வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பண்டாரிகுளம், உக்குளாங்குளம் மகளிர் சங்கத்திற்கு சுயதொழில் முயற்சியை விருத்தி செய்வதற்காக அவர்களுக்கு தையல் இயந்திரமும், சமையல் பாத்திரங்களும் 2016.04.01 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் ‘விஷம் இல்லாமல் ஒரு தேசம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியர்கள், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியளாளர்கள், விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களின் பொறுப்பான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், சுகாதார பணிபணை உத்தியோகத்தர், விவசாயிகள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியாவில் நேற்று முன்தினம் பிற்பகல் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றபோது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகர் இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த றஞ்சித் றியோன்சன் என்ற 19 வயது பாடசாலை மாணவன் நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றபோது கிணற்றுக்குள் நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். குறித்த மாணவனுக்கு நீச்சல் தெரியவில்லை எனினும் குளிப்பதற்காக கிணற்றுக்குள் சென்றபோது நீரில் மூழ்கிய மாணவனை ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் க.பொ.த உயர்தரம் 2016 பரீட்சைக்குத் தோற்றவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பல்வேறு சமூகங்களும், இனக்குழுக்களும் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இடையிடையே இனக்குழுமங்களுக்கிடையில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், புரிந்துணர்வுயின்மை போன்றவற்றால் பல்வேறு அசம்பாவிதங்களும் இழப்புக்களும் இந்நாட்டில் ஏற்பட்டன.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறான கசப்பான அநுபவங்களை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடாது. இனக்குழுமங்களுக்கிடையில் ஒரு ஐக்கியமான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை இவ் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு அதனை மேலும் பொலிவுபடுத்தி நிதர்சனமாக்கும் வழிவகைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமாகிய மு.காதர் மஸ்தான் முப்படை வீரர்களுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எங்கள் கிராமம் ‘சத்விரு சங்ஹிந்த’ எனும் மகுடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை இராணுவ வீரர்களுக்கு சுமார் ஐம்பத்தியொரு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வொன்று நேற்று வவுனியா கொக்வேலிய எனும் இடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, பாதுகாப்புச் செயலாளர் உட்பட பல்வேறு பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இந்த வீடுகள் இலங்கை இராணுவத்தில் கடமை புரியும் தழிழ் யுவதிகளுக்கும், சிங்கள இராணுவ வீரர்களை திருமணமுடித்த தழிழ்க் குடும்பங்களுக்கும் இணைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக பங்குபற்றி கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.காதர் மஸ்தான் அவர்கள் எமக்கு முன்னால் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன, அதில் பிரதானமான சவாலாக இருப்பது இன ஐக்கியமும் சகவாழ்வுமாகும். இவ்விடயத்தை பல திட்டங்களினூடாக சாத்தியப்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியும், கௌரவ பிரதமரும் முன்நிற்கின்றனர். வவுனியா போன்ற மூவினங்களும் ஒன்றாக வாழும் ஒரு மாவட்டத்தில் இவ்வாறான சகவாழ்வு முன்னெடுப்பு வரவேற்கத்தக்க விடயமாகும்.
அபிவிருத்தியடைந்த நாட்டை நோக்கிய பயணத்திற்கு ஒவ்வொரு இனக்குழுமங்களினதும் கருத்துக்களும் அபிலாசைகளும் பெரிதும் மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிவிருத்தியை உலகளவில் கொண்டுசெல்வதற்கு முடியும் என்பதை எமது அரசாங்கம் நன்றாக புரிந்துவிட்டது. எனவே பாகுபாடுகள், வேற்றுமைகள், நம்பிக்கையீனங்கள் இல்லாத ஆழமான பரஸ்பர புரிந்துணர்வை சகல இன மக்களும்புரிந்து கொள்ள வேண்டும். அதைநோக்கிய பயணத்தில் அரசாங்கம் தொடர்ந்து கரிசினை கொள்ள வேண்டும் என்றும் முக்கியத்துவப்படுத்தினார்.
நாணயசுழற்சியை வெற்றி பெறாமல் போனது மோசமாக அமைந்து விட்டதாக இந்திய அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
192 குவித்தும் இந்திய அணிக்கு சிறப்பான பந்து வீச்சு அமையாததால் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போனது. போட்டிக்கு பின்னர் தோனி பேசியதாவது..
