இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பரபரப்பு பேட்டியில்..
கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?
பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.
கேள்வி:- திருமண திகதியை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.
கேள்வி:- ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளதே உண்மையா?
பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கின்றது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.
கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?
பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.
கேள்வி:- திருமணத்துக்குப் பின்னர் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?
பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.
கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?
பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.
கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே அவர் எப்படி?
பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.
இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன் என்று சமந்தா தெரிவித்தார்.
சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை ஹசலக்க பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அதில் 16 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
40 வயதுடைய மேற்படி சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்டசந்தேக நபரைக் கைது செய்த ஹசலக்க பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல வருடங்களாக உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் மயானத்தில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய முதியோர் இல்லத்தில் அவரை ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் மஸ்கெலியா தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக தங்கி இருந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 70 வயது மதிக்கத்தக்க இவர் அவ்வழியாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
தொடரும் சீரற்ற காலநிலையில் மயானத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் இருந்துள்ளார். இந்நிலையிலே மேற்படி முதியவரை பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
குறித்த நபரின் நிலையை கவனத்திற்கொண்ட நீதவான் அவரை நோட்டன் சந்திரா முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார்.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வலுவிழந்தவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுலோசனா ரத்னாயக்க என்னும் 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது தோழியின் காதலுக்கு உதவி செய்தமை பெற்றோருக்கு தெரிய வந்ததைத்தொடர்ந்து, அவர்கள் கண்டித்தமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சமையற்கலை நிபுணர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிமைத்துள்ளார்.
சென்னை சைதாபேட்டையில் இயங்கிவரும் தனியார் சமையல்கலை பள்ளியின் நிறுவனர் வினோத். காய்கறிகளில் சிற்பம் செதுக்கும் வல்லுநனரான இவர், கின்னல் உட்பட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பதை வரவேற்கும் வகையில், அவரது உருவத்தை முழுவதும் வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிவமைத்துள்ளார்.
பளிங்கு சிலை போன்று காட்சியளிக்கும் இது, சுமார் 15 கிலோ வெண்ணெய்யை கொண்டு வடிவமைக்கப்படுகிறது, வெப்பம் காரணமாக இந்த சிலை உருகாமல் இருக்க -2 டிகிரி வெப்பநிலை உள்ள அறையில் வைத்து மிக நுட்பமாக வடிவமைத்து வருகிறார் வினோத்.
இன்னும் 2 நாட்களில் இந்த சிலைமுழுவதும் வடிவமைக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும் என வினோத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும்.
கடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்ததால் உயிரிழந்தார். இதற்குமுன், ஹாலந்து நாட்டை சேர்ந்த மலை ஏறுபவரான எரிக் ஆரி அர்னால்ட் உயிரிழந்தார்.
சுபாஷ் பால் என்ற இந்தியர் ஒருவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். ஷெர்பா வழிகாட்டிகள் அவரை மலையிலிருந்து கீழே கொண்டு கொண்டுவர உதவிக்கொண்டிருந்த போதே அவர் உயிர் பிரிந்தது.
இச்சூழலில், அங்கு மேலும் இரு இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.
பரீஷ் நாத் மற்றும் கவுதம் கோஷ் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள நேபாளா மலையேற்ற முகாமிலிருந்து வாங்சூ ஷெர்பா என்பவர் ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 18 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டாண்டுகள் கழித்து தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மலை ஏறும் பருவம் தொடங்கியுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் நல்ல பருவ நிலை மலை ஏறுபவர்களுக்கு ஏதுவாக இருப்பதால் கடந்த மே 11 ஆம் திகதியில் இருந்து இதுவரை 400 பேர் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.
ஆனால், இந்த வார இறுதியில் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள், உலகின் மிக உயரமான சிகரத்தின் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(23.05) திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த பொங்கல் விழாவிற்குச் செல்லும் அடியார்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்தார்.
