வெளியாகியது தலைவா – தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் கோலாகலம்..!

thalaivaவிஜய்யின்  தலைவா படம் தமிழ்நாடு முழுவதும் இன்று ரிலீசானது. கடந்த 9–ந்தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் படம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு தடைகளை தாண்டி தற்போது திரைக்கு வந்துள்ளது.

சென்னையில் 20–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 400–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அனைத்து தியேட்டர்களிலும் விஜய் கட்–அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

ரசிகர்கள் காலை காட்சி பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்தனர். அசோக்நகரில் விஜய் படப்பெட்டியை ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்குள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து சாரட் வண்டியில் படப்பெட்டியை ஏற்றினர். பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.

உதயம் தியேட்டரில் வந்து படப்பெட்டி இறக்கப்பட்டது. அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினர். படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் லட்டு வழங்கினர்கள்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரவிராஜா, ஏ.சி.குமார், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கலந்து கொண்டனர். எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அலகு குத்தி படம் பார்க்க சென்றனர்.

வீராட் கோலி சிறந்த தலைவராக உருவாகுவார் – டோனி..!

doniஇந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது.

இந்த நிலையில் வீராட் கோலியை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். சிறந்த கேப்டனாக உருவாகுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:–

கடந்த ஒரு ஆண்டில் வீராட் கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் செயல்படுவது அவரை பற்றிய சிறந்த விஷயமாக கருதப்படுகிறது.

இது கேப்டன் பதவியிலும் அவருக்கு உதவியாக இருக்கிறது. அவரது அணுகுமுறை பீல்டிங்கில் நல்ல மாற்றத்தை தந்தது. சிம்பாப்வே தொடரில் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. கோலி சிறந்த கேப்டனாக உருவாகுவார்.

அனைத்து இளைஞர்களை கொண்ட அணியை நான் உருவாக்கியதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.

அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு உடல் தகுதி மற்றும் திறமையே காரணம். அதிக வயது என்பது பிரச்சினை இல்லை. 40 அல்லது42 வயது வீரராக இருந்தாலும் உடல் தகுதியே முக்கியம். உடல் தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியும்.

அனைத்து காலக்கட்டத்திலும் விளையாடிய சிறந்த வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்வது கடினம். அதனால் கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன். இந்திய அணிக்காக விளையாடிய அத்தனை வீரர்களையும் மதிக்க வேண்டும். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் ஜெசி ரைடர் – 6மாத தடை..!

raiderநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரைடர் மதுபான பாரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுதொடர்பான மோதலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். ஆபத்தான நிலைக்கு சென்று அவர் உயிர் பிழைத்து வந்தது ஆச்சரியமே.

இந்த நிலையில் ஜெசி ரைடர் ஊக்க மருந்து பயன்படுத்திய தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. உடல் எடையை குறைக்க அவர் ஊக்க மருந்தை உட்கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் ரைடருக்கு 6 மாதம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடை அமுலுக்கு வந்தது. அக்டோபர் மாதத்தின் அவரது தடை முடிகிறது. அதன்பிறகு அவரால் விளையாட முடியும்.

29 வயதான ரைடர் 18 டெஸ்டில்1269 ரன் எடுத்துள்ளார். சராசரி40.93 ஆகும்.39 ஒருநாள் போட்டியில் 1,100 ரன் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

வலிப்பு நோயால் பாதிப்பு – உமர் அக்மல் மருத்துவமனையில்!

umarபாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். இவர் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் கரீபியன் ´லீக்´ போட்டியில் விளையாட சென்றபோது விமானத்தில் சுய நினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார்.

ஆண்டிகுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. வலிப்பு நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உமர் அக்மலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. வெஸ்ட்இண்டீசில் இருக்கும் அவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் சூர்யா பாடிய முதல் பாடல் (வீடியோ இணைப்பு)..!

suryaநடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் முழு உலகையுமே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது. அதன்பின்னர் அண்மையில் சிவகர்த்திகேயன் பாடும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வரிசையில் தற்பொழுது சூர்யாவும் இணைந்துள்ளார்.

“கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே..” எனத் தொடங்கும் இந்தப் பாடலை அவர் பாடும் வேளையில் பாடகர் கார்த்திக், பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டோர் அருகில் இருப்பதைக் காணலாம்.

தொண்டமான் – திகாம்பரம் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல்..!

partyஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அந்த குழுத் தாக்குதலின் போது, சுமார் 200 பேர் வரை கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், காரியாலத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கலகத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் 2 பொலிஸார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ளனர்.

