இந்தியாவின் டெல்லிக்கு அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் திகதி 8 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டு இருந்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம இளைஞர் ஒருவர் சிறுமியை வாயை மூடி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளார்.
பின்னர், மோசமான நிலையில் சிறுமியை அதே இடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளார். மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளதால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமிராவில் இளைஞர் சிறுமியின் வாயை மூடி தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
பாதிக்கப்படட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து, பொலிசார் சிசிடிவி வீடியோ காட்சி உதவியுடன் குற்றவாளியை கைதுசெய்துள்ளனர்.
இனியும், இதுபோன்ற கொடூரமான மிருகங்களிடமிருந்து அப்பாவி குழந்தைகளை பாதுகாக்க, இந்தியா அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உப்பட்ட சந்திவெளி காட்டுப் பகுதிக்குள் இருந்து இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோரகல்விமடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த இராசையா ரஞ்சனா (வயது 25) என்ற திருமணமான இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று செவ்வாக்கிழமை(31.05) முற்பகல் வேளை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்காக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் தின நிகழ்வுகள் இன்று(01.06.2016) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வடமாகாண தோ்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் A.O.M.நபீல், அனுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.சமன் பந்துலசேன, புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் A.M.M.கபீர், குருநாகல் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் தர்சனபிரவீனா, வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி.கிருஷ்ணகுமார், வவுனியா மாவட்ட தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு யாழ்பாணத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை நொச்சிமோட்டை பகுதியில் மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
சாரதியின் தூக்கத்தினால் பஸ் வண்டி வீதியை விட்டு இறங்கி ஒரு மரத்தின் மீது மோதியே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கூறினர்.
இச் சம்பவம் நேற்று (31.05.2016) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் 30க்கும் அதிகமானவர் பயணம் செய்ததாகவும் சிறுசிறு காயங்களுக்கு பலர் உள்ளானதாகவும் அதில் 6 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது மிகையாகாது.
அதைவிட கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு..
நூலக வரலாறு
இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் காரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளந்துள்ளது.
இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது.
அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான்.இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.
சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.
நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.
பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.59இல் அதி விமரிசையாக அப்போது யாழ்முதல்வராக இருந்த முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
பொது நூலகம் எரிப்பு
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது.நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.
1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. இப்பணிக்க முழுநேர பொறியிலராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் திரு ந. நடேசன் ஆவார். அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.
1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.
பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து. முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு,
மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டவர் மற்றும் சிறுவர் உட்பட 16 சந்தேக நபர்களுக்கு ஜுன் 14 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற அடுத்த அமர்வின்போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்களில் ஈரானைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அடங்கியுள்ளதாகவும், குறித்த சிறுவனை மாகொல குழந்தைகள் நன்னடத்தை மையத்தில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்களில் 10 ஈரானிய பிரஜைகள், 3 இலங்கையர், ஒரு இலங்கைப் பிரஜை, பாகிஸ்தான் பிரஜை மற்றும் சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி 110 கிலோகிராம் எடையுள்ள ஹெரொயின் போதைப்பொருளுடன் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
சிகா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பும் மக்களை பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அல்லது குறைந்தது எட்டு வாரங்களுக்காவது உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கூறிய இந்த அறிவுரை, உலக சுகாதார நிறுவனத்தின் முந்தைய பரிந்துரையை விட இரட்டிப்பு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது துணைவருக்கு சிகா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் இருந்தால், தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்கள் ஆறு மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியை நிறுத்தத் தேவையில்லை என்று கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உடுநுவர பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும் கிராம சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
15,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள குறித்த கிராம சேவை அதிகாரி முயற்சித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி கூறினார்.
பெண்ணொருவர் வௌிநாடு செல்வதற்கு தேவையான குடும்ப பிண்ணனி குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக அவர் இந்த இலஞ்ச தொகையை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அதன்படி அவருடைய வீட்டில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி கூறினார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர,
உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன்.