இச் சேவையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாகவும், போக்குவரத்து சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு கொள்ளுமாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு திருவையாறு ஐயா கல்வி நிலையம், வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அனுசரணையோடு 14 வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கு நேற்று (22.05.2016) ஞாயிற்றுகிழமை காலை ஒன்பது(9.00) மணியிலிருந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் அனைத்துலக உரைநடைத் தமிழ் மாநாட்டின் இலங்கைக்கான இயக்குனர் பேராசிரியர் முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் தலைமையில் மாலை 7.00 மணிவரை இடம்பெற்றது.
காலையில் தமிழ்நாட்டிட்லிருந்து வருகைதந்த பேராசிரியர்கள் மற்றும் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் மங்களவாத்தியம் முழங்க வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
நேற்றைய அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார். தொடர்ந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் பற்றிய விளக்கவுரையை பகிர்ந்து கொண்டு நேற்றைய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.
தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் எ.நடராஜன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து இலங்கையில் எழுதப்பட்ட பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் அறிவொளிமாலை மற்றும் பன்மொழி புலவர் சரவணமுத்து செல்லத்துரையின் நினை மான்மியம் ஆகிய நூல்கள் வெளியீடு செய்யப்பட்டு பேரசிரியர் சண்முகலிங்கம் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரால் அறிமுக உரைகள் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய சான்றோரை வாழ்த்தி விருதும் பாராட்டு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து கவிஞர் நாக.க.துரையரசு தலைமையில் மக்களுடன் பெரும் செல்வாக்குடன் திகழ்வது உரைத் தமிழே என முனைவர் இரா.திராவிட இராணியும் மக்களிடம் பேருண் செல்வாக்குடன் திகழ்வது இசைத் தமிழே என முனைவர்.தங்க மலர்கொடி அவர்களும் வாதிட்ட விவாத அரங்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து பிற்பகல் நிகழ்வுகள் மதிய உணவைத் தொடர்ந்து இரண்டு மணியளவில் கருத்தரங்கம் ஆரம்பமாகி தனில் நாடிலிருந்து முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் தங்களதுதமிழ் மொழி உரைநடை மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து நேற்றைய நிகழ்வின் முதன்மை விருந்தினரான யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் தமிழ்நாடிலிருந்து வருகைதந்த அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையொன்றை பதினான்காவது அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அருளகத்தில் அண்மையில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்யப்பட்ட மாணவிகளில் நடன நிகழ்வுடன் இறுதியில் தேவாரதிருமுறை ஓதலுடன் நிறைவு பெற்றது.
தமிழக முதல்வராக இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.
சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இரு பிரமாணங்களையும் ” ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி பிரமாணம் எடுத்துகொண்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கும் 28 அமைச்சர்களும் கூட்டாக ” ஆண்டவன் மீது ஆணையிட்டு” பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
இரு குழுக்களாக அவர்கள் இந்தப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டனர். முதலில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்களும், பின்னர் மற்ற 13 அமைச்சர்களும் கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாஜக உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் “இந்தியாவின்” தலையீடு இலங்கைக்குள் அதிகரிக்கும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் பலமிழந்து ஜெயலலிதாவின் பலம் ஓங்கியுள்ளது. இது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும். ஏனென்றால் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை வெற்றி பெற்றால் இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன்.
கச்சதீவை மீட்பேன் என்றெல்லாம் உறுதிமொழி வழங்கினார். இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.
இதன்போது இந்தியப் பிரதமர் மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதிகப்பெரும்பான்மை பெற்ற தமிழ்நாட்டு முதலமைச்சரை பகைத்துக் கொள்வதை மோடி விரும்பமாட்டார்.
எனவே இந்தியாவின் மத்திய அரசின் ஆதரவுடன் ஜெயலலிதா இலங்கையில் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை முன்னகர்த்துவார்.
சுயநிர்ணய உரிமை கிடைத்த பின்பு தனித்தமிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். அதனை தடுக்க முடியாது. அதேபோன்று சட்டரீதியாக இலங்கைக்கு சொந்தமான கச்சதீவும் பறிபோகும் ஆபத்தும் உள்ளது. கடந்த காலங்களை விட இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் அதிகரிக்கும். எனவே ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித் தார்.
காலி பத்தேகம, இந்துருபத்வல பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னல் தாக்கம் காரணமாக குறித்த வீடுகளில் இருந்த மின் உபகரணங்கள், மின் கட்டமைப்பு என்பன முற்றாக சேதமடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்த சிறுமி காயமடைந்துள்ளதாகவும், பத்தேகம வைத்தியசாலையில் குறித்த சிறுமி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்பிரமணியம்.அசுபதி என்ற வயோதிபப் பெண்ணே இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவை உண்ட பின் கைகழுவச் சென்ற வேளை பின்னால் வந்த இனந்தெரியாத நபரினால் இவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு, சொத்து, சுகம், பிறப்புச்சான்றிதழ் என அனைத்தையும் இழந்து நடு வீதியில் அகதிகளாக நிற்கிறோம். நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை இப்படி ஒரு துயரத்தை அனுபவிப்போம் என்று. கடந்த ஆறு நாட்களாக ஒரே உடுப்போட இருக்கிறோம். சில பொருட்களை வெளிப்படையாக வாய் திறந்து கேட்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கூலித்தொழில் செய்து கஷ்டப்பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்லாமல் போய்விட்டது என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீதிகளிலும் விகாரைகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்றகால நிலை காரணமாக இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக கொழும்பில் மாத்திரம் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கொழும்பின் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் விகாரைகளிலும் பாடசாலைகளிலும் என 84 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற காலநிலை கடந்த மூன்று நாட்களில் வழமைக்கு திரும்பியுள்ள போதும் மக்களின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. வீடுகள் இன்னமும் 6 அடி நீர்மட்டத்துக்குள் மூழ்கியுள்ளன.
வீடு, சொத்து, சுகம் என அனைத்தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக நாம், கொலன்னாவ மீதொட்டுமுல்ல, சேதவத்த, வெல்லம்பிட்டி, லன்சிவத்த, பெரண்டியா வத்த, நவகம்புர மற்றும் களனி உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தோம்.
களனி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக கொழும்பில் கடுமையான வெயில் காணப்படுகின்றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் 6 அடிக்குமேல் தண்ணீர் நிற்பதோடு குறித்தப் பகுதிகளில் கழிவு நீர் கலந்து கருநிறத்துடன் காணப்படுவதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
என்னுடைய பெயர் நியாஸ். மீதொட்டுமுல்ல பகுதியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றோம். கடந்த சில நாட்களாக பெய்த மழை எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதுவரையில் அரசாங்கத்துல இருந்து வந்து எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யல. உணவு கிடைப்பதுல எந்த பிரச்சினையும் இல்ல. எங்கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்ளப்பட்டு இருக்காங்க. எங்கட பெண்கள் ரொம்ப கஷ்டத்தை எதிர்கொள்ளுறாங்க. நாங்க எப்படியும் இருந்துட்டு போயிருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்தையால சொல்ல முடியாது.
எங்கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்றிதழ் விவாகப் பத்திரம் பொருட்கள் என அனைத்தும் இல்லாமல் போய்விட்டன. தண்ணீரால சேதமான எங்கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்பார்க்கல இப்படி எல்லாத்தையும் இழப்போம் என்று. இந்த வான்கதவுகள திறக்கப்போறாங்கனு முன்னாடி சொல்லியிருந்தா உடுத்த உடுப்புகள சரி எடுத்துகிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்போட இன்னமும் இருக்கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்தாலும் அரசாங்கம் எங்களுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவலையுடன் தெரிவித்தார்.
