவ ஒற்றுமை சோதனை நடத்தப்படாமல் தெளிவற்ற அந்த உருவம் ராம்குமார்தான் என்று ஆணித்தரமாக போலீசார் அறிவித்தது எப்படி?
ராம்குமார்தான் கொலையாளி என்று போலீஸார் அறிவித்த பிறகு கொலையை நேரில் பார்த்த நேரடி சாட்சியங்கள் யாரேனும் ராம்குமார்தான் ஸ்வாதியை வெட்டினார் என்று உறுதி தெரிவித்தனரா?
ஸ்வாதி யாரோ ஒருவன் அவரை பின் தொடர்வதாக கூறினார் என்றும் அந்த நபரை தான் சில முறை பார்த்துள்ளதாகவும் அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார். பிடிபட்ட ராம்குமார்தான் பின் தொடர்ந்த அந்த நபர் என்று அந்த தோழி ஊர்ஜிதப்படுத்தினாரா?
ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனும் சுவாதியின் வீடும் அருகிலேயே உள்ளன. கொலை நடந்த இரண்டு நாட்களிலேயே சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த நபரின் முகத்தை ஸ்கெட்ச் செய்து சுவாதியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் காட்டி விசாரித்துள்ளனர். அதே மேன்ஷனிலும் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். அங்கே மூன்று மாதங்களாக தங்கியிருந்த ராம்குமாரின் மேல் யாருக்குமே முதலில் சந்தேகம் வரவில்லையே, அது ஏன்?
அந்த தெருவில் தினமும் நடமாடிய ராம்குமாரை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம். உணவருந்த செல்லும் இடம், செல்போன் ரீசார்ஜ் என்று ஒரு சில இடங்களில் பரிச்சியம் கூட ஆகியிருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு கூடவா அது ராம்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை?
ஒரே அறையில் ராம்குமாரோடு தங்கி இருந்த நபர் காலம் தாழ்ந்து இது ராம்குமார்தான் என்று போலீசாரிடம் தெரிவிக்க என்ன காரணம்? ராம்குமாரை பிடிக்க உதவியதாக கூறப்படும் அந்த நபர் தற்பொழுது எங்கே என்ற கேள்விக்கு போலீசார் மௌனம் சாதிப்பது ஏன்?
ராம்குமார் சென்னையில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர் என்று தொலைக்காட்சிகளில் ஓயாமல் அறிவிட்டிருந்த போதும் ஏன் அந்த கடையில் உள்ள யாரும் ராம்குமாரின் மேல் சந்தேகப்படவில்லை. அந்த துணிக்கடையின் பெயர் என்ன? அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்தார்களா? ஆனால் தற்போது ராம்குமார் சென்னையில் வேலையே பார்க்கவில்லை என்று தெரியவருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியான ஸ்வாதி கொலை வழக்கும் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் என்ற படமும் அவரது கிராமத்திற்கும் சென்றிருக்கும் அல்லவா? அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அவர்களில் ஒருவருக்கு கூடவா ராம்குமாரின் மேல் சந்தேகம் வரவில்லை?
கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்னர் சுவாதியை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்போது சுவாதி அடித்தவரிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு ஸ்வாதி அமைதியாக ரயில் ஏறி சென்றதாகவும் அதை நேரில் பார்த்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அடித்த நபர் கலராக இருந்தார் எனவும் கொலை செய்து விட்டு ஓடியது அன்று அடித்த நபர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் ஸ்வாதியை அத்தனை பேர் முன்னிலையில் அடித்தது யார்? அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு?
அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை போலீஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன்? தமிழ்செல்வனிடம் முறையான போலீஸ் விசாரணை நடைபெற்றதா? அவர் கொலையாளியை நேரில் பார்த்ததாக தெரிவித்திருப்பதால் அவரை அணுகி ராம்குமார்தான் அந்த கொலையாளியா என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா?
ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு அதன் காரணமாக ராம்குமார் ஸ்வாதியை ஒருதலையாக காதலித்து, அதனை ஏற்க ஸ்வாதி மறுத்தும் பின் தொடர்ந்து காதலை கூற, ஸ்வாதி கோபமடைந்து தனது உருவத்தை விமர்சித்து திட்டியதால் ராம்குமார் அவரை வெட்டி கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் முகநூல் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தகைய குறுஞ்செய்திகள் போலீசாரால் கையகப் படுத்தப்பட்டனவா?
குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் பொதுப்படையாக மட்டுமே இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். குறிப்பிட்டு சொல்லும் படியான பின்னணி இல்லாத ராம்குமார் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தைரியமாக ஸ்வாதியை பின் தொடர்ந்து காதலை தெரிவித்ததாக கூறும்பொழுது, ஏன் அவர் தன் காதலை ஒரு முறையேனும் குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கவில்லை?
ஸ்வாதியின் முகநூலில் ராம்குமாரின் குறுஞ்செய்திகள் இருந்திருப்பின் போலீசார் முன்னரே ராம்குமாரின் முகநூல் பக்கத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ராம்குமாரின் புகைப்படங்கள் அதில் “public”ஆக இருக்கின்றன. அப்படி பார்த்திருந்தால் அப்பொழுதே ராம்குமாரை பிடித்திருக்கலாமே? எல்லா கோணங்களிலும் விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளது என்று அறிவித்த போலீஸார் இதை எப்படி தவரவிட்டனர்? அல்லது தவரவிட்டது போல நடிக்கின்றனரா?
ராம்குமாரின் முகநூலில் சுமார் 300 நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ராம்குமாரின் புகைப்படங்களை “like” இட்டவர்கள் “comment” இட்டவர்கள் என்று ஒருவர் கூட ராம்குமாரின் மேல் சந்தேகப்படாததும் வினோதமே!
ஸ்வாதி பேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். முகநூலில் 23-11-2013 அன்று “Feeling loved 🙂 <3 ” என்று பதிவு போட்டுள்ளார், குறிப்பாக சமீபத்தில் இன்ஸ்டாக்ராமில் பெங்களூர் தர்ஷினி உணவகத்திலிருந்து “lost my fav ring misng t a lot ” என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுகள் சாதாரணமானவைகளாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வழக்கின் தன்மை கருதி எந்த சூல்நிலைகளில் ஸ்வாதி அந்த பதிவுகளை பதிவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரா?
முகநூலில் வேறு ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்று தீர விசாரிக்கும் முன் அவசர கதியில் ஸ்வாதியின் முகநூல் பக்கத்தை முடக்கியதன் காரணம் என்ன?
ஸ்வாதியின் முகநூல் பக்கம் அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க முடக்கப்பட்டாதாக கூறப்படுவது உண்மை என்றால் கொலையாளியை பிடிக்க முனையாமல் கொலையாளியை நெருங்க உதவும் கருவிகளை முடக்க நினைத்ததன் காரணம் என்ன?
ஸ்வாதி அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த கொலை அவர்களது குடும்ப பிரச்சனையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விடாமல் ஒருதலை காதல் என்று மட்டும் தீவிரமாக விசாரித்ததின் பின்னணி என்ன?
ஸ்வாதியின் அப்பா மகள் இறந்து கிடந்ததை பார்த்து அழுததை விமர்சிப்பது முறையாகாது. ஆனால் போலீசார் இதை ஏன் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்வாதியின் தந்தையை தீவிரமாக விசாரிக்கவில்லை?
கொலையாளியை பிடிப்பதற்கு முன்னரே ஸ்வாதியின் தந்தை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முதலமைச்சருக்கு அவசரமாக மனு செய்ததன் பின்னணி என்ன?
சுவாதியின் பெண் தோழி ஒருவர் முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவரிடம் ஸ்வாதி சில லட்ச ரூபாய் பெற்றதாகவும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இது உண்மையா? அந்த நண்பர் யார்? அவருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை?
ஸ்வாதி ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் காதலித்த அந்த நபர் யார்? ஸ்வாதிக்கும் அவர் முன்னால் காதலருக்கும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் பச்சத்தில் அந்த நபரை ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை?