33 வயதுடை நுவான் குலசேகர இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் வட்ஸ் அப் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (அப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் அப் செயலி பயன்படுத்தப்பட்டுவருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ் அப் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சதவீத அன்ரொய்ட் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பேஸ்புக் மஸஞ்சர் செயலி பெற்றுள்ளது. இந்த செயலி 49 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பாடசாலை செல்வதற்காக தினமும் 800 மீ பாறைகள் அடர்ந்த மலையைக் கடந்து சிறுவர்கள் செல்வது தெரியவந்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அட்டூலர் என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள், தினமும் பாடசாலைக்குச் செல்ல அங்குள்ள மலையைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.
பல்வேறு விருதுகளை வென்ற சீனாவின் பிரபல புகைப்படக் கலைஞர் சென் ஜீ எடுத்த புகைப்படங்கள் மூலம் இந்த செய்தி உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
மேலும், அட்டூலர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக மிகவும் சிரமத்துடன் மலையேறும் காட்சிகளை அவர் எடுத்துள்ள 90 நிமிட வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அந்த புகைப்படத்தை எடுத்த சென் ஜீ கூறுகையில், ஆறு முதல் 15 வயதிற்குட்பட்ட 10 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைச் செல்ல தினமும் மலையேறும் அந்த காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
கர்ப்பமான பெண்கள் தமது பிரசவங்களைப் பற்றி, பிரசவ முறைகளைப் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் பிரசவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிரசவமாக இருக்குமா? அல்லது சிசேரியன் பிரசவமாக இருக்குமா? என பெண்களும் கணவன்மாரும் ஒரு ஏக்கத்துடன் இருப்பார்கள்.
பெரும்பாலான தம்பதியினர் இதனை எப்படியாவது ஒரு சுகப் பிரசவமாக நடத்திவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நிறைவேற்றுவதே மருத்துவத்துறையில் எமது கடமையாகும்.
நடைமுறையில் சிசேரியன் பிரசவம் மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில் இலகுவாக ஒரு குறுகிய நேரத்தில் முடித்துவிடக் கூடியதாக இருப்பதனால் மருத்துவர்களைப் பொறுத்தவரையில் சிசேரியன் பிரசவம் சுலபமான தீர்வாக இருந்தாலும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா?.
பெண்கள் நீண்ட நேரம் பிரசவ வலியை அனுபவித்து பல மணி நேரங்களின் பின் தமது குழந்தையைப் பெற்றெடுக்கும் சாதாரண சுகப் பிரசவத்தையே தமக்குரிய தீர்வாக எதிர்பார்ப்பார்கள். அது மட்டுமின்றி இதன்போது தான் அவர்கள் முழுமையாக திருப்தி அடைகிறார்கள். ஆகையால் நாம் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்கி அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் விருப்புகளுக்கும் ஏற்றவாறு சுகப் பிரசவத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் போதே எமக்கும் ஒரு திருப்தி நிலை ஏற்படுகின்றது. எனவே, இன்றைய கட்டுரையில் சிசேரியன் பிரசவங்களை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி ஆராய்வதோடு சிசேரியன் பிரசவங்களை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களையும் அறிந்து கொள்வோம்.
பிரசவத் திகதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?
கர்ப்பம் தரித்த பெண்களில் இறுதியாக மாதவிடாய் வந்த திகதியிலிருந்து 9 மாதங்களிலும் 7 நாட்களிலும் (40 வாரங்கள்) பிரசவ திகதி தீர்மானிக்கப்படும். சாதாரண பிரசவமாக இருந்தால் பிரசவ வலி இந்த 40 கிழமைகளின் முடிவில் ஒரு சில கிழமைகள் முன்னரோ அல்லது ஓரிரு வாரங்கள் பின்னரோ ஆரம்பிக்கும்.
40 வார கால முடிவில் வழங்கப்பட்ட எதிர்பார்ப்புத் திகதியில் பிரசவ வலி வரவில்லையென சிசேரியனைப் பற்றி சிந்திக்காமல் நாம் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து அதாவது 41 வார காலம் வரை காத்திருக்கும் போது கூடுதலானவர்களில் பிரசவ வலி ஏற்பட்டு சாதாரண பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஏதாவது காரணங்களுக்காக சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தால் 38 – 39 வாரங்கள் முடிந்த பின்னர் சிசேரியன் மேற்கொள்ளும் போதே குழந்தை சிக்கல்கள் எதுவுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் ஏதாவது காரணங்களுக்காக குறைந்த வாரங்களில் சிசேரியன் மேற்கொள்ளும் போது நாம் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும். அதாவது பிரசவத்தின் பின் குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைகள் இருந்து மேலும் சில நாட்கள் குழந்தை வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் குழந்தையை வைத்தியசாலையில் வைத்திருப்பது பெற்றோருக்கு வேதனையான விடயமே. எனவே பிரசவ திகதிக்கு சற்று முந்திய வாரங்களில் சிசேரியன் என்று தீர்மானிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம்.
