இலங்கை அணியிலிருந்து திரிமன்ன விலகல்!!

Thirimannaபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வீரர் திரிமன்ன காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துபாயில் ஆரம்பமாகிறது.

இதற்கான பயிற்சியின் போது இலங்கை வீரர் திரிமன்னவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாயகம் திரும்பவுள்ளார். இவருடைய இடத்தை குசல் பெரேரா பூர்த்தி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் குலசேகர, காயம் காரணமாக இத்தெடரில் இருந்து விலகினார். தற்போது திரிமன்னவும் விலகியுள்ளது, இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

 

பொலிஸ் நிலையம் எதிரில் அரங்கேறிய விபச்சாரம்!!

Chennaiசென்னை பாரிமுனை சட்டக்கல்லூரி பொலிஸ் நிலையம் எதிரில் சொகுசு காரில் விபசாரம் செய்த அழகிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

பாரிமுனை பகுதியில் ஒரு கும்பல் சொகுசு காரை நிறுத்தி வைத்துக்கொண்டுஅதில் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்கிறார்கள் என்று விபசார தடுப்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் பொலிசார் அடங்கிய சிறப்பு படையினர், நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள்.

அப்போது சட்டக்கல்லூரி பொலிஸ் நிலையம் எதிரில் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது.

அந்த காரை முற்றுகையிட்டு தனிப்படை பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு காருக்குள் 2 வெளிமாநில இளம்பெண்கள், 2 வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விபச்சார ஏற்பாடுகளை பொலிஸ் நிலையம் எதிரில் துணிச்சலாக செய்திருந்த புரோக்கர்கள் சம்சுதீன்( 45), விஜயராகவன்(24), கணேசன்(28),சவுந்திரபாண்டியன்(24) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

26 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!!

20years

இந்தியா, மங்களூரில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயும், மகளும் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

26 வயது ஜாய்ஸ் லண்டனில் சட்டம் படித்து வருபவர். இவர் பிறந்ததுமே தத்து கொடுக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் தன்னைப் பெற்ற தாயை சந்திக்க அவருக்கு ஆர்வம் வந்ததால் தாயைத் தேடும் பணியில் இறங்கினார்.

ஆனால் அவரது தாயார் இந்தியாவில் இருந்ததால் சக்கீ சிறார் உரிமை என்ற அமைப்பின் இயக்குனரான அஞ்சலி பவார் என்பவரது உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கண்டுபிடித்து ஆனந்த மழையில் நனைந்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி பவார் கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பு தங்களது தாயைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து மூன்று பேர் எங்களை அணுகினர். அவர்களில் ஒருவர் ஜாய்ஸ். இதையடுத்து தீவிரத் தேடலைத் தொடங்கினோம்.

ஜாய்ஸ் தத்து கொடுக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முதலில் கண்டுபிடித்தோம். அதன் மூலம் ஜாய்ஸின் தாயாரைக் கண்டுபிடித்தோம். மூல ஊர் மூட்பித்ரி ஜாய்ஸின் பூர்வீகம் மங்களூர் அருகே உள்ள மூ்ட்பித்ரி ஆகும். அங்குதான் ஜாய்ஸின் தாத்தா, பாட்டி வசித்து வந்தனர்.

அந்த ஊரில் வைத்துத்தான் ஜாய்ஸின் தாயார் அவரை பிரசவித்தார். அங்கிருந்தபடியே குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர்.

டெல்லியிலிருந்து நெதர்லாந்துக்கு முதலில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஜாய்ஸ். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்துக்குப் போயுள்ளார். மனநல காப்பகத்தில் தாயார் ஜாய்ஸின் தாயார் மூட்பித்ரியில் உள்ள ஒரு மன நல காப்பகத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஜாய்ஸை வரவழைத்து அவரது தாயாரை அறிமுகப்படுத்தி வைத்தோம் என்று கூறியுள்ளர்.

