நயன்தாராவின் காதலர் தின விருந்து!!

Nayanthara

பில்லாவில் நீச்சல் உடையணிந்து இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா தற்போது குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளுகிறார்.

இந்தியில் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது தமிழுக்கு ரீ-மேக்காகியுள்ளது. வித்யா பாலன் ரோலில் நயன்தாரா நடித்துள்ள இந்த படம், காதலர் தினத்தன்று (இன்று) திரைக்கு வருகிறது. மேலும், இது கதிர்வேலன் காதல் படமும், இதே நாளில் திரைக்கு வருகிறது.

இதையடுத்து காதலர் தினத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் வருகின்றன. காதலர்களுக்கு இந்த படங்கள் விருந்தாக இருக்கும் என பெருமையுடன் கூறுகிறார் நயன்தாரா.

 

இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!!

Cinemaபாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விகரமன் அறிவித்துள்ளார்.

இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பெப்சி தலைவர் அமீரும் அறிவித்துள்ளார்.

 

 

உன்னதமான சினிமா படைப்பாளியை இழந்துவிட்டோம் : கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை இரங்கல்!!

Balumahendraதமிழ்ச் சினிமாவின் உன்னத படைப்பாளியான இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவ்விரங்கல் செய்தியில்,

தமிழ் உணர்வாளர்களை, தியாகிகள் பலரை இந்த மண்ணுக்கு தந்த பெருமை மிகு எமது மண்ணின் மட்டக்களப்பின் கிராமமான அமிர்தகழி தந்த தனித்துவமான இந்திய திரை உலகால் முதல்நிலையில் மதிக்கப்பட்ட அல்லது இந்திய திரை உலகை வேறு திரை ஊடகங்கள் திரும்பி பார்க்கவைத்த திரை உலக மேதை இயக்குனர் பாலுமகேந்திராவின் மரணச் செய்திகேட்டு அதிர்ந்தோம்.

ஒரு ஒளிப்பதிவு கலைஞனாக தன் கலை வாழ்க்கையை தொடக்கிய இந்த கலைச்சிற்பி, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் என துறைசார் நிபுணத்துவத்துடன் விரிந்து அந்த துறைமூன்றிலும் இந்திய தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டார் என்பதிலிருந்து அவர் சினிமாவின் பிறவி என்பதை எவரும் உணர்வார்கள்.

மட்டக்களப்பில் பிறந்த பாலுமகேந்திரா 1974ம் ஆண்டு மலையாளபடமான நெல்லு படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இது தமிழன் ஆற்றலின் பெருமை. பாலுமகேந்திரா செதுக்கிய என்றும் அழகுகெடாத சினிமா சிற்பங்களான கோகிலா, அழியாதகோலங்கள், மூடுபனி, வீடு, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை எப்போதும் இரசிக நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் சினிமாவுக்கான வரங்கள்.

புதிய சினிமாக்காரன் படிக்கவேண்டிய புத்தகங்கள். பாலுமகேந்திரா என்ற ஈழத்து படைப்பாளியூடா பார்க்கின்றபோது அவன் வேரில் வேறுதளிர்கள் வீரியத்துடன் முளைக்காதா என்ற ஏக்கமும் எங்கள் நெஞ்சில் இருக்கின்றது.

இந்திய கலைத்தாய் யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற பண்புடன் வாரி அணைத்துக் கொண்டதற்கு இயக்குநர் பெருமை பாலுமகேந்திரா மிகச்சிறந்த உதாரணம்.

வாழ்வுக்கும் படைப்புக்கும் இடைவெளியற்று ஒரு இயற்கையான சினிமா பிறவியாக பாலுமகேந்திரா நம்மிடையே வாழ்ந்து சாதித்து மரணித்திருக்கிறார். அத்தகு நம் பெருமைக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்மைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகமான அறிவகமும் அதன் நிர்வாகிகளும் மற்றும் தமிழ் மக்களும் தமது இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

சமூக வலைத்தள நண்பர்களிடம் கவனமாக இருங்கள் : ஜனாதிபதி!!

