இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ஜெனிலியாவுக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ஜெனிலியா பொலிவுட் சென்றபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்து 2003 ஆம் ஆண்டில் இருந்து காதலர்களாக வலம் வந்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ரியான் என ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஜெனிலியாவுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ரியானுக்கு தம்பி பிறந்துள்ளது குறித்த மகிழ்ச்சியை ரித்தேஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, என் அம்மா, அப்பா எனக்கு தம்பி பாப்பாவை பரிசளித்துள்ளனர். தற்போது என் பொம்மைகள் எல்லாம் அவனுடையது…லவ் ரியான் என்று தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத யாத்திரை காலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்து அங்கு சுற்றுப்புற சூழலை குழு ஒன்று சுத்தப்படுத்தியுள்ளது.
கடந்த 27 மற்றும் 28ஆம் திகதி சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பன குறித்த குழுவால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குழு ‘ஒன்றிணைவோம் உதவி செய்வோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த சுத்தப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு முற்று முழுதாக பேஸ்புக் நட்பு வட்டாரங்களால் உருவாக்கப்பட்ட தனியார் அமைப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான பொதுப்பணிகளில் தாம் ஈடுபடுவது எவ்வித இலாபத்துக்கோ, புகழுக்கோ அன்றி பேஸ்புக் வலைத்தளத்தினால் சமூகத்திற்கு பல நல்ல காரியங்களையும் செய்யமுடியும் என்பதை உணர்த்துவதற்காகவே என்று அந்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் நாட்டில் இருந்த முரண்பாடுகள் மற்றும் அரசியல் காணரங்களால் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இத்தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் மே 31 தொடக்கம் ஜூன் 4ஆம் திகதிவரை ஜந்து நாட்கள் கண்வில்லை மாற்று சத்திரசிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது.
இதில் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மதவாச்சி போன்ற பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கான கண்வில்லை மாற்று சத்திரசிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றன.
இக் கண் சத்திரசிகிச்சை ஏற்பாட்டாளராக புனர்வாழ்வும் புதுவாழ்வும் பிரித்தானியா, விஷன் 2020 இலங்கை, விஷன் மிஷன் சிங்கப்பூர், றோட்டரிகழகம் முல்லைத்தீவு போன்றவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஏராளமான பொது மக்கள் வந்து சேவையினை பெற்றுச் செல்கின்றனர். அத்துடன் வெளிநாட்டு கண் வில்லை சத்திரசிகிச்சை நிபுணர்கள் இருவர் அத்துடன் இலங்கை நிபுணர்கள் என இணைந்து கண் சத்திரசிகிச்சை முகாமில் சிகிச்சை வழங்கிவருகின்றனர்.
குறித்த ஜந்து நாட்களில் 500 பேருக்கு கண் சத்திர சிகிச்சையினை செய்து முடிக்கப்பட்டால் இலங்கையில் இடம்பெற்ற கண் சத்திர சிகிச்சை முகாமில் முதல் தடவையாக இடம்பெறும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா எதிர்வரும் 11-06-2016(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் இலங்கையின் முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் எம்.சிவகுமாரின் அக்னி இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களிலொன்றான பேஸ்புக்கையொத்த மற்றுமொரு சமூக வலைத்தளமொன்று வட கொரியாவினால் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தளத்தை டக்மடோர் என்னும் நபரொருவரே முதன் முதலில் இனங்கண்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வலைத்தளமானது இனங்காணப்பட்ட மறு தினமே நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதனுள் உட்பிரவேசிப்பதற்கும் அதனை இயக்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இவ்வலைத்தளத்திற்கும் வட கொரிய நிறுவனத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கையடக்கதொலைபேசியில் செல்பி எடுப்பதாக ஏமாற்றி மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த அஃப்டாப் என்பவர், தனது மனைவி ஆயிஷாவை வர தட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் இனிமேல் கிடைக்காது என்று தெரிந்ததும், ஆயிஷாவை கொலை செய்ய திட்டமிட்ட அஃப்டாப், மனைவியிடம் சூட்சுமமாக பேசி, அன்பாக இருப்பதை போல நடித்துள்ளார்.
கங்கை ஆற்றுக்கு மனைவியை கூட்டி சென்ற அஃப்டாப், அதன் முன் நின்று செல்பி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். கணவன் கூப்பிட்டதால் ஆசையாக சென்று செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆயிஷா.