தாயைப் பார்த்ததுமே கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார் ஜாய்ஸ். ஆனால் ஜாய்ஸின் தாயார் இன்றும் கூட மன நலம் சரியில்லாதவராகவே இருக்கிறார். அவரால் அவரது மகளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது மட்டுமே அவருக்குத் தெரிந்துள்ளது. அவரால் தனது தாய்மை உணர்வுகளைக் கூட முழுமையாக பிரதிபலிக்கவில்லை. காரணம் அவரது உடல் நலம், மன நலம். இவர்தான் உங்களது மகள் என்று கூறியபோது கூட லேசாக புன்னகைத்துள்ளார் ஜாய்ஸின் தாயார்.

 

தந்தையின் பாசத்திற்கு ஏங்கிய பதினாறு வயது சிறுவன் பரிதாப மரணம்!!(படங்கள்)

கிளிநொச்சியைச் சேர்ந்த திரு.வீரலிங்கம் மற்றும் திருமதி சிவாஜினி வீரலிங்கம் ஆகியோரின் மகன் வீ.நிதர்சன் கடந்த 05.01.2014 ஞாயிறன்று திடீரென மயங்கி விழுந்து மரணமுற்றுள்ளார்.

குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையும் குடும்பத்தின் மூத்தவருமான இவர் தனது பதினாறு வயதிலியே குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவரது சகோதரிகளான நிதுர்சிகா (15), யதுர்வினா (13) மற்றும் கதுர்சிகா (6) ஆகியோரின் படிப்புச் செலவு உட்பட தாயையும் குடும்பத்தையும் ஓரளவிற்குப் பட்டினியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக இவர் தனது படிப்பைத் தியாகம் செய்து தினக்கூலி வேலைசெய்து வந்தார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் இவரது தந்தை வீரலிங்கம் கைது செய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.

தந்தையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த இவர், தனது மனவேதனையை தனக்குள்ளேயே அடக்கிவைத்து குடும்பப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வந்துள்ளார்.

தனது உழைப்பில் கிட்டும் வருமானம் சாப்பாட்டுச் செலவிற்கே போதாமையால் தங்கைகளின் படிப்பிற்கு என்ன செய்வதென்று அவர் மனதிற்குள்ளேயே தினமும் அழுதிருக்கின்றார். தந்தையின் பிரிவால் ஏற்பட்ட சோகம் ஒருபுறமும், நாள்தோறும் பெருகிவருகின்ற வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட இயலாமை ஒருபுறமுமாக நிதர்சனை வாட்டி வதைத்துள்ளது.

இறுதியில் வீரலிங்கம் தம்பதியினர் தனது மகனையும் அவரது சகோதரிகள் தமது அன்புச் சகோதரனையும் இழந்து தவிக்கின்றனர். அந்தக் குடும்பம் மட்டுமன்றி திருநகர் தெற்கே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றது.

விடயம் கேள்விப்பட்டவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் திரு.இந்திரராசா மற்றும் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கட்சியின் இலண்டன் பிரதிநிதி இராஜேஸ்வரன் (பரமேஸ்), கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் வேழமாலிகிதன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர்.

மகனின் இறுதிக் கிரியையில் சிறையிலுள்ள கணவரை அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மனைவி

கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு சிவாஜினி வீரலிங்கம் என்ற பெண் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

நல்ல உள்ளம் படைத்த உறவுகள் அவர்களின் குடும்பத்திற்கு இயலுமான உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் 0094778566838 என்ற தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு உங்களது உதவிகளைச் செய்யுங்கள் என்றும் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

K1 K2K3

 

நடிகர் உதய் கிரண் தற்கொலைக்கான காரணம் என்ன : பரபரப்பு தகவல்கள்!!

Uday

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

உதய் கிரண் உச்சத்தில் இருந்தபோது 2003ம் ஆண்டு அவருக்கும், சிரஞ்சீவியின் 2வது மகள் சுஷ்மிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தால் அந்த திருமணம் ரத்து ஆனது.

