தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

dravid

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக உள்ளார். இத்தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, டிராவிட் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டனர்.

இது குறித்து டிராவிட் கூறுகையில் ஐ.பி.எல் தொடர் சூதாட்டத்தினால் ஏற்பட்டுள்ள சூழல் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது. இதனால் கிரிக்கெட் வீரர்களின் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு, மதிப்பு ஆகியவை குறைந்துவிடும்.

இப்போட்டியின் மீது ரசிகர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு வாரியம் அல்லது அரசு என்று யாராக இருந்தாலும் சரி பாகுபாடு பாராமல் உதவ வேண்டும் என்றார்.

தவறான கருத்து:

இந்த பேட்டி குறித்து டிராவிட் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் தெரிவித்த கருத்துக்களை சில ஊடகங்கள் தவறான பொருள்பட வெளியிட்டது ஏமாற்றம் தருகிறது.

நான் குறிப்பிட்ட நம்பகத்தன்மை குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. எனது முழுமையான பேட்டி இன்று வெளியாகிறது. அதுவரை எல்லோரும் பொறுத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எடையைக் குறைக்க இலகுவான 7 வழிகள்!!

weight

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்
“அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது.

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்
“நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடீத்தென்” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட மதியம் சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. நான் குண்டு என்று யோசிப்பதை தவிர்க்கவும்
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம் உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்.

காதலியின் 2 மாத குழந்தையை இணையத்தில் 6,000 ரூபாவிற்கு விற்க முயன்றவர் கைது!!

online-header

அமெரிக்காவில் காதலியின் 2 மாத பெண் குழந்தையை இணையத்தில் 6,077 ரூபாவிற்கு விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்தவர் போல் மார்கெஸ்(22).

அவருக்கு ஒன்லைனில் பழக்கமானவர் கேட்டி டெவால்ஸ். போல் கர்ப்பமாக இருந்த கேட்டியுடன் சில முறை டேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் கேட்டிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து கேட்டி குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டார். இதனால் கடுப்பான போல் இணையத்தில் குழந்தையை கேட்டியே விற்க விரும்புவது போன்று அதுவும் ரூ6,077க்கு விற்க விரும்புவதாக ஒரு விளம்பரத்தை கொடுத்தார்.

மேலும் தொடர்புக்கு கேட்டியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். இந்த விளம்பரத்தை பார்த்து குழந்தையை வாங்க விரும்பிய ஒரு பெண் கேட்டியை தொடர்பு கொண்டபோது தான் அவருக்கு விஷயம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் இது குறித்து போல் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பாலை கைது செய்தனர்.

பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை மரணம்!!

logan

அமெரிக்காவில் பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை புற்றுநோயால் நேற்று மரணம் அடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷான் ஸ்டீவன்சன். அவரது காதலி கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ.

அவர்களுடைய குழந்தை லோகன் ஸ்டீவன்சன்(2). லோகன் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தான். அவனுக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை. இந்நிலையில் கடந்த மாதம் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் லோகன் இன்னும் சில வாரங்களில் இறந்துவிடுவான் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த ஷான், கிறிஸ்டீன் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் லோகன் தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.

இந்நிலையில் லோகன் நேற்று இறந்துவிட்டான். இது குறித்து கிறிஸ்டீன் பேஸ்புக்கில் கூறுகையில், லோகன் என் கைகளில் இறுதி மூச்சை விட்டான். அவனுக்கு இனி வலி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்!!

Murder_title

ஒம்லெட் போட வெங்காயம் நறுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப் பட்டுள்ளான். வீட்டுச் சண்டை விபரீதத்தில் கொண்டு போய் விட்டதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய உதாரணம்.

புனே அருகில் உள்ள தஹெர்கான் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் 31 வயதாகும் சுபாஷ் குமார். இவருக்கு மணமாகி விட்டது. சம்பவத்தன்று, ஒம்லெட் கேட்டுள்ளார் சுபாஷ்.

ஆனால் அவரது மனைவியோ ஒம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை கொலை செய்து விட்டார் சுபாஷ்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுபாஷை கைது செய்தனர். அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அற்ப காரணாங்களுக்காக போடப் படும் குடும்ப சண்டைகள் சில நேரங்களில் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

யூடியூப்பில் வெளியான அஜித்தின் ஆரம்பம் பட காட்சிகள்..(வீடியோ)

அஜித் நடித்து வரும் ஆரம்பம் படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும் அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆனால், என்னுடைய படக்குழு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி தரவரிசையில் குமார் சங்கக்கார முன்னேற்றம்!!

sangakara

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கெதிரான 5 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார 93 என்ற சராசரியில், 107.51 என்ற அடித்தாடும் வேகத்தில் 372 ஓட்டங்களைக் குவித்து அத்தொடரில் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.

