பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த விமானம்.
விமானத்தில் பயணம் செய்த பிரித்தானிய பயணி ஒருவர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கலாட்டா செய்ய துவங்கியுள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அவர், ஒரு கட்டத்தில் தனது காதலியை பிடித்து தள்ளி விட்டுள்ளார்.மேலும் மது போதையில் இருந்த அவர் விமானம் 30,000 அடி உயரத்தில் பறப்பதை அறியாமல் அவசர கதவினை திறக்க முயன்றுள்ளார்.இதனையடுத்து சக பயணிகள் அவரை மடக்கி பிடித்ததுடன் குண்டுகட்டாக தூக்கி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையுடன் பிணைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விமானிகள் உடனடியாக Bordeaux விமான நிலையம் நோக்கி விமானத்தை செலுத்தியுள்ளனர்.இந்நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த பிரான்ஸ் பொலிசார் பிரித்தானிய பயணியை விமானத்தில் இருந்து இழுத்துச்சென்றுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் செயல் சக பயணிகளுக்கு நேர விரயத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட நபருடன் பயணம் செய்த பெண் அவரது செயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் மது விலக்கு வருகிற ஏப்ரல் 1ம் திகதி முதல் தீவிரமாக அமுல்படுத்தப்பட இருப்பதாகக் கூறினார்.
நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில், சாராயம் விற்பதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சியதாக யாராவது பிடிபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி தீவிர பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடிப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துச் சொல்கின்றனர். மேலும் மாநிலத்தில் உள்ள 72 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களிடம் உறுதி மொழிப்பத்திரம் கொடுத்து, அதில் மது அருந்த மாட்டோம் என பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி கூறி இருக்கிறோம்.
இதுதவிர குடிப்பழக்கம் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். போதை மறுவாழ்வு இல்லம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒன்றாவது இருக்க வழிவகை செய்யப்படும். உழைத்து சம்பாதிக்கும் பணத்தை கிராமத்தில் உள்ளவர்கள் குடிப்பதற்காக செலவிடுவதால் குடும்பமே சீரழியும் நிலை உள்ளது என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இலங்கை T20 அணியின் தலைவர் பதவியை ஏற்க தான் மனரீதியாக தயாராக இல்லை என்று அஞ்சலோ மத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை T20 அணியின் தலைவராக இருந்த மலிங்க, காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றார். இதனால் எதிர்வரும் T20 உலகக்கிண்ணத் தொடரில் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கிரிக்கெட் சபைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவரான மத்யூஸ் T20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து மத்யூஸ் கூறுகையில், “சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணிக்கு தலைவராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு. இதனால் மலிங்க, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், என்னை T20 அணியின் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி கூறினார்கள்.
ஆனால் நான் மனரீதியாக தலைவர் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை. இருப்பினும் என்னால் மறுக்கவும் முடியவில்லை. தவிர, எனது அணியோ அல்லது தேசமோ பின்னடைவுக்கு தள்ளப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்த முழு முயற்சியை வெளிப்படுத்துவேன்.
தற்போது இந்த உலகக்கிண்ண தொடருக்கு மட்டும் தலைவராக இருக்க சம்மதித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு நாட்டில் துபாய்,அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது.
கன மழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பாடசாலைகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
வீதிகளில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் பேய்க் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.
தொடரும் மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், இணைய பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
அடுக்குமாடிகள், நட்சத்திர விடுதிகள் எல்லாம் காற்று மழைக்கு தாக்குபிடிக்கமுடியாமல் ஜன்னல்கள், கதவுகள் உடைந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.
கனமழை காரணமாக கடந்த நாளின் 7 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளது என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மக்களின் தங்க நகைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு இரண்டு வாரங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் நேரடியாகக் கேள்வி கேட்கும் நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்ட கேள்விக்கே பிரதமர் இப்பதிலை வழங்கினார்.