அது முதலே உதய் கிரண் வாழ்க்கையில் தோல்விகளும், சோகமும் தொடர ஆரம்பித்தது. அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்து வந்தது. தமிழ் படங்கள் கூட அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உதய்கிரண் தாய் நிர்மலா மரணம் அடைந்தார். தாய் இறந்த 1 வருடத்தில் அவரது தந்தை மூர்த்தி 2வது திருமணம் செய்து கொண்டார். இது உதய் கிரணுக்கு பிடிக்கவில்லை.

அதோடுதான் சம்பாதித்த பணத்தை தந்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற எண்ணம் தலைதூக்கியது. இதனால் தந்தையிடம் இருந்து பிரிந்து தனிமை வாழ்க்கை நடத்தினார்.

படவாய்ப்புகளும் வராததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்த சோகத்தில் இருந்து அவரை மீட்க திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

உறவினர்கள் ஏற்பாட்டின்படி 2012ம் ஆண்டு தனது பழைய தோழி விசிதாவை உதய் கிரண் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கைக்கு பிறகும் அவருக்கு படவாய்ப்புகள் கை கொடுக்கவில்லை. தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று தனது மனைவி மற்றும் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் அவர் வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லவில்லை. இந்நிலையில் உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவுக்கு வரும்படி மனைவி விசிதா அழைத்துள்ளார். ஆனால் உதய்கிரண் வர மறுத்துவிட்டார்.

இதனால் அந்த விழாவில் பங்கேற்க விசிதா சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்குள் உதய் கிரண் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது உதய்கிரண் உடல் நிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. ஓமன் நாட்டில் இருக்கும் அவரது அக்கா ஸ்ரீதேவி வருகைக்காக உறவினர்கள் காத்து இருக்கிறார்கள். அவர் ஐதராபாத் வந்ததும் நாளை உதய்கிரண் இறுதி சடங்கு இ.எஸ்.ஐ. மயானத்தில் நடக்க இருக்கிறது.

இதற்கிடையே உதய் கிரண் மரணத்துக்கு திரையுலக தாதாக்களே காரணம் என்று மனித உரிமை கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த வக்கீல் அருன்குமார் அளித்த புகாரில், தெலுங்கு திரையுலகம் 4 குடும்பங்களின் பிடியில் உள்ளது. அவர்கள் நினைப்பதுதான் சட்டமாக உள்ளது.

இதனால் இளம் கதாநாயகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதய்கிரண் மரணத்துக்கு அவர்கள் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பேரி ரெட்டி கூறுகையில், உதய் கிரண் குடும்பத்தில் யாராவது புகார் தெரிவித்தால் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தற்கொலை செய்யும் முன்பு உதய்கிரண் கடைசியாக சென்னையில் வசிக்கும் நண்பர் பூபால் என்பவரிடம் பேசி உள்ளார்.

எனவே அந்த நண்பரிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் தற்கொலை செய்த நடிகர் உதய்கிரண் தனது கண்களை எல்.வி.பிரசாத் மருத்துவமனைக்கு தானம் செய்து இருந்தார். நேற்று எல்.வி.பிரசாத் மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து அறுவை சிகிச்சை மூலம் உதய் கிரண் விழித்திரையை அகற்றினர். அந்த கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு பொருத்தப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது : இளையராஜா இசையமைக்கின்றார்!!

Isai_Priya

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

“போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.

இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்..

ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

அதை விட நடிக்கும்போது அந்த கதாப்பாத்திரத்தின் வலிகளை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பு தளம் அனைத்தும், உண்மையான ஒரு போர்க்களத்தைப் போன்றே எனக்கு தெரிந்தது. சில இடங்களில் என்னையும் அறியாமல் அழுதிருக்கிறேன்.