இத்தொடர் ஆரம்பிக்கும் போது 776 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் காணப்பட்ட குமார் சங்கக்கார, தனது கிரிக்கெட் வாழ்வில் பெற்ற அதிக புள்ளிகளான 829 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்ட சுனில் நரைனோடு இணைந்து ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இலங்கையின் ரங்கன ஹேரத் 11ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கையின் திலகரட்ண டில்ஷான் 4ஆவது இடத்திலும், அஞ்சலோ மத்தியூஸ் 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர். முதலிடத்தில் ஷகிப் அல் ஹசன் காணப்படுகிறார்..

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!

arrest1நடனப் பாடத்திற்காக இடம்பெற்ற பரீட்சையில் தங்கைக்காக அக்கா பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தங்கையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்திற்கு மேல் தனது புகைப்படத்தை ஒட்டி குறித்த யுவதி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

குறித்த யுவதி பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்பவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி எம்பிலிபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

vavuniyaஇலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின் பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில் அறியாமலேயே பலர் இருக்கின்றனர்.

மருத்துவ பரிசோதனைகளின் மூலம் நோயாளியைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஹெலிகள் பறக்கத் தடைவிதித்தது ஜப்பான் அரசு..!

vavuniyaஜப்பானின் தென்புறத் தீவான ஒகினாவில் அமெரிக்காவின் ராணுவத் தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்த கடேனா விமான தளத்திலிருந்து 4 பேர் குழுவினருடன் நேற்று வானில் பறந்த எச்எச்-60 ரக மீட்புப்பணி ஹெலிகொப்டர் ஒன்று கேம்ப் ஹன்சன் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

விபத்துக்கான காரணம் சரிவரத் தெரியாத நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் தப்பித்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஜப்பானிய உள்துறை அமைச்சர் இட்ஸ்சுநோரி ஒனதேரா நேற்று தெரிவித்திருந்தார்.

ஆனால் 4 பேரில் ஒருவரைக் காணவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையின் தகவல் அறிக்கை பின்னர் வெளியாகி இருந்தது. இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக ஜப்பான் அரசு இந்த விபத்துக்கான விசாரணையைத் துவக்கியுள்ளது. அதேபோல்,விபத்துக்கான காரணங்களை முற்றிலும் அறிந்து கொள்ளாமல் இத்தகைய ஹெலிகொப்டர்களை அமெரிக்க ராணுவம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தினை அமெரிக்க ராணுவத் தலைமையகத்திற்கு தெரிவித்து விட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஒனதேரா இன்று கூறியுள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கடித்துக் குதறிய மலைப்பாம்பு!

vavuniyaவளர்ப்பு கடையில் இருந்து தப்பிச் சென்ற மலைபாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்துக் கொன்ற சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கனடாவில் உள்ள சிறிய நகரமான கேம்ப்பெல்டன் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் வகைகள் விற்பனை செய்யும் பெட் ஷாப் உள்ளது. இந்த கடையின் கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மலைபாம்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொட்டியை விட்டு தப்பி வெளியே வந்தது.

கடையின் ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடிக்கு ஊர்ந்து சென்ற பாம்பு, அங்குள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் குதறி கொன்றது.பலியான சிறுவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வீட்டினுள் சுருண்டு கிடந்த பாம்பை வனவிலங்கு காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்து,இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக உயிரியல் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

தனக்கு ஆபத்து நேரும் போது தான் பாம்புகள் எதிராளியை தாக்கும். தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் கொன்றது என்பதை ஏற்பதற்கில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பாம்புக்கு இருக்கும் பசியை பொறுத்தும் இரையின் மேல் இருந்து வரும் வாசனையை பொறுத்தும் சில பாம்புகள் இதைப்போன்ற தாக்குதலில் ஈடுபடலாம் என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர். எனினும், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே எதையும் உறுதிபடுத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

விஜயை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் : பிரபுதேவா!!

vijay

நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நடிகராக அவதாரமெடுத்து பின் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் ஆகிய படங்களை இயக்கியவர் பிரபுதேவா. இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தி சினிமாவில் பிசியாக இருக்கும் பிரபுதேவா சென்னையில் அளித்த பேட்டி வருமாறு..

தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதை. இப்படத்தில் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். நான் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. எனது சினிமா படவேலைகள் மும்பையில் இருப்பதால் அதிக நாட்கள் அங்கு இருக்கிறேன். ஆனாலும் சென்னைதான் என் வீடு. என் இரு மகன்கள் சென்னையில் உள்ளனர். இருவரும் அவர்களின் தாயுடன் வசிக்கிறார்கள்.

எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து குழந்தைகளை பார்க்கிறேன். அவர்களுக்கும் நேரம் கிடைக்கும் போது மும்பை வருகிறார்கள். விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்புகள் அமையும் போது படம் எடுப்பேன என்று பிரபுதேவா கூறினார்.

சேரன் மகள் தாமினி வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!!

seran

இயக்குனர் சேரனின் மகள் தாமினி தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதேசமயம் தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று சேரன் மன்றாடி வருகிறார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. தாமினியிடம் கவுன்சிலிங் நடத்தியபோது அவர் தன் காதலனுடன் செல்லவே விரும்பினார். விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் அவ்வாறே கூறினார்.

இருப்பினும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. தாமினி மேஜர் என்பதால் அவரை காப்பகத்தில் இருந்து அழைத்து வந்து மூத்த வழக்கறிஞர் பிரசாத்தின் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது தாமினி தனது பள்ளி தாளாளர் வீட்டில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். அதனை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதையடுத்து தாளாளர் வீட்டில் தங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு..!

vavuniyaஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி அவுஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.

ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் கூறினார்.

தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும் சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.

ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.

53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற ஒகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும் கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

(BBC)

மருமகளை மகளாக பாவித்த மாமனார் : தோலை தானமாகக் கொடுத்து உயிர் காத்த அபூர்வம்!!

Father-and-daughter

தீக்காயத்தால் பாதிக்கப் பட்ட தனது மருமகளின் உயிரைக் காக்க தனது தோல் பகுதியைக் கொடுத்த மாமனாரைக் கண்டு மருத்துவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணமாகிப் போனாலே மாமனார், மாமியார் கொடுமை நிச்சயம் என அஞ்சும் பெண்களுக்கு இச்சம்பவம் சில நல்ல மாமனார்கள இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

அகமதாபாத்தில் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் மோனிகா ரதோட் (26). கடந்த மே மாதம் 26ம் திகதி தனது வீட்டில் மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார் மோனிகா. அப்போது அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்து விடவே சமையல் செய்யும் அவசரத்தில் அடுப்பை நிறுத்தாமலேயே மண்ணெண்ணயை அடுப்பில் ஊற்றியுள்ளார் மோனிகா.

இதில் எதிர்பாராவிதமாக அடுப்பு வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய மோனிகாவிம் முன்பக்க உடல் முழுவதும் தீக்காயம் ஆனது. அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் அது தோல் மாற்றுச் சிகிச்சை மூலமே சாத்தியம் என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

உடனடியாக, தனது மருமகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது தோலைத் தானமாகத் தர அவரது மாமனார் ஹிம்மத் சின்ஹா முன் வந்தார். இதைக்கேட்ட மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின்னர் ஹிம்மத்தின் தொடைத் தோல் பகுதியை எடுத்து, மோனிகாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோல் மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவர் விஜய் பாட்டியா கூறுகையில் எத்தனையோ அறுவை சிகிச்சைகளைத் தான் செய்திருந்தபோதிலும் மாமனார் மருமகளுக்காக சிகிச்சைக்கு உட்படுவது இதுவே முதன் முறையாகும் என்றார்.

மாமனாரின் தானம் குறித்து அறிந்த மோனிகா தனக்கு ஏற்பட்ட துன்பத்திலும் இத்தகைய மாமனார் கிடைத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார். விவசாயியான ஹிம்மத் மூத்த மருமகளான மோனிகாவை தன் மகளாக பாவித்ததினாலேயே அவரது உயிரைக் காப்பாற்ற இத்தகைய உதவி செய்ய முன்வந்ததாக கூறியுள்ளார்.

இறுதி 20-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி : தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது!!

srilanka

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20-20 போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டுப்லசிஸ் 85 ஓட்டங்களையும் டுமினி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக மகேல ஜெயவர்தன 33 ஓட்டங்களையும் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் திசார பெரேரா ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற போதும் தென்னாபிரிக்க அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. இன்றைய வெற்றியின் மூலம் இலங்கை அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக டில்ஷானும் தொடரின் நாயகனாக டுமினியும் தெரிவுசெய்யப்பட்டனர்.