வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று (11.10.2024)தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக இரட்டை பெரியகுளம் பகுதியில்இருந்து வாகனங்களில் ஊர்வலமாக வருகைதந்த கட்சியின் ஆதரவாளர்கள் அதன் பின்னர் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியானது உபாலி சமரசிங்க, செல்வத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஷ்வரன், பாத்திமா அயிஸ்த்தா, பிரேமரத்தின, ஜோகராஜா சிவரூபன், அன்டன் கலை, அபுபாகீர் பிரைஸ்தீன், இராதாகிருஸ்ணன், ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்ப நிலையின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமைகள் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.
அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தெர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்தவகையில் இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல்கட்சிகளும்27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தது. அவற்றில் இரண்டுஅரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைகுழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக எங்கள்மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசியகூட்டணி ஆகியகட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுளுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில்423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று (11.10.2024) தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
வன்னி மாவட்டத்தில் குறித்த கூட்டணியானது சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேடதேவையுடைய பெண் ஒருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல்செய்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11.10.2024) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.
ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார்.
சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்றையதினம் (10.10.2024) தாக்கல் செய்திருந்து. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர்,
இம்முறை நாடு ஒரு மாற்றத்தினை கண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரண்டு கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்திருந்தது. இம்முறை மூன்றாவது கட்சி ஒன்று வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது.
அந்தவகையில் ஊழல் அற்ற ஒரு தேசத்தினை கட்டிஎழுப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்க்கின்றோம். அதேபோன்று கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கிறது. நானும் கடந்த தேர்தல்களில் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்திருக்கின்றேன். அதனால் இந்த முறை எமக்கான சந்தர்ப்பம் உள்ளதாக முழுமையாக நம்புகின்றோம்.
அநுர ஆட்சியானது அவர்கள் சொல்வதை போல நல்லதை செய்து, ஊழலற்ற ஆட்சியினை நடாத்தினால் அவர்களுடன் இணைந்து அவர்களுக்கான ஒத்துழைப்பினை வழங்குவோம். அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை தட்டிக்கேட்பதற்கும் தயங்கமாட்டோம் என்றார்.
வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்காக வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சி இன்று (10.10.2024) வேட்புமனுத் தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வன்னிக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்தது.
வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா.திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோரும்,
முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரும், மன்னார் மாவட்டம் சார்பாக சட்டத்தரணி செ.டினேசன், சட்டத்துறை மாணவி அ.கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை 4 கட்சிகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடு முழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.
ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணிப் பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியல் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் , தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பிக்காமை மற்றும் குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை என்பன தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஒரு காரணமல்ல என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.
அதேவேளை தேர்தல் பணிக்கு வருவதற்கான நியமனக் கடிதம் பெறும் அனைத்து அலுவலர்களும் உரிய தேர்தல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், தங்களது வழக்கமான பணியிடத்திற்குச் சென்று வருகைப் பதிவு சான்றிதழை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் அல்லது தவறியவர்கள் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி சட்டமா அதிபர் மற்றும் பதில் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு, மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏழு இலட்சத்து 50,000 என்-சீரிஸ் கடவுச்சீட்டுகளை வழங்கும் 02 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததால், அந்த கடவுச்சீட்டை ஜீ-சீரிஸுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரியபடுத்தியுள்ளார்.
அதேவேளை அண்மையில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் (750,000) என்-சீரிஸ் கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லாஃபர், எனிக் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் அதன் நிறைவேற்றுத் தவிசாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து, அமைச்சரவை தீர்மானம் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறையை மீறும் ஊழல் கொடுக்கல் வாங்கல் என குறித்த தடை உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் மற்றும் பெறுமதி முறையே 297.62 ரூபாவாகவும், 288.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 218.52 ரூபாவாகவும், கொள்வனவு விலை 209.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.43 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையின் முனைவர் (Phd) மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ், 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்புகள் தொடர்பான அவரது ஆராய்ச்சி, செவித்திறன் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவியளிப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், உலகின் முதல் ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்பை உருவாக்கியுள்ள அஜ்மல் அப்துல் அஜீஸ் தனது விருது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது உண்மையிலேயே தமக்கு சிறந்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அங்கீகாரம் கிடைத்தபோது, தம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்றரை வருட கற்கையின்போது, எதனை செய்துவிட்டோம் என்று கேட்பதை விட, இதனை செய்துவிட்டோம் என்ற உணர்வு தமக்கு திருப்தியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கற்க இலங்கையிலிருந்து பயணம் செய்து பயோனிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த அஸீஸ், 1978 முதல் மாறாமல் இருந்த கோக்லியர் இம்ப்லான்ட்டை மாற்றியமைத்துள்ளார்.
கோக்லியர் உள்வைப்பு என்பது ஒரு சிறிய, சிக்கலான மின்னணு சாதனம் ஆகும். இது காது கேளாத அல்லது கடுமையாக இரைச்சல் உணர்வை கொண்ட ஒருவருக்கு சிறந்த ஒலி உணர்வை வழங்க உதவுகிறது. தற்போது செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், இது தொடர்பில் முன் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இதேவேளை, கோக்லியர் உள்வைப்புகள் மக்களுக்கு கேட்கும் திறனை தருகிறது எனினும் அது மின்சாரத்தில் இயங்குகிறது.
எனினும், அதனை ஒளியை பயன்படுத்தி இயங்கச் செய்வதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருவதாக அஜ்மல் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் செவிப்புலன் அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் மத்தியில் தமது ஆராய்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அஜ்மல் கூறியுள்ளார்.
சுனாமியில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார்.
அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அனர்த்தத்தின் போது இன்னுமொரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஹிருணியை கண்டுபிடிக்க முடிவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக குடும்பம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஹிருணியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அவரது தாயும் மூத்த சகோதரியும் அவரை கண்டுபிடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.