இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்நேற்றைய தினத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (13.08.2024) தீடிரென அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி, இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை740,645 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,130 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 209,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 191,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.

19 வயது காதலியை தேடி சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர புர பிரதேசத்தை சேர்ந்த சமித் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

தங்களுடைய மகள் திருமணமான ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த குறித்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை, மஹவெவ தொடுவா பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .

இது தொடர்பாக தகவல் அறிந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி இரவு தனது காதலியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டருகில் சென்று மறைவாக இருந்துள்ளார் .

வீட்டுக்கு வெளியில் யுவதிசென்ற போது இளைஞன் வந்து அவரை அழைத்ததாக கூறிய உறவினர்கள், தனது காதலனைக் கண்டதும் யுவதி வீட்டுக்குள் ஓடிச் சென்றுள்ளார்.

இதன்போது இளைஞனை பிடிக்க வீட்டில் இருந்த சிலர் துரத்திச் சென்ற போது அவர் இருட்டிலேயே தப்பியோடிய நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் ஏதோ விழும் சத்தம் கேட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 

காதலனால் மாணவிக்கு நேர்ந்த கதி : பெண் ஒருவர் உட்பட பல மாணவர்களின் மோசமான செயல்!!

 

பாடசாலை மாணவி ஒருவரை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் நேற்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார். தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு முதல் முறையாக தவறான செயலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, தவறான செயலுக்கு உட்படுத்தி, அதனை காணொளியாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணொளியை பயன்படுத்தி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை குழுவாக இணைந்து தவறான செயலுக்கு உட்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் தெரியவந்துள்ளது.

தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற கேரளா குடும்பப் பெண்!!

கனடாவில் இடம்பெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளார்.

கடந்த மாத இறுதியில் மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது.

இதில் கேரள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

இதேவேளை இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார்.

அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார். பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

நாட்டில் பல பகுதிகளில் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் பயணிகள் படகு சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படும்.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13 ஆம் திகதி இயக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆனால், இதனையடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் அவர் சந்தித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பாலசூரிய (Chanaka Balasuriya) கடை ஒன்றை நடத்திவருகிறார்.

ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற, சிறிது நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

தன் கடைக்கு அருகிலுள்ள மசூதி ஒன்றின் முன் போராட்டக்காரர்கள் கூடியுள்ளதை அறிந்த பாலசூரிய, தன் கையடக்க தொலைபேசி மூலம், தன் கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளார்.

அப்போது, அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளது. கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.

ஆனால், அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்வதையும், கடையை பழுது பார்ப்பதையும் கண்டு பாலசூரிய திகைத்து நின்றிருக்கிறார்.

அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளதாகவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.

கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்கமுடிந்திருக்கிறது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது என அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு நம்பமுடியாத அளவில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.

காதலியை பார்க்க சென்ற காதலன் பரிதாபமாக உயிரிழப்பு!!

சிலாபத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ள காதலியை சந்திப்பதற்காக சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நீர்கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்.

சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் தொடுவாவ வீட்டுக்கு வந்த அவர், கடையொன்றின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காதலியை சந்திப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

காதலன் வந்திருப்பதாக வீட்டின் உரிமையாளரிடம் காதலி கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார். காதலி உரிமையாளரிடம் கூரிய விடயத்தை அறியாத காதலன் தவறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

 

இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாகக் காட்டிக்கொண்டு வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது நடித்து மோசடி செய்யும் கும்பலின் செயற்பாடு என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, உங்கள் பேஸ்புக் பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் அல்லது செயலிழக்க செய்யப்பட்டால், பேஸ்புக் பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க அல்லது உங்கள் தகவலை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கிற்கான அணுகல் வெளி தரப்பினருக்கு அனுமதிக்கப்படும்.

இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முறைப்பாடுகள் பெரும்பாலும் Facebook பக்கங்களை கொண்டிருக்கும் சில வணிகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

வர்த்தக முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றார். அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து மிரள வைத்தார்.

அவற்றில் Juggling Tricks, Juggling Balls, அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல் போன்ற சாதனைகள் அடங்கும்.

அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது உள்ளிட்ட சாதனைகளையும் ரஷ் ஒரே நாளில் முறியடித்தார்.

டேவிட் ரஷ் (David Rush) தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். இதன்மூலம் அவர் “Serial Record Breaker” எனும் பெயரைப் பெற்றார்.

 

காலையில் காதல் திருமணம்.. மாலையில் இருவரும் கொலை.. நடந்த விபரீதம்!!

திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் உறவினர்களுடன் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர்.

இதனையடுத்து தனி அறையில் புதுமண தம்பதி இருவர் மட்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. பின்னர் ஒருவரையொருவர் கத்தியால் குத்தியுள்ளனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அனுமதிக்கப்பட்டஅவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற 7ம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து மரணம்!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற போது, மாணவி ​​கீழே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கிறிஸ்டலுக்கு வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சை தரப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி கிரிஸ்டல் உயிரிழந்தார்

மொட்டை மாடியில் பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன்(35).

