இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது.
இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு நியாயமான சம்பளங்கள், கொடுப்பனவுகள் கிடைக்காமையால் நெருக்கடிகளை சந்தித்துள்ளோருக்கு அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள கடல் பிரதேசங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்கான அதிகாரி ஜே.மெக்கில் தெரிவித்தார்.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் கடந்த ஒருமாதமாக இடம் பெற்றுவந்த கடலரிப்பு தற்போது ஓரளவு குறைந்துள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள கடலில் நீராடுவதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாத்துறையினர் கடலரிப்பு ஏற்பட்டுள்ள இந்தப்பிரதேசத்திலுள்ள கடலில் நீராடுவதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தப்பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பினால் இதுவரை சுமார் 30 அடிப்பிரதேசம் கடலுக்குள் சென்று விட்டது. அத்தோடு இங்கு கரையோரம் கட்டப்பட்டிருந்த மீனவர் தங்குமிடக்கட்டடத்தின் மல சல கூட கட்டடத்தின் அத்திவாரக் கட்டடமும் இடிந்து விழுந்துள்ளது.
இந்த கடலரிப்பை தடுப்பதற்கான முதல் நடவடிக்கையாக மண் மூடைகள் கட்டப்பட்டு கடலரிப்பு ஏற்பட்ட இந்த இடங்களில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த கடலரிப்பு நிலைமைகளை அடிக்கடி பார்வையிட்டு எமது திணைக்கள மேலதிகாரிகளுக்கும் காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும் அடிக்கடி அறிக்கையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சட்ட மா அதிபரை உள்ளடக்கிய உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சட்டமும் ஒழுங்கு சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச் சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணைக் கைதிகளாகவும் பிறிதொரு பிரிவினர் தண்டனைக் கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறைகளில் கழித்து வருகின்றனர். இவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் நிலவிய நிலைமை இந்த நல்லாட்சியிலும் நிலவுவதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர், நீதியமைச்சர், சிறைச்சாலைகள் அமைச்சர் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபருடன் ஆலோசித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கைதிகள் விவகாரம் தொடர்பில் எனது தலைமையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடக்கிய குழு சட்ட மா அதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை (இன்று) சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்வதனால் அங்கு சென்று திரும்பிய பின்னர் 20ஆம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தினை நடத்துவோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.
தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. தமது விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி கொழும்பு மெகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளே இவ்வாறு போராடி வருகின்றனர்.
இதேவேளை, நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,
“நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகி தமது குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதுகின்றனர்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏழு குடும்பஸ்தர்கள் உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெரும் அவலுடன் உள்ளனர். அத்துடன் பிள்ளைகளுக்கு சரியான கல்வியை வழிகாட்டியவர்கள் கூட அங்கு உள்ளனர்.
இவ்வாறு உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களை யாரும் கவனிப்பதில்லையென்ற ஆதங்கமும் அவர்களிடம் உள்ளது.
தற்போது ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நல்லாட்சியின் கீழ் ஜனாதிபதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொண்டு வரும் வேளையில் அதன் அடையாளமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறை பிடிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சிறந்த ஒரு முடிவினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்ற செய்தியை சிறைக் கைதிகளிடம் தெரிவித்தேன்.
பொது மன்னிப்பு அடிப்படையிலோ வேறு வழிகளிலோ சிறை கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.
அற்ப சொற்ப விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு நாங்கள் அடைக்கப்பட்டுள்ளோம். விரைவில் விடுதலை பெற்று ஒரு ஜனநாயக சூழலில் வாழ்க்கையை நடாத்தவேண்டும் என்பதில் பெரும் அக்கரையாகவுள்ளனர், என்றார்.
வெள்ளவத்தை பகுதி கட்டடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என, வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ரோஹித் ஷர்மாவும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித், இந்த ஆட்டத்தில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தவான் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தோனி, ரஹானேவுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை யை உயர்த்த போராடினார். ரஹானே 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தோனி மட்டுமே நிலைத்து விளையாடி ஓட்டங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு, 247 ஓட்டங்களைப் பெற்றது. தோனி 92 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து, 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி போட்டியின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துஇ 225 ஓட்டங்களை எடுத்து தோல்வி அடைந்தது.