எனக்கு தெரியும் நாணயசுழற்சியை தோற்றது மோசமான விஷயம். இரண்டாவது இன்னிங்சில் பனிப் பொழிய ஆரம்பித்துவிட்டது. எங்களது முதல் சில ஓவர்கள் மோசமாக இல்லை. ஆனால் எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. பனிப் பொழிவு நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வரலாறு இல்லை.
உலகக் கிண்ண தொடரில் நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். ஏனெனில் ஈரமான பந்தில் சிறப்பாக பந்துவீசவில்லை. அதுமட்டுமில்லாமல், இரண்டு நோ பால்ககளால். பந்துவீச்சாளர்களால் நான் அதிகம் ஏமாற்றமடையவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை கையிலெடுத்து மாற்றிவிடுவார்கள் என்று விரும்பினேன்.
எங்களுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இது ஒரு கடினமான வடிவம். வழக்கமாக போட்டிகள் கொஞ்சம் நெருக்கடியில் முடிபவை தான். ஒரு சில போட்டிகள் தான் எதிரணியின் தன்மையால் எளிதில் முடிந்துவிடும். வழக்கமாக கடைசி ஓவர் வரை போட்டி செல்லும்.
ஆனால், பயன்படுத்தி இருக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டிகளில் இது போன்று பல போட்டிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இவ்வாறு தோனி பேசினார்.
ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் இன்றுகாலை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சாலை போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவைகள் சுமார் அரைமணி நேரத்துக்கு முடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 04ம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து எட்டு இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் எட்டு பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த 08 பேரையும் தொடர்ந்து தடுத்து வைக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த நிலையில், எதிர்வரும் 04ம் திகதி வரை அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்துள்ளது
இந்தியாவின் கொல்கத்தா நகரில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிர்மாணப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேம்பாலம் தகர்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இரவு இரவாக மீட்புபணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் துப்புரவாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் எல்லை நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(01.04.2016) வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வவுனியா அரச அதிபர் றோகன புஷ்பகுமார, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான G.T.லிங்கநாதன், தர்மபால, ஜெயதிலக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை சுகாதார அமைச்சரின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று(01.04.2016) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டள்ளார்.
வவுனியாவில் ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு புகைப்பிடிப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள் எனத் தெரிவித்து விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வின் போது லான்ட் மாஸ்ரர் ஒன்றில் சிகரட் புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள் எனக்குறிப்பிட்ட பதாதைகள் தொங்கவிடப்பட்டு கேக் போன்று வடிவமைக்கப்பட்ட பெட்டி ஒன்று வைக்கப்பட்டு வவுனியா நகரை வலம் வந்தது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையிலேயே சிகரட் புகைப்பவர்கள் முட்டாள்கள் என சமூகம் அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டது. ஏமாறுவர்கள் கொஞ்சம் விழிப்படைய வேண்டும். இந்த வருடம் இந்த வாழ்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் இனி வரும் வருடத்தில் பொருத்தாமல் பார்த்தால் நீங்களும் இந்த வாழ்த்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூன் இலங்கை வான்பரப்புக்கு அனுப்புவதற்கான வேலைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிகிரியாவில் நடைபெறும் “யோவுன் புரய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பலூன் வானுக்கு அனுப்பபடவுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மலிவான விலையில் இணைய சேவையினை பெற்றுகொள்ள முடியும் என்பதோடு தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இணைய வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெரும்என்பதும்குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர விஞ்ஞானத்துக்கு ஏற்ப காரணிகளை ஆய்வு செய்து பார்க்கும் போது 2014ம் ஆண்டிலிருந்து காலநிலையில் பலவித வேறுபாடுகள் (மாற்றங்கள்) ஏற்பட ஆரம்பமாகி உள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையான (ஆரம்பம்) காலத்தில் இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படும். இந்த காலநிலைத் தன்மையின் போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் இருப்பது சாதாரணமானதாகும்.