Mahindaசமூக வலைத்தளங்கள் ஊடக அறிமுகமாகும் நண்பர்கள் மீது கடுமையான நம்பிக்கை வைப்பது துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாகக் கூடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை நேற்று மாலை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்காக அரசாங்கத்தினால் கொடுக்க முடிந்த மிகப் பெரிய சொத்து கல்வியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நகை திருடிய பெண் கைது!!

arrestedகாதலனின் மருத்துவப் படிப்புக்காக நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 10ம் திகதி இவரது வீட்டில் வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சவுமியா உட்பட, பலரிடம், பொலிசார் தனித்தனியாக விசாரித்தனர்.

அப்போது சவுமியா மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து சவுமியாவை பார்க்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து பொலிசார் விசாரித்தனர்.

இதற்கிடையில் கடந்த 11ம் திகதி மாலை முதல் 12ம் திகதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, பொலிசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம் இரவு 10 மணி வரை, பொலிசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன்,(26) பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்தோம். அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால் நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர் இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை பாஸ் செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால் ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம்.

சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த 10ம் திகதி காலையில் ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5 மணிக்கு, வழக்கம் போல் ஜெயகுமாரும் நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார்.

அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை 6.10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.

கதவை திறந்தே வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன் என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட பொலிசார், காதலர்களை கைது செய்தனர்.

 

ரயில் ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு!!

Trainரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு சில ரயிலிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று போயா விடுமுறை தினம் என்பதால் தூர இடங்களுக்குச் செல்லவென பயணிகள் கொழும்பு ரயில் நிலையத்தில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் பஸ் நிலையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில சமயம் ரயில் தாமதமானதால் பயணிகள் அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவங்களும் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்ரது.

மாத்தறை சென்ற ரயிலின் உதவி நேரக்கணிப்பீட்டாளர் மீது மொரட்டுவ ரயில் நிலையத்தில் வைத்து பயணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

விஜயகாந்தின் கேப்டன் பட்டத்திற்கு ஆபத்து!!

Vijayakanthவிஜயகாந்தின் அடைமொழியான கேப்டன் என்ற பெயருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது தேமுதிக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம், நடிகர் விஜயகாந்துக்கு, அவரின் திரைஉலக வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதனால் விஜயகாந்தின் ரசிகர்கள் அவரை கேப்டன் என்ற, அடைமொழியுடன் அழைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க தலைவராக, விஜயகாந்த் பொறுப்பேற்ற போது மரியாதை அடிப்படையில், நடிகர்களும், அவரை கேப்டன் என்றே அழைக்கத் துவங்கினர்.

நாளடைவில் விஜயகாந்த் என்பதை விட கேப்டன் என்ற அடைமொழியைச் சொன்னாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் நிலைமை உருவானது. அதனால் போஸ்டர்கள், கட்சி பேனர்கள், அறிக்கைகள் என அனைத்திலும் கேப்டன் என்ற பெயரே, மேலோங்கியது.

தேமுதிகவின் இணையதளம், விஜயகாந்தின் பேஸ்புக் போன்றவற்றிலும் கேப்டன் என்ற, அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கேப்டன் பதவி பெயரை அரசியல்வாதியான, விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ் தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.

இதுகுறித்து கண்ணன் கோவிந்தராஜ் கூறுகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது.

1950ல் இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி ராணுவ அதிகாரிகளே, கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவது, சட்டத்துக்கு முரணானது. எனவே, விஜயகாந்த் கேப்டன் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதே போல், விஜயகாந்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

என் கடிதத்திற்கு விஜயகாந்திடம்இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் இன்னும் ஒரு மாதத்துக்குள் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

 

காதலர் தினத்தில் இராணுவத்தின் வித்தியாசமான காதல் பரிசு!!

Valantineஉலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

2008 ஜுலை 25 ஆம் திகதி மாங்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கரொன்றை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நளின் குமார எனும் இராணுவ வீரர் காயமடைந்ததோடு இவரின் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னர் நளின் குமாரவுக்கு பெண் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் காணாமல் தொலைபேசியிலே காதல் செய்துள்ளனர்.

இருவருக்கும் நேரில் சந்திக்க அவகாசம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் தன் பார்வையை இழந்து அங்கவீனமுற்ற போதும் அவரின் காதலி அவரை கைவிடவில்லை.

இருவரும் திருமணம் செய்துகொண்டதோடு இவர்கள் நளினின் சிறிய வீட்டிலே வாழ்ந்து வந்தனர். இது குறித்து அறிந்த இராணுவ சமிக்ஞை படைப் பிரிவு தளபதி ஜெனரல் அபேசேகர இவர்களுக்கு தலாவ பகுதியில் வீடொன்றை கட்டியுள்ளதோடு காதலர் தினமான இன்று அதனை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்!!

Courtகுடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேச வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள உள்ளார். குறித்த வர்த்தகரின் மனைவியுடன், விமானப் பொறியாளர் தகாத உறவைப் பேணியதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப ஐக்கியத்தை சீர்குலைத்தமை, திருமண வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அநாகரீகமாக செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த விமானப் பொறியியலாளருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.

வர்த்தகரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஒன்றைப் பேணிய விமானப் பொறியியலாளர், ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்த போது அங்கு சென்ற வர்த்தகர் அவரைத் தாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்ததாகத் தெரிவித்து வர்த்தகர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன்படி குறித்த விமானப் பொறியியலாளர், குறித்த வர்த்தகருக்கு 150 லட்ச ரூபா நட்ட ஈடாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

 

முதல் மனைவி மிரட்டல் : பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்!!(படங்கள்)

திருவனந்தபுரத்தில் மீரா ஜாஸ்மினின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுள்ளது.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜாஸ்மினின் வீட்டில் இருவருக்கும் சார்பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் அனில் ஜான் நேற்று பரபரப்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நானும், பெங்களூரை சேர்ந்த இந்து மத பெண்ணும் திருப்பதியில் மாலை மாற்றிக் கொண்டோம்.

ஆனால் அது சட்டப்படி நடந்த திருமணமல்ல. பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது. நடிகை மீரா ஜாஸ்மினுடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்த அந்த பெண், திருமணத்தை தடுத்து நிறுத்த போவதாக கூறி மிரட்டி வருகிறார்.

எனவே, எனது திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதையடுத்து திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் நடந்தது.

இதில் நடிகர்கள் ஜெயராம், திலீப், நடிகை காவ்யா மாதவன், அரசு தலைமை கொறடா ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 2 மணிக்கு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

m1 m2 m3 m4 m5

 

 

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மௌனிகாவால் பரபரப்பு!!

Mounika

பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மௌனிகா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மௌனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மௌனிகாவே அதில் பிரதான நாயகியாக நடித்தார். மேலும் மௌனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மௌனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா அங்கு ஒரு பெரும் பிரச்சினையே செய்துவிட்டார்.

மௌனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில் மௌனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை.

 

திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம் : கதறி அழுத பாரதிராஜா, பாலா!!

நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74. ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1977ம் ஆண்டு கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது.

ஆர்ப்பாட்டமில்லாத அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.

சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும் அதை வென்று தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.

இந்நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

b1 b2 b3 b4 b5 b6

 

 

ஆபாச பாடல் விவகாரம் : கைதாகிறார் அனிருத்?

Aniruthகுறுகிய காலத்தில் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் அனிருத். அதே அளவுக்கு தனது பெயரையும் கெடுத்துக் கொண்டவர்.

தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை இணையத்தில் கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது தானே இசை அமைத்து பாடிய அல்பம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் இசை அமைப்பாளர் அனிருத் பெண்கணை இழிவாக சித்தரிக்கும் பாடல்களை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் கமிஷனரிடம் புகார் கூறினார். ஆனால் பொலிசார் இந்த புகார் மனுவை கண்டுகொள்ளவில்லை.

