டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு களித்தவாறு பொழுதைக் கழிக்கவும் உறங்கவும் உதவும் இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் டுபாய் கடற்கரையிலிருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் ஒவ்வொன்றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விடுமுறை வாசஸ்தலங்களை ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் பிரகாரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் கீரைத்துறையில், 15 வயது தனது மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 இலட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், நாகரீகமான சமுதாயத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் மிகவும் கேவலமானது என்றும், இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மரணதண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குற்றவாளியின் செயலுக்கு குடிபோதையும் ஒரு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மதுவிலக்கு கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலையில் இருப்பதாகவும், இதை ஊடகங்களும், பத்திரிகைகளும் விவாதப் பொருளாக்கி சட்டம் இயற்றும் அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பதை தங்கள் பொறுப்பாகவும், கடமையாகவும் நினைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுவதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டத்தில் இன்று காலை சிறுத்தை புலி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி புலியானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில்சிக்குண்ட நிலையில், பிரதேச மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல்வழங்கியுள்ளனர்.
மேலும், வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள மேற்படி புலியை உயிருடன் மீட்க நலலதண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒருவரான சனத் ஜயசூரிய மீண்டும் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நால்வர் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
சனத் ஜயசூரிய தலைவராகவும், முன்னாள் டெஸ்ட் வீரர்களான ரொமேஷ் களுவிதாரண, ரஞ்சித் மதுரசிங்க, எரிக் உபசாந்த ஆகியோர் புதிய தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த புதிய தெரிவுக்குழு எதிர்வரும் முதலாம் திகதியுடன் கடமைகளை ஆரம்பிக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீசா பிரச்சினை காரணமாக மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரைக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் நேற்றைய தினம் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் தலைவர் சஹீர்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மக்கலம் 36 பந்துகளில் 60 ஓட்டங்களையும் ஸ்மித் 30 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டானர். டெல்லி தரப்பில் இம்ரான் தாஹீர் 3 விக்கெட்களையும், மொரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 16 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டீ கொக் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றமளித்தார். சாம்சன் 1 ஓட்டங்களுடனும், நாயர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து டுமினியுடன், பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்றே கருதப்பட்டது.
அப்போது, டுமினியுடன், மொரிஸ் ஜோடி சேர்ந்தார். மொரிஸ் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். டுமினி சீரான இடைவேளையில் ஓட்டங்களை சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மொரிஸ் 6 ஓட்டங்களாக விளாச ஆரம்பித்தார்.
அதிரடியாக விளையாடிய மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். மொரிஸின் மாயாஜாலத்தால் ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது.
இதன்மூலம் டி20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக அரைச்சதம் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங்கால் பெறப்பட்ட 12 பந்துகிலான அசை்சதமே சாதனையாக உள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த டுமினி 48(43) ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அப்போது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 144 ஓட்டங்களை எடுத்திருந்தது. தொடந்து அதே ஓவரில் மொரிஸ் இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
19 ஆவது ஓவரை பிரவீன் குமார் வீசினார். மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ஓட்டங்களை மட்டுமே பிரவீன் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலே மொரிஸ் பவுண்டரி ஒன்றை விளாசினார். இதனால் கடைசி 5 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்கப்பட்டது.
4 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். 5 ஆவது பந்திலும் இரண்டு ஓட்டங்கள் எடுக்க கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் பிராவோ நேர்த்தியாக பந்து வீச, அந்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொரிஸ் 32 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகளும், 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.
பிரவீன் குமார் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். குல்கர்னி 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. இதனால் ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி தனது 5 ஆவது வெற்றியை பெற்றுக்கொண்டது.
நட்சத்திர கிரிக்கெட் போட்டி விடயத்தில் தனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், ரமணா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விஷாலிடம் பத்திரிகையாளர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்திய விஷயத்தில் அவருக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்கு விஷால் விளக்கம் அளிக்கும்விதமாக பேசும்போது, நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணியை தொடங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. அஜித்துக்கும் எனக்கும் பிரச்சினை என்பதுபோல் வெளிவந்த செய்திகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.
உண்மையை சொல்லப்போனால் எனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவரை நாம் நிகழ்ச்சிக்கு அழைக்கிறோம் என்றால், வருவதும் வராததும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. நடிகர் சங்க நிர்வாகிகளின் நலனுக்காகத்தான் நாங்கள் பொறுப்புக்கு வந்தோம். பிரச்சினை செய்வதற்காக வரவில்லை. சங்க நிகழ்ச்சிக்கு வராதவர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. அஜித், ரஜினி, கமல் ஆகியோரின் மீது எனக்கு மிகுந்த பாசம் உண்டு என்று தெரிவித்தார்.
தைவான் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கையில் குழந்தையுடன் இருக்கும் தாயின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம் சுமார் 4800 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தைவானின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 48 மனித படிமங்களில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை ஒரு பொறுப்பாளர் சூ வெய் லீ கூறுகையில், இதனை தோண்டி எடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம் என்றும், தாய் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போன்று படிமம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றின் ஊழியரின் செயல் ஒரு கணம் உலகையே திரும்பி தம்பக்கம் பார்க்க வைத்துள்ளது.
ஜோர்ஜியாவில் உள்ள டாக்ளஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் சம்பவத்தன்று உணவருந்த நபர் ஒருவர் வந்துள்ளார்.
உணவருந்த வந்த நபர் தமக்கு தேவையான உணவை ஓடர் செய்துவிட்டு காத்திருந்தார். இந்த நிலையில் உணவும் வந்தது. ஆனால் அந்த நபருக்கு இரண்டும் கைகளும் இல்லாததால் எவரேனும் ஒருவர் ஊட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் இருந்த எவரும் உடனடியாக முன்வராத நிலையில் திடீரென்று அந்த ஹொட்டலின் ஊழியர் அலெக்ஸ் அந்த நபருக்கு உதவ முன் வந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் திருப்தியாக உண்டு முடிக்கும் வரை அவருக்கு உணவள்ளி ஊட்டிவிட்ட அலெக்சுக்கு தற்போது பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் தமது கமெராவில் பதிவுசெய்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவேற்றி, மனிதத்தன்மை இன்னும் சாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஹொட்டல் ஊழியர் உணவு ஊட்டும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகமாறி பல நூறு பேர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அந்த ஊழியரின் செயலையும் மிகவும் பாராட்டி பதிவிட்டும் வருகின்றனர்.
தனியார் கல்லுாாிகளில் மிகவும் பிரபலமான எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்று, சர்தார் படேல்சாலையில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின்போது, ஓட்டுநரின் எச்சரிக்கையால் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவா்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனா்.
எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு செந்தமான குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து, வழக்கம் போல அடையாறிலிருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு போத்தேரியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி பயணித்துள்ளது.
காலை 7 மணியளவில் பேருந்து சர்தார் படேல் சாலையை கடக்கும் போது, வாகனத்திலிருந்து புகை வெளிவருவதைக் கவனித்த ஓட்டுநர் ஆனந்த், பேருந்தை உடனே சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளாா். மேலும், மாணவா்களை பேருந்தை விட்டு வெளியேறும் படிகூறியுள்ளாா்.
இதை தொடா்ந்து,பேருந்து தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. சம்பவத்தை அறிந்த பொலிசார். அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தொிவித்துள்ளனர்.
உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னா், மாணவர்கள் அனைவரும் மாற்று பேருந்தில் பல்கலைகழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தக்க சமையத்தில் மாணவர்களை பேருந்து விட்டு வெளியேற்றிய ஓட்டுநர் ஆனந்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இயந்திர கோளாறு, மின்சார கசிவு காரணமாகவோ அல்லது பேருந்தின் பெட்ரோல் டேங்க் முழுமையாக இருக்கும் பொழுது கோடை வெயில் காரணமாகவோ தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தொிவித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு மாநில குறுந்தொடர் நீச்சல் போட்டித் தொடர் – 2015 (10th Tamilnadu State Short Course Swimming Championship – 2015) இல் கலந்துகொண்ட ஈழச் சிறுமி தனுஜா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் என்ற சிறுமி பத்து வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டார்.