விடுதலைப் புலிகளின் வங்கிகளில் வட பகுதி மக்களால் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை இராணுவம் கைப்பற்றியது. அத்தொகை எவ்வளவு? தேர்தல் காலங்களில் சிலருக்கு தங்கம் மீள கையளிக்கப்பட்டதே என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலை புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் 150 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தொகையில் கட்டம் கட்டமாக மத்திய வங்கிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இத் தங்கத்தின் பெறுமதி 131 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். அத்தோடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பொது மக்களுக்கு மீளக் கையளிக்கப்பட்ட தங்கம் தொடர்பில் முரண்பாடான தகவல்களே உள்ளன. இது தொடர்பில் அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து விரைவில் இச் சபைக்கு அறிவிக்கின்றேன். தற்போது தங்கத்திற்கு சொந்தமானவர்கள் பலரை அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் விபரங்களை தெரிந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க,பிரதமர் அனைத்து கேள்விகளுக்கும் குழு அமைத்து விசாரணை என்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகின்றார்.
மக்களின் தங்க நகைகளை மீளக் கையளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே இராணுவத்திடம் தற்போதுள்ள தங்க நகைகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்-கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் தேடிப் பார்க்க போனால் நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடும். அத்தோடு குழுக்கள் அமைத்து தேடிப் பார்ப்பதற்கு காலம் எடுக்கும். எனவே தான் எம்மிடமுள்ள தகவல்களை வழங்குகின்றோம். அதற்கமைய பாராளுமன்றம் உண்மைகளை கண்டறிய வேண்டும். அதனை கண்காணிப்பு குழுக்களும் நிலையிற் குழுக்களும் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட அனுர திஸாநாயக்க எம்.பி.
150 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் 30 கிலோ மீளக் கையளிக்கப்பட்டதாகவும் 80 கிலோ இராணுவத்தினரிடம் இருப்பில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.அப்படியானால் 40 கிலோ கிராம் தங்கம் குறைகிறது. இதற்கு என்ன நடந்தது என்பதை தேடிப் பார்க்க வேண்டியது அரசின் கடப்பாடாகும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் இராணுவத்தினர் எனக்கு வழங்கிய அறிக்கை பிரகாரமான விபரங்களையே சபையில் அறிவித்தேன். எனவே உங்கள் கேள்விக்கு முழுமையான தகவல்களை பெற்றுக் கொண்டு பதிலளிக்கின்றேன்என்று கூறினார்.
அநுர திஸாநாயக்க எம்.பி. மேலும்தெரிவிக்கையில், வட பகுதி மக்களின் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைத்து அதற்கான ரசீதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.அந்த ரசீதுகள் மக்களிடம் உள்ளன அது மட்டுமல்லாது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் பொதி செய்யப்பட்ட பொதிகளில் புலிகளின் ரசீதுகள் தொடர்பான “டக்” இணைக்கப்பட்டிருந்தது.எனவே உரிமையாளர்கள் யாரென்பதை அடையாளம் காண முடியும் என்றார். இதன்போது சபையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரன்;
விடுதலை புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பான ரசீதுகள் மக்களிடம் உள்ளன. அத்தோடு நானும் அவ் வங்கியில் தங்கம் அடகு வைத்துள்ளேன் என்னிடமும் ரசீது உள்ளது என்று தெரிவித்ததோடு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான வர்த்தகர்களின் வாகனங்கள் பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமாகியுள்ளன. இவர்களுக்கும் நியாயத்தினை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்- தங்க நகைகள் மக்களுக்கு மீளக் கையளிப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்இ மத்திய வங்கி ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யினர் சந்தித்து பேச்சுக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். அத்தோடு வடமாகாண மக்களின் வாழ்வதாரத்தை மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும் என்றார்.
விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன்.உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி விக்கிப்பீடியாவில் பதியும் வசதி செய்து தரப்பட்ட போது, தமிழ் மொழிக்காக இணையத்தில் குதித்தவர் மயூரநாதன்.இலங்கைத் தமிழரான இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார்.
விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. ஆனால், தமிழில் அதற்கான ஆரம்ப முயற்சிகூட அப்போது இல்லை. எல்லா மொழி விக்கிப்பீடியா திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவில் இயங்கும் விக்கிமீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருந்தது.
