வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை (காணொளி)..!

operationகர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும், மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இருந்தது.

எனவே வயிற்றுக்குள்ளேயே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர் மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அமெரிக்க மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்ட இது, மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் – விஜய்..!

vijayஇனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியான முடிவினை எடுத்துள்ளாராம் விஜய்.

பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படமான அத்தாரின்டிகி தாரேதி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டுவருகிறது.

படம் கல்லா கட்டிய வேகத்தை பார்த்து அதை தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத்தை, கொலிவுட்டைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் அணுகினர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து விஜய்யை அணுகியதில், அவரோ சாரி, நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

மேலும் இனி ரீமேக் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளாராம்.

ஜப்பானிலுள்ள வைத்தியசாலையில் தீ: 10 பேர் மரணம்..!

japan-fire

ஜப்பானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவியதில்10 பேர் மரணமடைந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு ஜப்பானில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே தீ பரவியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 8நோயாளர்களும் 2 வைத்தியசாலை பணியாளர்களும் அடங்குவதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4மாடிகளைக் கொண்டமைந்துள்ள வைத்தியசாலைக் கட்டிடத்தின் கீழ் தளத்திலிருந்து இந்தத் தீ பரவத் தொடங்கியதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஐ..!

vikramபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஐ.

இதில் விக்ரம் நாயகனாக நடிக்க, ஜோடி போட்டுள்ளார் ஆங்கில தேவதை எமி ஜாக்சன்.

கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறாராம் விக்ரம்.

உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றுகிறார்.

மாடலிங் பெண்ணான எமி ஜாக்சன், விக்ரம் செல்லும் ஜிம்மிற்கு அருகில் உள்ள பெண்கள் ஜிம்மிற்குச் செல்கிறார்.

இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்துக் கொள்ள, பதார்த்தமாக பற்றிக் கொள்கிறது காதல்.

பின்பு தமிழ் சினிமாவின் வழக்கப்படி எமியின் அண்ணன் சுரேஷ் கோபிக்கு இவர்களின் காதல் தெரியவருகிறது.

எல்லா அண்ணன்களைப் போல சுரேஷ் கோபியும் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் ஆணழகன் போட்டிக்கான அறிவிப்பு வருகிறது.

அதில் கலந்து கொள்ள விரும்பும் விக்ரம், போட்டிக்காக இரவு, பகலால ஜிம்மிலேயே பழியாகக் கிடந்து உடற்பயிற்சி செய்கிறார்.

அப்போது சயின்டிஸ்டான சுரேஷ் கோபி சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்.

விக்ரம்- எமியின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பிப்பது போல நடிக்கிறார்.

போட்டியில் வெற்றிபெற தான் உதவுவதாகச் சொல்லும் சுரேஷ் கோபி, விக்ரமுக்கு ஒரு ஊசி போடுகிறார்.

அந்த ஊசி விக்ரமின் உடலைச் சிதைத்து, ஸ்லிம்மாக மாற்றுகிறது. இதனால் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்.

இந்த நேரத்தில் வேறு ஒருவரை எமிக்கு மாப்பிள்ளையாகப் பேசிமுடிக்கிறார் சுரேஷ் கோபி.

சுரேஷ் கோபியின் கபடத்தை உணரும் விக்ரம், வெகுண்டு எழுந்து தன் உடலை பழையபடி முறுக்கேற்றி போட்டியில் ஜெயிப்பதுடன், எமியையும் கைப்பிடிக்கிறார்.

இதுதான் படத்தின் கதை, இடையில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் என சேர்ந்து விரைவில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது ஐ.

வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு (படங்கள்)!

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இன்று காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகைதந்து பதவியேற்க­வுள்ளனர்.

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கடந்த 7ஆம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள தனது புதிய அலுவலகத்தில் கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்­தக்கதாகும்.

இன்றைய பதவிப் பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.

இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் தெரியவருகிறது.

நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்பில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

1234

அவுஸ்திரேலியாவை எரிக்கும் அகோர வெயில்..!

ausஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.

சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி,விமான நிலையத்தில்42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது.

வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் சிக்கி தவித்தனர்.

புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காட்டு தீ குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுமார் 46,000 ஹெக்டர் பரப்பளவில் எரிந்து வரும் காட்டு தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதியவர்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மக்கள் அனைவரும் அதிக நீர் அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வெப்பம் தாங்காமல் மக்கள் கடலில் நீராடி தங்கள் வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.

மொத்தத்தில் வெயில் அவுஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.

தீபிகாவை தமிழ் பேச வைக்க திண்டாடிய சவுந்தர்யா..!

theebikaதமிழ் பேச வராததால் தீபிகாவுக்கு டப்பிங் கலைஞர் குரல் கொடுத்தார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார் தீபிகா படுகோன்.

இப்படத்தில் அவரை தமிழ் பேசி நடிக்க வைக்க பட குழுவிலிருந்த உதவி இயக்குனர்கள் படாதபாடு பட்டனர். அவருக்கு தமிழ் கற்றுத்தர முயன்று சோர்வடைந்த பலர் அந்த முயற்சியை கைவிட்டனர்.

சவிதா ரெட்டி என்ற டப்பிங் கலைஞரை அழைத்து தீபிகாவுக்கு டப்பிங் பேச வைத்தனர். இது அவருக்கு பொருத்தமாக அமைந்தது. இதேநிலை ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்துக்கும் ஏற்பட்டது.

இதில் அபூர்வ சக்திகள் நிறைந்த பெண்ணாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்காக பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அவர் தமிழ் வசனம் பேச வேண்டி இருந்தது. இதற்காக இயக்குனர் சவுந்தர்யா கடுமையான முயற்சி மேற்கொண்டார்.

கடைசியில் அவரும் சோர்வடைந்தார். தீபிகாவிடம் தமிழ் பேச சொல்லி மல்லுகட்டுவதைவிட டப்பிங் கலைஞரை வைத்து பேச வைப்பதே பிரச்னை இல்லாத வேலை என்று சவுந்தர்யா முடிவு செய்தார்.

கோச்சடையானிலும் சவிதா ரெட்டியே தீபிகாவுக்கு குரல் கொடுத்தார். தீபிகாவின் கதாபாத்திரம் எப்படியெல்லாம் வசனம் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ அது டப்பிங் கலைஞரின் குரலில் நிறைவேறியது என்றார் சவுந்தர்யா.

சேலை தலையில் சுற்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 மாத குழந்தை மரணம்..!

babyவீட்டு கட்டிலில் குழந்தையை போர்த்தியிருந்த சேலை, முகத்தை மூடி மூச்சுத்திணறல் எற்பட்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

மகரகம பிரதேசத்தில் நேற்று  இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை கட்டிலில் வளர்த்தி விட்டு தாய் சமையலறை வேலையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் குழந்தையை சென்று பார்க்கும்போது, குழந்தையின் தலை சேலையால் சுற்றப்பட்டிருந்துள்ளது.

உடனடியாக குழந்தை களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் குழந்தையின் வயது 5 மாதங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் 26 பேர் கைது..!

arrest1இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை மீனவர்கள் 26 பேர் இந்திய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியா குமரியில் வைத்து ஏழு படகுகளுடன் இந்த மீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று தூத்துக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிங்கள மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஏற்றுமதி பயிராக பப்பாசி செய்கை..!

வவுனியா மாவட்டத்தில் தற்போது பப்பாசி செய்கை சிற்பபு பெற்று விளங்குவதுடன் மீள்குடியேறிய பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றதுஎன வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டதின் பப்பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் இது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேறிய பகுதிகளை இலக்காக கொண்டு நாம் பப்பாசி செய்கையை மேற்கொண்டு வருகின்றோம். அம் மக்களின் அயராத உழைப்பும் ஆர்வமும் இன்று வவுனியா மாவட்டத்தில் இருந்து பப்பாசியை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

ஆரம்ப கட்டமாக வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் நெடுங்கேணி விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் 53 ஏக்கரில் 200 பயனாளிகளுக்கு ஐ.எல்.ஓ நிறுவனத்தின் நிதியுதவியுடன் விவசாய திணைகளத்தின் தொழில் நுட்ப அனுசரணையுடன் ரெட்லேடி எனப்படும் கலப்பின பப்பாசி வர்க்கம் வழங்கப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமே இன்று வருமானம்தரும் வழியாக மாறியுள்ளது.

