தாமரைக் கோபுர கட்டுமான பணிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நிறைவு பெறும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் தெற்காசியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக தாமரைக் கோபுரம் காணப்படும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் கட்டுமான பணிகளை பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்ததை விடவும் மேலதிக நிதி தேவைப்படுமென சுட்டிக்காட்டிய ஆணையாளர் அதற்கான நிதியை வழங்க சீன அரசு வழங்கவில்லை என தெரிவித்தார்.
350 மீட்டர் உயரமான தாமரை கோபுரமானது தொலைதொடர்பு மற்றும் அவதானிப்பு பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் தெரிவுக் குழு தொடர்பில், தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்மறையான கருத்துக்கள் குறித்து ஆராய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் பிரதானி கபில விஜேகுணவர்த்தனவால், அரவிந்தடி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய தெரிவுக் குழு தொடர்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
எனினும், விஜேகுணவர்த்தனவின் இந்த கருத்து தவறான புரிதல் மற்றும் வழிநடத்தல்கள் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து, பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சிலபகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், இருநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான அழகிய இளம்பெண்களை கைது செய்து அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களில் சிலர் 12 வயதுக்கும் உட்பட்ட சிறுமியர் என தெரியவந்துள்ளது. சுழற்சிமுறையில் ஒரு முகாமில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பப்படும் இந்தப் பெண்கள், களத்தில் இறங்கி போரிட்டுவரும் தீவிரவாதிகளின் உடல்பசியை தீர்க்கும் விருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது எனக்கருதி, தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களுக்கு வாய்வழியாக உடகொள்ளும் மாத்திரைகளாகவும், ஊசிமருந்துகளாகவும் கருத்தடை மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தப்பித்தவறி, யாராவது கருத்தரித்து விட்டால் உடனடியாக மருத்துவரை வைத்து கருச்சிதைவு செய்யப்பட்டு, அதே பெண்கள் மீண்டும் வழக்கமான சேவைக்கு அனுப்பப்படுவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அமெரிக்க நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
T20 உலகக்கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, மலிங்கவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
கடந்த 9ம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய ஓமான் அணியின் முனிஸ் அன்சாரி அயர்லாந்து அணியின் 3 முக்கிய முன்வரிசை வீரர்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்தப் போட்டியில் ஓமான் 2 விக்கெட்டுகளால் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முனிஸ் அன்சாரியின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பிறந்த முனிஸ் அன்சாரிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஓமான் அணிக்காக விளையாடி வருகிறார்.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பிரதான நீர் தேக்கங்கள் மற்றும் நீர் மூலங்கள் வற்றிப் போயுள்ளதால் குடிநீரை சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டுமென்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலவுகின்ற குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பவுஸர்கள் மூலமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றன.
எனினும் அவ்வாறு விநியோகம் செய்கின்ற நீர் போதுமான அளவில் இல்லை என்று பிரதேநவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பிரதான நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மலர் தொடர்பில் விசேட குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே புதிய மலர் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேசிய உயிர் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய மலரான நீலோற்பலம் தொடர்பில் இணையத்தில் தவறான நிழற்படங்களும் விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பணிப்பாளர் நாயகம் பத்மா அபேகோன் தெரிவித்தார்.
இலங்கையில் 40,000ம் ரூபாய்க்கு குறைவான சம்பளம் பெறும் தனியார் ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கேற்ப தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் கடந்த பத்து வருடங்களாக அதிகரிக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், 2005ஆம் ஆண்டுதான் இறுதியாக தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வை கொடுக்க தனியார் நிறுவனங்கள் தவறினால் அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை கொடுக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் தண்டப் பணம் விதிக்க முடியுமென்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதனிடையே இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மாத சம்பளத்தில் 2500 ரூபாய் கிடைக்கவுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு பெருந்தோட்டத் துறையினருக்கும் கிடைப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களின் சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்கிறார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜா.
இந்த சம்பள அதிகரிப்புக்கும் ஏற்கனவே கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கள் முன் வைத்துள்ள நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தொடர்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறைக்கு மாத சம்பள அதிகரிப்பு 2500 ரூபாய் முழுமையாக கிடைத்தாலும் அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக பெற வாய்ப்புகள் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது அவர்கள் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களை கருத்தில் கொண்டே மாத முடிவில் சம்பளம் வழங்கப்படுறது.