அவர்களின் நோக்கத்தை முழுமையாகப் படித்து அறிந்தேன். பிறகு, தமிழில் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கான அடிப்படை மென்பொருட்களைத் தேர்வு செய்வதுடன் சில அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணிகளையும் செய்தேன்.
முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏறத்தாழ தனியாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்துவந்தேன். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் சுந்தர், ரவி, நற்கீரன், சிறீதரன், சிவகுமார், பேராசிரியர் செல்வகுமார் போன்ற பலரும் இணைந்தனர்.
நான் மட்டும் இதுவரை சிறிதும் பெரிதுமாக 4,300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்துள்ளேன். மேலும், பிற பயனர்கள் எழுதிய பல நூறு கட்டுரைகளை விரிவாக்கி யுள்ளேன். பல புதிய ஒளிப்படங்களையும் வரைபடங்களையும் உருவாக்கிப் பதிவேற்றியுள்ளேன்.
விக்கிப்பீடியா தமிழ் பக்கங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா, ஒரு மாதத்தில் 35 லட்சம் முறை பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு நாளில் ஒரு லட்சம் தடவைக்கு மேல் பார்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்து கின்றனர்.
விக்கிப்பீடியாவில் யாரும் எழுதலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. அதில் உண்மைத் தன்மையை எப்படிச் சரிபார்க்கிறீர்கள்?
யாரும் எழுதலாம் என்பது விக்கித் திட்டங்களின் அடிப்படைகளில் ஒன்று. அதன் வியப்பான வெற்றிக்கு இதுவே முக்கியக் காரணம். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் எவரும் பிழையான தகவல்கள் குறித்து, பிற பயனர்களின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் அல்லது அவற்றைத் திருத்தவோ, திருத்த முடியாததை முற்றாக நீக்கவோ முடியும்.
பொதுவாக விக்கிப்பீடியாவில் தகவல்களைச் சேர்ப் பவர்கள் எவரும் கட்டுரையில் அதற்கான சான்றுகளைத் தரவேண்டும். சான்றுகள் இல்லாத, ஐயத்துக்கு இடமான தகவல்களுக்கு அருகில் `சான்று தேவை’ எனக் குறிப்பு இடுவதற்கு வசதி உண்டு. நீண்டகாலம் சான்றுகள் சேர்க்கப்படாத, சந்தேகத்துக்கு உரிய தகவல்களை நீக்கலாம்.
சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்து, ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக இருக்கும் உரையாடல் பக்கங்களில் பிற பயனர்களுடன் கலந்துரையாடி மேலதிகத் தகவல்களைப் பெற முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் பல துறை சார்ந்த பங்களிப்பாளர்கள் இணையும் போது கூடிய அளவுக்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்ள முடியும்.
தமிழில் இதுவரை எத்தனை பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
சிறியதும் பெரியதுமாக ஒரு லட்சம் கட்டுரைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 36 புதிய கட்டுரைகள் உருவாகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, உயிரினங்கள், சமயம், கலைகள், புகழ்பெற்ற மனிதர்கள் என கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையிலானவை.
அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்படவேண்டும். இணையத்தில் இயங்கும் தமிழ் ஆர்வலர்கள், விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பை செயல்படுத்துவதன் மூலம், எதிர்கால தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லும் பணி இன்னும் எளிதாகும் இன்னும் விரைவாகும்.
மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது. இதனால் மவுசாகலை (பழைய நகர்) நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருந்த ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது வெளியே தெரிகிறது.வரட்சியான காலநிலை சென்று பழைய நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இந்த ஆலயம் நீரில் மூழ்கிவிடும்.
மலையகத்தில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதால் நீர்த் தேக்கங்களில் போதியளவு நீரின்றி காணப்படுகின்றது.மஸ்கெலியா மவுசாகலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென பலரும் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உலகின் அரியவகை நீல நிற திமிங்கலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை நோக்கி படையெடுப்பதாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.