நடிக்கும் எனக்கே இப்படியென்றால் உண்மையில் அந்த கொடுமைகளை அனுபவித்த இசைப்பிரியாவும், அந்த மக்களும் எவ்வளவு வலிகளைத் தாங்கியிருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் எனக்கு உணர்த்தியது என்றார்.

தன்னை எல்லோரும் இசைப்பிரியா என்றே அழைப்பதால், இப்போது யார் தன் பெயரைக் கேட்டாலும் இசைப்பிரியா என்றே அனு கூறிவருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அவரது குரலில் இசைப்பிரியா பற்றி ஒலிக்கும் ஒரு பாடலை கேட்டு படக்குழுவினரே கண்கலங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

விரைவில் வருகிறது 7 ஓவர் கிரிக்கெட் போட்டி!!

7PLதுபாயை சேர்ந்த தனியார் நிறுவனம், ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும். வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள போட்டியின், அறிமுக விழா இந்த வார இறுதியில் துபாயில் நடக்கிறது.

இதற்கான விழாவில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர்.

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!!(படங்கள்)

வவுனியா பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஊழியர்கள் தாம் பணியாற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்கள் நெளுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று காலை ஆரம்பித்தனர்.

நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதேச சபையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், வேலைப்பகுதி தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் மேலும் பல வருடங்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியாகளுக்கு அவர்களிடம் இருக்கும் கல்வித்தகைமைக்கே நியமனம் வழங்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 19 சுகாதார தொழிலாளர்களும் 7 சாரதிகளும் நிரந்தரமாக்கப்படவேண்டும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

-படங்கள் கலைதேவன்-

01 1 2 3

 

வவுனியாவில் தொடர் மழையால் பல குடும்பங்கள் இடப்பெயர்வு!!

1

தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர். கடும் குளிரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா கந்தன்குளம் கிராமத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக பூவரசன்குளம் கிராமசேவகர் பிரிவில் உள்ள கந்தன்குளம் கிராமத்தில் 43 குடும்பங்கைள சேர்ந்த 170 பேர் தற்காலிக வீடுகளில் இருந்தமையினால் நீர் வீடுகளுக்குள் சென்றமையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை அக் கிராமத்தில் 10 குடும்பங்கள் அப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தரப்பால்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 20 வீடுகளினுள் நீர் உட்புகுந்ததால் அதில் வசித்த மக்கள் பாதிப்படைந்து வேறு இடங்களில் தங்கியுள்ளனர். எனவே அவர்களுக்கும் தரப்பால்கள் வழங்கப்பட்டுள்து.

வவுனியா பிரமனாளங்குளத்தில் மண் வீடொன்றின் இரண்டு பக்க சுவர்களும் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் அவ் வீட்டில் இருந்தவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கும் உடனடியாக மாற்று இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சாஸ்திரிகூழாங்குளம் சிறு சேத்திற்கு உள்ளாகியுள்ளமையால் அதனை சீர் செய்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுறுத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் குளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் எனவும் கூறினார்.

மேலும் தாழ் நிலப்பிரதேசங்களில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் திருநாவற்குளம், கள்ளிக்குளம் போன்ற கிராமங்களில் உள்ள சில வீடுகளினுள் நீர் உட்புகுந்துள்ளது.

மேலும் வரண்ட நிலமாக காணப்பட்ட வயல் பிரதேசங்களில் நீர் நிரம்பிக்காணப்படுவதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் கொட்டகைகளில் வாழும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிவதுடன் ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்துள்ளது.

 

அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு!!

SLஅரசாங்க ஊழியர்களுக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு 7,800 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்கெ இவ்வாறு வாழ்வாதாரச் செலவு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

இன்று கிறிஸ்மஸை கொண்டாடும் மக்கள்!!(படங்கள்)

உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி அன்று கிறிஸ்மஸை கொண்டாடுகின்றனர்.

