வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலத்தில் இன்று(21.10.2015) வாணிவிழா காலை நிகழ்வுகள் அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் வித்தியாலயத்தில் நடை பெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான திரு.M.P.நடராஜ் அவர்களும்,இந்திரராஜா அவர்களும்,சிறப்பு விருந்தினராக முன்னைநாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.பாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்து ,உரைகளும் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சிகள்யாவும் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழையும் பிரதிபலிப்பனவாக அமைந்திருந்தன.
சிவதாண்டவம் எனும் நடனம்,கரகம் மாணவமாணவிகளின் குழுப்பாடல்கள்,கவிதைகள் தேவிமகத்துவம் எனும் பஜனைப்பாடல்கள் ,மனிதவாழ்வை மேம்படுத்துவது ஆன்மீகமா?அறிவியலா? எனும் பட்டிமன்றம் சிலம்புடைத்த கண்ணகி என்ற நாடகம் என்பன நிகழ்வை மெருகூட்டின.
இங்கு உரைநிகழ்த்திய மாகாணசபை உறுப்பினர் கௌரவ M.p.நடராஜ் “பாடசாலைஎன்னும் சமூகநிறுவத்தின் பயனாளிகளான மாணவர்களும்,பெற்றோரர்களும் அந்நிறுவனத்தின் உண்மையான பங்காளிகளாகவும் மாற வேண்டும்,பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்பினால் போதும் என்று இருந்துவிக்கூடாது” என்று தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரைத்தொடர்ந்து உரைநிகழ்த்திய கௌரவ மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா “பாடசாலையின் உயர்ச்சிக்கு என்றும் நான் துணைபுரிவேன் எனது உதவிகளை இப்பாடசாலைக்கும் வழங்குவேன்” என்றார்.
சிறப்பு விருந்தினர் திரு.மு.பாலசிங்கம் தனதுரையில் “புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் நகரப்புறங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பாடசாலைப்பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு தாங்கள்தான் காரணம் எனக்கூறி உரிமை கொண்டாடுகிறார்கள், பதாதைகள் கட்டுகிறார்கள் இதில் வேடிக்கையான இன்னுமொரு விடயம் என்னவென்றால் தான்கற்பிக்கும் பாடசாலைபப் பிள்ளைகளின் பெறுபேற்றை உயர்த்துமளவிற்கு கற்பிக்காது தனியார் வகுப்புக்களில் கற்கும் ஆசிரியர்களில் சிலர் ஏனைய பாடசாலைப் பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு உரிமைகூறுகிறார்களே! இதில் பெற்றோர்கள் விழிப்படைய வேண்டும். உண்மையாக,பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு உரிமை கூறக்கூடியவர்கள் தனியார் கல்விநிலையம் செல்லாத வறிய குடும்பங்களைச்சேர்ந்த, பாடசாலைப்படிப்பை நம்பிப் பிள்ளைகள் படிக்கின்ற கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தைப் போன்ற பாடசாலை அதிபர்,ஆசிரியர்களே!”எனகுறிப்பிட்டிருந்தார்.
படங்கள்:தம்பிப்பிள்ளை சுதன்