வவுனியா மாவட்டத்தில் நெற்கொள்வனவு மேற்கொள்ள அரசாங்க அதிபர் நடவடிக்கை!!

Paddy

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெற்கொள்வனவு மேற்கொள்வதில் சில இழுபறி நிலைகள் இருந்து வந்துள்ளது.

தற்போழுது வவுனியா நகரிலுள்ள நெற்களஞ்சியசாலைசாலையிலிருந்து விஷேட அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதையடுத்து விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்ள அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று காலை வவுனியா மாவட்ட கமக்காரர்கள் அமைப்புகள் அரசாங்க அதிபரை சந்தித்து விவசாயிகளின் நிலைமையினை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடார்பு கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

நேற்று காலை பம்பைமடு, கோவில்குளம், ஓமந்தை ஆகிய இடங்களைச் சேர்ந்த விவசாயிகள், கமக்கார அமைப்புக்கள் என சுமார் 50 பேர் சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடப்பட்டதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு களஞ்சியக்காப்பாளரை அழைத்து விவசாயத் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்பட்ட விண்ணப்ப்படிவங்களை பொறுப்பெடுத்து திகதியிடப்பட்டு ஒப்படைக்குமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாகவும் இரண்டு தினங்களுக்குள் இவற்றை செய்து முடித்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கமக்கார அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக அறுவடை செய்யப்பட்ட நெற்களை விற்பனை செய்யமுடியாமல் இழுபறி நிலையிலிருந்த இப்பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், 50கிலோ 500கிராம் நெல்மூட்டையினை 1900 ரூபாவிற்கு விவசாயத்திணைக்களம் பெற்றுக்கொள்ளஉள்ளதாக தெரிவித்தே விண்ணப்பப்படிவம் விநியோகம் செய்யப்பட்டவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் வழங்குவதில் இழுத்தடிப்பு : வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் குற்றச்சாட்டு!!

VAV

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் இழுத்தடிப்பு இடம்பெறுவதாகவும் இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது..

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஊடக அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக பிராந்திய ஊடகவியலாளர்கள் உட்பட அலுவலக ஊடகவியலாளர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில் நேர்முகப்பரீட்சைகளில் கலந்து கொண்டதன் பிரகாரம் சில ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிலையில் மக்கள் வங்கியொன்றின் மூலமாக மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொள்ள ஆவண செய்யுமாறு ஊடகவியலார்களுக்கு கடிதம் ஊடக அமைச்சினால் அனுப்பட்டிருந்த நிலையிலும் வங்கிகளின் செயற்பாட்டினால் பல ஊடகவியலார்கள் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் வடபகுதிக்கான விஜயம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஊடக அமைச்சர் வட பகுதியை சேர்ந்த மோட்டர் சைக்கிளுக்கு தெரிவு செய்யப்பட்ட 41 ஊடகவியலார்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையிலும் இரு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே மோட்டார் சைக்கிளுக்கான காசோலை வழங்கப்பட்டிருந்தது.

ஏனைய ஊடகவியலார்களுக்கு குறித்த வங்கியினால் மோட்டர் சைக்கிள் பெறுவதற்கு ஆவண செய்யப்படும் என்ற கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மோட்டார் சைக்கிளை பெற முடியாதுள்ளதுடன் அலைக்கழிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. எனவே, ஊடகவியலாளர்களை ஏமாற்றாது உடனடியாக மோட்டார் சைக்கிளை வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கஞ்சா, ஹெரோயின் கடத்தல்களை முறியடிக்க கடலில் படகுச் சோதனை : நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை!!

Ilanch

கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் நிலையமாக வர்ணிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருட் கடத்தல்களை முறியடிப்பதற்காக கடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு வடபிராந்திய கடற்படையினருக்கு யாழ் மேல் நீதிமன்றம் பணித்துள்ளது.

வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும் அனைத்து படகுகளையும் திடீர் சோதனை நடத்தி போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்து நிறுத்துமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம் கொழும்பில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரின் பிரிவொன்றை வடகடலில் கடலோரக் காவல் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி பரிந்துரை செய்திருக்கின்றார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கொன்றில் பிணை வழங்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் மீதான விசாரணையின்போதே, கடற்படையினருக்கான இந்தப் பணிப்புரையும் போதைப்பொருள் தடுப்புப் பொலிசாருக்கான பரிந்துரையும் கடந்த புதன்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது..

