தொடங்கொட – போம்புவல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரின் உத்தரவை கவனிக்காத குறித்த வாகனம் தொடர்ந்தும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் அந்த முச்சக்கர வண்டியை துரத்திச் சென்று அதனை நிறுத்துமாறு சமிஞ்சை செய்த போதும் அவர்கள் நிறுத்தாது பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.இதன்படி பொலிஸாரால் குறித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் இருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போம்புவல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவத்தில் கடமை புரிபவர் எனவும் மற்றொருவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆட்கடத்தலை தடுக்க இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஆட்கடத்தல் குறித்து ஆராயும் அவுஸ்திரேலியாவின் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புவிகரனின் சினிமாத்துறையில் முதலாம் ஆண்டு பூர்த்தியை நினைவுபடுத்தும் முகமாக ‘நீங்க எப்படி’ என்ற குறுந்திரைப்படம் எதிர்வரும் 7ஆம் திகதி வெளிவரவுள்ளது.
லதீப்பின் கதையில் ஜனனி, புவிகரன், குலாஸ், மற்றும் நகுலன் நடித்துள்ளார்கள். இதன் திரைக்கதையை பிரதீப் வடிவமைக்க ஒலிப்பதிவு மற்றும் இசையினை சன்சைன்டி ஹர்ஷி மேற்கொள்ள கிருஷாந் ஒளித்தொகுப்பினையும் பிறேம் உதவி இயக்கத்தையும் மேற்கொண்டு வெளிவரவுள்ளது.
படக்குழுவினர் முழுமையான வேலைகளையும் மூன்று மணிநேரத்தினுள் நிறைவு செய்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு போட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், இலங்கையில் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சுமார் 790 நிபந்தனைகளை குறித்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் குறித்த நிபந்தனைகள் அமைந்துள்ளன.இதில் ஒரு நிபந்தனையாக, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 46ஆயிரம் சதுரமீற்றர் கடல் காணிப்பகுதி சர்வதேச நச்சுக்களை கண்காணிக்கும் அமைப்பினால் எந்த நேரத்திலும் கண்காணிக்கப்படும்.அத்துடன் குறித்த பிரதேசத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கை விளைவிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
இதேவேளை, குறித்த காணிப்பரப்பில் மணல் அகழ்வுகள் இடம்பெறும் போது அதற்கு இலங்கை காணி விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர் அளவில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், வடக்கு பகுதியில் இம்மாதம் 5 தொடக்கம் 14ஆம் திகதி வரையில் சூரியன் உச்சமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் ஓப்பனாயக்க,வடக்கு-களுத்துறை,மொலமுர மற்றும் மகாவெல்லத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நண்பகல் 12.03 மணியளவில் சூரியன் உச்சமளிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து 09 நாட்களுக்கு நாட்டின் வடக்கு உட்பட சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என்பதால் மக்கள் தமது உடல்நிலை தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் சபையின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் சபையின் மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் சபை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து கிரிக்கெட் சபை நீக்கலாம் என்று தெரிகிறது.
அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – தென்னாபிரிக்கா இடையே சமீபததில் நடந்த தொடரில் கவாஸ்கர் 90 லட்சம் வரை பெற்று இருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு 10 லட்சம் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.
மற்றவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 8 மடங்கு அதிகமாக கவாஸ்கர் வாங்குகிறார். இது கட்டுப்படியாகது என்பதால் கிரிக்கெட் சபை இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.
உலகின் சில செல்வந்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், எவ்வாறு பணச் சலவையிலும் நிதித்தடைகளை தவிர்ப்பதிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை காட்டுகின்ற மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசிந்து சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கருப்பு பணத்தை சுவிஸ் (சுவிஸ்லாந்து) நாட்டு வங்கிகளில் பதுக்குவதுதான் இதுவரை உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. அந்நாட்டு வங்கிகளில் வைத்துள்ள வெளிநாட்டு பிரமுகர்களின் வங்கிக் கணக்குகள் ராணுவ இரகசியத்தை விட பாதுகாப்பானது என்று கூறப்படுவதால் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் ஏராளம்.
இதேபோல் மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் இரகசியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.
