இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் கஹவத்தை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தெஹிவளை, கவுடானை பகுதியில்அத்திடிய கால்வாய் ஊடாக செல்லும் நீரில் பெயின்ட் கலந்த நீரை விடுவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்வாயில் இரசாயனம் கலந்துள்ளதால் கால்வாய் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸ் சுற்றாடல் பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து சிவப்பு நிற பெயின்ட் பீப்பாயை அகற்றுமாறு சில தரப்பினர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, குறித்த பீப்பாய்களை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவை பொங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த பெயின்டுகளை கால்வாயில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கால்வாயில் சுமார் மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.
பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில்152 முல்லைத்தீவில் 137மன்னாரில் 98அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 306081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியாவில் 128585 பேரும் முல்லைத்தீவில் 86889 பேரும் மன்னாரில் 90607 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,3898 பொலிசார் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 107 முறைப்பாடுகள் தேர்தல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது.
இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாச மகளீர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸாக வெளியிட, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அவ்வகையில் தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.
ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் 2 தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், “அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த தம்பதியை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் நேற்று (11) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்தார்.
இதன் போது மோட்டார் சைக்கிளுடனும் மோதி, கிளுவை மரத்துடனும் மோதி விபத்து சம்பவத்துள்ளது. உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
காதலன் கைவிட்டதால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (12.11.2024) மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் (Cyber attack ) நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை கூடிய விரைவில் மீளமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களை தேர்தல் காலங்களில் முறையாக பாவிக்குமாறு கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறையில், கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த பொதுத் தேர்தலில் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.
இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது. இவற்றை நாம் கண்காணிக்கும் போது வேட்பாளர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான கானொளி பதிவுகள் போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பகிரப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
கேகாலை – வரக்காபொல பகுதியில் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம, நவக்குளம கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மெலனி நிசன்சலா சந்திரபால என்ற இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்செல என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவரது கணவர் சட்டப்பூர்வமாக அவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திபுர பிரதேசத்தில் உள்ள துறவு இல்லம் ஒன்றிற்கு ஜாதகம் பார்ப்பதற்கு குறித்த பெண் வந்து செல்லும் நிலையில், அங்கு திடீரென உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை கேகாலை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நேற்று (11) நாவக்குளம் பொது மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் லண்டனிலிருந்து இன்றைய தினம் காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
போலி கடவுச்சீட்டு
இதன்போது விமான நிலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று அங்கிருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் யாழ்.வடமராட்சி வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி.வைஷாலி கரன் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த தனி நடனப் போட்டி திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் யடியந்தோட்டை நடைபெற்றது.
இதில் பரதநாட்டிய தனி நடன போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த செல்வி வைஷாலி கரன் அவர்கள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இணையவழி குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 981 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இணையவழி பாதுகாப்பு முறைமையே இதற்கு காரணம். இணையவழி அச்சுறுத்தல்கள் தவிர, இணைய மோசடிகள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 1,600 சம்பவங்கள் சமீப காலங்களில் பதிவாகியுள்ளன.
இணையவழி குற்றச் செயல்களின் அதிகரிப்பு, டிஜிட்டல் துன்புறுத்தலைச் சமாளிக்கவும், இணையவழி பயனர்களைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்நிலையில் இலங்கையில் இணையவழி பாதுகாப்பிற்காக, அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் மேலும் வலுவான சட்டங்கள் அவசியமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக இன்று(11.11.2024) மாலை 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச்சென்றிருந்தனர்.
சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.
இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.
கலவரத்தில் றிசாட் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொருக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொருக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தபகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலவரநிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த 27 பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக தோட்ட மண்வெட்டியால் தாக்கி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஈச்சங்குளம் அம்மிச்சைத்யன் பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றுமுன்தினம் (09.11.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பியோடிய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.