ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோஜ்மாநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மூன்றரை கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பிடிபட்டது.
பதுக்கி வைத்திருந்த சதீஸ் மற்றும் திரீஸ்டன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து இந்திய பாதுகாப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சாயல்குடி அருகே உள்ள ரோஜ்மாநகர் மீனவ கிராமத்தில் சதீஸ் மற்றும் திரீஸ்டன் ஆகியோருடைய வீட்டை சோதனையிட்டதில் அங்கிருந்து மூன்றரை கிலோ எடையுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருள் குறித்த வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டு, படகின் மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்தமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த பொலிஸார், இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த போதைப்பொருள் பிரவுன் சுகராக இருக்கலாம் என சந்தேகித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் சாயல்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏழு இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
முகத்தை மூடியபடி வந்த ஒருவர் வங்கியில் இருந்த பெண்ணிடம் கைக் குண்டைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னதானம் நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு ஈடுபட்டால், அவருக்கு வழங்கப்படும் அனுமதியினை ரத்து செய்து, சட்டப்படி நடவடிக்கையை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய 11-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 18ம் திகதி கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, வீரப்பன் சமாதி உள்ள மேட்டூரில் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தவும், அதற்காக வீரப்பனின் உருவபடம் கொண்ட ‘கட்-அவுட்’ வைக்கவும் அனுமதிக்கேட்டு சேலம் மாவட்ட பொலிசில் மனு கொடுத்திருந்தார் அவரது மனைவி முத்துலட்சுமி. ஆனால், அதற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுத்துவிட்டனர்.
எனவே, என்னுடைய கோரிக்கையை பரிசீலித்து, அனுமதி வழங்க பொலிசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து, ‘மனுதாரர் தன் கணவரின் நினைவு நாளை முன்னிட்டு, அன்னதானம் செய்யவும், அதுதொடர்பான ‘பேனர்களை’ நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் வைக்கவும் போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சிலியில் நடைபெறவுள்ள 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்படும் அரிய வாய்ப்பு இலங்கையின் டிலான் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்திலிருந்து தெரிவான நால்வரில் இலங்கையின் களுத்துறையைச் சேர்ந்த டிலான் பெரேராவும் ஒருவராவார்.உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையினால் பங்குபற்ற முடியுமா என்ற கேள்வி தொடரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தம் வகிக்க சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை பெரிய விடயமாகும்.
17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆசியாவில் அதி சிறந்த மத்தியஸ்தர்களாக இனங்காணப்பட்டுள்ள 100 மத்தியஸ்தர்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேர்வுகளின் பின்னர் தெரிவான நால்வரில் ஒருவராக டிலான் பெரராவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
அவுஸ்திரேலியாவில் இவ் வருட முற்பகுதியில் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளிலும் டிலான் பெரேரா மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தார்.
22 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் கால் இறுதி மற்றும் இறுதி ஆட்டம், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இறுதி ஆட்டம், ஆசிய சம்பியன்ஸ் லீக் முன்னோடி கால் இறுதி ஆட்டம், அங்குரார்ப்பண இண்டியன் சுப்பர் லீக் போட்டிகள் ஆகியவற்றிலும் டிலான் பெரேரா மத்தியஸ்தராக பணியாற்றியுள்ளார்.
ஆசிய கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஃபீஃபா 17 வயதின்கீழ் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இலங்கையிலிருந்து தெரிவான முதலாமவர் இவராவார். இதற்கு முன்னர் பிரான்ஸ் 1998 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பதுளையைச் சேர்ந்த நிமால் விக்ரமதுங்க உதவி மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.டிலான் பெரேரா கடந்த சனிக்கிழமை சிலி சென்றடைந்தார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.
தலைவர் டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ஓட்டங்களையும் டுபெலிசிஸ் 62 ஓட்டங்களையும் எடுத்தனர். உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் ரோகித் சர்மா 150 ஓட்டங்களைக் குவித்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. மேலும் ரகானே 60 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
ரபடா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைபட்டது. ஆனால் தோனியால் வெற்றி இலக்கை எடுக்க முடியவில்லை. 4–வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார்.
வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணி தலைவர் தோனி கூறியதாவது:–
பின் வரிசையில் களம் இறங்கும் போது பழியை சுமந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் நிறைய போட்டிகளில் வெற்றியை தேடி தந்து இருந்தாலும், அதை விட தோல்வி அடைந்த ஆட்டத்தை தான் மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது என்பது சூதாட்டம் போன்றதே. சில நேரங்களில் கை கொடுக்கும். சில சமயம் கை கொடுக்காது. ஆனால் அணியின் இந்த பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன். தென்னாபிரிக்காவை 260 முதல் 270 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பந்து வீச்சு கடைசி நேரத்தில் சரியாக அமையவில்லை. அஸ்வின் காயத்தால் 6 ஓவர்கள் வரை வீச முடியாமல் போனது அணிக்கு பாதகமே. கடைசி ஓவரில் என்னால் சிறப்பாக ஆட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.
வெற்றி குறித்து தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் கூறியதாவது:–
இம்ரான்தாகிர் வீசிய ஆட்டத்தின் 47–வது ஓவர் திருப்பு முனையாக அமைந்தது. இந்த ஒரே ஓவரில்தான் ரோகித் சர்மாவும், ரெய்னாவும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரை ரபடா மிகவும் அருமையாக வீசினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த ஆட்டம் இரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2–வது ஆட்டம் இந்தூரில் எதிர்வரும் 14–ம் திகதி இடம்பெறவுள்ளது.
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் அது சினேகா தான். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே.இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விகான் என பெயரிட்டுள்ளனர்.
சினேகா நேற்று (அக்-12) தன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.பிறந்தநாளை முன்னிட்டு முன்னணி பத்திரிக்கை ஒன்று மீண்டும் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு நான் இப்பொழுது என் குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறேன்.அவன் பெரியவனானதும் நான் சினிமாவிற்கும் மீண்டும் திரும்புவேன் என கூறியுள்ளார்.
வடமாகாண மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்கள் ஓய்வு நிலை அதிபர் திரு எஸ்.விசுவலிங்கம்அவர்கள் சகிதம் சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளியில் 12.10.2015 அன்று மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
மேலும் முன்பள்ளியில் நிலவும் குறைகளை பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டார். முதியவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் உரிய நடவடிக்கைகளை 2016 நிதியாண்டின் போது எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் பிரம்மாண்டத்தில் உச்சமாக இருந்தது. இப்போது எந்திரன் 2 தயாராக இருக்கிறது. இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு தொடங்கிவிட்டது.
ரஜனி அடுத்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி ஆகியோர் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர்.அதோடு சமீபத்தில் கூட வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் அவரது மகன் கமலசீலன் அனுசரணையில் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் மூத்தோர் சங்க வளாகத்தில் சர்வதேச மூத்தோர் தினம் நேற்று முன்தினம் 11.10.2015 ஞாயிறு அன்று வெகு விமர்சையாக நடை பெற்றது .
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன அவர்களும் ,கௌரவ விருந்தினர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்னி அமைப்பாளர் கோவிந்தராஜ் ,பாடசாலை அதிபர் எஸ்.தர்மகுலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர் .
120 மூத்தோர்களுடன் இயங்கும் மாணிக்கம் பண்ணை மூத்தோர் சங்கம் 3 வருடங்களாக தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வருடம் ஸ்கொட்லாந்தில் வசிக்கும் கமலசீலன் அனுசரணையில் அவரது தந்தையார் அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக இந்த நிகழ்வு தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )அவர்களால் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றது.
மூத்தோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், பணிஸ் உண்ணுதல், தேசிக்காய் கொண்டு செல்லல், தேங்காய் திருவல், சோடியாக ஊசி நூல் கோர்த்தல், சங்கீதக் கதிரை என்பன இடம் பெற்று பரிசில்கள் வழங்கி வைக்க பட்டன .