இலங்கையின் வடபகுதிக்குள் கேரள கஞ்சா இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படுகின்றது என்பது உறுதியாகிவிட்டது. அண்மைக்காலமாக மாதகல், பருத்தித்துறை, மயிலிட்டி, மன்னார் ஆகிய வடபகுதி கடற்கரைகளிலும், நிலப்பகுதிகளிலும் பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு, அவற்றைக் கடத்தி வந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்னன.

ஆயினும் இந்த போதைப் பொருட்களைக் கடத்தி வரும் படகுகள் எவை, அத்துடன் நடுக்கடலில் போதைப் பொருட்களை ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குப் பரிமாற்றம் செய்வதில் ஈடுபடும் படகுகள் எவை என்பதைக் கண்காணித்து கையும் மெய்யுமாகப் பிடித்து போதைப் பொருட் கடத்தலை முறியடிக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் கடல் வழியாகவே கடத்தப்படுவதனால், இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை நடுக்கடலிலும், கடல் எல்லையிலுமே தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருட்கள் கரைக்கு வந்து சேரும் வரையில் சட்டம் பொறுத்திருக்க முடியாது.

இலங்கைக் கடல் இலங்கைக்கே சொந்தமானது. எனவே, அனந்தக் கடல் வழியாகக் கடத்தி வரப்படுகின்ற போதைப் பொருட்களைக் கைப்பற்றி அவற்றைக் கொண்டு வருபவர்களைக் கைது செய்யும் பொறுப்பு கடற்படையினருக்கு உண்டு.

எனவே, எனவே வடகடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்து, சோதனை நடவடிக்கைளைத் தீவிரப்படுத்தி கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்குமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது.

அதேநேரம் கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாரின் விசேட கடலோரக் காவல் பிரிவு ஒன்றை உருவாக்கி வடகடலில் இந்தியாவில் இருந்து நேரடியாக பொருட்கள் வரக்கூடிய கடலோர எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் மா அதிபருக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கின்றது.

இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்கான விசேட கடலோர பொலிஸ் காவல் பிரிவினர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் வரையிலும், மறுபக்கமாக ஊர்காவற்றுறையில் இருந்து பருத்தித்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலும் கண்காணிப்பு மற்றும் தமது சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கடலோரப் பகுதிகள் வழியாகவே இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படும் ஆரம்ப மற்றும் மையப்பிரதேசங்களாகத் திகழ்கின்றன.

இந்தப் பிரதேசங்களின் ஊடாக வடபகுதிக்குக் கடத்தி வரப்படுகின்ற போதைப் பொருட்களில் 25 வீதமானவை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளிலும், 75 வீதமானவை நாட்டின் தென்பகுதி பிரதேசங்களிலும் வியாபாரத்திற்காகக் கடத்திச் செல்லப்படுகின்றன. இது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

எனவேதான் போதைப் பொருள் கடத்தலுக்கான முக்கிய தளமாக வடபகுதியும் யாழ்ப்பாணமும் திகழ்வதாகக் கூறப்படுகின்றது. எனவே, அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் கடற்படையினரும், பொலிசாரும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள ஒரு நிலையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கில் பிணைகோரி செய்யப்பட்டுள்ள மனுவை சாதகமாகப் பரிசீலனை செய்து பிணை வழங்கவது என்பது போதைப் பொருள் தொடர்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் பிழையான வழிகாட்டல் நடவடிக்கையாகவும் முரண்பட்ட நடவடிக்கையாகவும் அமைந்துவிடும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் கடற்படையினருக்கான பணிப்புரையை வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும். போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான விசேட
கடலோரக் காவல் பிரிவின் உருவாக்கத்திற்கான பரிந்துரையை பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச கல்லூரியில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் கௌரவிப்பு!!

 
2015 ஆம் ஆண்ட நடைபெற்ற க.பொ.த உயர்தரம் பரீட்சையில் சித்திபெற்று பல்லைகழகத்திற்கு தெரிவான 35 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2016) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பாடசாலை அதிபர் திருமதி கமலேஸ்வரி பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், மற்றும் கலைப்பிரிவில் மாவட்ட ரீதியாக தெரிவான மாணவர்களுக்கு ஒஸ்ரியா நிறுவன உரிமையாளர் திருமதி.சிவஜீவன் வேந்தினி அவர்களால் 25000 ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டதுடன் வர்த்தகர் எஸ்.ஜீவன் அவர்களால் 4 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் பண உதவிகளும் வழங்கப்பட்டது. சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மாணவர்கள் படித்து முன்னேறுவதோடு எமது கலை, கலாச்சாரம் பண்பாடுகளையும் கட்டிக்காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலையில் வாகன தரிப்பிடம் அமைப்பதற்காக இரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி சிவஜீவன் வேந்தினி, சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_0258 IMG_0262 IMG_0263 IMG_0267 IMG_0285 IMG_0292 IMG_0293 IMG_0302

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றுகூடல்!!

Kaanaamal

வவுனியா மாவட்டத்தில், ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான அத்தியாவசியக் கலந்துரையாடல், நாளை(06.04.2016 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக,

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தை மீளக்கட்டமைக்கும் வகையில் புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெறவுள்ளதாகவும், சங்கத்தின் எதிர்கால செயல்த்திட்டங்கள் தொடர்பில் கூடிப்பேசி தீர்மானங்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

எனவே வவுனியா மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரையும் குறித்த ஒன்றுகூடலில் தவறாது கலந்துகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு 0094 77 330 1724 எனும் கைப்பேசி இலக்கத்தினூடாக தொடர்பினை மேற்கொள்ளுமாறும் அவர் அறியத்தந்துள்ளார்.

9 வயது பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

Rape

பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டமை குறித்து, 34வயது நிரம்பிய திருமணமான இளைஞன் நேற்று (04.04.2016) இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் தரம் நான்கில் கல்வி கற்று வந்த 9 வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டவராவார்.

அம்மாணவி, ஆபத்தான நிலையில் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற, மேற்படி சம்பவம் குறித்த புகாரையடுத்து, பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 34வயது நிரம்பிய திருமணமான இளைஞன் எல்ல பொலிஸாரினால், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞன், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05.04.2016) ஆஜர் செய்யப்பட்டதும், எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

சிறுநீரகம் வழங்கியதை ஒப்புக் கொண்ட சந்தேகநபர்கள்!!

Kindney

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் வசமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலி சீல்கள் பெருந் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய சந்தேகநபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

திருடர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

Capture

புத்தாண்டுக்கு பொருள் கொள்வனவிற்காக தலைநகரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்ய தலைநகருக்கு வரும் பொதுமக்கள் தமது தங்கநகைகள்,பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் பணப்பைகளை திருடர்களிடம் பறிகொடுப்பதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புறக்கோட்டை, மஹரகம, நுகேகொடை உள்ளிட்ட பிரபலமான நகரங்களுக்கு வரும் பொதுமக்களே பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் பறி கொடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் திருடர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், சந்தேகத்திற்கு இடமாக நடமாடும் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கும் படியும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வறட்சியால் மன்னாரில் 15120 பேர் பாதிப்பு!!

Varatchi

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினால் மன்னார் மாவட்டத்தில் 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,120 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ளவர்கள் குடிநீர் இல்லாமல் பாரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினம் 2 மணிக்குப் பின்னர் மழையுடனான காலநிலை நிலவும் எனவும் இந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மழை பெய்யும் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நேரங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் காலநிலை மத்திய நிலையத்தின் வானிலை அதிகாரி சத்திஸ்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம் வெறும் வதந்தியே!!

AR

பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இலங்கையில் நடைபெற இருந்த மாபெரும் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்த்தரும் சந்தைப்படுத்தல் முகாமையாளருமான டபிள்யு.விஜேந்திரன் தெரிவித்தார்.

ஒஸ்கார் நாயகன் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்படவுள்ள நிலையில் அவரது வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இந்தியாவில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையிலும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு விடுமுறையாகையால் இதற்குத் தேவையான வேலைப்பாடுகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க சந்தர்ப்பம் இல்லாத பட்சத்திலேயே இந்நிகழ்ச்சி சற்று பிற்போடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

புதுவருடப்பிறப்பின் காரணமாக தற்போது இந்த இசைநிகழ்ச்சிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வேலையாட்களை திரட்டுவதற்கும் சற்று சிரமமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் புகையிரதத்துடன் மோதி பலி!!

 
மன்னார் – தாராபுரம் பிரதான வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் நடந்துள்ளது.

இந்த விபத்தில் மன்னார் பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமையே வீடு திரும்பியதாகவும் மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று அதிகாலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2

பாகிஸ்தானில் பயங்கர மழை, வெள்ளம் : இதுவரை 57 பேர் உயிரிழப்பு!!

Rain

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சூறையாடிய மழை, வெள்ளத்துக்கு 57 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துங்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நேற்றிரவு கரையை கடந்த வெள்ளநீர் அருகாமையிலுள்ள ஊர்களுக்குள்ளே புகுந்தது.

இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படிருந்த உணவு தானியங்களும், பழத்தோட்டங்களும் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.

வெள்ளநீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் இங்குள்ள ஷங்லா மாவட்டத்தில் 14 பேரும், கோஹிஸ்தான் மாவட்டத்தில் 12 பேரும், ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் எட்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷிமீர் பகுதியில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஐந்து குழந்தைகள் உள்பட எட்டு பேர் பலியாகினர்.

பாகிஸ்தானை சீனாவுடன் இணைக்கும் கரக்கோரம் நெடுஞ்சாலை பகுதி நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளது. பல சிறிய பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாமுவெல்ஸ் சொல்லும் கண்ணீர் கதை!!

Samuels

தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை ஷேன் வோனுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.

6வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்திய தீவுகள்.

இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி “கடவுளுக்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து பிராத்தனைக் செய்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் சபை எங்களை அவமதித்தது. ஜெர்ஸி கூட இல்லாமல் தான் நாங்கள் இந்தியா வந்தோம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்காக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டோம்.

நிக்கோலஸ் (இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்) எங்களை மூளை இல்லாதவர் என்று கூறினார். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிப் பெற்றுள்ளோம். நாங்கள் மீண்டும் எப்போது சேர்ந்து விளையாடுவோம் என்று தெரியவில்லை. பயற்சியாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. மேற்கிந்திய தீவுகள் அனைவரும் சம்பியன் தான்.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் சாமுவெல்ஸ். இதற்காக அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் அவுஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோன்.

ஆனால் இன்று சிறப்பாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற உதவினார் சாமுவெல்ஸ். இதற்காக அவருக்கு ஆட்டநாயன் விருது அளிக்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை ஷேன் வோனுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.

இரண்டாவது முறையாக உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்!!

WI

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது.

அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இதன்படி கல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனவே துடுப்புடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்கள் கைகொடுக்காத போதும் அதிரடியாக ஆடிய ரூட் 54 ஓட்டங்களை விளாசினார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இங்கிலாந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. அந்த அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் சிறப்பாக விளையாடிய சாமுவேல் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களை விளாச அந்த அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 161 ஓட்டங்களை குவித்தது.

இதற்கமைய 4 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடியுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 20க்கு இருபது இறுதிப் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளின் கொலைக்கு நீதி தேவை : வித்தியாவின் தாய்!!

Vidya

புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் என வித்தியாவின் தாய் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த உறுதியின்படி ஞாயிறன்று வவுனியாவில் அவர்களது குடும்பத்திற்கு என வீடு ஒன்று வழங்கப்பட்டது. இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன வழங்கினார்.

வவுனியா கொக்குவெளி என்ற இடத்தில் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கென புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும் உரியவர்களிடம் அமைச்சர் கையளித்தார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதி அமைச்சர் பிரிவினை இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியும் பங்கேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை.

ஆனாலும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் தனியார் உல்லாச விடுதி ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!!

Murder

களனி – மகுலுகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் களனி – சிங்காரமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.