மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 29ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.
இப்போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீசிய 10.4 ஆவது பந்தை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய சவுரப் திவாரி நான்கு ஓட்டங்களை பெற்றார். நான்கு ஓட்டங்களை தடுக்க முற்பட்ட ராயுடுவால் பந்தை தடுக்க முடியாமல் போனது.
இதனையடுத்து ஹர்பஜன் சிங் ராயுடுவை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏசினார். இதனை அவதானித்த ராயுடு உடனே கோபம் கொண்டு ஹர்பஜனை நோக்கி வந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த காட்சி பதிவான காணொளி உங்களுக்காக..
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த நேற்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை மன்றத்தின் தலைவர் கலாபூஷணம் க.ஜயம்பிள்ளை அவர்களின் தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மன்றத்தின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றதுடன் புதிய தலைவராக மீண்டும் கலாபூஷணம் திருவாளர் க.ஜயம்பிள்ளை அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மன்றத்தின் சைவத்தமிழ் மற்றும் சமூகப் பணியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் நோக்கில் இளைஞர்களின் பிரதிநிதித்துவமாக பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையிலான வவுனியா கலைமகள் நற்பணி மன்றத்தினர் சேக்கிழார் மன்றத்துடன் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
மன்றத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேற்கு இந்தோனேசியாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டரில் 6.1 அலகாக பதிவாகியுள்ளது.சுமத்ரா தீவில் உள்ள மேற்கு லாம்புங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனிசியா வானியல் மற்றும் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பசுபிக் பெருங்கடலை சுற்றிலும் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்க ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியிலும், மெக்ஸிகோவை ஒட்டிய சில பகுதிகளிலும், சில தினங்களுக்கு முன்பு வானுவட்டு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று மேற்கு இந்தோனிசியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஸிகா வைரஸினால் பாரியளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வைரஸ் நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதிக்கின்றது எனவும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸிகா தாக்கம் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரேஸிலில் ஸிகா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய்க்கான மருந்து இன்னமும் கண்டி பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொகேன் போதைப் பொருளுடன் நைஜீரியப் பிரஜைகள் எட்டுப் பேர் உட்பட 10 பேர், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராகம, கல்கிஸ்சை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வசமிருந்து 222 கிராம் 700 மில்லிகிராம் வரையான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி – பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று அதிகாலை ஒரு மணியளவில் திடீர் என பேருந்து தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார் தண்ணீரால் அணைக்க முயன்றும் முற்றாக அணைக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து உரிமையாளர் கண்டியை சேர்ந்தவர் எனவும்மயில்வாகனபுரத்திலிருந்து கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிட்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி இறக்கும் பணியில் இருந்ததாகவும் நேற்று வேலைகளை முடித்து இரவு சாரதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயமே சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதா , யாராலும் தீமூட்டப்பட்டதா , அல்லது காப்புறுதி பெறுவதற்கு உரிமையாளர்களால் தீ மூட்டப்பட்டதா என்ற பல கோணங்களில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை மாவட்டம் கந்தர – தலல்ல கடற்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரிழ் மூழ்கி காணாமல் போய் உள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞன் 17 வயதுடைய தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரிழ் மூழ்கிய இளைஞனை பொலிஸார், பிரதேசவாசிகள் கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை சதய தினமான 02.05.2016 இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.
திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு இன்று காலை முதல் பிற்பகல் வரை கோவிலின் வாசலில் தாக சாந்தி நிலையம் அமைத்து அடியார்களுக்கு மோர் மற்றும் குளிபானம் மற்றும் தண்ணீர் என்பன வழங்கப்படுகிறது .மிகவும் வெப்பமான காலநிலையில் அவ்வழியால் பயணித்த அடியவர்கள் தங்களது தாகத்தை தனித்து செல்கின்றனர் ர் .
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்கள உயர் அதிகாரி நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான காற்றும் வீசக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுக்க மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பத்துடன் கூடிய காலநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் எனவும் மழை ஆரம்பித்தவுடன் வெப்பநிலை கிரமமாக குறைவடையும் எனவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..
“மேவுற்ற இவ்வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.”
பாடல் விளக்கம்:-
பொருந்திய அவ்வமையத்தில், சிறப்பால் மிக்க திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய முறையினால், “திருநாவுக்கரசு” என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு மேகம் தவழும் வானில் ஓர் ஒலி எழுந்தது.
குருபூஜை: திருநாவுக்கரசரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
“அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியையான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.”
