தீபாவளி ரேசில் முந்திய ஆரம்பம்..!

arambamதீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே வெளியாகவுள்ளது அஜித்தின் ஆரம்பம்.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆரம்பம்.

அஜித்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளி சரவெடியாக திரையில் வெடிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் தீபாவளி தினமான நவம்பர் 2ம் திகதி வெளியிடாமல் அதற்கு முன்னதாக அக்டோபர் 31ம் திகதியே படத்தை வெளியிடுகின்றனர்.

மங்காத்தா வெற்றிப் படத்துக்குப் பிறகு அஜித் ஆரம்பம் படத்தின் மூலம் சரவெடியாக வந்து ரசிகர்களை அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க கோரி முற்றுகை போராட்டம்..!

commonபொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலதலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொதுநலவாய மாநாடு வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுநலவாயத்தின் அடிப்படைகளுக்கே எதிரானதாகும். சுதந்திரம், ஜனநாயகம் இவற்றை அடிப்படையாக கொண்டுதான் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படைகளுக்கு விரோதமாக செயல்பட்ட பல்வேறுநாடுகள் இந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப்பிறகும் தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளையும் இதைபகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலை குற்றங்களுக்காக சர்வேதேச சமுகத்தால் தண்டிக்கப்படவேண்டிய நிலையில், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவது இலங்கைக்கு உதவி செய்வதாகவும், காப்பாற்றுவதாகவும் மட்டுமின்றி இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும். இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றால் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய அமைப்பிற்கு ராஜபக்ஷ தான் தலைவராக இருப்பார் என்பதை சிந்தித்தால் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்பதின் நியாயம் புரியும்.

பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா அந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது. கனடாவை விட தமிழர்களின் இப்பாரிய பிரச்சனையில் அதிககடைமையுள்ள இந்தியா மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இப்பிரச்சாரத்தை பிற நாடுகளிடமும் முன்னெடுத்து செல்லவேண்டும். மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடுநடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும்போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் தேச பொதுவுடைமைகட்சியின் தோழர் தியாகு அவர்கள் தனது உடல் நிலையையும் உயிரின் மதிப்பையும் கருத்தில் கொண்டு வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தக்கூடாது இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடைபெற்றால் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை 12.10.2013 எஸ்.டி.பி.ஐகட்சியின் சார்பாக சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு தமிழின சொந்தங்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவா…? வேண்டவே வேண்டாம்: ஜீவா..!

nasநய்யாண்டியில் தம்மாத்தூண்டு தொப்புள் விவகார்ததை பப்ளிசிட்டிக்காக நஸ்ரியா ஊதியபோதே, இது ஊத்திக்கிற கேசு என கோடம்பாக்கம் ஆரூடம் சொன்னது.

அது இப்போது நிஜமாகத் தொடங்கிவிட்டது. நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்யக் காத்திருந்த ஜீவா, இப்போது அவர் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம்.

நஸ்ரியா நடித்து இரண்டு படங்கள் வந்திருக்கின்றன. இரண்டில் ராஜா ராணியில் இவருக்கு பிரதான வேடம்கூட இல்லை.

ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட ஏழு தமிழ்ப் படங்களில் நஸ்ரியா ஒப்பந்தமானார்.

குறிப்பாக தனுஷ் ஜோடியாக நய்யாண்டியில் அவர் ஒப்பந்தமானதுமே, வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதற்கெல்லாம் அவரே சூனியம் வைத்துக் கொண்டார்.

நய்யாண்டி விவகாரத்தில் அவர் பொலிஸ், வக்கீல் என தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், இனி பிரஸ் மீட் வைக்கவே கமிஷனர் ஆபீசுக்குத்தான் போகணும்போல என முணுமுணுக்க ஆரம்பித்தனர் அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள்.

இப்போது எதற்கு வம்பு என்று, நஸ்ரியா வேண்டவே வேண்டாம்… அப்படியே போர்த்தி அனுப்பி வைய்யுங்க என்று ஒருவருக்கொருவர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இவரை தன் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய கடந்த ஒரு மாதமாகக் காத்திருந்த ஜீவா, இப்போது நஸ்ரியா வேண்டவே வேண்டாம். வேறு நாயகியை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம்.

கோச்சடையான் – ரஜினி கஸ்டப்பட்டு ஆடிய பரத நாட்டியம்..!

rajiniரஜினி, தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள ´கோச்சடையான்´ படத்தினை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வரும் படம் என்பதால் படத்தில் நிஜ ரஜினியை பார்க்க முடியாதா என இரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.

பார்ப்பதற்கு அனிமேஷன் படம் போல இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை ஒரிஜினலாகவே ஷூட் செய்தார்களாம். குறிப்பாக, ரஜினியின் நடனம், சண்டை போன்ற காட்சிகளில் ரஜினியே கஷ்டப்பட்டு நடித்தாராம்.

இந்தப் படத்துக்காக ரஜினி ஆடியுள்ள பரத நாட்டியம் இரசிகர்களை வெகுவாகக் கவரும் என்கிறார்கள். உடல்நிலை சரியான பிறகு ரஜினி மிகுந்த பயிற்சியுடன் இந்த நாட்டியத்தை ஆடினாராம்.

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: மன்னார் ஆயர் வேண்டுகோள்..!

josephஇலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்குமாறு மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசியல் எதுவும் இல்லை. இலங்கையின் கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையில் வரும் தமிழக மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்கின்றனர்.

இதன் காரணமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் தமிழக மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இலங்கை மீனவர்கள் தம்மாலான நடவடிக்கைகள் யாவற்றையும் எடுத்தனர். எனினும் எதுவும் பயன்தரவில்லை.

எனவே இது தொடர்பில் தமிழக முதல்வரும், கருணாநிதியும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மன்னார் ஆயர் கோரியுள்ளார்.

விக்னேஸ்வரன் இலங்கையின் அரசியலமைப்பை மீறியுள்ளார்: ஹெல உறுமய..!

wikiவடக்கின் முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த செயலின் மூலம், தாம் இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிப்பதாக வடக்கு மாகாணசபை இந்தியாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கை ஜனாதிபதியின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தபோது இலஙகையின் அரசியலமைப்புக்கு எதிராக செயற்படமாட்டேன் என்று உறுதியளித்தார்.

எனினும் அடுத்த சில மணித்தியாலங்களிலேயே அவர் அதனை புறக்கணித்துள்ளதாக வர்ணஸ்ரீ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த செயலின் மூலம் இலங்கையில் தனிநாடு ஒன்றை இந்தியாவின் உதவியுடன் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் வழிகோலியுள்ளதாக வர்ணஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி சென்ற படகு விபத்து: 12 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலி..!

italyஇத்தாலியில் குடியேற சென்றவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

மால்டா மற்றும் சிசிலி கடற்பகுதியில் நேற்று சுமார் 150 பேரை ஏற்றிய படகு இத்தாலியின் லம்படுசா தீவு நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக வீசிய சூறைக்காற்றில் தடுமாறிய படகு கடலுக்குள் கவிழ்ந்தது.

அவ்வழியாக இத்தாலிய ரோந்து படகில் சென்ற வீரர்கள் அளித்த தகவலின் பேரில் படகுகளிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்த மீட்புபடையினர் சுமார் 100 பேரை மீட்டனர்.

12 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட சடலங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன.

கடந்த வாரம் லிபியாவில் இருந்து இத்தாலியில் கள்ளத்தனமாக குடியேற முயன்றவர்கள் வந்த படகு லம்படுசா தீவின் அருகே கவிழ்ந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

சஜித், கரு, ரணில் இணைந்து பேச்சுவார்த்தை..!

ranilஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

கட்சியை மீளவும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – எச்சரிக்கை..!

seaயாழ்ப்பாணத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளுக்கும் இன்று 12 மணிநேர நீர் வெட்டு..!

waterகொழும்பு மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பபட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, சித்தம்பலம் ஏ காடினர் மாவத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும், கொழும்பு துறைமுகம், டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளுக்கும், 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் ரத்மலானை பகுதிகளுக்கு இன்று இரவு 9.00 மணிமுதல் ஞாயிறு காலை 5.00 மணிவரை 8 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

வடமாகாண அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வை புளொட் ஏன் பகிஷ்கரித்தது?

ploteவடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை பகிஷ்கரித்தமை தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கமளித்துள்ளது.

இவ்விடயம் குறித்து புளொட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது?

வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது – ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம்.