ஸ்வாதி தன்னை யாரோ ஒருவன் பின் தொடர்வதாக தோழி, தோழன், அக்கா மற்றும் அப்பா ஆகியோரிடம் கூறியதாக தெரிவித்தனர். ராம்குமாரின் கைதுக்கு பின்னர் ராம்குமார்தான் ஸ்வாதியை சில காலமாக பின் தொடர்ந்த நபர் என்றும் அதனை ராம்குமாரே ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையெனில் ஏற்கனவே அறிமுகமான ராம்குமாரைப் பற்றி ஸ்வாதி அவர்களிடம் கூறாமல் இருந்திருப்பாரா? அப்படியே ஏதாவது காரணம் கருதி ராம்குமாரின் அடையாளத்தை அவர் மறைத்திருந்தால் அந்த காரணம் என்ன? இந்த பிரச்சனையை ஏன் ஸ்வாதியின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை?
ராம்குமார்தான் ஸ்வாதியை பின் தொடர்ந்து கண்காணித்தவர் என்றால் அவர் தான் தங்கியிருந்த மேன்ஷனில் இருந்து தினமும் காலை மணி 6லிருந்து 6.30க்குள் தன் அறையை விட்டு கிளம்பியிருக்க வேண்டும். ராம்குமார் மேன்ஷனில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைவதற்கு இருக்கும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. காமெராக்களில் கொலைக்கு முந்தைய நாட்களில் ராம்குமாரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று விசாரிக்கவில்லையே ஏன்?
அனைத்து சி.சி.டி.வி காமெராக்களையும் ஆராயவில்லை என்றாலும் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்ட உருவம் பதிவான அந்த குறிப்பிட்ட காமெராவிலாவது முந்தைய நாட்களில் அதே உருவமோ அல்லது ராம்குமாரின் உருவமோ பதிவாகி இருந்ததா என்று ஏன் ஆராயவில்லை?
சூர்யபிரகாஷ் என்ற நண்பர் மூலமாக ஸ்வாதியின் நட்பு கிடைத்ததாக ராம்குமார் கூறியிருக்கிறார். யார் அந்த சூர்யபிரகாஷ்? அவரை ஏன் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை?
ஸ்வாதி இறந்த இரண்டு நாட்களுக்குள் பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று இணையத்தில் செய்தி பரவ என்ன காரணம்? அச்செய்தியை பரப்பியது யார்? அவர்களைப் போலீசார் கண்டுபிடிக்காதது ஏன்?
பெங்களூரை சேர்ந்த பிலால் ஸ்வாதி கொலையான அரை மணி நேரத்திற்குள் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்?
பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம், பொது நண்பர்கள் இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் பெங்களூரைச் சேர்ந்த பிலால் ஸ்வாதிக்கு அறிமுகமானது எப்படி? சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன் ஸ்வாதி பெங்களூரில் ட்ரைனிங் எடுத்தவர் என்பதும், சென்னை வந்த பிறகும் அடிக்கடி அவர் பெங்களூர் செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிலாலிடம் ஸ்வாதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் அவர் திணறியது ஏன்? வெறும் நண்பர்களாக இருக்கும் பச்சத்தில் அதை தைரியமாக அவர் கூறியிருக்கலாமே?
ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் இது ஒரு முஸ்லிமினால் செய்யப்பட்ட கொலை தான் என்று பேட்டி கொடுத்தது ஏன்? அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? எது அவர்களை இப்படிக் கூற வைத்தது?
இவ்வளவு சந்தேகங்கள் பிலாலின் மேல் எழுந்தும் அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? அவரது தொலைபேசி பதிவுகள், வீடு போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்படாதது ஏன்?
முதலில் கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று சந்தேகிக்கப்பட்ட அரிவாள் கர்நாடகா மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று அறிவித்ததை, ராம்குமாரின் கைதிற்கு பின் அது திருநெல்வேலியில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்று அறிவித்தது எப்படி?
ஸ்வாதியின் பிரேத பரிசோதனை அறிக்கை எங்கே? அதில் என்ன கூறியிருக்கிறது என்ற தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது எதனால்?
பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வாதி கொலையுண்டது போலீசார் வசம் உள்ள ஆயுதத்தால் தான் என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளதா?
ராம்குமார் தான் அந்த அரிவாளை பக்கத்து தோட்டதில் இருந்து திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கத்து வீட்டு ஆட்கள் யார்? அந்த அரிவாள் தங்களுடையது என்று ராம்குமாரின் அண்டை வீட்டார் யாரேனும் அடையாளம் கண்டுள்ளனரா?
அந்த அரிவாளில் இருந்து ஸ்வாதியின் ரத்தமோ ராம்குமாரின் கைரேகையோ கண்டறியப்பட்டுள்ளதா?
