மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்!!

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை அத்துடன் குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று(09.08.2024) மாலை மத்திய சுகாதார அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகள் பல கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளன.

அதில் சிலர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக அறிகிறோம். அதில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும், ஒரு மருத்துவரும் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ளக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிகிறோம்.

இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ தினத்தன்று சம்பந்தப்பட்ட யாவருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஒரு இடமாற்றமாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வைத்திய அதிகாரிகளை காப்பாற்றுவதாகவே அறிகிறோம்.

சட்ட வைத்திய அதிகாரி உள்ளதை உள்ளபடி அறிக்கை இடுவதற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் அறிகிறோம். எனவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்து போகிறது.

வழமையான மருத்துவ தவறுகள் போல் இதனையும் மாற்றிவிட முனைவதாக நாம் எண்ணுகிறோம். தவறிழைத்தவர்கள் மீது கால தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த எந்த ஒரு விசாரணையானது உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தது இல்லை. இவ்வாறு அரைகுறையாக கண்டு பிடித்தவர்களுக்கு கூட நடவடிக்கை எடுத்தது இல்லை.

அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் சரி இந்த நாட்டின் சாபக்கேடு. நீதியை நிலை நாட்டுவதில் எப்பொழுதும் தோற்றே போகிறது இலங்கையின் ஜனநாயகம். இவ்வாறு தொடர்ந்து உண்மைகளை மூடி மறைத்தால் அரச வைத்தியசாலை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

இதனால் பாதிக்கப்பட போவது சாமானிய பொதுமக்களே .எனவே இதன் மூலம் தனியார் வைத்தியசாலைகளை நாடும் நிலையை ஏற்படுத்த போகிறீர்களா? ஆகவே நீதி நிழலாடும் பட்சத்தில் வைத்தியசாலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!!

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறையினை கழிக்க வந்த குடும்ப ஒன்றின் ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, குறித்த வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மகா ஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும், ஜீப் வண்டியில் ஐந்து பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதிகவேகமாக சென்ற வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

22 மாணவர்கள் இணைந்து பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட ஏனையோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இலங்கை வீரருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் நிலுக கருணாரத்ன காணப்படுகிறார்.

‘விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது’ என பரிஸ் ஒலிம்பிக் நகரிலிருந்து நிலுக தெரிவித்தார்.

நிலுக 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் (2012, 2016, 2020) பங்குபற்றியவராவர்.

அத்துடன் பல்வேறு சர்வதேச பட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியவராவார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளால் IOC ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்களிப்பின் மூலம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிறிஸ்பேனில் 2032இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவரை 8 வருடங்களுக்கு செயற்படும்.

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இக் குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்திரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

 

இலங்கையில் நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கர்ப்பிணிப் பெண்!!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்த போதும், வீதியால் சென்ற எவரும் உதவி செய்யாமையால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் அழைத்துச் செல்லப்படாததால் அவரும் அவரது ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த பெண்ணுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“ஒரு குழந்தையின் தாயும் ஒரு மாணவியுமான பிரமோதா, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் இறந்தார். இறுதி அஞ்சலி செலுத்த பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்த போது எனது இதயம் நொருங்கிப் போனது.

அவர் இறக்கும் போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் மடியில் குழந்தையின் சிறிய உடலைப் பார்த்தேன். அது தாங்க முடியாத வேதனை.

மூத்த மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர் பாடசாலைக்கு அழைத்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது. விபத்து நடந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததுதான் இங்கு மிகவும் அதிர்ச்சிகரமான காரணமாகும்.

நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்த வீதியில் யாராவது முன் வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், அவரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தை பார்த்து பலரும் விபத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த விபத்தை பலர் வாகனங்கள் நிறுத்தி பார்த்தனர். தங்களுக்கு பிரச்சினை வராதவரை அடுத்த விடயங்களை சம்பவங்களாக பார்க்கும் மக்கள் மற்றும் வாகனத்தில் ஏற்றினால் இரத்த கரையும் என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா? இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என நினைத்து அழைத்து செல்லவில்லையா என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடிவில்லை.

மனிதனே, உன் மனிதாபிமானத்தை எங்கே மறைத்தாய்?” என அவர் பதிவிட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி!!

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி மூடைகளை இறக்கிவிட்டு அட்டன் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து அப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விறகு கொட்டகையில் தூக்கிட்டு (08) உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் வசித்து வந்த முருகானந்தன் அபிஷேக் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நோர்வூட் டன்கன் தோட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 09ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக கூறப்படுகின்றது.

பல நாட்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்லாததால் பெற்றோர் அவரை (08) பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பாடசாலைக்கு செல்லாத மகன் தொடர்பில் பெற்றோர்கள் தேடலை மேற்கொண்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 199,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,380 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றமை தங்க நகை வாஙக் காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனையிறவு விபத்தில் உயிரிழந்தவர் விபரம் வெளியானது!!

கிளிநொச்சி – ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு ரெட்பாரா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

நீர்கொழும்பு நகரில் சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் முறையான அனுமதி இன்றி இந்த ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சீஷெல்ஸ் மாநில சிறைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட 6 கடவுச்சீட்டுக்கள் மற்றும் அது தொடர்பான 6 விண்ணப்பங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் இன்று (08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் பணிபுரிய இலங்கையர்களை அனுப்பும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதால், வேலைக்காக அனுப்பப்படுவதாக கூறி பணம் பெறும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக விரும்புவோருக்கு www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ, எந்தவொரு முகவர் அல்லது கடவுச்சீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வழங்குவதற்கு முன் தகவல்களைப் பெறுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

 

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண்ணை கொலை செய்த கணவன்!!

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நேற்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை தாக்கியபோது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும், தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் 19 வயது மகன் தினுஷ் குரேரா, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய குறித்த இளைஞன் நேற்று 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும் முயற்சியை தடுத்ததையும் மகன் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

 

தாய் வெளிநாட்டில் – மகனுக்கு தந்தை செய்த கொடூரம்!!

காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன, பரமுல்லகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், தாய் ஓமானில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி மாலை அளுத்ஹேன பிரதேசத்தில் விளையாடச் சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்த போது, ​​குடிபோதையில் இருந்த தந்தை, சிறுவனை திட்டியுள்ளார்.

அதையடுத்து, மகனும் தந்தையை திட்டியதால், ஆத்திரமடைந்த தந்தை, மகனின் முகத்தில் சூடு வைத்துள்ளார்.

மகனின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தொடங்கொட பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், ஜே.ஆர்.எஸ். அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம்(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அந்த வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த பேரனான மாணவனும்,வயோதிபரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம்(08) மாலை படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.  அத்துடன், கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்!!

சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

நடைபெற்றுவரும் பரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று (08.08) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் தடகள வீரர் அர்ஷத் நதீம் குறித்த தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

நதீமின் முதல் எறிதலானது எல்லைக்க அப்பால் சென்றதால், அது தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர் தனது இரண்டாவது எறிதல் 92.97 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வெல்ல வழி வகுத்தது.

இந்த போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சொப்ரா 2ஆவது இடத்தையும், Grenada நாட்டு வீரரான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு.. கணவன் இறந்த 3 மாதத்தில் விபரீதம்!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவரது மனைவி கற்பகம் (42). இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் வாடகைக்கு சென்று மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தாய், மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், 12-ம் வகுப்பு முடித்துள்ள சுபிக்ஷா மற்றும் அவரது தாயார் கற்பகம் ஆகிய இருவரும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கடன் கேட்டு வந்த நபர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.