தலை மேல் கால் கீழேயுள்ள சிசுவின் (Breech) பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தில் சிசு கர்ப்ப பையினுள் இருக்கும் விதம் ஒரு முக்கியமான விடயம். பெரும்பாலான சிசுக்கள் தலை கீழேயும் கால் மேலேயுமான நிலையிலேயே கர்ப்பப் பையினுள் அமைந்திருக்கும். இவ்வாறான சிசுக்களை வேறு மருத்துவ சிக்கல்கள் இல்லாதவிடத்து சாதாரண சுகப் பிரசவத்தின் மூலம் பிரசவிப்பது இலகுவானது. ஆனால் சிசுவின் தலை மேலேயும் கால் கீழேயும் உள்ள நிலையில் சாதாரண பிரசவம் சிக்கலானதாக அமையுமென்பதனை நாம் அறிய வேண்டும். இதனால் இவற்றை சிசேரியன் மூலம் பிரசவிக்கிறார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பிரசவத்திற்கு முன்னரே இவ்வகையான சிசுக்கள் கர்ப்பப் பையினுள் இருக்கும் விதத்தை கர்ப்பிணி ஒருவரின் வயிற்றை வைத்தியர் தனது கைகளால் அசைத்து தலை மேலேயுள்ள சிசுவை திருப்பி தலை கீழேயாக மாற்ற முடியும். அதன் பின்னர் இவர்களை சாதாரண சுகப் பிரசவத்திற்கு அனுமதிக்க முடியும். இந்த முயற்சி பெரும்பாலானவர்களுக்கு வெற்றி அளிக்கின்றது. இப்படியான முயற்சிகள் மூலம் சிசேரியன் பிரசவங்களின் அளவு குறைக்கப்படுகின்றது.
கர்ப்ப காலத்தின் இறுதிப் பகுதியில் உயர்குருதியமுக்கம் ஏற்பட்டால் பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தின் இறுதிப் பகுதியில் உயர் குருதியமுக்கம் (High Blood Pressure) ஏற்படும் போது ஒரு நிலையில் பிரசவமே இதற்குத் தீர்வாக அமைகின்றது. இந்தப் பிரசவம் கட்டாயம் சிசேரியனாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. முதலில் நாம் அவர்களுக்கு சாதாரண பிரசவத்தை முயற்சிக்க வேண்டும். இது கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கின்றது. ஆனால் சாதாரண பிரசவம் தோல்வியடைந்தால் அல்லது தாமதமடைந்தால் சிசேரியன் பிரசவம் பற்றி சிந்திக்கலாம்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படின் பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும்போது பிரசவ திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன் பிரசவம் மேற்கொள்ள வேண்டும். இதன் போது தான் சிசுவிற்கு இறுதி நேரத்தில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைகளை தவிர்க்க முடியும். இதற்காக நீரிழிவு நோயுடைய பெண்களுக்கு பிரசவம் கட்டாயம் சிசேரியனாகத்தான் இருக்க வேண்டியதில்லை. சாதாரண சுகப் பிரசவமும் முடியும். முதலில் சாதாரண சுகப் பிரசவத்திற்கு முயற்சித்து இது வெற்றியளிக்காவிடில் சிசேரியன் மேற்கொள்ளலாம்.
ஒருமுறை சிசேரியன் மேற்கொள்ளப்பட்டவருக்கு அடுத்த பிரசவம் எவ்வாறு அமையலாம்?
ஒருமுறை சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் அடுத்த முறை கர்ப்பந்தரிக்கும் போது இம்முறையும் கட்டாயம் சிசேரியன் பிரசவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.