இவரது மனைவி புவனேஸ்வரி(28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றநிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை, இவர்களின் வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் சென்றுக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி சடலமாகக் கிடந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடதிற்கு வந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

விபத்தில் சிக்கிய தம்பதி… குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த இளம்பெண்!!

தம்பதியர் விபத்தில் சிக்கிய நிலையில், கர்ப்பிணியாக இருந்த மனைவி, குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருவுக்கு தம்பதியர் திரும்பி சென்றுக் கொண்டிருந்தபோது, ​​விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுநாத் லேசான காயம் அடைந்தார். அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து விபத்தைத் தவிர்ப்பதற்காக திடீரென நிறுத்தப்பட்டதால், மஞ்சுநாத் பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் சென்ற ஸ்கூட்டரை பின்னால் இருந்து எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. டிரக் டிரைவர் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஸ்கூட்டர் கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்தில் சிஞ்சனா விழுந்தார். பலத்த காயங்களுக்கு உள்ளான போதிலும், அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் அவரும் பிறந்த குழந்தையும் சில நிமிடங்களில் இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெலமங்களா போலீசார், லாரி டிரைவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.விபத்து நடந்த இடத்தை காவல் கண்காணிப்பாளர் சி.கே.பாபா பார்வையிட்டு நிலைமையை பார்வையிட்டார். இந்த இடம் அதிக ஆபத்துள்ள பகுதியாகும், கடந்த ஆறு மாதங்களில் 90க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.

மருத்துவமனையின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சுநாத், சிஞ்சனாவின் பிரசவ தேதி ஆகஸ்ட் 17ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். “எங்கள் நிறுவனத்திற்கு மற்றொரு கிளை உள்ளது, மேலும் நான் வீட்டை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருக்கக்கூடாது என்பதற்காக நான் அங்கு வேலை செய்யும்படி அவர் பரிந்துரைத்தார்.

இன்று நாங்கள் ஒன்றாக இருந்த கடைசி நாள், இரவு 9.30 மணிக்கு பேருந்தில் செல்வதற்கு முன், கோவிலில் அவருடன் சிறிது நேரம் செலவிட விரும்பினேன். யெடேஹள்ளிக்குப் பிறகு ஒரு தாபா அருகே நாங்கள் மெதுவாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​லாரி டிரைவர் வேகமாக வந்து எங்கள் மீது மோதிவிட்டார் என உருக்கமாக கூறினார்.

பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!!

சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பிரகாஷ். லாரி ஓட்டுநர்.

இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதன் பிறகு அதிசயாவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதிசயா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ந்து போன அதிசயாவின் தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி அதிசயாவை அக்கிராமத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தில் அன்றைய தினம் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் சிறுமி அதிசயா காணாமல் போனதால் எங்கு பார்த்தாலும் அழுகை குரலும் அலறல் சத்தமாக காணப்பட்டது. அக்கிராமமே சோகத்தில் மூழ்கி தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், மோப்பநாயை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிசயாவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பூட்டை கிராமத்துக்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார், சல்லடை போட்டு சிறுமி அதிசயாவை தேடி வந்தனர். பின்னர் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தான் அதே கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்களுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், அதில் ஒருவர் சம்பவத்தன்று தன்னை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார் என கூறினார். இதற்கு போலீசார், வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் தொடர்பான அடையாளத்தை கூறியுள்ளார்.

பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தபோது, சத்யா கூறிய தகவலுக்கும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளுக்கும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை உறுதி செய்தனர்.

அதில் சத்தியா தான், அவரது மகளை அழைத்து சென்றது அதில் பதிவாகியிருந்தது. பின்னர் சத்தியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தன் மகளை தானே கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தான் அதே ஊரில் உள்ள பல்வேறு நபர்களிடம் சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடன் வாங்கிய விவரம் தனது கணவருக்கோ, தனது குடும்பத்தினருக்கோ தெரியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

கடன் வாங்கியவர்களிடம் தான் கூறியிருந்த காலக்கெடுவும் முடிவடைய உள்ள நிலையில் குழந்தையை கொன்று விட்டால், கடன் கொடுத்தவர்கள் தன் மீது அனுதாபப்படுவார்கள், கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து, சம்பவத்தன்று எனது மகளை தானே அரசம்பட்டு சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்து எப்படி மகளை கொன்றார் என்பதை நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் போலீசாருக்கு நடித்து காட்டினார். பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை தவிக்கவிட்டு இளம் தம்பதி உயிரிழப்பு : அதிர்ச்சியில் அயலவர்கள்!!

காலி, அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அயல் வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதிகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் குழந்தையை தவிக்க விட்டு இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.