இதையடுத்து, எதிர்பாராத நேரத்தில் ஆயிஷாவை ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் அஃப்டாப். இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஃப்டாபை கைது செய்துள்ள பொலிஸார்அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் பொலிஸாரை திசை திருப்பும் வகையில் கதை கட்டியுள்ளார் அஃப்டாப். எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என பொலிஸாரிடம் அஃப்டாப் கூறினார்.
ஆனால் ஆயிஷாவின் அண்ணன் தனக்கு அஃப்டாப் மீதுதான் சந்தேகம் இருப்பதாக உறுதியாக கூறியதை தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்ததை அஃப்டாப் ஒப்புக்கொண்டார். ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குருநாகல் – அளவ்வ, சியம்பலாபிடிய பிரதேசத்தில் தாய் ஒருவர், தனது 5 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, தனது 5 மாத குழந்தை தாய் பால் அருந்தாமை காரணமாகவே குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன் போது தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மூத்த பிள்ளை பாடசாலை சென்றிருந்ததாகவும், சம்பவம் குறித்து சியம்பலாபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். லால்குடி வட்டம், டால்மியாபுரம் அருகேயுள்ள கல்லகம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் இளையராஜா (26). லொரி ஓட்டுநர்.
இவர் இதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தியை (17) காதலித்து, கடந்த 21ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில், ஆனந்தியின் அண்ணன் அருண், இளையராஜாவை அடித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில், பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இளையராஜாவின் உறவினர்கள் கல்லக்குடி காவல் நிலையம் முன்புசாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக பொலிசார் உறுதி அளித்ததன் பேரில், மறியல் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக கல்லக்குடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் சமர்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் (01.06) புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள பன்னிரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் நீதவானிடம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவு இட்டார்.
மேலும் கடந்த மாதத்தில் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் தாயார் சந்தேக நபர்களின் உறவினர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நாளை வியாழக்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனினும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சமரசத்திற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வழக்கின் முக்கிய திருப்பு முனைக்கு உதவும் என அறியப்பட்ட டீ.என்.ஏ அறிக்கை இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
வவுனியா நெற் இணையம் இன்று (01.06.2016) 3ம் ஆண்டை நிறைவுசெய்து 4ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றது. இதனை முன்னிட்டு வவுனியா தமிழ் ஊடகவியாலாளர்களுடன் வவுனியா நெற் தனது 3வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடியது.
கடந்த 01.06.2013 இல் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா நெற் இணையம் பல்வேறு தடைகளைத்தாண்டி வவுனியா மண்ணின் முன்னணி இணையத்தளமாக வலம்வருகின்றது.
எந்தவித அரசியல் நோக்கமுமின்றி புலம்பெயர் தமிழ் உறவுகளையும் தாயக உறவுகளையும் ஒன்றிணைப்பதற்காகவும், வவுனியா மண்ணின் நிகழ்வுகள் மற்றும் மண்ணின் சாதனையாளர்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இவ் இணையத்தளம் பல்வேறு சவால்களையும் தாண்டி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகின்றது.
குறுகிய காலத்தில் வவுனியா மண்ணில் வவுனியா நெற் இணையம் தடம்பதிக்க காரணமாக இருந்த வாசகர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன் நேரத்தில் வவுனியா நெற் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்றும் உங்கள் ஆதரவுடன் உங்கள் பிரதேசத்தில் இருந்து உங்கள் குரலாக ஒலிப்போம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொரிலா ஒன்றிடம் சிக்குண்டு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்தப் பூங்காவில் கொரிலா இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள் 3 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.
இதன்போது, அங்கிருந்த 17 வயதுடைய ‘ஹரம்பே’ எனப்பெயரிடப்பட்ட ஆப்பரிக்க கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்றதோடு சுமார் 10 நிமிடங்கள் அங்கும் இங்குமான இழுத்துச் சென்றது.
இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தனது 17ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.
கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கொரிலாவிடம் சிக்கிய சிறுவன் இறந்திருக்கலாம் என பலராலும் நம்பப்பட்ட போதும் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் புகைப்படங்களும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் முதன் முதலாக சிறுவனின் புகைப்படம் சிறுவனின் விபரங்கள் பெற்றோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
3வயதுடைய இசாஹா டிக்சர்சன் என்ற சிறுவனே இவ்வாறு கொரிலாவிடம் சிக்குண்டவன் ஆவான். குறித்த சிறுவன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தாயாரான 32 வயதுடைய மிச்சல் கிரிக்,
‘எனது மகனுக்காக கடவுளிடம் செபம் செய்த மற்றும் தனது அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். எனது மகனை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கடவுள் காப்பாற்றியுள்ளார். எனது மகனுக்கு பலத்த காயங்களோ, எலும்பு முறிவுகளோ ஏற்படவில்லை. சிறு காயம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. அவன் நன்றாக நடக்கின்றான். இந்த சம்பவம் சகல பெற்றோர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் எனது மகனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கின்றேன். என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓஹியோ பொலீசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓஹியோ பொலிசார் தமது அறிக்கையில்,
‘பெற்றோரின் கவனயீனம் காரணமாக தான் குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம்.
கொரில்லாவை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இணைய மனுவில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோரே பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில் வைத்துத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் நடந்தது என்னவென சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் டுவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.
நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில் வைத்து இளைஞர் ஒருவரைத் தாக்கி விட்டதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பலரும் கருத்துத் தெரிவித்து வந்திருந்தனர். அதேவேளை, சூர்யாவுக்கு ஆதரவாக எவரும் பேசவில்லை.
இந்நிலையில், நடு வீதியில் வைத்து தன்னை அடித்ததாக நடிகர் சூர்யா மீது பிரேம்குமார் என்னும் இளைஞர் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
இதையடுத்து, தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் சூர்யா மீது வழக்குத் தொடுத்திருந்த பிரேம்குமார் அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா கிருஷ்ணஸ்வாமி என்பவர் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார்.
”என்னை அந்த இரு இளைஞர்களும் மிரட்டியபோது என்மீது கை வைக்க வேண்டாம் என்று அந்த இளைஞர்களிடம் கூறிய சூர்யாவிற்கு நன்றி.
அந்த இளைஞர்கள் என் கார் கண்ணாடியை உடைத்து விட்டனர். இதனால் என்னுடைய பாதுகாப்புக்காக நான் கார் கதவுகளை ஏற்றி விட்டுக் கொண்டேன்.
அவர்கள் இருவரும் பணம் கேட்டு என்னை மிரட்டினர். அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இடையில் நான் தனியாக மாட்டிக் கொண்டேன். இதுதவிர என்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
உங்கள் காரை நிறுத்தி அந்த இளைஞர்கள் என் மீது கைவைக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதற்கு நன்றி சூர்யா. சரியான நேரத்தில் உங்களின் தலையீடு இருந்தது” என்று சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடிகர் சூர்யா ”இவ்வளவு செயல்களுக்குப் பின்னரும் என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறிய உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் அனைவருக்கும் நன்றி” என குறித்த பெண்ணுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பயண சீட்டின்றி பயணித்தல், உரிய வகுப்புகளில் பயணிக்காமை, எடுக்கப்படும் பயண சீட்டுகளுக்கு மாறாக அதிக தூரம் பயணித்தல் ஆகிய குற்றங்களின் போது இந்த தொகை தண்டப்பணமாக அறவிடப்படவுள்ளது.
சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது.
இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான ஆரம்ப வடிவமைப்பு முதன் முதலில் 1947 ஆம் ஆண்டும் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்ட் கோர்னர் வெளியிட்டார்.
காட்தர்ட் பேஸ் சுரங்கம் என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோமீட்டர்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள செய்கன் என்ற சுரங்க வழி ரெயில் பாதை (53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக காணப்பட்டது.
அல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், சூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை சுவிஸின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்ட் என்ற பகுதியில் தொடங்கி, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகின்றது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹொலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திலகரட்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவருக்குமிடையிலான, வாய்த்தர்க்கமானது அரசியல் விடயங்கள் வரை சென்றதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ‘எனக்கு விருப்பமான வகையில் விளையாட முடியாதவர்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து விட்டு செல்லலாம்’ என அமைச்சர் தயாசிறி கூறிய வேளை ‘தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது’ என்று கூறிவிட்டு டில்சான் அங்கிருந்து சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.