இதுதவிர, கொட்டகலையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் வேட்பாளர் ஒருவரது வீடும் தாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை பொகவந்தலாவையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலயமும் ஒரு கும்பலாம் தாக்கப்பட்டதாக அந்த கட்சி சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று ஹட்டன் – திம்புலபத்தனை – கொமர்சல் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த மோதல் நிலை தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவத்தில் 14 வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு பின்னர் நேற்றிரவு 9 மணியளவிலும் தமது காரியாலயத்திற்கு சிலர் தாக்குதல் மேற்கொண்டு சேதம் ஏற்படுத்தியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உடமைகள் மற்றும் சில வாகனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடக்கூ​டாது: மலேசியத் தமிழர்கள் போராட்டம்..!

madrasமலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட “மெட்ராஸ் கபே” படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில்,

மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்ச உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களின் போராட்டம் வலுத்துள்ளது. இப்போது மெட்ராஸ் கபே திரைபடத்தை எதிர்த்து மலேசியா தமிழர்களும் போராட்டத்தில் குதித்து தொடர்ந்து அதே போல் இங்கிலாந்திலும் சினி வேர்ல்ட் நிறுவனத்திடம் மெட்ராஸ் கபே படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனால் தினமும் சினி வேர்ல்ட் நிறுவனத்திற்கு பல அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கனடா நாடு டொரோண்டோவில் தமிழர்கள் இப்படத்தை திரையிடக்கூடாது என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்சும்..!

iphoneஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது.

இதில் ஆண்டுக்கு குளிர்சாதனப்பெட்டி 322 kWh (கிலோவாட் ஹவர்)மின்சாரத்தை பயன்படுத்துவதும், ஐபோன் 361 kWh மின்சாரத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் மின்சாரத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் 10 சதவிகிதத்தை எடுத்துக் கொள்வதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்கம்பியற்ற இணைய இணைப்புகள் (Wireless Broadband) இந்த மின்சார பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும்.

தகவல் தொடர்புத் துறை நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே பெரிதும் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய உதவினார் – முஷாரப் மீது குற்றச்சாட்டு..!

musharafபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடத்திய முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சிறை வைத்தது உட்பட பல்வேறு சதி வழக்குகள் உள்ளன.

இதனையடுத்து நெருக்கடி முற்றவே இவர் சவுதியிலும், லண்டனிலும் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வந்த முஷாரப் மீதான வழக்கின் விசாரணை தொடங்கியது.

இதனை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொலைக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும், கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முஷாரப் மறுத்துள்ளார்.

இவருடன் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை 27ம் திகதி மீண்டும் நடக்கிறது.

கடந்த 2007 ல் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெனாசீர் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் ரகளை செய்த பனேசர் அணியிலிருந்து நீக்கம்..!

panesarகுடிபோதையில் ரகளை செய்த பனேசர், சசக்ஸ் கவுண்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொன்டி பனேசர்(வயது 31) இந்திய வம்சாவளி வீரர் ஆவார்.

இவரது மோசமான பார்ம் காரணமாக ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை.

சமீபத்தில் கடந்த 5ம் திகதி போதையில் இரவு கிளப் காவலாளிகள் மீது சிறுநீர் கழித்து மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து பனேசருடனான, சசக்ஸ் கிளப் ஒப்பந்தத்தை முடித்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் சசக்ஸ் அணியில் விளையாடி வருகிறேன்.

இந்த போட்டிகளில் எனது திறமையை வெளிப்படுத்தியதால், இங்கிலாந்து அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த ஆண்டு களத்துக்கு வெளியே நடந்த சில செயல்களால் ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்காக எனது சசக்ஸ் கிளப் நிர்வாகம் நண்பர்களிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எந்த அணியில் விளையாடுவது எனும் தெரிவு வீரர்களுக்குக் கிடையாது – சங்கக்கார..!

sangaசம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இந்தியன் பிறீமியர் லீக் அணியிலா அல்லது தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியையா பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற தெரிவு வீரர்களுக்குக் கிடையாது என இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் குமார் சங்கக்கார பங்குபற்றிய இரண்டு அணிகளான சண் றைசர்ஸ் ஹைதராபாத், கந்துரட்ட அணி ஆகியன தகுதிபெற்றுள்ளன.

இதில் எந்த அணியில் குமார் சங்கக்கார பங்குபற்றுவார் என்ற சந்தேகம் காணப்படும் நிலையில், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, இது தொடர்பான முடிவை எடுக்கும் தெரிவு வீரர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டார்.

இந்தியன் பிறீமியர் லீக் ஒப்பந்தத்தின் படி சம்பியன்ஸ் லீக் தொடருக்கு வீரரொருவரின் இரண்டு அணிகள் தகுதிபெற்றால், அந்த வீரரினைத் தெரிவுசெய்யும் முதன்மைத் தெரிவு ஐ.பி.எல் அணிக்கே காணப்படும். இதனடிப்படையில் குமார் சங்கக்கார தொடர்பான தெரிவை சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணியே எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

குமார் சங்கக்காரவை சண் றைசர்ஸ் அணி தெரிவு செய்தால் அவ்வணி சார்பாக குமார் சங்கக்கார பங்குபற்றுவார் என்பதோடு, கந்துரட்ட அணிக்கு 150,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அவ்வணியால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் 17 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்..!

