பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டத்ததை வழிநடத்திய இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவர் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா நகரின் மத்தியில் ஏ9 வீதியின் போக்குவரத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பௌத்த மதகுருமார், கலாபேபஸ்வேவ பாடசாலை அதிபர், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் உட்பட ஐவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழங்குபடுத்தியமை மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்டமை ஆகியவற்றின் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்கள் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்
இவ் வீதி மறிப்பு ஆர்ப்பாட்டம் மூலம் வவுனியா நகர வீதிகள் போக்குவரத்து நெருக்கடியேற்றபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகருக்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் பதிலளித்துள்ளார்.
டுவிட்டரில் அஸ்வினுடன் ரசிகர்கள் அடிக்கடி சீண்டி வருவதும், அவர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை ரசிகர் ஒருவர் அஸ்வினிடம், “நீங்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அஸ்வின், “உனக்கு கிரிக்கெட் பார்ப்பதை விட அதிக வேலைகள் இருக்கும். இது உனது குடும்பத்திற்கும் நல்லது தான். வாழ்த்துக்கள்” என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் அதே இலங்கை ரசிகர் மீண்டும் அஸ்வினுடன் தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டார்.
அந்த இலங்கை ரசிகர் “கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள், எனது நண்பர் கெய்ல் உங்கள் அனைவரையும் புரட்டி எடுக்கப் போகிறார், அரையிறுதியில் விளையாடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது” என்று கிண்டலடித்தார்.
இதற்கு அஸ்வின், “நீ இன்னுமா கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறாய், உன்னிடம் பேசினது எனது தவறு தான்” என்று பதிலளித்தார்.
அதற்கு அந்த ரசிகர், “நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் கெய்லுக்காக நாளை நான் போட்டியை பார்க்கப் போகிறேன். இந்திய வீரர்களின் தோல்வி முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கும்” என்றார்.
இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் அஸ்வின், “நாய் பிடிக்கும் வண்டி வரட்டும் உன்ன புடிச்சு கொடுக்குறேன். நாளைக்கு என்ன நடந்தாலும் எனக்கு கவல இல்ல“ என்று தமிழில் மிகவும் அநாகரிகமான முறையில் பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் டுவிட்டரில் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாகரிகமான முறையில் பதிலளித்து வருகின்றனர்.
ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாகரிகமான முறையில் பதிலளிப்பது மட்டுமன்றி ரசிகர்கள் முறையற்ற கேள்விகளை கேட்கும் பட்சத்தில் அதற்கு மிகவும் மிகவும் நாகரீகமாக பதிலளித்து தமது கண்ணியத்தை காப்பாற்றி வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ஒரே ஒரு தமிழ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பதுடன், இவர் தமிழில் அநாகரிகமான பதிலளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.
கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டாகும். இக் கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலும் கனவான்களாக நடந்துகொள்ளவேண்டியது மிக முக்கியமானதாகும்.
வவுனியா நகரில் சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் இடங்களில் ஏற்படும் நோய்கள் காரணமாக டெங்கு ஓழிப்பு நடவடிக்கையினை இராணுவமும் காவல்துறையினரும் பொதுசுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை ஆரம்பமான இந்த நடவடிக்கை நகரையும் நகரை அன்மித்த பகுதிகளிலும் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தந்தை செல்வாவின் 118வது ஜனன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினால் வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வவுனியா விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் அபிவிருத்தி நடவடிக்கை துரிதப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு நாளை மறுதினம் (ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று) கையளிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு வவுனியா நகரின் அபிவிருத்தி ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக பஜார் வீதி, புகையிரத நிலைய வீதி என்பன செப்பணிடப்படுவருகின்றது. இவ் அபிவிருத்தி தொடர்பாக காப்புறுதி ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..