முதல் முறை என்ன காரணத்திற்காக சிசேரியன் மேற்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்து அடுத்த பிரசவத்தை தீர்மானிக்கலாம். அதாவது தாயின் இடுப்பு சிறிது என்பதற்காக முதல் முறை சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இம்முறையும் சிசேரியன் தான் மேற்கொள்ள வேண்டி வரும். வேறு காரணங்களுக்காக கடந்த முறை சிசேரியன் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இம்முறை சாதாரண பிரசவத்திற்கும் வாய்ப்புள்ளது.
நீண்டகாலம் குழந்தைப் பாக்கியம் தாமதமடைந்து கருத்தரித்தவர்களுக்கு எவ்வாறான பிரசவம் உகந்தது.
நீண்டகாலம் குழந்தைப் பாக்கியம் தாமதித்து கருத்தரித்தவர்களில் வேறு எந்தச் சிக்கலும் கர்ப்ப காலத்தில் இல்லாதவிடத்து சாதாரண பிரசவம் முடியும். ஆனால் பெண்கள் தமது தனிப்பட்ட விருப்பத்திற்கமைய சிசேரியனை தீர்மானித்தால் அதனை மேற்கொள்ள முடியும்.
எனவே பெண்களே! பிரசவ முறைகள் எவை? அவற்றில் உங்களுக்கு பொருத்தமான முறை என்ன? என்பவற்றை உங்களைப் பராமரிக்கும் வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிவித்து அவரிடமிருந்து தகுந்த விளக்கங்களைப் பெற்று தெரிவு செய்ய வேண்டும். இதன் போது தான் பிரசவத்தின் போது தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் என்பன பேணப்படும்.
முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (31.05)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம்.
இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 70,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் புற்றுநோயை முற்றாக ஒழிப்பதற்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில், தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர்.
இது 3 விதமாக வளர்ச்சி அடைகிறது. புற்று நோயை உருவாக்கும் ‘மெலனோமா’ தோலின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதியில் தாக்கி ‘மெலனேசைட்’ செல்களை அழிக்கின்றன. இவை தோலுக்கு நிறம் அளிக்கக் கூடிய மெலனினை உருவாக்கக் கூடியவை.
எனவே ‘மெலனோமா’ எனப்படும் புற்றுநோய் கருங்கட்டி ஏற்படுவதை தடுக்கும் வகையில் ‘எச்.ஏ.15’ என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது தோலின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை சென்று ‘மெலனோமா’ எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சி அடையாமல் தடுக்கிறது.
உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடுகளில் இலங்கை 42ஆவது இடத்தினை பிடித்துள்ளது.
இதன்படி இலங்கையில் சுமார் 45 ஆயிரத்து 900 கொத்தடிமைகள் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பட்டியலில் அதிக கொத்தடிமைகள் கொண்ட நாடாக இந்தியா பெயரிடப்பட்டுள்ள அதேவேளை, சுமார் 18 மில்லியன் கொத்தடிமைகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இந்திய சனத்தொகையில் 1.4 வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ள 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வுகளுக்கு அமைய அடிமைகள் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, உலகம் முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமானவர்கள் நவீன அடிமைகளாக சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடிமைகளாக சிக்குன்டவர்களில் மூன்றில் 2 பங்கு ஆசிய மற்றும் பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வரிக்கையின் பிரகாரம் உலக நாடுகள் முழுவதும் 45.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், ஆசியாவை பொறுத்தமட்டில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில் 30.3 இலட்சம் கொத்தடிமைகளும், பாகிஸ்தான் 21.3 இலட்சம் கொத்தடிமைகளும், பங்களாதேஷ் 15.3 இலட்சம் கொத்தடிமைகளும், உஷ்பெகிஸ்தான் 12.3 லட்சம் கொத்தடிமைகளும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் உஸ்பெகிஸ்தானில் 3.97 சதவீதமும் கம்போடியாவில் 1.65 சதவீதமாகும்.
இதேவேளை, இந்த ஆய்வில் இருந்து வட கொரியாவில் மட்டுமே இந்த நவீன அடிமை எந்த வடிவிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள், பொருதாளதார அங்காடிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
கோடை காலத்தினை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். எனினும், ஐரோப்பிய நாடுகளில் அண்மைய காலங்களில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடவடிக்கையினை விரிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் உள்ளிட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த எச்சரிக்கையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.