ஓர் விவசாயிகளுக்கு 0.25 ஏக்கருக்கு பப்பாசி செய்கைக்கு உதவி செய்கின்றோம். அந்தவகையில் ஆரம்ப செலவாக 800;00 ரூபா செலவாகின்றது. எனினும் நாம் முதல் கட்டத்தில் உதவி பெற்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் மூலம் அதனை வழங்கியிருந்தோம்.

இதனடிப்படையில் முதல் வருடத்திற்கான வருமானத்தை முதல் மூன்று மாதங்களில் இருந்துபெற முடிகின்றது. அந்த வகையில் முதல் வருட வரமானமாக 75 ஆயிரம் ரூபா பெற முடியும் எனினும் இரண்டாவது வருடத்தில் 30 ஆயிரம் ரூபா செலவு செய்யப்படும் நிலையில் வருடாந்தம் 0.25 ஏக்கரில் மூன்று இலட்சம் ரூபா வருமானமாக பெற முடிகின்றது.

வவுனியா மாவட்டத்தில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் 200 பயனாளிகளையுமு; ஒன்றிணைத்து வவுனியா வடக்கு பழச்செய்கையாளர்கள் கூட்டுறவு சங்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இக் கூட்டுறவு அமைப்பானது தங்கள் பிரதேசத்தில் உள்ள பழங்கைள ஏற்றுமதி செய்வதற்காக சி.ஆர் எக்ஸ்போட் எனப்டும் ஏற்றுமதி நிறுவனத்துடன் 49.51 வீத பங்குதாரர் அடிப்படையில் வடக்கு தெற்கு பழ உற்பத்தியாளர் கம்பனியை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இதன் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விலையாக ஏற்றுமதிக்கு தகுதியான பழங்களை கிலோ ஒன்று ரூபா 30 வீதம் வழங்கி பழ செய்கையாளாகளை பாதுகாத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

pappow

நடு வானில் விமானி மரணம் : விமானத்தை தரையிறக்கிய பயணி..!

flightநடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி மாரடைப்பால் சரிந்ததால், அனுபவமில்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

பிரிட்டனின், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன் சிறிய ரக விமானம் ஒரு பயணியுடன் கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானிக்கு மார்பில் வலி ஏற்பட்டது. உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு மயங்கி விட்டார்.

உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தரையில் இருந்து விமானத்தில் இருந்த பயணியிடம் விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர்.

அதன்படி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயணி, அவசரமாக, ஹம்பர்சைட் விமானத்தில் தரையிறக்கினார்.

குறைவான வெளிச்சத்தின் காரணமாக, விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அந்தப் பயணி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியதும், மயங்கிக் கிடந்த விமானியை பரிசோதித்தபோது, அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

மகளையே கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த காமுகனுக்கு 14 ஆண்டுகள் சிறை..!

Jailதமிழகத்தில் பெற்ற மகளை வோயைப் பொத்தி, இரு கைகளையும் கட்டிப்போட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (38). இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர்.

தங்கத்தின் மகள் கவிதா (13), ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2010 ஏப்ரல் 10 மாலை 3 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த போது, வாயை பொத்தி, இரு கைகளையும் கட்டி போட்டப்படி, காளிமுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சம்பவத்தை வெளியில் சொன்னால் ,உன்னையும் தாயையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

இதை தொடர்ந்து, அதே மாத இறுதியில், தங்கத்தை வெளியே அனுப்பி விட்டு, மீண்டும் கவிதாவை பலாத்காரம் செய்துள்ளார்.

பின் கவிதா, தனது தாயுடன் சென்னையில் உள்ள, தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, மீண்டும் ஊருக்கு வர மறுத்துள்ளார். அவரிடம், தாய் தங்கம் விசாரித்ததில் தந்தை பலாத்காரத்தற்கு உட்படுத்திய விபரம் தெரியவந்தது.