ஆனால் கிரிகோரியன் கலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் இன்று(07.01) கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

c1 c2 c3 c4 c5 c6

 

வவுனியா உள்ளூராட்சி சபை சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!!(படங்கள்)

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று முதல் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகியவற்றில் நிரந்தர நியமனம் இன்றி தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் இத் தொழிலாளர் சங்க வவுனியா தலைவர் சித்திரன் கருத்துத் தெரிவிக்கையில்..

கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாகவும் சாரதிகளாகவும் காவலாளிகளாகவும் பலர் உள்ளூராட்சி சபைகளில் வேலை செய்து வந்தனர். ஆனால் தற்போது தரம் 11 படித்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் ஏனைய எமது ஊழியர்கள் கல்வித் தகமையை கொண்டிருக்காவிட்டால் நியமனம் வழஙகப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை வேலைக்கு அமர்த்தும் போது இவ்வாறான நிபந்தனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே பலவருடங்களாக கடமையாற்றி வந்த ஊழியர்களுக்கு முன்னுரிமையளித்து நியமனம் வழங்கப்படவேண்டும்.

இதற்கான உறுதி மொழியை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் காவலாளிகளுக்கு என வவுனியா நகரசபையால் வருடாந்தம் 70 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.

இதுவரை காலமும் காவலாளிகளாக பணியாற்றியவர்களை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது நிறுத்தப்பட்டு ஏற்கனவே காவலாளிகளாக கடமையாற்றியவர்களை உள்வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் ந.ரஜீவன் தமிழர் விடுதலைக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் இராஜகுகனேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், இவ் விடயம் தொடர்பில் மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நீதியினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர்.

v1 v2 v3 v4

 

வவுனியாவில் கடும் மழையால் மக்கள் பெரும் அவதி!!

Malai

தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .

வவுனியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் கடும் குளிருடன் கூடிய காலநிலையும் நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

மூன்று வகை போட்டியிலும் இந்திய அணியின் தலைவராக தொடர விரும்புகிறேன் : டோனி!!

Dhoni

மூன்று வகை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர விரும்புவதாக டோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

ஒரு ஆண்டு மட்டுமே இருக்கையில் புதிய வீரர் ஒருவருக்கு அணித்தலைவர் பொறுப்பை அளிப்பது சரியானதாக இருக்காது. 3 வகையான போட்டிகளிலும் அணித் தலைவராக தொடர விரும்புகிறேன்.

கிரிக்கெட் போட்டியில் நெருக்கடி எப்பொழுதும் இருக்க தான் செய்யும். அதனை அனுபவம் உள்ள வீரர்கள் எளிதில் சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். வருங்காலங்களில் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது.

தென் ஆபிரிக்க தொடர் எங்களுக்கு கடினமான நேரமாக இருந்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடியது. இரண்டாவது டெஸ்டிலும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பல வீரர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் விளையாடுவது முதல்முறையாகும். இருப்பினும் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்றாகவே இருந்தது.

பிட்ச் உதவிகரமாக இருக்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அன்னிய மண்ணில் பந்து வீச்சில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். நம்மிடம் நிறைய திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமை நமது வீரர்களுக்கு உள்ளதென டோனி தெரிவித்துள்ளார்.

 

இளம்பெண்ணுடன் அறையில் தனியாக இருந்த வீரரால் சர்ச்சை!!

Monty-Panesar

ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர் பனீசர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்து விட்டது.

கடைசிப் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான முறையில் தோல்வியுற்றது. போட்டி முடிந்த பின் ஹோட்டல் அறைக்கு திரும்பிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பனீசர், அமெரிக்க பெண்ணான அலிசன் என்பவரை அறைக்கு தனியாக அழைத்து பேசியதாக இங்கிலாந்தின் தி மிர்ரர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அலிஸன் கூறுகையில் நான் அவருடன் கிரிக்கெட் குறித்துத்தான் பேச விரும்பினேன். ஆனால் அவரோ என்னைக் கவருவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது வினோதமாக இருந்தது.