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான நியமனங்களின் போது, ஒரு கூட்டு அரசியல் தலைமைத்துவதற்கிற்கான ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாமையானது எதிர்காலத்தில் வடமாகாணசபையை, ஒரு அரசியல் தீர்விற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில், பல்தரப்பு உடன்பாட்டை காண முடியாத நிலைமையை தோற்றுவிக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜந்து கட்சிகள் இருந்தும், வடமாகாணசபை நிர்வாக முடிவுகளில், ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய ஏது நிலையே காணப்படுகிறது.

ஜந்து கட்சிகளின் பொது உடன்பாட்டின் பேரில், வடமாகாணத்திற்கான முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்ட, திரு.விக்னேஸ்வரன், அந்த உடன்பாட்டிற்கு மாறாக, வெறும் கட்சி மனோபாவ அரசியலுக்குள் முடக்கப்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

திரு, விக்னேஸ்வரன், மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யாது விட்டால், வடமாகாணசபையை ஒரு இறுதி அரசியல் தீர்வு நோக்கி முன்கொண்டு செல்வதில் நாம் தோல்வியடைய நேரிடலாம். நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான், அரசாங்கத்தின் விருப்பமும் கூட.

எனவே வடமாகாணசபையில் ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதானது, அதன் இறுதி அர்த்தத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில், காரணங்களை தேடியலையும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசியல் நிகழ்சி நிரலை வலுப்படுத்துவதில் முடிவுறும்.

இறுதியில் நாம், எமது மக்களுக்களித்த வாக்குறுதிகளை, ஆகக் குறைந்தளவு கூட நிவர்த்தி செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்படுவோம்

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில், எமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, எமது அமைப்பு மேற்படி பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்திருந்தது. உரியதை உரிய நேரத்தில், சுட்டிக் காட்டும், மக்கள் நலன்சார் அரசியல் வேலைத்திட்டமாகவே, நாம் மேற்படி பகிஸ்கரிப்பை கருதுகிறோம்.

ஏனெனில் தலைவர்கள் வென்று கொண்டிருப்பதல்ல அரசியல், எங்களை நம்பும் மக்களை வெல்ல வைப்பதே அரசியல். அந்த வகையில், இறுதி அரசியல் தீர்வொன்றுதான், நாம் நேசிக்கும், அந்த மக்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரே வழியாகும். அந்த உயரிய நோக்கில் எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் நாம் பங்கேற்காமை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் வட மாகாண சபையின் வருங்கால செயற்பாடுகளை பாதிக்காது என்பதுடன் வட மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது முழுமையான ஆதரவினையும் கொடுப்போம்.

ஆசை நாயகிகளால் சிக்கலில் தவிக்கும் சீன அரசு அதிகாரிகள்..!

chineseதாங்கள் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தபோது கிடைத்த பணத்தில் அனுபவித்த ஆசை நாயகிகளின் தொடர்பு இப்போது பல சீன அரசாங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டிவிடுகின்றது.

அதிகாரிகளுடன் தாங்கள் அனுபவித்த உல்லாச வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக் காட்சிகளையும் வெளியிடுவது தற்போதைய சீன அரசியலில் புதுத்திருப்பமாக உள்ளது. சீன அரசாங்கத்தின் லஞ்ச ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளும் இது போன்ற தொடர்பு வைத்திருப்பவர்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஊழலை ஒழிக்க தங்களின் பங்களிப்பைத் தரும்படி அவர்களை ஊக்குவிக்கின்றார்கள்.

ஜி இன்ங்னான் என்ற 26 வயதுப் பெண் தன்னுடன் உல்லாசமாக இருந்த பான் யூ என்ற அரசு அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டது அவரது பணி நீக்கத்திற்கும்,அரசு விசாரணைக்கும் வழி கோலியுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த அதிகாரியுடன் வர்த்தக வளாகம் ஒன்றில் தான் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதையும்,தனியார் நீச்சல்குளம் ஒன்றில் இருவரும் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததையும் வேறு அந்தப் பெண் புகைப்படக்காட்சிகளாக வெளியிட்டுள்ளார்.

