இங்கிலாந்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன், தற்போது 90 வயதாகும் ராய் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் கடந்த 1940ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நோரா ஜக்சன் என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் காதல் மலரவே 1946ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, ராய் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்ததுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனால் திருமணம் பற்றிய எண்ணமே மறந்து போனது, அதேவேளை நோராவுக்கு வேறாரு நபருடன் திருமணமும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் மனநலம் சரியான ராய், பிரபல ஊடகத்தின் ரேடியோ நிகழ்ச்சியின் ஊடாக நோராவை தொடர்பு கொண்டதுடன், இருவரும் தங்கள் காதல் இதயங்களை பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
எப்போதும் நோராவை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாகவும், தொடக்க காலத்தை போன்றே நோராவை இப்போதும் காதலித்து வருவதாகவும் மகிழ்ச்சி பொங்கி கூறியுள்ளார் ராய்.
தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தட்டிக்கேட்கும் நாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த வட கொரியா தற்போது தென் கொரியாவுக்கு எதிரான எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் அரசாங்கத்துக்கு ஆதரவான DPRK ஊடகத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், வடகொரிய வீரர்கள் தென் கொரியாவின் முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் தென் கொரிய ஜனாதிபதியின் அலுவலகமான புளூ ஹவுஸ் வெடித்து சிதறுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. தென் கொரியாவை அழித்து அனைத்தையும் சாம்பலாக்கி விடுவோம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து எச்சரிக்கை வீடியோ வெளியிட்டு வரும் வடகொரியா சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டன் நகர் மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் போருக்கு வட கொரியா தயாராகி வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை களம் இறங்க உள்ளார்.
சேலத்தை சேர்ந்த தேவி கடந்த 2009ல் வீடில்லாதவர்களுக்காக, தாய்மடி என்ற இல்லத்தை துவங்கியுள்ளார். அதில் தற்போது 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் இந்த தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தேவி கூறுகையில், ஜெயலலிதா, தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர். நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக நிற்கிறேன்.
ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியை கொண்டுவர பாடுபட போகிறேன். கூடவே இந்த தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க செய்யவும் பாடுபடுவேன் என பேசியுள்ளார்.
மேலும், தமிழக தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கின்றார்.
தமிழ் திரை உலகை தனது வித்தியாசமான நகைச்சுவையாலும், நடிப்பாலும் கலக்கியவர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலின் போது அரசியலுக்கு சென்ற அவர் பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
என்றாலும், தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். வழக்கமான நகைச்சுவை வேடங்களில் நடிக்கவில்லை. பலர் தங்கள் படங்களில் அழைத்தும் அதை வடிவேலு ஏற்கவில்லை.
நீண்ட நாட்களாக திரைஉலகை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது நடிகர்களுடன் தலை காட்டினார். நாசர், விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுத்தார். நடிகர் சங்க இடத்தை காணவில்லை என்று கூறி கலகலப்பூட்டினார்.
அதன் பிறகு வெற்றிபெற்ற விஷால் அணியை நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் சங்க நிகழ்ச்சிகள், பொதுக்குழு ஆகியவற்றிலும் பங்கேற்றார். இப்போது, விஷாலின் புதிய படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் நகைச்சுவையில் கலக்க வருகிறார்.
விஷால் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திமிரு படத்தில் வடிவேலு நடித்தார். இப்போது விஷாலின் புதிய படமான கத்திச்சண்டையில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சுராஜ் இயக்குகிறார்.
இதன் மூலம் மீண்டும் வடிவேலு தமிழ்பட உலகை கலக்க இருக்கிறார். நலன் குமாரசாமியின் அடுத்த படத்திலும் வடிவேலுவை நடிக்க அழைத்துள்ளனர்.
சூர்யா எஸ்-3 என்ற படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் நடந்து வருகிறது. சித்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்புக்கு போய் நடித்து வந்தார். வழக்கம் போல் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கிய கணவன்- மனைவி இருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். மோட்டார் சைக்கிள் சற்று தள்ளி சேதமடைந்து கிடந்தது. ஏதோ ஒரு வாகனம் அவர்களை இடித்து விட்டு சென்றதால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.
சூர்யா இருவரை பார்த்ததும் காரை நிறுத்தி ஓடோடி சென்றார். தனது உதவியாளர் மற்றும் டிரைவரையும் அழைத்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கிப்போய் தனது காரில் ஏற்றினார்.