நான் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது வந்திருந்தேன். அப்போது எனக்கு அவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார், நானும் பதில் அனுப்பினேன்.

அப்போது விளையாட்டுக்காக யாரோ அனுப்பியதாகவே நினைத்தேன், பிறகுதான் பனீசர் என்று தெரிந்து வியந்தேன்.
என்னை அறைக்கு அழைத்ததால் நானும் அதை ஏற்றுச் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக கடந்தாண்டு, இங்கிலாந்து நைட் கிளப்புக்குப் போயிருந்தபோது அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்ததாக சர்ச்சையில் சிக்கி வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது. தற்போது பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் பேசிய விவகாரத்தால் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.

 

யாழில் “ஆவா” கொள்ளைக் குழு கைது!! (படங்கள்)

யாழில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்று கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், உட்பட உயிராபத்து ஏற்படுத்த கூடிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே இந்த குழுவை நாம் கைது செய்துள்ளோம்.

சந்தேகநபர் தந்த வாக்கு மூலத்தினை அடுத்து எனதும் கோப்பாய் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.ஏக்கநாயக்க தலைமயிலான பொலிஸ் குழு ஏனையவர்களை கைது செய்தது.

அவ்வாறு கைது செய்யபட்ட 09 பேரிடமும் இருந்தும் கைக்குண்டுகள் 2, வாள்கள் 12, கைகிளிப் (நக்கில்ஸ்) 2 மற்றும் கேபிள்கள் இரும்பு கம்பிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்பாணத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் குழுவாக இணைந்து தென்னிந்திய சினிமாப் பாணியில் மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகள் (சீற்), மற்றும் மழை அங்கி (ஜக்கற்) போன்றவற்றிற்குள் வாள்களை கொண்டு நடமாடித்திரிந்துள்ளார்கள்.

இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகளை வாள் களை காட்டி மிரட்டி, கொலை, கொள்ளை, கப்பம் கோரல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த குழுவுக்கு ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற 21 வயது சந்தேகநபரே தலைமைதாங்கி வந்துள்ளதுடன் இந்த குழுவுக்கு ஆவா குழு என பெயரும் சூட்டியுள்ளனர். இக் குழுவில் உள்ளவர்கள் 17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

இவர்கள் குழுவாக நிற்கும் வீதிகளில் செல்லும் பொதுமக்கள் இவர்கள் முன்னால் இறங்கி செல்ல வேண்டும் அதனை மீறுபவர்கள் மீது இவர்கள் தாக்குதல்களை நடாத்திய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இக் குழுவின் தலைவன் வினோதன் வழங்கிய தகவலின் அடிப்டையில் இதுவரை யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சுன்னாகம், மானிப்பாய் போன்ற பகுதிகளில் வைத்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றோம்

இந்த விசேட நடவடிக்கைக்காக 21 பேர் கொண்ட விசேட பொலிஸ் அணி 03 அணியாக செயற்பட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைக்கு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் புரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள்.

இந்த குழுவின் கைது நடவடிக்கையை அடுத்து பொதுமக்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்துக்கள் வந்துள்ளன

இந்த குழுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் இனி பயமின்றி வந்து அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை நேரில் வந்தோ தொலைபேசி மூலமோ அல்லது தமது பெயர் விபரங்களை கூறாது கடிதம் மூலமாகவோ பதிவு செய்யுமாறும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கேட்டு கொண்டுள்ளார்.

பொதுமக்களினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தகவல்கள் அடிப்படையில் தான் பொலிசாரினால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இனிவரும் காலங்களில் யாழில் யாருமே ஆயுதம் தூக்காத வகையில் இவர்களுக்கு தண்டனைகள் பெற்று கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அதேவேளை யாழில் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனடிப்படையில் பெற்று கொண்ட வாகனங்களுக்கான தவணை பணத்தை கட்ட தவறியவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு சில நிதி நிறுவனங்கள் இந்த குழுவை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

J1 j2 j3 j4 j5 j6j7