யுத்த காலம் நிறைவடைந்து இது வரை செப்பணிடப்படாத இவ் வீதிகள் தற்போது ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு செப்பணிடப்படுவது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் இவ் அபிவிருத்தியினை ஜனாதிபதியின் வருகைக்கு முன் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
193 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்று இந்தியாவை வெளியேற்றியது.
கடைசி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜாவிடம் பந்தைக் கொடுக்க, 19 ஆவது ஓவரில் முதல் 4 பந்துகளில் 2 ஓட்டங்களையே கொடுத்தார் ஜடேஜா, ஆனால் அடுத்த பந்தில் ரஸல் நேராக சிக்ஸர் ஒன்றை விளாசினார். அதோடு இல்லாமல் கடைசி பந்தை பவுண்டரியுடன் முடிக்க அந்த ஓவரில் 12 ஓட்டங்களை சேர்த்தது மேற்கிந்தியத் தீவுகள்.
கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் கோலியிடம் கடைசி ஓவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் 2 பந்துகளில் 1 ஓட்டத்தைத்தான் கொடுத்தார், ஆனால், 3 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரஸல். பிறகு 4ஆவது பந்தை மிகப்பெரிய சிக்ஸர் அடிக்க அதுவே வெற்றி சிக்ஸராக அமைய மே.இ.தீவுகளின் கொண்டாட்டம் தொடங்கியது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனான சிம்மன்ஸ் 3 முறை தப்பிப் பிழைத்தார். ஒரு முறை அஷ்வின் பந்தில் பும்ராவிடம் பிடிகொடுக்க அது நோபோலாக அமைந்தது. மீண்டும் ஒரு முக்கியக் கட்டத்தில் பாண்டியா பந்திலும் பிடிகொடுத்தார். பிடியும் எடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் நோபோல் ஆனது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 192 என்ற இமாலய இலக்கை எட்டியது. இதில் கோலி ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு ஆட வந்த மேற்கிந்தியத் தீவுகளின் கெய்ல் (5), சாமுவல்ஸ் (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து. இருவரும் இணைந்து 10.1 ஓவர்களில் 97 ஓட்டங்களை விளாசினர்.
சார்லஸ் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதுவும் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து இறங்கிய ரஸல், சிம்மன்ஸுடன் இணைந்து அடுத்த 6.3 ஓவர்களில் 80 ஓட்டங்களை விளாசியதில் இந்திய அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, சிம்மன்ஸ் 82 ஓட்டங்களையும், அதிரடி மன்னன் ரஸல் 43 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்தம் 20 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அதாவது 146 ஓட்டங்கள் ஓடாமலேயே எடுக்கப்பட்டன. பவர் ஹிட்டிங் என்றால் என்ன என்பதை மே.இ.தீவுகள் நேற்று காண்பித்தது.
புவிகரன் இயக்கத்தில் மாணிக்கம் ஜெகன், தமிழினி நடிப்பில் துஷ்யந்தனின் கதையில் தயாராகி வருகிறது தெளிவு குறுந்திரைப்படம்
பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கதை அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இந்த குறுந்திரைப்படம் சன்சைன் டி ஹர்ஷி இசையில் Assistia நிறுவனம் தயாரித்துள்ளது
இக்குறுந்திரைப்படத்திற்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமராமல் விமானத்திலேயே ‘யோகா’ செய்ய வேண்டும் என அனைவரையும் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹவாய் மாகாணத்தில் உள்ள Honolulu என்ற நகரிலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் என்ற விமானம் பயணிகளுடன் ஜப்பானுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தென் கொரியா நாட்டை சேர்ந்த Hyongtae Pae(72) என்பவரும் அவருடைய மணைவியும் பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென அந்த நபர் இருக்கையை விட்டு எழுந்து விமானத்தின் பின்புறம் செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமருமாரு கெஞ்சியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். விமானக்குழுவினர் அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமர கூறியுள்ளனர்.