hangஈராக் நாட்டின் சிறைக்கைதிகளில் 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக நேற்று அந்நாட்டின் அரசு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமைக் கழகங்களின் தொடர் வேண்டுதலையும் ஒதுக்கிவிட்டு ஈராக் இந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அரசு இணையதளத்தில் நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈராக் நாட்டவர் 15 பேருக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மக்களுக்கு எதிரான தீவிரவாதக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளியும் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக தூக்கு தண்டனையைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருவர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த செய்தியில் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தினைப் பற்றிய தகவல் தரப்படவில்லை. இந்தத் தீர்ப்பினையும் சேர்த்து இதுவரை, இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 67 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டில்,ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளின் உதவியுடன் பதவி இறக்கம் செய்யப்பட்டபின், அந்நாட்டில் மரணதண்டனைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2004ஆம் ஆண்டு மாற்று அரசாங்கம் அமைந்ததிலிருந்து மீண்டும் இத்தகைய தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் ஈராக் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பொது மன்னிப்பு சபையின் கருத்துப்படி, மரண தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஈராக் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. சீனா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. குற்றவாளிகளுக்கு நியாமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து அமெரிக்காவின் மனித உரிமைக் கழகமும் கேள்வி எழுப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹாக் செய்த பாலஸ்தீனர்..!

markபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹாக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com)இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன்.

அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பக்(bug) மூலம் ஒரு பேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall)எழுத முடிகிறது. நான் சாரா குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டாப்ஸிக்கு பிடித்தது எது?

tapseeநான் பேட்மின்டனின் தீவிர ரசிகை என்கிறார் நடிகை டாப்ஸி.

பெரும்பாலான நடிகர், நடிகைகள் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பார்கள்.

இதில் காஜல், திவ்யா ஆகிய இருவரும் பிரபல வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் விளையாட்டை ரசிப்பதற்காக சமீபத்தில் லண்டன் சென்று திரும்பினர்.

ஆனால் இவர்களில் சற்று வித்தியாசமானவர் டாப்ஸி.

இவர் பேட்மின்டனின் தீவிர ரசிகையாம்.

சென்ற வாரம் ஐதராபாத்தில் வீராங்கனை சாய்னா தலைமையில் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியினை நேரில் கண்டு ரசித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம் டாப்ஸி.

இந்தி வரைக்கும் பரவிய அமலாபாலின் புகழ்..!

amalaபாலிவுட்டில் புகழ் பரவியதால் அளவிட முடியாத மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை அமலாபால்.

தமிழில் மைனா படத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் அமலாபால்.

இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த தலைவா படமானது தமிழகத்தில் பல சிக்கல்களை சந்தித்து தற்போது வெளியாவற்கு தயாராகிவிட்டது.

மேலும் அமலாபால் தெலுங்கில் நடித்த பெஜவாடு ரவுடிலு என்ற படம் ஆந்திராவில் படு ஹிட்டானது.

இதனை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டார்களாம். போன இடத்திலும் ரசிகர்களின் ஆதரவை அள்ளியுள்ளது பெஜவாடு.

இந்தி வரைக்கும் நம்ம புகழ் பரவிடுச்சே என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் அமலாபால்.

மீண்டும் பரபரப்பை உண்டாக்கும் ஆர்யா-நயன்தாரா திருமணக் கோல படங்கள்..!

nayantharaஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படத்தின் விளம்பர ஸ்டண்டுகள் நயன்தாரா, ஆர்யா திருமணம் பற்றியதாகவே தொடர்ந்து இருக்கிறது.

ஆர்யாவும் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என்ற ஒரு கிசுகிசு சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டு இந்த விளம்பரங்களை வடிவமைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் அட்லீ.

கடந்த சில சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஆர்யா, நயன்தாரா மேடையில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று விளம்பரம் செய்து அதையே படத்தின் புரமோஷனாக்கினார்கள்.

பிறகு மேடையில் இருவரையும் அழைத்து ராஜாராணி படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு ஆளுக்கொரு பல்பு கொடுத்தார்கள்.

படத்தின் ஆடியோ வருகிற 23ந் திகதி நடக்க இருக்கிறது. அதற்காக இன்று பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் வருவது போன்ற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ மணப்பெண் போல அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விளம்பரம் எல்லா விளம்பரத்தையும்போல சாதாரணமாகத்தான் கவனிக்கப்பட்டிருக்கும். இது தொடர்பாக இயக்குனர் அட்லி மீடியாக்களுக்கு அனுப்பி உள்ள மெயிலில் இதற்கான விளக்கத்தை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.

அதில் “வேண்டுமென்றேதான் இந்த படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்பு செய்தது திருமண பத்திரிக்கை என்றால் இது திருமண ஆல்பம்” என்று கூறியிருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் ஆடியோ வெளியீட்டில் நிஜ திருமணத்தை நடத்தி விடுவார்கள் போலிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாரா, ஆர்யாவுடனான காதலை உறுதி செய்யப்போகிறார். அல்லது பகிரங்கமாக மறுக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதி.