வவுனியா செட்டிகுளம் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கென ஒதுக்கப்பட்ட சுமார் 12 ஏக்கர் காணியொன்றை இராணுவத்தினர் சுவீகரித்திருந்தமையை எதிர்த்து அப்பிரதேச வாசிகளான முஸ்லீம் மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கிறார்கள்.
ஆரம்ப பாடசாலை மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றனவற்றினை அமைப்பதற்காக ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்த இந்தக் காணியைச் சுற்றி இராணுவத்தினர் இரவோடிரவாக எல்லை வேலிகளை இட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மதவாச்சி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் மக்கள், ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவ நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்ததுடன் “காணி அதிகாரம் இராணுவத்திற்கா, பிரதேச செயலகத்திற்கா”, “ஒதுக்கப்பட்ட காணி எமக்கா, இராணுவத்திற்கா” “காணி விடயத்தில் வடபகுதியில் இராணுவத்தினர் காட்டுமிராண்டித் தனமாக நடப்பது அரசிற்குத் தெரியாதா” என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிய போதிலும் பலனேதும் கிட்டாத நிலையில் அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் என்.கமலநாதன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் ஏ.அந்தோனிப்பிள்ளை மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்து காணியைப் பார்வையிட்டதுடன் இராணுவத்தினருடனும் கலந்துரையாடியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர், அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் இணைப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இரு வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்குவதாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகளும் பிரதேச செயலாளரும் உறுதி வழங்கியதையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.