ஆனால், ‘எனக்கு இப்போது ‘யோகா’ செய்ய வேண்டும். என்னால் இருக்கையில் அமர முடியாது. என்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
நிலைமையை உணர்ந்த விமானிகள் அவசரமாக விமானத்தை திருப்பிக்கொண்டு புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று ஹவாய் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது பயணியின் வழக்கறிஞர் பேசியபோது, ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் 40வது திருமண ஆண்டை கொண்டாடுவதற்காக ஹவாய் வந்துள்ளனர்.
அதேசமயம், அவர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து விடுபடவே விமானத்தில் யோகா செய்ய முயற்சித்துள்ளார்’ என வாதாடியுள்ளார்.
எனினும், பிற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்கு நடந்துக்கொண்டது குற்றம். ஆகவே, பயணிக்கு 25,000 டொலர் ரொக்கப்பிணையில் விடுதலை செய்வதாகவும், அனுமதி இல்லாமல் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுகவில் இணைந்திருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் தங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பதுடன் சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதிமுக-வில் சீட் கேட்டு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர், இதில் நடிகர் வையாபுரி, ஆனந்தராஜ் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி போன்றோரும் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
இத்தனை ஆண்டு காலமும் பிரசாரம் மட்டும் செய்து வந்த செந்தில், இம்முறை விருகம்பாக்கம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளில் விருப்பமனு அளித்துள்ளார்.
அமைச்சர் வளர்மதியின் தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கேட்டு செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எம்.எல்.ஏவும் அமைச்சருமான வளர்மதி நம்பிக்கொண்டிருக்கின்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் சீட் கேட்டு பாடகி அனிதா குப்புசாமி மனு அளித்துள்ளார், இதேபோன்று கொளத்தூர் தொகுதியில் சீட் கேட்டு மனு செய்துள்ள நடிகர் ஜே.கே ரித்தீஷ் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கு முன்பு அதிமுக-வில் இருந்த எஸ்.வி.சேகர் மற்றும் ராதாரவி உள்ளிட்ட நடிகர்களுக்கு எம்.எல்.ஏவாக வாய்ப்பு கொடுத்து சட்டசபைக்கு அனுப்பியுள்ளதால், பலரும் தங்களுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்துக்கிடக்கின்றனர்.
கோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர் கெய்லின் அதிரடியை நிறுத்த டோனியிடம் கைவசம் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகக் கிண்ண இருபதுக்கு – 20 அரையிறுதிப் போட்டி தொடர்பில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சங்கா மேலும் தெரிவிக்கையில்,
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த டோனியிடம் கைவசம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா, இவர் ஓரளவுக்கு நல்ல வேகத்துடன் வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு பாணியை கொண்டிருப்பதால் இவரது பந்து வீச்சு ஒரு அச்சுறுத்தலே.
டோனி அஸ்வினை கிறிஸ் கெய்லுக்கு எதிராக ஆரம்பத்தில் பந்து வீச அழைப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும், கிறிஸ் கெய்ல் இடது கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஷிஷ் நெஹ்ரா, இந்தத் தொடரில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக வீசி வருவதால் இந்திய அணியிடம் போதியளவு பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இந்தத் தொடரில் கோலிக்கு எதிராக அனைத்து அணிகளும் பல்வேறு உத்திகளை கையாண்ட போதும் தோல்வியையே அடைந்தன.
அவுஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் கோலிக்கு அவர்கள் கொஞ்சம் நேரான திசையிலேயே பந்து வீசினர். ஆனால் அவர் அதனை மிட்விக்கெட் திசையில் பிளிக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். பின்னர் அடுத்த பந்தை கொஞ்சம் தள்ளி அகலப்பந்தாக வீசினர் அதனை கோலி பொயிண் திசையில் பவுண்டரி அடித்தார்.