இதன் காரணமாக நாளொன்றுக்கு ரூபா 100 என்ற அடிப்படையிலே இந்த சம்பள அதிகரிப்பு அவர்கள் சென்றடையும் எனக் கூறப்படுகின்றது.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரை அவர்கள் கூட்டு ஓப்பந்தத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் தனியார் துறை என்ற வரையறைக்குள் இல்லை.
தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு உட்பட, அவர்கள் நலன்கள் பேணும் வகையில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையில், இரு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஓப்பந்தம் கைச்சத்திடப்படுகிறது.
இறுதியாக செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியாகி ஒரு வருடமான நிலையில், அது இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டே தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்பு இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
6வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மார்ச் 15ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் அணி இந்தியா வருவதை தாமதித்து வந்தது. இந்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து நேற்று மாலை கொல்கத்தா வந்தடைந்தது பாகிஸ்தான்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சாகித் அப்ரிடி, “இந்தியாவில் விளையாடும் போது எனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி அளவுக்கு மற்ற இடங்களை விட அதிகம். என் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் இருக்கிறேன். இந்தியாவில் எனக்கு கிடைக்கும் அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன்.
இந்தியாவில் எங்கள் மீது காட்டப்படும் அன்பானது, பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யார் அழுத்ததை சமாளித்து ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும்” என்று அப்ரிடி தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 7 ரூபாய் 20 சதத்தால் நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக 1 இறாத்தல் பாணின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் மார்ச் 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியை வாடிக்கையாளர் வாரமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அனுஷ்டிப்பதால் இந்த பாணின் புதிய விலையானது அடுத்த வாரமே அமலுக்கு வரும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் கட்டாயமாக பாணின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்
தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று தடவைகள் நாடுபூராகவும் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியவுடன் குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் செல்வி T.தர்சிகா தலைமையில் நேற்று (12.03.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக நெளுக்குளம் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பகுதிக் கிராம சேவையாளர் திரு.கணேசலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் திருமதி.கிசோர் சுகந்தி, சனசமூக நிலையத் தலைவர் திரு.அற்புதராசா மற்றும் ஒய்வுபெற்ற தபால் அதிபர், அயல், முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக அவர் கருத்து எதுவும் வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதியும் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாகவே அப்போது மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மின்சார சபையினர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ரவீந்திரன் குடும்பத்துக்கு 25 இலட்சம் இந்திய ரூபாய்களை இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) வலியுறுத்தியுள்ளது.
அவரது இறப்பு தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் அகில இந்திய மக்கள் மேடை அமைப்பு சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இக்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து குழுவின் அமைப்பாளர் ஆர்.முரளி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அகதிகள் முகாமில் இருப்பவர்கள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆஜராக வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரனின் மகன் பிரதீபன் (13), ஹீமோபிலியோ நோயால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பின்போது மருத்துவமனையில் இருந்து பிரதீபனை அழைத்து வரஇயலவில்லை.
நிலையை எடுத்துக் கூறியும், அரசு மருத்துவர் தொலைபேசியில் பேசியும் வருவாய்த் துறையினர் ஏற்கவில்லை. அவரது பெயரை நீக்கிவிடுவோம் என வருவாய்த் துறையினர் கூறிய காரணத்தால் மனமுடைந்த ரவீந்திரன் உயர்அழுத்த மின்கம்பி ஏறி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது குடும்பத்துக்கு அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பிரதீபனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களது விருப்பத்தை அறிந்து அகதி என்ற நிலையை மாற்றி இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக அகதிகள் முகாம் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் இருக்கும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தங்கொடுவ பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட வேன் ஒன்றில் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாகதுர பகுதியைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் தங்கொடுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பின்னர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் பணிப்புரையின்படி, மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, நேற்று அப் பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கப்பம் பெறுவதன் நிமித்தமே இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, நேவி கபில எனும் குறித்த வேனின் சாரதி அணிந்திருந்த தங்க சங்கிலி அவரது மனைவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, நேவி கபிலவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பன்னல பொலிஸில் அவருக்கு எதிராக இரண்டு பெண்கள் துஷ்பிரயோக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்
எதுஎவ்வாறு இருப்பினும் ஏனையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.