மொஸ்ஸக் ஃபொன்சேக (Mossack Fonseca) என்ற வெளிநாட்டு நிதி நிறுவனத்திலிருந்து 11 மில்லியன் ஆவணங்கள், விக்கிலீக்ஸ் கசிவை விட மிகப்பெரிய தகவல் கசிவாக, கசிந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் முன்னாள் மற்றும் தற்கால அரச தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள், சட்டவிரோதமாக தாங்கள் ஈட்டிய பணத்தின் விபரங்கள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கசிந்த பனமா ஆவணங்களில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி, பாகிஸ்தான் பிரதமர், ரஷிய அதிபர் புதின் உதவியாளர்கள், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பசர் அல் அசாட் மேலும் இந்தியாவின் நடிர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் பெயர்களும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பனாமா அதிபர் ஜூவன் கார்லோஸ் வெரெலா இதுபற்றி கூறுகையில், “வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் எங்களுடன் சில நாடுகளால் போட்டி போட முடியவில்லை. அவைதான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. எனினும் எங்கள் நாட்டில், மறைமுகமான எந்த ஒப்பந்தங்களுக்கும் இடமில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
புகையிரதங்களின் புதிய நேர அட்டவணையால் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ரயில் பயணிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நேர அட்டவணையால் எந்த ஒரு புகையிரதமும் கொழும்புக்கோ அல்லது மருதானைக்கோ குறித்த நேரத்திற்கு வருவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
முக்கியமாக பிரதான ரயில் மார்க்கங்களிலேயே இவ்வாறு புகையிரதங்கள் காலதாமதமாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில சமயங்களில் 10 தொடக்கம் 15 நிமிடங்களுக்கு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதன்காரணமாக சரியான நேரங்களுக்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுவதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முன்பு அலுவலக ரயில்கள் நிறுத்தாத ரயில் நிலையங்களில் தற்போதைய கால அட்டவணையின் பிரகாரம் ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும் இதன் காரணமாகவும் தாம் காலதாமதமாக அலுவலகங்களுக்கு செல்வதாக பயணிகள் தெரிவித்திருப்பதாக சுடிக்காட்டியுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் பிரதேசத்தில் இன்று(0504.2016) மாலை மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மகாறம்பைக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுவன் (இலங்கேஸ்வரன் துலக்சன்) 14வயது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற சமயம் மின்னல் தாக்கியதில் குளக்கட்டிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரிடமிருந்த நெற்களஞ்சியசாலை கடந்த சில நாட்களுக்கு முன் விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறி நெற்களஞ்சியசாலையினை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர். பின் மீள் திருத்தங்கள் மேற்கொண்டு இன்று (05.04.2016) நெல் களஞ்சியப்படுத்தப்பட்டது.
இன்று காலையிலிருந்து பல வாகனங்களில் நெற்களை விவசாயிகள் நெற்களஞ்சியசாலைக்கு கொண்டுவருவதை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து இந்த நெற்களஞ்சியசாலையினை இராணுவ விஷேட அதிரடிப்படையினர் தமது வசம் வைத்திருந்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் கே.தேவராஜா அவர்களின் ஊடகசந்திப்பு இன்று (05.04.2016) காலை 11.30 மணியளில் வவுனியா வாடி வீடு மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்..
வவுனியா மாவட்டத்தில் 2009ற்க்குப் பின்னர் மனித உரிமைகள், காணமல் போணவர்கள், அரசியல் கைதிகள், காணி ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் அத்தனையையும் எம்மீது தாங்கிக்கொண்டு நகர்த்தி வந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் நான். பிரஜைகள் குழுவானது 8 மாவட்டங்களிலும் பெறுமதி வாய்ந்த ஒரு குழுவாக தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற இந்த சமயத்தில் கடந்த 05.03.2016 அன்று ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய எமது நிர்வாக உறுப்பினர்கள் முற்பட்டனர்.
அன்றைய கூட்டத்தினை நிர்வாகக் குழுக் கூட்டமாகக் கூட வேண்டும். அந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு அமைய நாங்கள் பொதுச் சபையைக்கூட்டி புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என நான் தெரியப்படுத்தியும். எனது அனுமதியின்றி எனது ஒப்புதல் பெறாமல் அந்த கூட்டத்தினை நடத்த முற்பட்டனர். ஆனால் அந்த கூட்டம் இடை நிறுத்தப்பட்டுவிட்டது.
உங்களிடம் இருக்கும் நிதிப் பிரச்சனைதான் இந்த பிரஜைகள் குழுவின் பிளவுக்கு காரணமா என ஊடகவியளாளர் கேள்வி தொடுத்த போது,
இது வரையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்தவிதமான நிதியும் கிடைக்கவில்லை. எந்த நிதியையும் வைத்து பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.