எனவே விராட் கோலிக்கு பந்து வீசுவது தொடர்பில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சு வலுவானதல்ல. ஆனால் விராட் கோலிக்கு எதிராக அவர்களும் ஏதாவது திட்டம் வைத்திருப்பார்கள் என குமார் சங்கக்கார கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டப்போது குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
குறித்த பெண் பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த வேளையில், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று குறித்த பெண்ணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது மன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த பெண்ணின் நடவடிக்கைகள் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மன்றில் கூறுகையில், குற்றச்சாட்டுக்கள் பல இவருக்கு இருந்த போதும் மேற்படி பெண் தொடர்ச்சியாக கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார் என நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததால் அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, நீதவான் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தால் அதிர்ச்சியடைந்த பெண் அக்கணமே மன்றில் மயங்கி வீழ்ந்தார்.
இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.
கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அழகின் மீது அதிக அக்கறை உள்ளது. குறிப்பாக வெள்ளையாக அதிக ஆசை உள்ளது.
எனவே வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை வழிகளை படித்து முயற்சித்துப் பயன் பெறுங்கள்.
எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய் – இம்முறை கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க சிறந்த வழி. எலுமிச்சை சாற்றில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை மறைந்துவிடும்.
தேன் + பட்டைப் பொடி – தினமும் பட்டைப் பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 14 நாட்கள் செய்து வந்தால், உங்கள் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
புதினா + வெள்ளரிக்காய் சாறு – வெள்ளரிக்காய் சாறு மற்றும் புதினா சாற்றினை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தினமும் செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
லெட்யூஸ் + கரட் ஜூஸ் – லெட்யூஸ் மற்றும் கரட்டை சாறு எடுத்து ஒன்றாக கலந்து, கை, கால், முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, கருமை நீங்கி சருமம் நன்கு பொலிவடையும்.
சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர் – எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, பஞ்சைப் பயன்படுத்தி கை, கால், முகத்தை துடைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு பின் மோய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.
வவுனியா பூங்கா வீதியில் இருக்கும் இராணுவ விஷேட அதிரடிப்படையினர் வசமிருந்த நெற்களஞ்சியசாலையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.ரேகண புஸ்பகுமார இன்று பிற்பகல் பார்வையிட்டதுடன் விரைவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து இந்த நெற்களஞ்சியசாலையினை இராணுவ விஷேட அதிரடிப்படையினர் தமது வசம் வைத்திருந்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்திருந்தனர்.
விவசாய அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளிற்கு அமைய இக்களஞ்சியசாலையினை அமைச்சு உயர் அதிகாரிகளிடம, இராணுவ விஷேட அதிரடிப்படையினர் ஆகியோருடனும் தொடர்பு கொண்டு இக் களஞ்சியசாலையினை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாகவும் இக்களஞ்சியசாலையில் 3000 மெற்றிக்தொண் எடையுள்ள நெற்களை களஞ்சியப்படுத்த முடியும். அத்துடன் இரண்டு விசாலமான நெற்களஞ்சியசாலைகளாக இருப்பதினால் வவுனியா மாவட்டத்திலுள்ள நெற்களஞ்சியசாலைகளைவிட இக்களஞ்சியசாலை மிகப் பெரியது என்றும் இக் களஞ்சியசாலையை நாம் பெற்றுக் கொண்டுள்ளது எமக்குப் பெரும் உதவியாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
மற்றைய நெற்களஞ்சியசாலைகளுடன் ஒப்பிடுகையில் இக்கயஞ்சியசாலை மிகவும் நேர்த்தியான முறையில் நெற் களஞ்சியப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்களஞ்சியசாலையினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 565 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 29ஆம் திகதி ஆரம்பமான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது எதிர்வரும் 4ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பமாகி இரண்டு நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 2இலட்சத்து 15,000 அதிகமான இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கு 24 வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண்ணொருவரின் சடலம் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனைமடு பிரதேசத்தை சேர்ந்த பெண் (62) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் உறவினர்கள் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் 1992ம் அண்டு பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பல வருடங்களாக அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர் இறந்திருக்க கூடும் என நினைத்து உறவினர்கள் சமய சடங்குகள், தானம் போன்றவற்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.