அந்த அதிகாரி தனக்கு தினசரி செலவிற்கு 1000டாலர்களும் வெளியில் சென்றுவர ஒரு உல்லாசக் காரும் கொடுத்திருந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் அவர், பான் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பியதாகக் கூறினார். அவர் தன்னை ஏமாற்றியதால் லஞ்ச ஒழிப்புத்துறையையும் அணுகியதாகவும், அங்கும் பலன் கிடைக்காததால் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் எரிசக்தித்துறையில் உயர் அதிகாரியாக இருந்த லியு டினன் வங்கிகளில் 200 மில்லியன் டாலர் ஏமாற்றியது அவரது ஆசைநாயகி வெளியிட்ட புகைப்படங்களால் அம்பலத்துக்கு வந்தது.

மற்றொரு அரசு உயர் அதிகாரியான லி சென்க்பு, தன்னுடைய பணிக்காலத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது இணையதளத்தில் ஆறு வீடியோத் தொகுப்புகளாக சென்ற வருடம் வெளிவந்தது. இதன் விளைவாக அவர் விசாரணை முடிவில் சிறைத் தணடனையை அனுபவிக்க நேர்ந்தது.

மீரா ஜாஸ்மினின் காதல் ரகசியம்..!

meeraஇன்றும் தனது ரகசிய காதலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார் கேரளத்து பைங்கிளி மீரா ஜாஸ்மின்.
ரன், சண்டக்கோழி, ஆய்த எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

இவருக்கும், மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை பேச்சுவார்த்தை சென்றது.

ஆனால் ராஜேஷின் குடும்பத்தினர் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர் மல்லுவுட்டில் நட்சத்திர கலைவிழாக்களில் பங்கேற்கவில்லை என்பதற்காக சில பிரச்னைகளை எதிர்கொண்டார்.

தற்போது பிரச்சனைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் மீராவின் காதல் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இருவரின் காதல் எந்த நிலையில் உள்ளது என்று கேட்டால், இருவரும் சிக்கலான நேரங்களை சந்தித்தது உண்மை, ஆனால் அது எங்களை பிரியும் அளவுக்கு கொண்டு செல்லவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

வெகு சிறப்பாக நடைபெற்ற கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலத்தின் வாணி விழா (படங்கள்)..!

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இன்றையதினம் வாணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் வழிபாட்டு நிகழ்வுகளும் அதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(படங்கள் : பிரதீபன்)

1 2 3 4 6 7

வவுனியா கூமாங்குளம் பொது நுலகத்தில் இன்று நடைபெற்ற வாணி விழா (படங்கள்)..!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூமாங்குளம் பொது நுலகத்தில் இன்றையதினம் வாணி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

koomankulam1 koomankulam2

(படங்கள்: பிரதீபன்)

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை: சூர்யா..!

suryaகௌதம் மேனன் இயக்குவதாக அறிவித்த துருவநட்சத்திரம் படத்திலிருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார் சூர்யா.

கௌதம் மேனன் இயக்கப்போகும் துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக கொலிவுட்டில் தண்டோராக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதனை உறுதி செய்யும் வகையில் சூர்யாவும் ஒத்துக்கொண்டு அறிவிப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை என்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் சூர்யா.

இதுகுறித்து நேற்று மாலை அவர் விடுத்த அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதம் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது.

இது அனைவரும் அறிந்த செய்தி, பல்வேறு காரணங்களால் நாங்கள் இருவரும் இப்போது இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில் நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்புக்குச் செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாகக் கருதுகிறேன்.

இயக்குனர் கௌதம் என்னுடைய இந்த கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம்.

இதையே ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம், ஆனால் ஒப்பந்தம் செய்து ஒரு வருட காலம் கழிந்த பிறகும் கௌதம் அவர்கள் இன்னும் முழு கதையை என்னிடம் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

சிங்கம் -2 படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழு கதையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார், நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன்.

மீண்டும் ஒரு டெஸ்ட் ஷுட் செய்து கெட்டப் மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும் கௌதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன்.

பல மாதங்களாக படப்பிடிப்பு போகாமல் வீட்டில் காத்திருக்கிறேன். கௌதம் அவர்களிடமிருந்து நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக் கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே கௌதம் அவர்களின் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திற்கு பூஜை போட்டு ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை.

இப்போது இந்த படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது. ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பிறகு இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

நானும், கௌதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது.

இந்த நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன். ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது.

நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள் எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன. நட்பின் அடிப்படையில் கௌதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன்.

இனி நாங்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கௌதம் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.