பாடல் விளக்கம்:-
ஆண்ட அரசின் வரலாற்றை, அம்முனிவர் பெருமானின் மணமுடைய மலர் என மென்மையான சிவந்த திருவடிகளைக் கையாரத் தொழுது அத்துணையினால் அவருடைய அடியவனாகிய யான் அறிந்த வகையால் எடுத்துரைத்தேன். அம்மேலான முனிவரின் மணமுடைய மலர் போன்ற மென்மையான திருவடிகளைக் கையாரத் தொழுது, இனிக் குலச்சிறை நாயனாரின் அளவற்ற பெருமையுடைய திருத்தொண்டின் செயற்றிறனைச் சொல்லத் தொடங்குகின்றேன்.
தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததன் வெளிப்பாடே குறித்த நபரின் அபிப்பிராயத்தையும் மக்களின் கருத்து நிலையையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
தினசரி பத்திரிகைகளிலும் தினசரி மக்களின் பேச்சிலும் யாழில் அரங்கேறும் கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் என்ற விடயங்களே பரந்துபட்டு காணப்படுகின்றன.
யுத்தத்திற்கு முன்னர் ஆட்கடத்தல், அநாமதேயக் கொலைகள் மலிந்த சந்தையாக யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் காணப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர தயங்கியிருந்தனர். தற்போது நல்லாட்சி அரசெனக் கூறப்பட்டுள்ள நிலையில், அன்று காணப்பட்ட அச்ச நிலை இன்றும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
அன்று உறவுகளைக் காப்பாற்ற பயந்த மக்கள் இன்று தமது உடமைகளைக் காப்பாற்ற அச்சத்துடன் தினப்பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சிறுவர்கள் மீதான வன்புணர்வு துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுவதுடன், நடந்தேறிய வன்புணர்வுகளுக்கு இன்று வரை தண்டனை வழங்கலில் இழுத்தடிப்புக்களே இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு சிறுமி என்ற வீதத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டு வருகிறார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றும் ஜி.கே.பெரேரா தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் “மூல வளமே மூளை வளம் “என்று பலராலும் கூறும் அளவுக்கு கல்வித்துறையிலும் அதனோடு சார்ந்த ஏனைய துறைகளிலும் முதன்மை பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்தனர்.
ஆனால் இன்று அத்தகைய சிறப்புப் பதிவுகளை அழித்தொழிக்கும் வகையில் கொள்ளைக் கும்பல்களும் வன்முறையாளர்களும் சமூக மட்டத்தில் உருவெடுத்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த வாரமளவில் யாழ். நகரப் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான வன்முறைச் சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தென்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் கண்ணாடிகளை சரமாரியாகத் தாக்கி தமது வெறியாட்டத்தை வெளிக்காட்டியிருந்ததுடன், தொடர்ந்து அந்தக் கும்பல் நகரில் அமைந்துள்ள நான்கு வீடுகளுக்குச் சென்று பிரதான கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கியிருந்தனர்.
இத்தகைய குழுவினரின் நோக்கம் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக , இவர்கள் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களாயின் வீடுகளிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றிருப்பார்கள். அவ்வாறு அவர்கள் செய்யாது வீட்டு உடமைகளை சேதப்படுத்துவதன் பின்னணியில் மாற்றுச் சக்திகளின் தூண்டலின் துலங்கலாகவே காணப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக கொள்ளைச் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் பரந்து தினமும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, கோப்பாய் பகுதியில் அண்மையில் சுமார் ஆறிற்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகாலை வேளை அரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமான நேரத்துக்குள் ஆயுதமுனையில் வீட்டிலிருந்தவரை அச்சுறுத்தி பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நாளாந்தம் பல கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. இவ்வாறு கொள்ளையிட வருபவர்கள் நகை, பணம் என்பவற்றை சூறையாடிச் செல்வதுடன், மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையைத் தோற்றுவிப்பதற்காக கொள்ளையிடச் செல்லும் போது வீட்டிலிருந்தவர்களை வாள்களால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்குவதிலும் ஈடுபடுகின்றனர்.