சரீபா என்ற பெண் கருத்து தெரிவிக்கையில். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக நான் இங்கு இருக்கின்றேன். இதுவரைக்கும் இந்தமாதிரி ஒரு நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்கள வாங்குனேன். ஆனால் இன்றைக்கு எல்லாம் ஒன்றும் இல்லாம போயிருச்சு என்று கண்கலங்குகின்றார்..! என்னால கூட கதைக்க முடியல. அரசாங்கம் தான் எங்களுக்கு நல்ல தீர்வை பெற்றுதரனும்.
காந்தி என்ற சிங்கள பெண்மணி கருத்து தெரிவிக்கையில், நான் பஸ் டிப்போவுக்கு பக்கத்துல தான் இருக்கின்றேன். எனது வீடு முற்றாக நீரில் மூழ்கியிருச்சு. பொருட்கள் எல்லாமே இல்லாமல் போய்விட்டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்பித்த அவர் தன்னை அறியாமலே அழுகிறார். கண்ணீரை துடைத்துகொண்டு மீண்டும் கதைக்க ஆரம்பிக்கின்றார்.
தண்ணீர் கறுப்பு நிறமாக இருக்கின்றது. பக்கத்துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்துல இருந்து வந்த தண்ணீர்தான் எங்கட வீட்டுக்குள்ள இருக்கு. பொருட்களை எல்லாம் மீள எடுக்க முடியாது. சரியான துர்நாற்றம் அடிக்கின்றது. அந்த கிருமிநாசினிகள் நிறைந்த வீட்டுக்குள்ள போய் எவ்வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த எல்லாமே அழிந்து போய் விட்டது. நாங்க தேங்காய் துருவியில் இருந்து எல்லாமே புதிதாக எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
வசந்தி சந்தியானி ஜெயவர்தன என்ற பெண் கருத்து தெரிவிக்கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்போது சாப்பிடுவதற்கு ஒரு பீங்கான் கூட எங்களிடம் இல்லை. எங்களது குறைய தீர்க்க யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம். நான் நோயாளி. இந்த தண்ணீர பார்க்கும் போது உங்களுக்கு தெரிகிறது எவ்வளவு துர்நாற்றம் அடிக்கின்றது என்று. இதனால எங்களுக்கு நோய் தான் அதிகரிக்கின்றது. எங்களுக்கு சாப்பாடு மூன்று நேரமும் கிடைக்கின்றது. ஆனால் படுப்பதற்கு பாய், தலையணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடுதலாக தேவைப்படுகின்றது. நாங்க இப்ப நடு வீதில நிற்கிறோம். எங்களால தொழிலுக்கும் செல்ல முடியாமல் உள்ளது. எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என நொந்துகொள்கிறார்.
சேதவத்தை பகுதியைச் சேர்ந்த விமலசேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களை இடைநடுவே மறித்து பாதிக்கப்படாத நபர் எடுத்து செல்கிறார்கள். இது தொடர்பில் நகர சபை அவதானம் செலுத்த வேண்டும் என்கிறார்.
சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்தோடிய பின்னர் எங்கட வீட்டை கழுவுவதற்கு டெட்டோல், சவர்க்காரம் இது போன்றவற்றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்ணீர்ல நிறைய கிருமிகள் இருக்கின்றன என்கிறார்.
தண்ணீரால் நிறைந்திருக்கும் தனது வீட்டை பார்த்தவாறு இருந்த ரசேனி வின்துனி என்ற பாடசாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்விகற்கிறேன். எங்க வீடு முற்றாக நீர்ல மூழ்கிவிட்டது. எனது பாடசாலை புத்தகம், சப்பாத்து என எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. நான் இப்ப பாடசாலைக்கு போககூட வழியில்லாமல் இருக்கின்றேன். இந்த துயரத்துல இருந்து எப்ப மீளப்போகின்றோம் என்று எங்களுக்கு தெரியல என்றார்.