நீலத் திமிங்கலம் என்பது உலகத்திலேயே மிகப்பெரிய பாலூட்டி விலங்காகும். இவை மிகவும் அரிதான உயிரினமாகும். இதன் நிறை சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கிலோகிராமாகவும் இதன் நீளம் 30 மீற்றர்களாகும்.இந்த விலக்கினம் தற்போது இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு விடயங்களை இதன்போது பகிர்ந்து கொண்டார்.
19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை அணியிலேயே குறித்த மூவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் 25 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் மலேசியாவில் இடம்பெறவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் இரு இருபதுக்கு – 20 போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.
மலேசியாவில் 9 நாட்கள் இடம்பெறவுள்ள இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இம் மூவரும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் இலங்கை தேசிய அணியில் இடம்கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.
12 வயதான தனது மகளை மூன்று வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், 52 வயதான ஒருவரை, கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம் – அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது தந்தையால் இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பில் குறித்த சிறுமி அயல் வீட்டுப் பெண்ணிடம் கூறியுள்ளதாகவும், இதனையடுத்து அந்தப் பெண் சிறுமியின் வகுப்பாசிரியரிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஆசிரியர் இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு கூறியதை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செயற்பட்ட பொலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். 2012ம் ஆண்டு தந்தை தன்னை முதன் முறையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், இதன்போது தாய் தந்தையுடன் முரன்பட்ட நிலையில் வீட்டைவிட்டு வௌியேறியிருந்ததாகவும் சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
பின்னர், தாய் தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார் எனக் குறிப்பிட்டுள்ள சிறுமி, எனினும் தாய் இரவில் உறங்கியதும், தன்னை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும், இதனை வௌியே கூறினால் கொன்று விடுவதாக சந்தேகநபரான தந்தை மிரட்டியதாகவும் சிறுமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடிக்குள்ளான ஒருவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெரிசாமி உலகநாதன் (56வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
எனினும் நேற்று முன்தினம் 4ஆம் விடுதிக்கு வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரனையினை மேற்கொண்டதுடன் சடலத்தினை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம் இன்று 09-03-2016 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16ம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை அதிகாலை 03.00 மணிக்கு கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, 35 வயது நிரம்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு மறைந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இல்லாமலேயே நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு, இன்று வழங்கப்பட்டது.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
பதினாறு வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம், 16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ உடல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக் கோவை கூறுகின்றது.
இந்த வழக்கில் சம்பவ தினத்தன்று அதிகாலை 03.00 மணிக்கு 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியை கடத்தி எதிரி ஆட்கடத்தல் குற்றம் புரிந்துள்ளார். அத்துடன் 16 வயதுக்குக் குறைந்த அந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பாலியல் வல்லுறவு குற்றத்தையும் புரிந்துள்ளார்.
விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா அபராதமும், விதிப்பதோடு, அபராதத்தைக் கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கின்றது.
பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீடு செலுத்த வேண்டும். தவறினால் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிசாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.
அதேபோன்று சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவில் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின்சார உற்பத்தி மொத்த மின்சார அலகுகளில் 25 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குடிநீருக்கு மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 780 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படுவதாக மின்சார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மகாவலி திட்டத்திற்கு உட்பட்ட நீர்த் தேக்கங்களின் நீர்மட்டமும் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கொத்மலை நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் 32 வீதமாகவும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 56 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை காசல்ரீ, மவுசாகலை மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த் தேக்கங்களினதும் நீர்மட்டத்திலும் துரித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்”.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 உடற்பயிற்சிகளும் உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்.
ட்விஸ்டர் க்ரஞ்சஸ் (Twister crunches)
இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.
அப்டாமினல் ஸ்ட்ரச் (Abdominal stretch)
தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும். மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும். சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும். எல்லா உடற்பயிற்சிகளும் செய்து முடித்ததும், இந்தப் பயிற்சியை கடைசியாகச் செய்யவும்.
வாலு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கிளப்பில் சேர்ந்து இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளிவந்தது.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது படி இந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால், ஹன்சிகா சமீபத்தில் ’நான் சிம்புவை காதலிக்கவே இல்லை.நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததால் வந்த வதந்தி தான் அது’ என கூறியுள்ளார்.