பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ்.டிரெண்ட் செட் செய்த இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள்.இதில் தமன் தற்போது தென்னிந்தியாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இவர் பாய்ஸ் டீம் மீண்டும் 13 வருடம் கழித்து வெள்ளித்திரையில் இணையப்போகிறோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார்.இதன்படி அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் சித்தார்த்தும், நகுலும் நடிக்க தமன் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் பிரமாண்ட குரல் என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது .இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகராக இருந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இரண்டாம் இடம் பிடித்த ஃபரிதா இதுபற்றி கூறுகையில், அவர் பாடகர் என்பது எங்களுக்கு சில சுற்றுகளில் தெரியும்.அவர் ஏற்கனவே பின்னணி பாடகர் என்பதால் நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை என்று
ஏமாற்றத்துடன் கூறினார்.
தாயார் ஒருவர் தனது மகன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக தனது கணவர் இறந்த தகவலை மறைத்துள்ளார். நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (47), மனைவி மகேஷ்வரி ஆகியோர் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர்.
முத்துகிருஷ்ணன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த நிலையில், மகேஷ்வரி காந்திகிராம சுகாதார அறக்கட்டளையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுடைய மகன் விஸ்வாமணிகரன் 10ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று நடந்த ஆங்கில தேர்வுக்கு மகனை தயார் செய்ய நேற்று முன்தினம் மகேஷ்வரி விடுப்பு எடுத்துள்ளார்.அன்றைய தினம் காலை சாலை விபத்தில் சிக்கிய முத்துகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது குறித்து தகவல் கிடைத்ததும் அவருடைய மனைவி மகேஷ்வரி தன்னுடைய மகனிடம் நடந்தவற்றை சொல்லாமல் தேர்வுக்கு படிக்க சொல்லிவிட்டு மருத்துவமனையில் இருந்துள்ளார்.
தேர்வுக்கு நன்றாக படித்த மாணவன், தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு வந்து தந்தையின் நலம் குறித்து விசாரித்த போது தான் தந்தை இறந்த விடயத்தை மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.மகன் தேர்வு எழுத வேண்டும் என கணவர் விபத்தில் இறந்ததை மறைத்த பெண்ணின் செயல் பலரின் நெஞ்சையும் உருக்கியுள்ளது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் தென்னாபிரிக்க கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.
மலேசிய எயார்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.இந்திய பெருங்கடல் மீது பறந்த போது அந்த விமானம் திடீரென மாயமானது. எனவே அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்க கூடும் என அறிவிக்கப்பட்டது.
அதன் பாகங்களை தேடும் பணி நடந்தது. ஆனால் எதுவும் கிடைக்காததால் அதில் பயணம் செய்த 239 பேரும் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் பிரான்சின் ரீயூனியன் தீவில் விமானத்தின் இறக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றை அவுஸ்திரேலியாவின் நீர்மூழ்கி வீரர்கள் தென் இந்திய பெருங்கடலில் மீட்டனர்.
இதற்கிடையே தற்போது தென்னாபிரிக்காவின் தெற்கு கடற்கரை பகுதியில் கேப்டவுன் அருகே மொசல்பே நகர கடலில் ஒரு விமானத்தின் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.அது விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் இயந்திரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.இத்தகவலை மலேசிய போக்குவரத்து மந்திரி லியோவ் நியாங் லை தெரிவித்துள்ளார்.
இது மாயமான விமானத்தின் இயந்திரமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீபத்தில் மொசாம்பிக் கடலில் விமானத்தின் உடைந்த 2 பாகங்களை அவுஸ்திரேலியா மீட்பு குழு கண்டுபிடித்தது. அதுவும் மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி கிராம ஆற்றில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் எனவும் இவர் ஒரு மன நோயாளி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.தற்போது அந்த சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள வீதி பார்வை (Street View) இனைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பொலிசாரை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமொன்று நடைபெற்றுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Street View வசதியைப் பயன்படுத்தி பன்னல பிரதேச பொதுமக்கள் தங்கள் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் பெற்றுக் கொள்வது 360 பாகை சுற்றுப் பார்வை ஊடாக தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.
வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று 23.03.2016 புதன் பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
நேற்று காலை முதல் கிரியைகள் ஆலய பிரதமகுரு தலைமையில் ஆரம்பமாகி சுண்ணம் முதலியவை பாடப்பெற்று அம்பாள் தீர்த்தம் ஆடி பின்னர் யாகம் கலைக்கப்பட்டது. மாலையில் கொடிஇறக்க வைபவம் இடம்பெற்றது .
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று கையளிக்கப்படவுள்ளது.
வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி இதனை அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வித்தியாவின் பெற்றோர்களிடம் கையளிக்க உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வித்தியாவின் பெற்றோர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் விருப்பம் தெரிவித்த பிரதேசமான வவுனியாவிலேயே புதிதாக வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரின் ஒத்துழைப்புடன் வவுனியா கொக்எலிய பிரதேசத்தில் படைவீரர்களுக்கென 40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணி துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “நல்லிணக்க படைவீரர் கிராமம்” தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வரட்சியால் தேயிலைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையடுத்து நாடெங்கும் 53 தேயிலைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.காலி மாவட்டத்தில் 35 தொழிற்சாலைகளும், கண்டி மாவட்டத்தில் 12 தொழிற்சாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் 06 தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அத்தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் மந்த நிலையில் இயங்கி வருவதாகவும் வரட்சி தொடர்ந்து நீடித்தால் அவற்றை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அவ்வாறே கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இதேநிலை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாடெங்குமுள்ள அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாடெங்குமுள்ள வைத்தியசாலைகளுக்கு 18 ஆயிரத்து 200 வைத்தியர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்சமயம் 16 ஆயிரத்து 100 வைத்தியர்களே பணியில் இருப்பதாகவும், 3,078 விசேட வைத்திய நிபுணர்கள் தேவைப்படும் இடத்தில் 1,577 பேர் மட்டுமே உள்ளதாகவும், மொத்தமாக 1,600 பல் வைத்தியர்கள் பணி புரியும் போது பல் விசேட வைத்திய நிபுணர்கள் 60 பேர் மாத்திரமே சேவையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியர்களினதும் விசேட வைத்திய நிபுணர்களினதும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளயார் விகாரைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த நான்கு பேர் பலத்த காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.லிந்துலை பாமஸ்டன் பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கார் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான அறிக்கையினை சமர்த்திருப்பதாகவும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கான அதிகாரிகள் ஆகிய பதவிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பிரதமர் அலுவலகம் ஊடாகவே நிதி அமைச்சிக்கு இதற்கான பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவரான தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் திட்ட செயலாளர் சாந்த பண்டாரவினால் இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான விவரங்கள் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய கல்வி கலாசாலைக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் இடம் பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் தடவையாக பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களை கருத்திற் கொண்டு ஆசிரிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம் இம்முறை விஞ்ஞான பாட நெறிக்காக 3,700 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும் மாணவர்கள் பயிற்சிகளின் பி்ன்னர் குறித்த வலயங்களில் உள்ள பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
விஞ்ஞான பாடநெறிக்கான மாணவர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கைகள் ஜனவரி மாதத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
முகப்புத்தகம் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் முகப்புத்தகம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்ட வேளை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும் கோடீஸ்வரனாகவும் முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை நம்பி வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று குறித்த இளைஞனை சந்தித்த போது அந்த யுவதியிடம் இருந்த நகைகளை புதிதாக்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மற்றொரு யுவதியை ஏமாற்றி நகைகள் திருடுவதற்காக வவுனியாவுக்கு வந்த வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து யுவதிகளால் பறிகொடுக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன் அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
இதேவேளை குறித்த நபர் நெல் கொள்வனவு செய்து வரும் தனியார்களிடம் கூடுதலான விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக கூறி மில் உரிமையாளர்களிடம் அழைத்துச் சென்று அவற்றை இறக்கிவிட்டு மில் உரிமையாளர்களிடம் குறைந்த விலையில் பணத்தை பெற்றுக் கொண்டு அவற்றை நெல்லினை கொண்டு வந்தவர்களுக்கு கொடுக்காது தலைமறைவாகியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில்இ குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்ததுடன் சந்தேக நபரை நேற்று நீதிமன்றில் முற்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வவுனியாவில் மது போதையில் சென்ற இளைஞர் குழுவினர் வியாபார நிலையத்தில் நின்று கொண்டிருந்த மீன் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மறவன்குளம் மதுபான நிலையத்தில் சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு அவ்வீதியிலிருக்கும் வியபாபர நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு மீன் விற்பனையில் ஈடுபட்டுவிட்டு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த இரண்டு மீன் வியாபாரிகளிடம் மோட்டார் சைக்கிலில் மதுபேதையில் வந்த மூன்று பேரடங்கிய இளைஞர்; குழுவினர் மீன் வியாபாரிகளிடம் தகாத வார்த்ததைகளினால் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் மீன் வியாபாரிகளின் தர்க்கத்தில் ஒரு மீன் வியாபாரி மீது இளைஞர்கள் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் தலையில் படுகாயமடைந்த மீன் வியாபாரி நிசாந்த் 28 வயது உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.