வடக்கு கொழும்பு போதனா (ராகம) வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன்களால் தாக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையின் வைத்தியரும் தாதியும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொடர்பான நோயினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 22ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.
சூரியபாலுவ கடவட பிரதேசத்தில் வசித்து வந்த உயிரிழந்தவரின் மகன்கள் நேற்று (24) காலை ராகம வைத்தியசாலையின் 22 ஆம் விடுதிக்கு வந்து தாயின் மரணம் தொடர்பில் ஊழியர்களுடன் முரண்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், உயிரிழந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கவில்லை எனவும் மகன்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் ராகம வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி ராகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்கப்பட்ட நபர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பந்தயங்களில் ஒரு குழுவினர் பெருமளவு பணத்தை வென்றுள்ளனர்.
கதிர்காமம், திஸ்ஸமஹாராம போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயம் கட்டியிருந்தனர்.
அதில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை அடிப்படையாக கொண்டு பந்தயம் கட்டப்பட்டிருந்தது.
செல்லகதிர்காமம் பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என 25 லட்சம் பந்தயம் கட்டி தோற்றுள்ளார்.
அவருடன் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய வர்த்தகர் வெற்றி பெற்றுள்ளார்.
அநுர என பந்தயம் கட்டி 25 லட்சம் ரூபாயை வென்ற வர்த்தகர், அந்த பணத்தின் மூலம் வீடற்ற குடும்பம் ஒன்றுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பந்தயம் கட்டிய பல வர்த்தகர்கள் தமது உடமைகளை இழந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பணம், வீடு, தங்க நகைகள், வாகனங்கள் என்பன பந்தயத்தில் ஈடு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பெண் ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்.
குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
எனினும் விசாரணைகளின் பின் நியாயமான தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறுகையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை மக்கள் இன்று இந்த நாட்டின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை நியமித்துள்ளீர்கள். இனி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் இருக்க மாட்டார்கள். அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றார்.
அதோடு அனுரவின் ஆட்சியில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வெகுவாகக் குறைக்கப்படும் எனத் தெரிவித்த அவர், ‘மக்களுக்குத் தேவையில்லாதவை அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படாது என மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம்.
எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் பெங்களூருவில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குற்றவாளியை தனிப்படை பொலிஸார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெங்களூருவில் உள்ள வயாலிக்காவல் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (29). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது கணவர் ஹேமந்த் தாஸை பிரிந்து, தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அயலவர், மகாலட்சுமியின் சகோதரர் ஹுக்கும் சிங்கிற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மகாலட்சுமியின் குடும்பத்தினரும், அண்டை வீட்டாரும் வீட்டை திறந்து பார்த்தபோது, குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு தனித்தனி கவரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் , வயாலிகாவல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இரண்டு நாட்களில் அதன் அறிக்கை பொலிஸாரிடம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறுகையில், ‘‘இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகளை அமைத்திருக்கிறோம்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் கிடைத்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய முக்கிய துப்பு கிடைத்திருக்கிறது.
இதுதவிர அந்த பெண்ணின் கணவர், அவரது ஆண் நண்பர்கள் 4 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறோம். சந்தேகத்துக்குரிய 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
ஏறக்குறைய குற்றவாளியை நெருங்கி விட்டோம். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை பொலிஸார் விரைந்துள்ளதாக கூறியுள்ளார்.
பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம், ஆனமடுவ, மிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இந்த யுவதி காணாமல் போயுள்ளார்.
யுவதி தொடர்பில், இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என முறைப்பாட்டாளரான யுவதியின் பாட்டி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு ஆனமடுவ பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,464 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,280 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் ஊடாக இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வழிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிலாபம் தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
இதேவேளை பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு அல்லது தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு ,வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.