25 மீட்டர் Butterfly பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 17:32 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தையும், 25 மீட்டர் Back Stroke பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 19:57 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், 50 மீட்டர் Free Style பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 34:62 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
இதேவேளை 25 மீட்டர் Free Style பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 15:12 வினாடிகளில் கடந்து இரண்டாவதாக வந்த போதிலும் ஆரம்ப ஒலி எழுப்புவதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டார் என்ற காரணத்தை குறிப்பிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டமையால் இன்னொரு பதக்க வாய்ப்பு இல்லது போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் க.பொ.த உயர் தர மாணவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா கனகராயன்குளம் பகுதியிலில் வசித்துவரும் வேல்முருகன் பார்த்தீபன் என்ற 17 வயது பாடசாலை மாணவன் வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.04.2016) கல்வி நிலையத்திற்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் கல்வி நிலையத்தின் மாணவர் பதிவேடு அட்டையினை விநியோகம் செய்து வந்த தனியார் கல்வி நிலையத்தின் ஊழியர் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்று மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு இரண்டாவது வரிசையிலிருந்த மாணவரிடம் பதிவேடு அட்டையினை வழங்கும்படி கூறியுள்ளார்.
அதற்குமாணவர் கூறியுள்ளார் உள்ளே வர முடியவில்லை, அதனால் என்னை வழங்குமாறு தெரிவித்துள்ளனர் என்று. அதற்கு மற்றைய மாணவர்கள் சரி நீ வெளியே வா பார்த்துக்கொள்கின்றோம் என்று குறித்த மாணவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் வகுப்பு முடிவடைந்து மாணவர்கள் வெளியே சென்றபோது குறித்த மாணவனும் கனகராயன்குளம் செல்வதற்கு பேரூந்திற்கு சென்றபோது காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ரயில் பாதுகாப்புக் கடவைக்கு அருகில் வைத்து நான்கு மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து குறித்த மாணவனை தலைக்கவசத்தினால் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்த மாணவனுடன் சென்ற மற்றுமொரு மாணவன் குறித்த மாணவனை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
தலையில் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியதில் மாணவனுக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தொவித்துள்ளதுடன் மாணவனும் சில விடயங்களை முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை தெரிவிப்பதாக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
தனியார் கல்வி நிலையத்தின் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் தொடர்பாக குறித்த தனியார் கல்வி நிலையத்தின் இயக்குநரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இத்தாக்குதல் சம்பவம் கல்வி நிலையத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளதாகவும் மாணவர்களின் கைகலப்பிற்கும் கல்வி நிலையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையத்தில் பணிபுரியும் ஊழியரின் செயற்பாடு தான் தாக்குதல் இடம்பெற காரணமாக இருந்துள்ளது என வினவியபோது இது ஒரு விடயமே இல்லை இதற்காக தாக்குதல் நடைபெற்றிருக்கத் தேவையில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளதையடுத்து மாணவர்களின் நண்பர்கள் என நம்பப்படும் சிலரால் நேற்று (26.04.2016) இரவு குறித்த தனியார் கல்வி நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வவுனியா திருச்சிலுவை கன்னியர் மடத்திற்கான நிரந்தர வதிவிடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27.04.2016) காலை திருச்சிலுவை கன்னியர் மட மாகாணத் தலைவி அருட்சகோதரி கிளையா சுவானி அவர்களின் இறை ஆசியோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி அ.லக்ஸ்ரன் டி சில்வா திருச்சிலுவை கன்னியர் மட மாகாண ஆலோசகர், மற்றும் வேப்பங்குளம் திருச்சிலுவை கன்னியர் மடம் அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
நேற்று முன் தினம் தெஹிவளை பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு பலியான மாணவிகளின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்களை குறித்த மாணவிகள் கல்வி கற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது.
ஒன்றாக இந்த உலகில் இருந்து விடைபெற்ற தோழிகள் இருவரினதும் இறுதிக் கிரியைகள் ஒன்றாகவே நடைபெற வேண்டும் என பழைய மாணவர் சங்கம் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த மாணவிகளின் இறுதிக் கிரியைகளானது நாளைய தினம் மாலை நான்கு மணிக்கு பொரல்லை பொதுமயானத்தில் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும் புனித கன்னியர் மடத்தின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை பலியான மாணவிகளில் செரோனின் சடலம் கொழும்பு தனியார் மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளதோடு, இமேசியின் சடலம் களனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.