ஜெபதாஸ் பாண்டியன் விடவில்லை. இந்த புகாரை நேரடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். மனுவை விசாரித்த நீதிமன்றம். அனிருத் மீது வழக்கு பதிவு செய்யுமாறு பொலிசுக்கு உத்தரவிட்டது. தற்போது சைபர் கிரைம் பொலிசார் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இதனால் அனிருத் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கிடையில் அனிருத்தின் தந்தை தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் பெற தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். இன்று கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம். அனிருத்துக்கு முன் ஜாமீன் கிடைக்கலாம். அப்படி கிடைத்துவிட்டால் அனிருத் கைது செய்யப்பட மாட்டார். ஆனால் விசாணைக்கு வரவேண்டியது இருக்கும் என்று கூறுகிறார்கள்.

 

காதலிக்கு குறுஞ் செய்தி அனுப்பிவிட்டு காதலன் தற்கொலை!!

Hangதற்கொலை செய்து கொள்ள போவதாக காதலிக்கு குறுஞ் செய்தி அனுப்பி அறிவித்த காதலன், தனது வீட்டிற்குள் சேலை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தப்பளை கொங்கொடி தோட்டத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 11ம் திகதி வீட்டில் எவரும் இல்லாத சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்துள்ள பொலிஸார் கூறினர்.

குறித்த இளைஞர் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்புக்கு தொழில் தேடி சென்றுள்ளதுடன் அங்கு ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.

பெண் வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக 10 நாட்களுக்கு முன்னர் தனது சொந்த இடத்திற்கு திரும்பியதாக இளைஞரின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தோட்டத்தில் வேலை முடிந்து மாலை 4 .30 அளவில் வீட்டுக்கு திரும்பிய போது தனது மகன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.

 

பாலு மகேந்திராவின் நிறைவேறாத ஆசை!!

Balumahendra

முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது. பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது.

தமிழ் திரை இரசிகர்களுக்கு இயக்குநர் பாலமகேந்திராவின் மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. காலம் காலமாக அவரது படங்களை தவம் போல பார்த்து வந்த இரசிகர்களுக்கு அவரது மரணம் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கண்களை மூடிய அந்த மாபெரும் கலைஞனோடு,அவரது நிறைவேறாத கனவும் சேர்த்து உறங்கி விடக் கூடாது.

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இயக்குநராக மட்டுமல்லாமல், பரீட்சார்த்த முயற்சிகளை மிக அழகாக செய்த முக்கியமானவர்களில் மகேந்திராவும் ஒருவர். அவரது படங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அவ்வளவு இருக்கிறது அவற்றில்.

இப்படிப்பட்ட மகா கலைஞனான பாலு மகேந்திராவின் மனதில் நீங்காத ஒரு ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறாமலேயே போயுள்ளது. அதுதான் திரைப்படங்களுக்கான ஒரு ஆவணக் காப்பகம் அமைப்பது.

கடந்த 3 வருடங்களாகவே இதுகுறித்துப் பேசி வந்தார் பாலு மகேந்திரா. ஆனால் அதைக் கேட்கத்தான் யாரும் இல்லாமல் போய் விட்டார்கள். எந்த பேட்டியாக இருந்தாலும் இதுகுறித்து பேசிக் கொண்டிருப்பார் பாலு மகேந்திரா.

இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் 3 வருடமாக இது பற்றிப் பேசி வருகிறேன். ஆனால் யாரும் ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாதிச் செலவை அரசும், மீதிச் செலவை திரையுலகமும் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூட கூறினேன்.
ஆனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர்.