அவர்களை சித்தூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்த்தார்.வைத்தியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சூர்யாவிடம் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்கள். சூர்யா உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை தொடர்பு கொண்டு திருப்பதி வைத்தியசாலையில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
ரோஜாவும் வைத்தியரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சூர்யா தனது சொந்த செலவில் அம்புலன்ஸ் வேன் ஏற்பாடு செய்து கணவன்-மனைவியை திருப்பதி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார். விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்காக ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் வைத்தியசாலையில் இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச்சென்றார்.
நடந்துமுடிந்த ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை கடைசி ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளுக்கு சிக்ஸர் அடித்து வெற்றி பெற பிரதான காரணமாக விளங்கிய வீரர் பிரத்வெயிட் ஐ.பி.எல் ஏலத்தில் 420 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இவரை 420 லட்சம் கொடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) கொள்வனவு செய்தது.
எனினும் இவர் இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் வெளிகாட்டிய திறமை காரணமாகவே எதிர்பாரத விதமாக இவர் இவ்வாறு அதிகளவு பணத்திற்கு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியும், திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பால் எதிர்வரும் 09.04.2016 சனிக்கிழமை மு.ப. 10.30 அளவில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் ஏனைய சமூகமட்ட அமைப்புக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீண்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற, புனர் நிர்மான அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65,000 பொருத்து வீடுகள் நமது பிரதேச காலநிலைக்கும், சமூக பண்பாட்டுச் சூழலுக்கும் முற்றிலும் பொருத்தமற்றனவாகும். மேலும் மக்களின் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் இப் பொருத்து வீடுகள் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்களும், துறைசார் நிபுணர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே, இத்தகைய இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி எமது காலநிலைக்கும், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர கல் வீடுகளை அமைத்து வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் அனல் மின்னுற்பத்திச் செயற்பாட்டை இன்று கைவிட்டு வருகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தத்தமது அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையிலே இயற்கை வளம் நிறைந்த திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில், மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
விவசாயம், மீன்பிடி மற்றும் கடல் வளம் நிறைந்த, நீலத் திமிங்கிலங்கள் வாழும் இக்கடற்பரப்பின் இயற்கைச் சமநிலையைக் கெடுப்பதாக அமைகின்ற இச் செயற்பாடானது, சம்பூர் பிரதேச மக்களின் வாழ்வைச் சிதைப்பதாகவும் அமைகின்றது. அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேற்கு பகுதிகளுக்கு மழையைத் தரும் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நுழைவாயிலான கிழக்கு இலங்கையின் சம்பூர் பிரதேசத்தில் காற்றில் கலந்துவிடப்படவுள்ள இம் மின்னுற்பத்தி நிலையத்தின் புகை, சாம்பல் கழிவுகள் எமது நாட்டின் வளிமண்டலத்தை நாசப்படுத்தி உயிர்வாழ்வைக் கேள்விக்குறியாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இவ் அனல் மின்நிலையத் திட்டத்தைக் கைவிட்டு சூரிய சக்தி அல்லது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் ஊடாக மின்சார தேவையையும், எதிர்கால மனித இருப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
நீண்ட காலமாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் சுன்னாகமும் அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள கிணறுகளில் கலந்துள்ள கழிவு எண்ணெய் மற்றும் ஆபத்தான பார உலோகங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்திவருகின்றோம் என்று இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கச்சேரியில் கடந்த 02.04.2016 சனிக்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் விஜயம் செய்து முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை முற்று முழுதாக ஆராய்ந்தார்.
மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சார்ள்ஸ், திரு.மஸ்தான், திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் திரு.அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.
அமைச்சருக்கு பிரச்சனைகளை தெரியப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் சட்ட விரோத கடல் அட்டைகளை பிடிப்பது குறித்து தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது வருடா வருடம் கடல் அட்டைகளை தென் பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான சட்ட விரோத நடைமுறைகளான இரவில் ஒளியுட்டி கடல் அட்டைகளை பிடித்தல், ஒதுக்கப்பட்ட கடல் மைல் தூரத்திற்குள் கடல் அட்டைகளைப் பிடித்தல், கடல் வளமான சங்குகள் போன்றவற்றை அள்ளுதல், அளவு வேறுபாடுகள் இன்றி கடல் அட்டைகளைப் பிடித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.