இதேவேளை, சில கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விநோதமான பண்பியல்புகளையும் வெளிக்காட்டியிருந்தனர். அதாவது வீட்டிலிருந்தவர்களை வாளால் வெட்டிவிட்டு வெட்டுக்காயத்திற்கு கொள்ளையர்கள் எண்ணெய் பூசி விட்டுச் சென்ற சம்பவமும் சங்கானைப் பகுதியில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வன்செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதுடையவர்களே என பொலிஸ் தரப்பினர் கூறுகின்றனர். அத்துடன், வன்முறைகளில் ஈடுபட்டு கைதானவர்களிடமிருந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கை பின்னணியை சாதாரணமாக எடுத்துவிடமுடியாது. ஏனெனில், பணபலத்துடன் உள்ள ஒரு இளவயதுக் கும்பல் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களிலும் வன்செயல்களிலும் தாங்களை கதாநாயகர்களாக சமூகத்திற்கு வெளிக்காட்ட முனைவதன் பின்னணியில் சமாதான சூழலை விரும்பாத ஒரு மாற்று கொள்கையுடைய குழுவினர் இயங்குகின்றனர் என்ற சந்தேகமே எழுகின்றது.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு புதிய பொலிஸ்மா அதிபருக்கு வடமாகாண முதலமைச்சர் சிீ.வி.விக்கினேஸ்வரனால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் முக்கிய விடயம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையை இங்கு பார்க்க வேண்டியுள்ளது. அதாவது,”வட மாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றி வந்த பஸ் வண்டியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் -? அவர்களின் நோக்கமென்ன? என்பன கண்டறியப்படவேண்டும்.
அத்துடன் இதேபோன்ற நடவடிக்கைகள் நல்லுறவை பேண அரசாங்கம் முனைகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும் இது இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னோடியாக திகழ்கின்றதா ? என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய கருத்துச் சாரப்பட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியை அலசி ஆராய்வோமானால் குறித்த வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டே அரங்கேற்றப்படுவதாகவே பார்க்கவேண்டியுள்ளது.
அதாவது உடமைகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதில் அரசியல் ரீதியான பின்னணி இருக்கும் என்ற நிலைப்பாடே உருவாகியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தை தமிழ்மக்களின் வாக்குப்பலத்தால் மாற்றியமைத்த புதிய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்றி கூறுவதாக வெளிக்காட்டுவது ஒரு புறமிருக்க யுத்தக் குற்ற மீறலுக்கு சர்வதேச அழுத்தப் பிடியிலிருந்து நழுவுவதற்கு நடந்து கொள்ளும் வகையில் காணி விடுவிப்பு, அரசியல் சீர் திருத்த சட்ட வரைபு போன்ற தோரணையில் முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றது.
நீண்ட காலமாக தமிழ் மக்களினாலும் தமிழ்த் தலைமைகளினாலும் வடகிழக்கில் இராணுவத் தரப்பை முற்றாக வெளியேற்றுமாறு விடுக்கப்படும் கோரிக்கையும் பெரிதளவில் முனைப்புப் பெறுவதை குழப்பும் செயற்பாடாவே வன்முறை சம்பவங்கள் பரவலாக இடம்பெறுகின்றதா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
எது எவ்வாறாக அமைந்தாலும் யுத்த வடுக்களினால் உள ரீதியான பாதிப்புக்களில் இருந்து மீளாத எம்மவருக்கு எம்மிலிருந்து உருவாகும் மாற்று வன்முறையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்த் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொடர்ச்சியாக தீர்வுத்திட்டம் எனக் கூறி மக்களின் மனங்களை மழுங்கடிக்காமல் நடைமுறை வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்க்கும் வல்லமையுடையவர்களாக தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
அத்துடன் சிறிய சம்பவங்கள் முதல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வன்முறைச் சம்பவங்கள் அனைத்தையும் மெருகூட்டி ஆர்ப்பரிக்காமல் வன்முறைகளையும் வன்செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.
அகத்தின் எட்டு (8) சடங்குகள்:
1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை
புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:
1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.
2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.
5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.
6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.
7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.
8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.
9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.
12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.
13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.
14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.
(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)
16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.
இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.
“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா உக்குளாங்குளத்தில் நேற்று (01.05.2016) மாலை இடித்தாக்குதலில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் கடந்த சில வாரங்களாக மக்களை வாட்டி வதைத்த வெப்பத்தினை தணிக்க நேற்றைய தினம் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.
இந்த சமயத்தில் உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும் நெளுக்குளம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையின் காணியில் நின்ற தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
15 வீத VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை VAT வரி அறவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மின்சார தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியன இந்த VAT வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன.
இதுவரையில் தேசிய கட்டட நிர்மான வரிக்குள் அடங்காத பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கும் இம்முறை 2 வீத தேசிய கட்டட நிர்மான வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய VAT வரித் திருத்தங்களுடாக நாளாந்த வாழ்கையில் எதிர்நோக்க கூடிய சவால்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 21 அதிகமான அத்தியாவசியப் பொருட்களுக்கு , புதிய VAT வரித் திருத்தத்தினால் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று முதல் அமுல் படுத்தப்படும் VAT வரி அதிகரிப்பினூடாக பேக்கரி உற்பத்திகள் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.