இணைய வங்கி முறை மூலம் பாரிய முறைகேடு : பொலிஸார் எச்சரிக்கை!!

இணையத்தைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கி பரிவர்த்தனைகளில்(online banking) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) கசிவு மூலம் பாரிய பண மோசடிகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடக பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பரிவர்த்தனையின் பாதுகாப்பு

”வாடிக்கையாளரை அடையாளம் காணவும், பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அந்தந்த வங்கி நிறுவனத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறியீட்டு எண் (ஒரு முறை கடவுச்சொல் / OTP) வழங்கப்படுகிறது.

இவ்வாறான குறியீட்டு எண் (OTP) சமூக ஊடகங்களில் சில வாடிக்கையாளர்களால் பிரபலமான நிறுவனங்கள் மற்றும் சேவைகள் என சமூக போலி விளம்பரங்களைப் பெற பயன்படுத்தப்படுகிறது.

இது போலி வலைப்பக்கங்களுக்கு மக்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்க வழிவகுக்கிறது.

மோசடி செயல்

இவ்வாறு மூன்றாம் தரப்பினருக்கு தனது தனிப்பட்ட தகவல்களை கொடுப்பது அவர்களின் அறியாமையால் செய்யப்படுகிறது.

இந்த மோசடி செயல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், வாடிக்கையாளர்கள் பெறும் குறியீட்டு எண்ணை (OTP) பெறுவதற்கு இணையத்தை பயன்படுத்தி இந்த மோசடி செயல்களில் ஈடுபடும் பல்வேறு நபர்கள் மற்றும் மேற்கூறிய தந்திரங்களுக்கு பலியாகாமல் இருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸார் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நாட்டில் இன்றும் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தென் மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

வெளிநாட்டில் விபரீத முடிவினால் உயிரிழந்த இலங்கையர்!!

இஸ்ரேலில் வேலைக்காக சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே தனிப்பட்ட காரணங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்று விவசாய துறையில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு எச்சரிக்கை!!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் இடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை எண் மற்றும் முழுப் பெயரையும் பகிரங்கப்படுத்துவதன் மூலம், இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் அந்தத் தகவலை எளிதாகப் பெற்று பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக்கர்கள் அணுகி நிதி மோசடியில் ஈடுபடலாம் என விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர, பிள்ளைகளின் தகவல்கள் சிறுவர்களுககு பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற தவறான செயல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

எனவே பெறுபேறு தாள்களை வெளியிடும் போது அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் விபரங்களை மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இணையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் ஊடாக ஹேக்கர்கள் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் தவறான செயல்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக, சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.

அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 283 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 319 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 183 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குறையும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,10,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,94,000 ரூபாவாகவும் காணப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,13இ000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,96,750 ரூபாவாகவும் காணப்பட்டிருந்து. அதேவேளை சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,657.33 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

16 மாணவர்களுடன் சிக்கிய இரு மாணவிகள் : பொலிஸார் அதிரடி!!

வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் இந்த களியாட்டம் இடம்பெற்றுள்ளது.

அது தொடர்பில் ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களை ராகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் தாயின் கொடூரம் : பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாய்!!

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்தான பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முப்பது வயதுடைய பெண்ணொருவர் தனது பிள்ளை முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததால் உடலின் நான்கு பாகங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளதோடு, சிறுமியை எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து கண்டி பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.

காயமடைந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டதாக 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி அன்று, இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டிக்வெல்ல குற்றவாளியாக கருதப்பட்டார்.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!!

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன் சென்றுள்ளார். தொடர்ந்து நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில் இருந்த குறித்த யுவதி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் விபத்து!!

யாழ் தென்மராட்சி – கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் நேற்று (29) பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும்,

எதிர்த்திசையில் பயணித்த கெப் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெயஸ் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

எனினும், இந்த விபத்தில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து சம்பவிப்பதற்கு காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டினை வாடகைக்கு விட்ட பெண் படுகொலை : தம்பதியின் கொடூரமான செயல்!!

கம்பஹாவில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் வாடகைக்கு வீடு வழங்கும் வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையின் பின்னர் 8 லட்சம் ரூபாய் பணமும் 18 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெலிவேரிய, அம்பறலுவ தெற்கு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மங்கலிகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் அறையில் தங்கியிருந்த தம்பதியே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் இருந்த போது போர்வையால் மூடி மூச்சு விட முடியாதவாறு அழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றுடன் குறித்த தம்பதியினர் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த வீட்டில் மற்றுமொரு வாடகை அறையில் தங்கியிருந்த தம்பதி, கொள்ளையுடன் தொடர்புடைய ஆண் நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, வாடகைக்கு தங்குமிடங்களை வழங்கும் போது அந்த நபர்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா!!

புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது மாதத்தின் கடைசி நாளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் எரிபொருள் விலை சூத்திரம் நீடிக்கப்படுமா, இல்லையா என்பது அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

கடந்த மாத விலைச்சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

10 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை தற்போது 307 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சுப்பர் டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை விலை 352 ரூபாவாகும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் தற்போது 352 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2023 சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு : முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்!!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுன சதீஷன் சமரவிக்ரம அந்த மாணவர் ஆவார். அதேசமயம் மற்றைய ஒன்பது பேரும் மாணவிகள் என்பது சிறப்பம்சமாகும்.

மாணவர் சகுன , பாடசாலை மாணவர் தலைவராகவும், கேடட் அணி மற்றும் சாரணர் குழுவில் உறுப்பினராகவும், பாடசாலை நடனக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மாணவர் சகுன சாதாரண தரப் பரீட்சை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், உறுதியாக இருந்த சகுன, பரீட்சைக்கு முந்தைய நாள் வீட்டுக்கு சென்று பரீட்சையை எதிர்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் நோய் நிலையிலும் பரீட்சையை எழுதி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள சகுன சதீஷன் சமரவிக்ரம, பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் திருத்தம்!!

இலங்கையில் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.