காற்று வீசுவது குறைதல், கீழ்வளிமண்டலத்தில் இருக்கும் நீரின் ஆவியாகும் தன்மை ஆகியவற்றால் அதிகமான வெப்பம் உணரப்படும். வளி மண்டலத்தில் உஷ்ணத்தின் அளவு 1-3 செல்சியஸ் அளவினால் அதிகரித்துக் காணப்படுகிறது.
அது தவிர பாரிய அளவில் அதிகரிப்பு இல்லை. சாதாரணமாக மார்ச் மாதத்தில் கொழும்பு மாவட்டத்துக்கு இருக்க வேண்டிய வெப்பம் 31.7 செல்சியஸ் அளவிலான உஷ்ணம் ஆகும். என்றாலும் இந்த மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் உஷ்ணம் 33.3 ஆக உயர்ந்துள்ளது.
பெப்ரவரி, மார்ச் மாதங்கள் இரண்டிலும் காலநிலை அறிக்கைகளை அவதானிக்கும் போது இலங்கையில் கூடுதலான வெப்பம் கிடைக்கப் பெற்றது அல்லது பதிவு செய்யப்பட்டது அநுராதபுரத்திலாகும். அது 37.8 செல்ஸியஸ் ஆகும்.
இதற்குப் புறம்பாக இரத்தினபுரி, குருநாகல், யாழ்ப்பாணம், மகாஇலுப்பள்ளம, வவுனியா, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகல போன்ற மாவட்டங்களிலும் கூடுதலான உஷ்ணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலநிலை அறிக்கைகளின்படி மேல் வளி மண்டலத்தில் முகில்கள் இல்லாமை, இக்காலங்களில் மழை இன்மை போன்றவை காரணமாக வெப்பம அதிகரிப்பு ஏற்படுகிறது.
மனித உடலுக்கு உஷ்ணம் உணரப்படுவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு மூல காரணம் கீழ் வளி மண்டலத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்வதாகும். இங்கு வெப்பம் கூடுதலாக உணரப்படுவது சாதாரண நிகழ்வாகும்.
ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் வாரமாகின்ற போது மழை கிடைக்குமாயின் காணப்படும் உஷ்ண தன்மை குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் தற்போது காணப்படும் உஷ்ணநிலை நாட்டின் கூடுதலான உஷ்ண நிலை எனக் கூற முடியாது.
இலங்கையில் அதிக வெப்பம் கிடைக்கப் பெற்ற ஆண்டு 1982 ஆகும். அது வவுனியாவில் 40.1 செல்ஸியஸாக காணப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும் காலநிலைக்கு சூரியனும் சந்திரனும் நேரடியாக பாதிப்புச் செலுத்துவதனால் உலகத்திலே காலநிலை வேறுபாடுகளுக்கு இவை தாக்கத்தை செலுத்துகின்றன.
நாம் வாழும் புவி முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கு (365) ஒருமுறை சூரியனை சுற்றி வலம் வருகிறது. இங்கு புவி பயணிப்பது 23 பாகை சரிவாக ஆகும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதி புவி சூரியனுக்கு அண்மிப்பதுடன் ஜனவரி மூன்றாம் திகதியாகும் போது புவி சூரியனுக்கு மிகவும் நெருக்கமாகின்றது. இந்த செயற்பாட்டின் பிரதிபலனாகத்தான் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் அதிகமான உஷ்ணம் ஏற்படுகிறது.
சூரியனுக்கு (150,000,000) பதினைந்து கோடி கிலோ மீற்றர் தூரத்திலேயே புவி அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட பாரிய தூரத்தில் புவி அமைந்திருப்பதனால் தான் இந்த இயற்கை வேறுபாடு நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபத்தோராம் திகதி சூரியன் மத்திய கோட்டுக்கு மேலால் பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது சூரியன் பயணிப்பது தெற்கு அரைக் கோளத்துக்கு சாய்வாகவாகும்.
இப்படி பயணிக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு ஆஜன்டீனாவுக்கு, வடஅமெரிக்காவுக்கு உஷ்ண தன்மை ஏற்படுவதோடு இந்த நிலை படிப்படியாக குறைவடைந்து சூரியன் வடக்குக்கு சாய்வடைந்து பயணிக்கின்ற நேரத்திலே இந்த நாடுகளுக்கு உஷ்ண தன்மை குறைந்து குளிர்த் தன்மை ஏற்படும்.