கொலை செய்து விட்டு ரத்தம் படிந்த சட்டையுடன் ராம்குமார் மேன்ஷனிற்குள் நுழைந்திருந்தால் வழியில் யார் கண்ணிலாவது சிக்கியிருப்பார். ஒருவேளை முன்னேற்பாடோடு வேறு சட்டை ஒன்றை அவர் எடுத்து சென்றிருந்து அதை மறைவிடம் வந்து மாற்றி இருந்திருக்கலாம். அப்படி மிக ஜாக்கிரதையாக திட்டம் தீட்டியவருக்கு ஏன் அந்த சட்டையை அழிக்க தோன்றவில்லை?
ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையை ராம்குமாரின் வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் அறிவித்துள்ளனர். ஒரு வார காலமாகவா ராம்குமார் அந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பார்? அதை அழித்திருக்க அவருக்கு போதிய அவகாசம் இருந்ததல்லவா? அப்படி இருக்கையில் அதை ஏன் ராம்குமார் அழிக்காமல் வைத்திருந்தார்? தான் ஆடு மெய்க்க போனபோது ஒரு குழியைத்தோண்டி புதைத்திருக்கவோ அல்லது எரித்திருக்கவோ வாய்ப்பிருக்கிறதே? அதை ஏன் அவர் செய்யவில்லை?
ஸ்வாதியின் செல்போனை ராம்குமாரின் வீட்டில் கண்டெடுத்ததாக கூறுகின்றனர். ராம்குமாரின் செல்போனை புகைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்ட போலீசார் ஏன் ஸ்வாதியின் செல்போனை அதே போல வெளியிடவில்லை? உண்மையிலேயே ஸ்வாதியின் செல்போன் ராம்குமார் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதா? அது இப்போது எங்குள்ளது?
அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் யாவை? வாட்சப் மூலமாக நான் ஸ்வாதியிடம் பேசுவேன் என்று ராம்குமார் கூறியது உண்மை என்றால் என்கிரிப்ஷன் முறையில் பழைய வாட்சப் குறுஞ்செய்திகளை ஸ்வாதியின் செல்போனில் இருந்து கண்டெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? ஆமாம் என்றால் அதில் இருந்து தெரிந்து கொண்ட உண்மைகள் யாவை?
ஏற்கனவே போலீசாரால் ஸ்வாதியின் டூப்ளிகேட் சிம்கார்டு எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பெங்களூர் எண்ணிற்கு மட்டும் ஸ்வாதி அதிக அளவில் பேசியதாகவும் குறுஞ்செய்திகள் பரிமாறிக்கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது ராம்குமாரின் எண் இல்லை. அந்த எண் யாருடையது?
அந்த குறுஞ்செய்திகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டதா? அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா? அது பிலால் மாலிக்கின் எண்ணா? சுற்றி சுற்றி பெங்களூருக்கும், பிலால் மாலிக்கிற்கும் சுவாதியின் அப்பாவிற்க்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதோ ஒரு முக்கிய தொடர்பு இருப்பது போலவே தோன்றினாலும் இந்த கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரிக்காதது ஏன்? அந்த கோணத்திலும் விசாரித்தோம் என்றால் ஏன் அந்த பெங்களூர் மர்ம நபர் (பிலால் மாலிக்காகவும் இருக்கலாம்) காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை? அதே போல ஸ்வாதியின் கம்ப்யூட்டரை கைப்பற்றி விசாரித்ததாக கூறினார்களே, அதில் கிடத்த தகவல்கள் என்ன?
உண்மைகள் இவ்வாறு இருக்க ஸ்வாதியை பின் தொடரும் நோக்கத்தோடு ராம்குமார் சென்னைக்கு வந்திருந்தால் தனது சரியான முகவரியை மேன்ஷனில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடலாம் என்ற நோக்கத்தோடு அரிவாளை திருடிக்கொண்டு வந்தவன் முன்னெச்சரிக்கையாக போலி முகவரி கொடுத்திருந்திருக்கலாமே? அல்லது ஏ.எஸ்.மேன்ஷனை காலி செய்து போலி முகவரியுடன் வேறு அரை எடுத்து தங்கி இருக்கலாமே?
