கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துவரும் 30 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டுக்கு தேவையான கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த (E-Passport) அக்டோபர் வரை தாமதமானதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை முடிந்தவரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் சுமார் 1,300 கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டாலும், தற்போது அது 250 முதல் 300 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவசர தேவை இல்லாவிட்டால் ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழ்நிலை காரணமாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம் திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கத்திளை தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால், வரிகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதத்தின் காரணிகளுக்கு ஏற்ப இந்த வரி திருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய வாகனங்களை மாத்திரம் முதலில் இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து 4 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல் மற்றும் அசெர் உயிரிழந்துள்ளனர்.

கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் கணொளி போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.

 

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி : விசாரணையில் வெளியான தகவல்!!

கொழும்பு – அம்புல்கம, பனாகொட வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி மின்கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜல்தர, லெனகல பிரதேசத்தை சேர்ந்த தெனெத் சக்விதி என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான திடீர் மரண விசாரணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான தகவல்!!

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3,23,876 பரீட்சார்த்திகள் இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமிதா ஜயசுந்தர தெரித்துள்ளார்.

மேலும், இந்தாண்டு உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முடிவடையும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரித்துள்ளார்.

 

கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!!

புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி ரூபா 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 3 கஜமுத்துக்களுடன் மூவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 1கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட 3 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ள்ளன.

புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியையை அடித்த உப அதிபர் : நால்வர் கைது!!

பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக பாடசாலை உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் நேற்று (15) இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேரசூசி வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

அதே நேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்.

எனினும் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட அதிபர்,உப அதிபர் மற்று ஆசியர்கள், ஆரிசியை மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆசிரியையின் முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.

 

இரு பாடசாலை மாணவிகள் மாயம்!!

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நேற்று முன்தினம் (15) வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன மாணவிகளில் ஒருவர் பாட வேலைக்காக கடந்த 14 ஆம் திகதி வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவியொருவரின் வீட்டிற்குக் சென்றுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மறுநாள் (15) வியாழக்கிழமை காலை எழுந்து பார்க்கும் போது மாணவிகள் இருவரும் வீட்டில் இல்லாததை அறிந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா செல்லவிருந்த இளைஞன் மர்ம மரணம் : நீதிகேட்டு விதிக்கு இறங்கிய மக்கள்!!

முல்லைத்தீவு மல்லாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் க்டந்த ஜூலை 30 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது.

மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது. குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டகாரர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகள் முன்னெடுக்கபடாவிடின், தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும்,வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

வீதி ஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம் : விசாரணையில் பகீர் தகவல்!!

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பிங்கிரிய, மூகலன்ஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் ,விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். மகளின் கணவர் உயிரிழந்த பெண்ணை தேடிச் சென்ற போது நபர் ஒருவர் பெண் ஒருவரை தூக்கிச் செல்வதை பார்த்துள்ளார்.

மோட்டார் சைக்களில் வௌிச்சத்தில் குறித்த நபரை இனங்கண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் நேற்று சந்தேகநபரை கைது செய்து சிலாபம் பொலிஸில் ஆஜர்படுத்தினர். கைதான சந்தேக நபர் வீரபொகுன பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு : அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை!!

அனுராதபுரம், ஸ்ரீ புர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலக்கு வைக்கப்பட்டவருக்கு பதிலாக அப்பாவி இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் முறைகேடான கணவனை கொலை செய்வதற்காக வெளிநாட்டில் மறைந்திருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் கடத்தல்காரர் ஒப்பந்தம் ஒன்று வழங்கியுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின்படி வந்த துப்பாக்கிதாரிகள், கொலை செய்யவேண்டிய நபரை போன்று சாயலை கொண்ட இளம் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஸ்ரீ புரா பொலிஸார் தெரிவித்துள்ளது.

ஸ்ரீபுர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் விவசாயம் செய்து வந்த கே. டி. சந்தன மனோஜ் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்படவுள்ள நபரும், வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரியும் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களிடமிருந்து நெல்லைப் பாதுகாப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் உருவமும், கொல்லப்பட்ட நபரின் உருவமும் ஒரே மாதிரியானவை எனவும், இந்த நபர் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

T56 ஆயுதத்தால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதுடன், தப்பியோடிய கொலையாளிகளை கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பல புலனாய்வுக் குழுக்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு!!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த பிராந்திய அலுவலகம் இன்று (16.08) திறந்து வைக்கப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியா, உள்வட்ட வீதியில் செயற்பட்டு வந்த நிலையில் போதிய இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இன்மையால் கடந்த 2 ஆம் திகதி முதல் அவ் அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, புதிய அலுவலகம் போதிய வசதிகளுடன் 24 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்பப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு சேவைகளும் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெறுவதற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், ஆட்பதிவு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் கிருபாகரன், பொலிஸ் அதிகாரிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!!

இனம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

இன்றையதினம் அதிகாலை குறித்தவீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுளைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (16.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் பத்மநாதன் டயான் (வயது 21) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

நாட்டில் இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவில் 285,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை (14.08) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இம் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.