இதையடுத்து 2010 ஜூன் 6ல், ராஜபாளையம் மகளிர் பொலிசில்,தங்கம் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இது போன்ற மன்னிக்க முடியாத, காட்டு மிராண்டி தனமான மிருகங்களை விட ,கேவலான குற்றச்செயலை செய்ததற்காக, குற்றவாளிக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்டுத்தி விட்டு, சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும், தாயையும் கொலை செய்து விடுவேன் என, மிரட்டியதற்காக, மற்றொரு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இத்தண்டனையை, ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கவும், உத்தரவிடப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, எதிர்கால வாழ்வினை இயல்பாக்கும் வகையில், அவருக்கு ஆலோசனை, அறிவுரை வழங்கி, அவர், தொடர்ந்து கல்வி பயில்வதற்கு உதவிகளை வழங்கவும், விருதுநகர் கலெக்டருக்கு உத்தரவிடப் படுகிறது’’என, தெரிவித்தார்.

யுவராஜ் அதிரடி : இந்தியா அசத்தல் வெற்றி

yuvi

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரு டி20, 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அவுஸ்திரேலியா அணிக்கு மட்டின்சன், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. வினய் ஓவரில் மட்டின்சன் இரண்டு பவுண்டரி விளாசினார்.

தன் பங்கிற்கு அஷ்வின் பந்துவீச்சில் பின்ச் இரண்டு பவுண்டரி அடித்தார். இப்படி மாறி மாறி பவுண்டரி விளாச ஸ்கோர் உயர்ந்தது. மட்டின்சன் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அரை சதம் கடந்த ஆரோன் பின்ச் 89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்27 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலியா அணி 20ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் வினய்,புவனேஷ்வர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரெய்னா 19 ஓட்டங்களும், தவான் 32 ஓட்டங்களும், கோஹ்லி 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் யுவராஜ் அரைசதம் கடந்து 77 ஓட்டங்களும், டோனி 24ஓட்டங்களும் எடுத்தனர்.

எனது மகன் ஒரு பெண்தான்! அர்ஜென்டினாவில் வேடிக்கை..!

agஅர்ஜென்டினாவில் பெற்றோர் ஒருவர், 6 வயது சிறுவனை பெண் என கூறி அடையாள அட்டை வாங்கியுள்ளனர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த தம்பதியின் குழந்தை மனுவேல்(வயது 6).

ஆண் குழந்தையான இவனை, 4 வயது முதல் பெண் குழந்தை போன்று அலங்கரித்து லுலு என பெயர் சூட்டியும் வளர்த்து வந்துள்ளனர்.

இவனுக்கு 6 வயது ஆனதும் அந்நாட்டின் குடிமகனுக்கான அடையாள அட்டைக்கு பெற்றோர் விண்ணப்பித்தனர்.

அதில் தங்கள் குழந்தையை பெண்ணாகவே இருக்க விருப்பம் தெரிவித்ததுடன், அடையாள அட்டையும் வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவனது தாய் கூறுகையில், அவனது பெயரை லவானா என்று மாற்றியுள்ளோம். அவனை செல்லமாக லுலு என அழைக்கிறோம்.

அதிகாரிகள் அவனை பெண் என அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இதை அவனது உரிமைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவில் நீதிபதி அல்லது மருத்துவரின் அனுமதி பெறாமல் ஒருவர் தனது பாலினத்தை மாற்றி கொள்ள சட்டத்தில் இடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமேஸ்வரத்தில் கைதான இலங்கை மீனவர்கள் பிணையில் விடுதலை..!

fisherஇராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவர்களான வர்ணகுல ஜெயசூரிய, ஜெலஸ்டின் புஷ்பகுமாரா ஆகிய இருவருமே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாத் 21ஆம் திகதி கடல் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டினன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டத்தில் பொலிசார் வழக்கு பதிந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை ராமேஸ்வரம் நீதிமன்றில் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றைய வழங்கு விசாரணைகளின்போது 10 ஆயிரம் ரூபாய் பிணை தொகை அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய திரைப்பட விழாவில் ரஜினி கலந்துகொள்ளமாட்டார்?

rajiniசர்வதேச இந்திய திரைப்பட விழாவை, நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைப்பது சந்தேகம் என்று பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

44,வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20ம் திகதி தொடங்குகிறது. இதை தொடங்கி வைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு விழா குழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் உடல் நிலை காராணமாக அவர் இதில் கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கோவா பொழுதுபோக்கு சொசைட்டியின் துணைத் தலைவர் விஷ்ணு வாக் கூறும்போது, ‘விழாவை தொடங்கி வைக்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

அன்றைய திகதியில் அவர் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனால் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை‘ என்றார்.