வயத்தில் மூத்த தேவநேசன் ஐயா அவர்கள் கௌரவிக்க பட்டதுடன், கணவனை இழந்து தேனீர் கடை வைத்து சீவியத்தை நடத்தும் திருமதி மேரி அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 14 நாட்களாக நடந்துவந்தது. இதில் எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதங்களை புரிந்து கொள்ளுதல், கூட்டு போர் தந்திரங்கள் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த கூட்டு பயிற்சி நேற்று நிறைவுபெற்றது.
இதையொட்டி இந்திய ராணுவ கமாண்டர் ஆசிஷ்குமார் தலைமையில் நடந்த அணிவகுப்பை, ராணுவ பிரிகேடியர்கள் தபான் லால்ஷா (இந்தியா), அருணா ஜெயசேகரா (இலங்கை) ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக அறிக்கை வழங்கிய ஆசிஷ்குமார், நிகழ்ச்சிகளை தொடங்க இலங்கை ராணுவ பிரிகேடியரிடம் சுத்தமான சிங்களத்தில் அனுமதி கேட்டார். இதைப் பார்த்த இலங்கை ராணுவ அதிகாரியும், வீரர்களும் ஆச்சரியமடைந்தனர்.
ஹன்டி கிரஷ் போன்ற வீடியோ கேம்களும் போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கேம் விளையாடுவது, இணையத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பது போன்றவை குடிபோதை, போதை மருந்து அல்லது சூதாட்டம் ஆகியவற்றைப் போல ஒருவித மனநோயாக மாறலாம் என உளவியல் தொடர்பான புத்தகங்களை எழுதி வெளியிட்டு வரும் எழுத்தாளர் லூசி பெரெஸ்போர்டு என்கிற உளவியல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவர்களை அந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற தனிப்பட்ட மருத்துவமனையின் உளவியல் துறையில் அனுமதிக்கப்படுவதைப் போல, இங்கிலாந்தில் தற்போது நூறு நோயாளிகள் டிஜிட்டல் சாதனங்களின் அடிமைத்தனத்தைப் போக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நூறு பேரில், அதிகபட்சமாக முப்பத்தொன்பது பேர் ஆபாச படங்களுக்கு தீவிரமான அடிமையானதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பாலஸ்தீன் சென்றடைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். விமான நிலையத்திலிருந்து பாலஸ்தீனத்தின் தலைநகரான ரமல்லா வந்தடைந்தார். பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆவார்.
அங்கு நடந்த விழா ஒன்றில் அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசுடன் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது ரமல்லாவில் உள்ள சாலை மற்றும் ரவுண்டானாவிற்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. பாலஸ்தீனிய மொழியில் சாலைக்கு ஷரியா-இ-அல்-ஹிந்த் என்றும் ரவுண்டானாவிற்கு மிடன்-இ-அல்-ஹிந்த் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த விழாவில் திரளான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பாலஸ்தீன அதிகாரி ஒருவர் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டார்.
ஜேர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்’, அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ. மூலம் வெளிவந்தது.
இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து தவறை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம் டீசல் கார்களில் செய்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்ஜின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 1950 வோக்ஸ்வேகன் டீசல் வண்டிகளை திரும்ப பெற்று, தவறுகள் சரி செய்யப்பட்டு திரும்ப அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1946 ஸ்போர்ட் வகை கார்களாகும். சீனாவில் அதிகம் விற்பனையாகும் டீசல் கார்களில் வோக்ஸ்வேகன் தயாரிப்புகள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டிய முறைகேட்டை காரணமாக சொல்லி வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.
சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக இதுவரை அரசாங்கத்தால் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை மற்றும் சிறுவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
93 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சாஜா நோக்கி புறப்படவிருந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் வசம் இருந்து 23 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவர் மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என, தெரியவந்துள்ளதோடு, விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.