தற்போது இலங்கையில் காணப்படும் காலநிலை மாற்றத்துக்கு அதிக வெப்பத்துக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன. இதில் பிரதான காரணமாகவிருப்பது சூரியனைச் சுற்றி உள்ள கோள்கள் தூரப்பட்டிருப்பதாகும்.
சென்ற வருடங்களில் சூரியனோடு வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி. புதன் போன்ற கோள்கள் மிக நெருக்கமாக இருந்தன. இந்த நெருக்கம் மூலம் கூடுதலான வெப்பம் புவிக்கு வருவது கட்டுப்படுத்தப்படுகிறது.
என்றாலும் இவ்வாறு சூரியனைச் சுற்றி பயணிக்கும் கோள்களில் தாக்கம் (மாற்றம்) முழு காலநிலை தன்மைக்கும் தாக்கம் செலுத்துகிறது. சூரியன் இலங்கைக்கு மேலால் பயணிப்பது ஏப்ரல் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரையிலாகும்.
இதை சூரியன் உச்சம் கொடுக்கும் காலமென கூறுவர் இப்படி சூரியன் உச்சம் கொடுக்கும் போது கூடுதலாக சூரிய ஒளி புவிக்கு (விழும் போது) படும்போது கூடுதலான உஷ்ணம் ஏற்படுவது சாதாரணமாக ஏற்படும் விடயமாகும்.
நட்சத்திர விஞ்ஞானத்துக்கு ஏற்ப காரணிகளை ஆய்வு செய்து பார்க்கும் போது 2014ம் ஆண்டிலிருந்து காலநிலையில் பலவித வேறுபாடுகள் (மாற்றங்கள்) ஏற்பட ஆரம்பமாகி உள்ளது. மழை இல்லாத வரட்சி போன்ற காலங்கள் ஏற்பட மேற்சொன்ன சூரியனை சுற்றி வலம் வரும் அமைப்பும் தாக்கம் செலுத்துகின்றன.
சென்ற வருடம் இந்த நாட்களில் இந்த அளவு கூடுதலான உஷ்ணம் காணப்படாமைக்கு மூல காரணம் சென்ற வருடம் இடையிடையே மழை ஏற்பட்டமை என்றாலும் துரதிஷ்டவசமாக இவ்வருடம் இந்நிலை முற்றாக மாறிவிட்டது.
என்றாலும் உஷ்ணமான காலநிலை ஏற்படுவது இந்த வருடத்தில் மட்டும் அல்ல கடந்த காலங்களில் பெப்ரவரி மாதத்தில் தென்னை மர ஓலைகள் கருகி விழும் அளவுக்கு கடுமையான வரட்சி நிலவிய காலங்களும் வரலாற்றில் காணப்படுகிறது.
தென்னை மரங்களில் இருந்து ஒன்பது ஓலைகள் விழுவதனால் பெப்ரவரி மாதத்தை சிங்கள மாத முறைக்கு ஏற்ப நவம் மாதம் என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதிவரை நிலைக்கும் இந்த அதிக உஷ்ணதன்மை மனித உடலை பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதனால் சூரிய ஒளிக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய குடை மற்றும் பாதுகாப்பான உடை வகைகளை பயன்படுத்துவது நல்லது. இயன்றளவு பகல் வேளைகளில் பயணங்கள் செல்வதை தவிர்த்துக் கொள்வது வெட்ட வெளிகளில் விளையாட்டு மைதானங்களில் பகல் வேளைகளில் விளையாடுவது போன்றவற்றால் வெப்பத்தில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது. அங்குள்ள எலிகள் உணவு, உடை, ஏன், வீடுகளைக்கூட அரித்து சாப்பிடுகின்றன.
எலி கடித்ததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. பெஷாவரில் பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் அரை டொலருக்கு சமமான சன்மானம் வழங்கப்படும் என உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
ஆனால் இராணுவப் பகுதிகளில் அது மூன்று டொலராக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிகள் கிட்டத்தட்ட பூனையின் அளவுக்கு இருப்பதனால், பூனைகள் அவற்றை துரத்திப் பிடிக்க அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.