படம் செய்தோமா, ஓட்டினோமா, காசு பார்த்தோமா என்று பலரும் ஓட ஆரம்பித்து விட்டனர். இது துரதிர்ஷ்ட வசமானது. எடுத்த படத்தை ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

ஒரு படத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் அதை பல காலத்திற்கு பத்திரப்படுத்த முடியும். மேலும் நெகட்டிவ்களை பாதுகாக்க வேண்டும். இன்று பல அருமையான பிரமாண்டமான படங்கள் நம்மிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், நெகட்டிவ்கள் இல்லாமல் போனதால் என்று கூறியிருந்தார் பாலு மகேந்திரா.

கோடிக்கணக்கான ரூபாயை நடிகர்களின் சம்பளத்திற்காகவும், இன்ன பிறச் செலவுகளுக்காகவும் திரைத்துறையினர் செலவழிக்கையில், அப்படத்தின் நெகட்டிவ் குறித்து அக்கறை காட்டுவதில்லையே என்றும் பாலு மகேந்திரா வருத்தம் தெரிவித்திருந்தார்.

கடைசி வரை அவரது வருத்தம் மாறவே இல்லை. அந்த வருத்தத்துடனேயே இந்த மூடுபனி இந்த உலகை விட்டு விலகியுள்ளது.

 

கிளிநொச்சியில் தேவைகளை பூர்த்தி செய்த பின் நீரை யாழுக்கு கொண்டு செல்லுங்கள் : பா.உ. சி.சிறிதரன்!!

Sritharan

யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை கிளிநொச்சியில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என்றே சொல்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர உள்ளதாகவும் அதனை கிளநொச்சி மக்கள் எதிர்ப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இரணைமடு குளத்து நீர் கிளிநொச்சிக்கே போதாது உள்ளது.

அந் நீரினை கொண்டு இப்பொழுது 8 ஆயிரம் ஏக்கர் விவசாயமே செய்ய முடிகிறது. அதனை 16 ஆயிரம் ஏக்கராகவோ 24 ஆயிரம் ஏக்கராகவோ விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் சேகரித்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லாம்.

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை தண்ணீர் பற்றாக்குறை உண்டு என யாருமே இதுவரை கூறவில்லை. யாழ்ப்பாணத்தில் காணப்படும் நன்னீர் நிலைகளை பாதுகாத்து சீரமைத்தாலே யாழ்ப்பான தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இதுவரை ஆழமே காணப்படாத நிலாவரை கிணறு, வழுக்கையாறு மற்றும் இடியுண்டு குளம் ஆகியவற்றை புனரமைத்து நன்னீர் ஆக்கலாம். அதேபோல தொண்டமனாறு அரியாலையில் உள்ள நன்னீர் தடுப்பு சுவர்களை புனரமைப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம்.

இவ்வாறு யாழ்ப்பாண நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யாமல் யாழ்ப்பாண உணவு களஞ்சியமான கிளிநொச்சி விவசாயத்தை அழித்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கின்றார்கள்.

கிளிநொச்சியில் பாரிய தண்ணீர் பிரச்சினை உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பிரதேசத்தில் வாழும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்னீர் இல்லை. அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இன்னும் சில கிராமங்களுக்கு நன்னீர் இல்லை விவசாயத்திற்கு நீர் போதாமல் உள்ளது .

அதுமட்டுமின்றி இம்முறை மழைவீழ்ச்சி போதாமையால் இரணைமடு குளத்தில் 15 அடி தண்ணீரே சேகரிக்கப்பட்டுள்ளது. இது இம்முறை சிறு போக நெற்செய்கைகே போதாது.

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்ட பின்னர் கோடை காலத்தில் குளத்தில் நீர் இல்லாத போது பயிரா? உயிரா? என்ற பிரச்சினை உருவாகும். பின்னர் இந்தியாவில தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் உள்ளது போல இங்கும் பிரச்சினைகள் உருவாகும்

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் மற்றும் அச்சுவேலியில் போத்தல்களில் தண்ணீர் அடைத்து விற்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் தட்டுப்பாடு என கூறி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயல்கிறார்கள்.

எனவே எமது சுதேசியம் அழிக்கப்பட்டு பல்தேசியம் ஊடுருவ வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.