தென்னாபிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லாவும், டி கொக் கும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்கள். இதனால் தோனி சுழற்பந்து வீச அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. டி கொக்கும், அம்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனை அடுத்து வந்த டு பிளசிஸும், டுமினியும் அணியை சரிவில் இருந்து மீட்கப்போராடினார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் அஸ்கார் படேல் வெளியேற்றினார்.
இதனை அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸை 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த பெர்காடின், ஆட்டமிழக்க, அந்த அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்தியா 22ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வேலணை வடக்கு -05 ஆம் வட்டராத்தை பிறப்பிடமாகவும் இலக்கம் 18 கரப்பன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல கொழும்பு கொட்டஞ்சேனை வர்த்தகருமாகிய பாலசுப்பிரமணியம் பத்மசீலன் 13.10.2015 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னாரது இறுதிகிரியைகள் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரிகைகளுக்காக தட்சனாங்குளம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் .
வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களினால் வவுனியா மாவட்ட இந்து ஆலயங்கள் சிலவற்றுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டிற்கான தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ஆலயங்களுக்கென மூன்று இலட்சத்து 50,000 ரூபாய் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிதியில் இருந்து மறவன்குளம் அருள்மிகு மகாலட்சுமி ஆலயம், செக்கடிப்புலவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், பொன்னாவரசங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கான நிதிக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்ட இந் நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ அறிவித்துள்ளது.
காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை நடத்தப்படவுள்ள குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் தெரிவித்த பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா..
இந்த நாட்டின் தேசிய குடியினங்களாகிய தமிழ் – முஸ்லிம் இன மக்களைத் தண்டிப்பதையும் வஞ்சிப்பதையும் நோக்கமாகக்கொண்டு சிறீலங்கா ஆட்சியாளர்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம்’
இவ்விரு கொடுஞ்சட்டங்கள், எந்த வேளையிலும், எங்கும் எப்போதும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் – தடுத்து வைக்கலாம் என்று கொடுக்கும் நமட்டுத் துணிச்சலான அதிகாரங்களை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பொலிஸாராலும் முப்படைகளாலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைக்கூடங்களிலும், இரகசிய வதை முகாம்களிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். பலர் காணாமலும் போகச்செய்யப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும், பிரகடனங்களுக்கும் முரணான இத்தகைய கைது நடவடிக்கைகள் அரசியல் சார்புடைய கைது நடவடிக்கைகளே. எனவே தான் நாம் காலம் காலமாக ஆட்சிபீடமேறுகின்ற சிறீலங்கா அரசுகளுக்கு திரும்பத் திரும்பவும் கூறுகின்றோம். உங்களதும், உங்கள் அரசாங்கத்தினதும் நலன்கள் சார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நடத்தப்பட்டுள்ள இத்தகைய கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளே.
அவர்கள் குற்றமற்றவர்கள். எத்தகைய வழக்குத் தாக்கல்களும் இன்றி, நீதிக்கான விசாரணைகளுமின்றி, நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி நீண்டகாலமாக, அரசியல் கைதிகளான எமது பிள்ளைகளை, உறவுகளை தடுத்து வைத்துள்ளீர்கள். இது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை அப்பட்டமாக மீறும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.
இனியும் நீங்கள் அவர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றத்தை வலிந்து திணித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட, நீங்கள் சுமத்தும் அந்த குற்றத்துக்கு சட்டத்தில் விதிக்கப்படும் தண்டனைக் காலத்துக்கும் அதிகமான தண்டனைக் காலத்தை அவர்கள் சிறைக்கூடங்களில் அநுபவித்து விட்டார்கள்.
மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால், பொய்க்குற்றச்சாட்டுகளால் இத்தனை காலமும் தண்டிக்கப்பட்டுள்ள – சீரழிக்கப்பட்டுள்ள அவர்களின் வாழ்க்கை காலத்துக்கு பொறுப்புக்கூறுவது யார்? அவர்களுக்கு உங்களுடைய பரிகார நீதி தான் என்ன? உங்கள் தீர்வு சீரழிக்கப்பட்ட அவர்களின் கல்வி, தொழில், பொருளாதாரம், குடும்பம், வாழ்க்கைக்கு ஈடாகுமா? அவர்களுக்கு நீங்கள் மிகப்பெரும் துயர் தோய்ந்த வரலாற்று அநீதியை இழைத்துள்ளீர்கள்.
எனவே தான், ‘விசேட நீதிமன்றங்களை அமைக்கப்போகிறோம். சிறப்பு ஆணைக்குழுக்களை அமைக்கப்போகிறோம்’ என்ற இந்த சுத்துமாத்து வீண் பேச்சுகள் இனியும் இங்கு வேண்டாம். எமது உறவுகளான அரசியல் கைதிகளும், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதும், ‘அரசியல் கைதிகள் என்று இங்கு எவரும் இல்லை’ என்று நீங்கள் மறுப்பறிக்கைகள் வெளியிட்டு விளையாடிக்கொண்டிருப்பதற்கும் அரசியல் கைதிகள் ஒன்றும் ஜடப்பொருட்கள் அல்லர்.
அவர்களும் மனிதர்களே! இது ஏனைய மனிதர்களைப்போல இந்த உலகத்தில் வாழவும் நடமாடவும் சீவிக்கவும் அவர்களுக்கு உள்ள மறுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் சார்ந்த, அத்தியாவசிய வாழ்வுரிமை பிரச்சினையாகும். மனித மாண்பின் உன்னத வெளிப்பாட்டு அடிப்படையில் அனைத்து அரசியல் கைதிகளும் ‘பொதுமன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.
ஆதலால் ‘விடுதலை ஒன்றே தீர்வு. வேண்டாம் இங்கு வேறு வீண் பேச்சு!’
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்துகின்றது. நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில்,
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – பிரமுகர்கள், தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள், சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உயரிய பங்களிப்பு வழங்குமாறும்,
நாடு முழுக்கவும் உள்ள சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளை இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, தொய்வுறாத ஜனநாயகப்போராட்டங்களை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் ‘பொதுமன்னிப்பு’ எனும் நீதியை அரசியல் கைதிகளுக்கு வழங்குமாறு சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
பச்சோந்திகளானது இடத்திற்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்வதுடன் ஒரேசமயத்தில் பல திசைகளிலும் பார்க்கக் கூடிய கண்களைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் பச்சோந்தி போன்று உலகை ஒரே சமயத்தில் பல திசைகளில் பார்க்க உதவும் தலைக்கவச உபகரணமொன்றை லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘பொலிஐஸ் 2.0’ என அழைக்கப்படும் மேற்படி உபகரணமானது கணினியொன்றுடன் இணைப்பைக் கொண்ட புகைப்படக்கருவிகளையும் காட்சிப் புலத்தை பிரதிபலிக்கக் கூடிய திரையையும் கொண்டமைந்துள்ளது. இந்த அகலமான தலைக்கவசம் சுத்தியல் தலை சுறாமீனின் தலையையொத்த வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணத்திலான தொழில்நுட்பம் பயன்பாட்டாளருக்கு 180 பாகை கோணத்தில் பார்வைப் புலத்தை வழங்குகிறது.
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஹீரோக்களுக்கு நிகராக தரமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ருத்ரமாதேவி வசூல் சாதனை செய்துள்ளது.
இப்படம் முதல் வார முடிவில் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இவை கிட்டத்தட்ட தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பவன் கல்யான் படங்களுக்கு நிகரானவை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை நேற்று திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் தவறாமல் நடந்து வருகிறது.
சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சினேகா. நேற்று கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.
நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா அவரைத் தேற்றி அழைத்து வந்து காரில் உக்கார வைத்து அழைத்துச் சென்றார்.
