மலையாள படமான த்ரிஷ்யமின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக மீனா வேண்டாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்துவிட்டாராம்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை எடுத்த ஜீத்து ஜோசபே அதை தமிழில் கமலை வைத்து ரீமேக் செய்கிறார். த்ரிஷ்யம் படத்தில் மீனா இரண்டு பெண்களின் அம்மாவாக, இல்லத்தரசியாக நடித்திருந்தார்.
அவரது நடிப்பை பார்த்த அனைவரும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பாராட்டினர். மலையாளத்தை அடுத்து தமிழ் ரீமேக்கிலும் மீனாவே கதாநாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.
மீனாவும், கமலும் சேர்ந்து ஏற்கனவே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் மீனா வேண்டாம் என்று கமல் தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து அவருக்கு வேறு ஒருவரை ஜோடியாகப் போடுகிறார்களாம்.
கமல் அனைத்து தென்னிந்திய நடிகைகளுடனும் நடித்துள்ளார். ஆனால் அவர் நதியாவுடன் மட்டும் நடிக்கவில்லை. அதனால் தான் அவரை த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கமலுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில் கமல் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் அஜய் தேவ்கன் நடிக்கவிருக்கிறாராம். த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா தான் நடிக்கிறார். மீனா வெங்கடேஷுடன் ஜோடி சேர்வது இது முதல் முறை அல்ல.