மிகவும் பரிதாப நிலையில் காணப்பட்ட சுவர்னா என்ற வயோதிப பெண் தனக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கும் போது நான் தூங்கிகொண்டிருந்த போது விடியற்காலை 3 மணியிருக்கும். திடீரென காலில் தண்ணீர் படுவது போல இருந்தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்ளது. என்னால் எனது பொருட்களை பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடையின்றி அநாதையாக நிற்கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடியுள்ளது. என்னால் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என கூறியவாறு அழுதார். கன்னத்தில் கையை வைத்துகொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்த ஜரீனாவை நாம் அணுகிய போது, கண்ணீர் சிந்துகின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்வாறு ஒரு மழை பெய்தது இல்ல. இப்படி ஒரு வெள்ளம் ஏற்படும் என நாங்க கனவுலையும் நினைக்கல. மீதொட்டுமுல்ல பகுதியில் 20 வருடத்துக்கு மேல இருக்கிறேன்.
இப்படி ஒரு வெள்ளம் வீடுகளுக்குள்ள வந்ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்டுல இருந்து வெளியேறிய போது உடுத்திருந்த உடுப்போட தான் இன்னமும் இருக்கின்றோம். அழுகின்றார்…! எங்களுக்கு சாப்பாடு கிடைக்குது. சில பொருட்கள எங்களாள வெளிப்படையாக கேட்க முடியாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படுவார்கள். இவைகள வாயால கேட்டுகொள்ள முடியாது. என்ன செய்வது என அழுதுகொண்டே தனது பேச்சை நிறுத்தினார். தண்ணீர் வழிந்தோடிய பின்னர் தனது வீட்டை கழுவிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தண்ணீரால மூழ்கிய எங்கட வீட இப்பதான் கழுவிகிட்டு இருக்கின்றோம். வீட்டுக்குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்தியாலமாக கழுவிகிட்டு இருக்கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்டுக்குள்ள அட்டை மற்றும் சில கிருமிகள் இருந்தன. இதை சுத்தப்படுத்த முடியாமல் உள்ளது என்றார்.
தண்ணீர் நிறைந்து காணப்பட்ட ஒரு பகுதியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்தவர் போல தேடிக்கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரை நாம் அணுகி எதனை தேடுகின்றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழிகளை தேடிகொண்டிருக்கின்றேன். செல்லப் பிராணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்தளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்டையும் தூக்கிகொண்டு வந்து விட்டேன்.
ஆனால் எனது சேவலை காணவில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரியல என்கிறார் 60 வயதுடைய அய்சா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அபயசிங்கராம விகாரையில் தங்கியிருக்கும் கொலன்னாவ நாகமுல்ல பகுதியைச் சேர்ந்த அந்தோனியம்மா தனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கியபோது, எங்கட வீடு முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. துர்நாற்றம் அடிக்கும் இந்த தண்ணீர்ல பாதிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் மீள கழுவி எடுப்பது பொய்யான விடயம். அனைத்தையும் இழந்து அகதிகளாக இருக்கும் எங்களுக்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்வதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழமையாகும் என்றார்.
உணவு வேண்டாம் உடை தாருங்கள்
வெள்ளம் ஏற்பட்டுள்ள குறித் பிரதேசத்து மக்களுக்கு அன்றாட உணவு சுத்தமாக குடிநீர் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன. இருந்த போதிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துக்கொண்டிருக்கும் போது உயிரை காப்பாற்றினால் போதும் என ஓடிய மக்கள் தங்களுக்கான மாற்றுடைகளை பற்றியோ அல்லது உடைமைகளை பற்றியோ சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் தங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் உணவை மட்டுமே கொடுத்து விட்டு செல்கின்றனர். இதனால் ஒரு வாரத்துக்கு மேலாக மாற்றுடை இல்லாமல் தவித்து வருவதாக மக்கள் கூறினர். எனவே நிவரண உதவிகளை வழங்க முன்வருவோர் தங்களுக்கான உடைகளை கொடுத்துதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
தொற்று நோய் அபாயம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் அனைத்தும் கழிவுநீர் தேங்கியுள்ள பிரதேசமாக துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது. சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் மருத்துவ உதவிகளை எதிர்ப்பார்த்திருந்தனர். மேலும் தற்போது நீர் வடிந்து செல்கின்றமையினால் சிறு நீர்நிலைகளில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அதிகளவிலான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியாவில் மிவும் வறிய மக்களுக்கு வீட்டுக் கூரைத்தகரம் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பிளாஸ் ரிக்கதிரைகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை வழங்கினார்.
ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா தெற்கு பிரதேசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கும் இன் நிகழ்வானது வவுனியா தெற்கு பிரதேசசபைச் செயலாளர் திருமதி கிசோர் சுகந்தி அவர்களின் தலமையில் நடைபெற்றது.
நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேல், வட மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
இராணுவம், பொலிஸ், கடற்படை, விமானப்படை என்பவற்றில் பயிற்சி பெற்றவர்களுக்கே இலங்கை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற நிபந்தனை வடக்கு, கிழக்கிற்கு நீக்கப்பட வேண்டும்.
அதன் மூலமே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்கள் நிரந்தர நியமனம் பெற முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1956ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராகவிருந்த போது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை வங்கிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தீர்மானத்திற்கு அமைவாக பாதுகாப்பு உத்தியோகத்தராக முதல் ஆறு மாதங்கள் கடமையாற்றிய பின்னர் அவர்களுக்கான தற்காலிக ஒப்பந்தம் வழங்கப்படும்.
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய பின்னர் அவர்கள் நிச்சயமாக நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அசாதாரண நிலைமைகள் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தற்போதைய நிலையில் அன்றாட ஜீவனோபாயத்தை நிலைநிறுத்துவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரக்னா லங்கா பாதுகாப்பு லிமிட்டட் நிறுவனத்தில் தம்மை இணைத்துக்கொண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதில் வடக்கு மாகாணத்தில் மட்டும் கடந்த பத்து வருடங்களாக 109 பேர் கடமையாற்றி வருவதோடு, கிழக்கு மாகாணத்திலும் இந்த தொகைக்கு சமனாக கடமையாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் தொடர்ந்தும் கடமையில் நீடிக்க முடியாததொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவுள்ளது.
அண்மையில் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலின் பிரகாரம் தற்போது பாதுகாப்பு உத்தியோத்தர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் இராணுவப்பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பலர் தமது தொழில்வாய்ப்புக்களை இழக்கவேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் அன்றாட ஜீவனோபாயம், எதிர்காலம், குடும்பங்கள் என அனைத்து விடயங்களுமே நெருக்கடிக்குள்ளாகும் நிலைமை ஏற்படும் அபாயமுள்ளது.
ஆகவே வடக்கு, கிழக்கு பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக அசாதாரண நிலைமைகளே காணப்பட்டன.
அதனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான தீர்மானத்தை மீளப்பரிசீலிக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களே தொடர்ந்தும் அப்பணியில் நீடிப்பதற்கும் வழிவகைசெய்வதோடு நிரந்தர நியமனங்களின் போது அவர்களை உள்வாங்கவேண்டும்.
அதற்கு ஏற்ற வகையில் குறித்த அறிவிப்பு மாற்றப்பட்டு வடக்கு கிழக்கிற்கு விசேட சலுகை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்.
மேலும் இராணுவப் பயிற்றி பெற்றவர்கள் என்ற பெயரில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை இப்பதவிக்கு நியமித்து தற்போது கடமையில் உள்ளவர்களை நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டாம் என தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது கடமையில் உள்ளவர்கள் அவ்வாறு பயிற்சி பெற்றிருக்காது விட்டால் அவர்களுக்கான பயிற்சியை வழங்கி அவர்களின் தொழில்களை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தாங்கள் குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் சிறுபான்மை மக்களின் துன்ப துயரங்களை நன்கு அறிந்தவர் என்ற நிலையிலும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.