ஒருவேளை ராம்குமார் கொலை செய்திருந்தால் மேன்ஷனில் தன்னை பற்றிய முழு விபரம் உள்ளதால் போலீஸ் எப்படியும் தன்னை நெருங்கி விடும் என்ற எண்ணம் வந்திருக்காதா? நெல்லை வந்த ராம்குமார் வட மாநிலத்திற்கு ரயில் ஏறி இருந்திருக்கலாமே? அதற்கு போதிய அவகாசம் இருந்தது தானே?
ஏ.எஸ்.மேன்ஷனின் 404 என்ற அறையில் ராம்குமாரின் பொருட்கள் குறைந்த அளவே இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ராம்குமார் கொலை செய்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் நெல்லைக்கு கிளம்பி இருந்திருக்கும் பட்சத்தில் அவரது resume மற்றும் வீட்டு முகவரி சம்மந்தப்பட்ட விவரங்களை உடன் எடுத்து சென்றிருக்கலாமே? தடயங்களை ஏன் விட்டுச்செல்ல வேண்டும்?
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ராம்குமாரின் வீட்டிற்குள் நுழையும் முன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? நன்றாக தூங்குபவர்களும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எழுந்து விடுவார்கள், வெளியே உண்டாகும் ஒவ்வொரு அசைவும் தெளிவாக வீட்டினுள் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே என்று கூடவா போலீசாருக்கு தெரியவில்லை? மின்சார வெளிச்சத்தில் சுற்றி வளைத்திருந்தால் “ஆபரேஷன் ராம்குமார்” இன்னும் எளிதாக முடிந்திருக்குமே?
ராம்குமார் வீட்டினுள் நுழையும் போது ராம்குமாரை முத்துகுமார் என்று போலீசார் குறிப்பிட என்ன காரணம்? தீவிரமாக நோட்டம் இட்டு பிடிக்கப்பட்ட நபரின் பெயரை கூடவா போலீசார் சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை?
ராம்குமார் போலீசாருக்கு பயந்து தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது என்ற சம்பவம், ராம்குமார் தான் கொலையாளி என்று நம் எல்லாரையும் நம்ப வைத்தது. ஆனால் உண்மையிலேயே ராம்குமார்தான் தன் கழுத்தை அறுத்துக்கொண்டாரா?
பதட்டத்திலும் அளவெடுத்த மாதிரியா ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்வான்? தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவன் பிளேடை கையில் வைத்துக்கொண்டே தூங்க முடியுமா? மின்சாரம் இல்லாதபோதும் சரியாக பிளேடை தேடி எடுக்கும் அளவிற்கு ராம்குமாருக்கு அவகாசம் இருந்திருக்குமா? ராம்குமாரே தற்கொலைக்கு முயன்றிருந்தாலும் உட்காரவைத்து புகைப்படம் எடுக்கும் அவகாசம் போலீசாருக்கு எப்படி கிடைத்தது?
ராம்குமாரின் வீட்டு பெண்களை கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்து அவசர அவசரமாக செய்திகளில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அது ராம்குமாரை எந்த வகையேனும் மிரட்டும் முயற்சியோ? ராம்குமாரை புழல் சிறையில் அடைக்கும் வரை ராம்குமாரின் பெற்றோர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை?
உண்மையில் ஸ்வாதி கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது? ஏன் இத்தனை விடை தெரியா கேள்விகள்? இவைகளுக்கு விடை அறிய முயலாத போலீசாரின் அலட்சியம் ஏன்?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் நேர்மையான பதில்கள் காவல்துறையிடம் இருந்தால் நிச்சயமாக ராம்குமார்தான் குற்றவாளி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருப்பின் ராம்குமார் இந்த கொடூர கொலைக்கான சரியான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ராம்குமார் தனியாக செய்திருந்தாலும் சரி, கூட்டுச்சதி செய்திருந்தாலும் சரி, தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஒருவேளை இந்த கேள்விகளுக்கு காவல்துறையிடம் பதில்கள் இல்லையெனில், வேகமாக இவ்வழக்கை முடிக்கும் நோக்கத்தில் நீதியை சாகடிக்கும் மெத்தனத்தை, யாரையோ எதற்காகவோ காப்பாற்ற முயலும் முனைப்பை, பொது மக்களின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராம்குமார் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருப்பின் நாளை நமக்கும் இந்த நிலைமை வரலாம்.