இலங்கையின் முன்னணி மற்றும் JCIA சர்வதேச அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தனது மற்றுமொரு சாதனையை நிலைநாட்டியுள்ளது. கருக்கட்டல் நிலையம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தையை அண்மையில் வெற்றிகரமாக பிரசவித்திருந்தது.
மிகச்சிறந்த முறையில் சுகாதாரப்பராமரிப்பு சேவைகளை வழங்கும் வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் புரட்சிகரமான கருக்கட்டல் நிலையத்தின் மூலமாக செயற்கை முறை கருவுறல் துறையில் பல நியமங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அதிநவீன சாதனங்களை உள்ளடக்கிய IVF நிலையம் வருடத்தின் 365 நாட்களும் திறந்திருப்பதுடன் பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படா வண்ணம் IVF தொழிநுட்பத்தைக் கொண்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்த முடிகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் செயற்கை முறை கருவுறல் செயன்முறை மூலம் வெற்றிகரமான கருவுறல் இடம்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இலங்கையின் முன்னணி மருத்துவ மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் படைத்த லங்கா வைத்தியசாலை தற்போது தன் நவீன கருவிகளைப் பயன்படுத்தி IVF தொழில்நுட்பத்தின் மூலம் 5 நாட்களுக்குள் முளை கருக்கள் ஆய்வுகூட சூழலில் பேணப்பட்டு, மேலும் தயார்படுத்தப்பட தேவையான மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளையும் இனிவரும் காலங்களில் தம்வசமாக்கிக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கு எய்தப்பட்டமை தொடர்பில் பெண் நோயியல் நிபுணரும் குழந்தைப்பேறு மருத்துவருமான வைத்தியர். நிஷேந்திர கருணாரட்ன கருத்து தெரிவிக்கையில், எமது கருக் கட்டல் நிலையத்திற்கு விஜ யம் செய்யும் ஜோடிகளுக்கு தொடர்ச்சியான முன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். எமது உயர்ந்த ஆளுமை படைத்த விசேட செயலணியினர் இரு தரப்பினரையும் சோதனை க்குட்படுத்துவார்கள். முதற்கட்டமாக ஆணின் விந்தணு அளவு கருத்தில் கொள்ளப்படும். பெண்களை பொருத்த மட்டில், Trans Vaginal Scan அல்லது 3D Scan ஒன்றை மேற்கொண்டு கருக்கட்டா மைக்கான காரணம் கவனிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் – திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது..
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது .
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு – 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமானது.
இப்போட்டியில் இலங்கை அணியில் அறிமுக வீரராக மிலிந்த சிறிவர்தன களமிறங்குகிறார் . இவர் இலங்கை அணியில் 131 ஆவது டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
298 பயணிகளுடன் காணாமல் போனதாக கருதப்பட்ட எம்.எச்.17 மலேசிய விமானத்தை, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணைதான் தாக்கியுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 எவ்வாறு வெடித்துச் சிதறியது என்பது குறித்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 பயணமானது.
உக்ரைன் நாட்டுக்குட்பட்ட வான்வெளியில் சென்றபோது ’பக்’ ரக ஏவுகணை தாக்குதலில் அந்த விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர். அந்த விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படை தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்தது.
ஆனால், உக்ரைன் இராணுவம் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் நெதர்லாந்து விமானப் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு நெதர்லாந்தில் உள்ள ஜில்சே-ரிஜன் விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், மலேசிய விமானத்தை தாக்கியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பக் ஏவுகணையானது விமானத்தின் இடது பக்கம் தாக்கியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஏவுகணையை இயக்கியது உக்ரைன் கிளர்ச்சியாளர்களா அல்லது ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களா? என்பது பற்றி விசாரணை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விசாரணையால் ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு பாதையில் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த 24 வயதடைய ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பாதையில் ஓடியுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரிகளினால் அதனைக் கட்ட முடியாமல் கஷ்டப்படுவதனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் இந்த விபரீத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்துள்ளதனால் அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வழியாகச் சென்றவர்கள் உடலில் தீமுட்டிக்கொண்டு பாதையில் ஓடிய அவரை கண்டு உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.