மேலும் இவர்களது சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு முல்லை மாவட்ட கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
எனவே கடற்றொழில் அமைச்சு ஏனைய மாவட்டங்களில் கடல் அட்டைகளை பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பது போன்று, முல்லை மாவட்டத்திலும் கடல் அட்டைகளைப் பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், யுத்த காலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் கரைவலைப்பாடுகளை சிங்கள முதலாளிகள் சட்டத்திற்கு விரோதமாக கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள். குறிப்பாக ரூக்மன் நிவேரா என்பவர் கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழர் ஒருவரின் கரைவலைப்பாடுகளை சட்டத்திற்கு முறனாக கைப்பற்றி வைத்துள்ளார்.
எனவே அவருக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தப்பட்டு, அப்பிரதேச சட்ட உரித்துடைய தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார். மேற்படி உருத்து முல்லை மாவட்ட நிர்வாகத்திற்குரியது, அதனை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சட்டத்ற்கு விரோதமாக வழங்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டினார்.
வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி .நடராஜ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஆசிகுளம் தரணிக்குளம் அபிராமி முன் பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிகுளம் அ.த.க பாடசாலையின் அதிபர் கோ.கணேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மின்சாரத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக நுகர்வோருக்கு உள்ள உரிமைகள், கடமைகள் தொடர்பில் வடமாகாண நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்று(05.04.2016) வவுனியாவில் இடம்பெற்றது.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப்பிரிவின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வை.எல்.பாறூக் அவர்களின் வழிநடத்தலில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இச் செயலமர்வு நடைபெற்றது.
வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்குரிய 34 நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மின்சாரத்தை நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் ஊடாக கிராம அலுவலருக்கும், அவர்களின் ஊடாக கிராம மட்டத்திற்கும் கொண்டு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச் செயலமர்வு இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களில் ஒரு இறாத்தல் பாண் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வவுனியா மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
54 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்னால் நான்கு ரூபாவினால் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு இறாத்தல் பாண் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களில் ஒரு இறாத்தல் பாண் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்தனர். உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த சிவபாலினி கருத்து தெரிவிக்கையில்
எமது கிராமத்தில் சில வியாபார நிலையங்களில் 60 ரூபாய்க்கு பாண் விற்பனை செய்யப்படுகின்றது. பாணின் விலை ஒரு சில வியாபார நிலையங்களில் வேறுபட்டு காணப்படுகின்றபோதும் உண்மையான விலையை மக்களினால் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
எழுத்து வடிவிலான தரவுகளை ஒலிவடிவில் வெளியிடும் ஸ்கிரீ ரீடர்ஸ் என்று அழைக்கப்படும் அதிநவீன மென்பொருள் ஒன்றை கண்பார்வையில்லாதோர் பாவித்து வந்தனர். எவ்வாறாயினும் அந்த மென்பொருளால் படங்களை வாசிக்க முடியாது என்ற குறைபாடு இருந்து வந்தது.
அந்த குறைபாட்டினையும் நீக்கி கண்பார்வையற்றோருக்கு அதிக பயனை வழங்கும் வகையில் ஃபேஸ்புக்கின் புதிய படைப்பு வெளிவந்துள்ளது.
`படத்தில் உள்ளவற்றை கேட்டு, படத்தை கற்பனையில் பார்க்க முடிகிறது´ என இதன்மூலம் பயனடைந்தவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்கள் ஆர்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ் மூலம், பயனாளிக்கு ஒலி வடிவில் விளங்கப்படுத்தப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பை ஃபேஸ்புக்கின் பொறியியலாளர் மாட் கிங் உருவாக்கியுள்ளார். மாட் கிங் பார்வைத்திறன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர்.
இச்சம்பவம் ஊவா – பரணகமையில் நேற்று (05.04.2016) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவ் இருவரும் இள வயதுகளை உடையவர்களென்பதும், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.
வவுனியாவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தவேளை மாமடுவ அக்போவவ பகுதியைச் சேர்ந்த நிமால் சந்திரசிறி (வயது 48) என்ற நபரே மின்னல் தாக்கி எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினமும் மின்னல் தாக்கத்தில் வவுனியா காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் பலியாகியுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கில் போதைப்பொருள் பாவணை அதிகரித்திருப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தம் முடிவடைந்தும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் வடக்கு மக்கள் மனதளவில் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதால் இவ்வாறான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.