கருத்து வேறுபாட்டால் ஒரே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. பறிபோன இருவரின் உயிர்!!

கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 29). இவர் அந்த பகுதியில் துணிகடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதாஸ்ரீ (20), இந்த பெண் பியூசி படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதுபற்றி இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று அவர்களுக்கு இருவீட்டார் முன்னிலையில் ஆண்டர்சன்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மாலையில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இருவீட்டாருடன் சந்தோசமாக பேசி உள்ளனர். பின்னர் புதுமண தம்பதி உறங்குவதற்காக வீட்டின் ஒரு அறைக்குள் சென்றுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அறையில் இருந்து லிகிதாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அறைக்கதவை திறந்துள்ளனர். அப்போது நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் பதறியடித்த படி அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் லிகிதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவீன் பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி நவீன் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது புதுமண தம்பதியான நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதும், வீட்டின் அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதும் தொடர்ந்துள்ளது.

அப்போது தம்பதி இருவரும் அங்கிருந்த கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக குத்திக் கொண்டுள்ளது தெரிந்தது. இதுகுறித்து நவீன் பக்கத்து வீடுகளில் வசித்து வந்த விசாலாட்சி மற்றும் பவித்ரா ஆகியோர் கூறுகையில், நவீன், லிகிதாஸ்ரீ 2 பேரும் பல ஆண்டுகள் காதலித்து வந்தனர்.

அவர்கள் விருப்பப்படி திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் அவர்களிடையே உண்டான வாக்குவாதம் 2 பேரின் உயிரையும் பறித்துவிட்டது.

வாழவேண்டும் என நினைத்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்குவதற்குள் காதல் தம்பதி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினர்.

தம்பதியின் தாக்குதலுக்கு முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர். கருத்து வேறுபாடு காதல் தம்பதியின் கதையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது வேதனை அளிக்கிறது.

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு பயிற்சி!!

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு கலைக்கூறு -1 பயிற்சியானது இரு தினங்களாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்திய கல்லூரியில் இப் பயிற்சியானது நேற்றும் (08.08), நேற்று முன்தினமும் (07.08) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலமையில் இடம் பெற்ற இப்பயிற்சியில் பயிற்சித் தலைவராக ப.அஜித்குமார், உதவிப் பயிற்சி தலைவர்களாக ரா.வரதராஜா, யோ.கேதீசன் ஆகியோரும் பயிற்சிநெறியை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில், வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர், உதவி மாவட்ட ஆணையாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா கோமரசன்குளம் பாடசாலையில் சரஸ்வதி மற்றும் மாதா சிலைகள் அமைக்க எடுத்த முயற்சியால் குழப்பநிலை!!

வவுனியா, கோமரன்குளம் பகுதியில் பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்த நிலையில் அங்கு குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

வவுனியா, கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் அதிகமாக இந்து மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், குறித்த பாடசாலை காணப்படும் அயலில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் என்பவற்றுக்கான காலை பிரார்த்தனை வழிபாட்டிடங்கள் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக காணப்பட்டு வரும் நிலையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்து வழிபாட்டு படங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் பாடசாலையின் பழைய மாணவர்கள் இந்து மாணவர்களின் வழிபாட்டிற்காக சரஸ்வதி சிலை ஒன்றினை சிறிதாக வைப்பதற்கும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாதா சிலை ஒன்று வைப்பதற்கும் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த பாடசாலையில் மத சிலையை வைக்க கூடாது எனவும் இது கிறிஸ்தவம், இந்து மதங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அப் பகுதி மதபோதகர் உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மதபோதகரால் கடிதம் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்து சிலை அமைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் இரு மத சிலைகளும் வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்து பிள்ளைகள் அதிகமாக கற்கும் பாடசாலையில் வழிபாட்டு உரிமை இல்லையா எனவும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக மதபோதகர் சதாஸ்கரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விடயம் குறித்து நானும் கேள்விப்பட்டேன் எனத் தெரிவித்தார். கடிதம் கொடுத்தமை தொடர்பில் கேட்ட போது, அது பாடசாலைக்கு தானே கொடுத்தது உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : மல்லாவி இளைஞன் கைது!!

வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (08.08) தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகார் ஜெயக்கொடி வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டார் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குளத்தின் ஆழத்திலிருந்த பொதியை மீட்ட கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கல்பிட்டி தோராயடி குளத்தின் அடிப்பகுதியில் இருந்து 4.7 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் உள்ளிட்ட தங்கம் அடங்கிய பொதியை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நேற்று (06) கல்பிட்டியில் உள்ள தோராயடி தடாகத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் தோராயமாக 04 கிலோ 740 கிராம் எடையுள்ள பொதியானது தடாகத்தின் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர், இது பொதியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கடற்படையினர் இந்த விசேட நடவடிக்கையை தொரயடி லகூனில் மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தடாகத்தில் தூக்கி எறியப்பட்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் திடமான தங்கப் பொருட்கள் உட்பட 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மீட்கப்பட்டதுடன், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கப் பொதியை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பின்னர் அவற்றை எடுத்துச் செல்வதற்காகவும் மூழ்கடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி அடங்கிய பொதி, சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் குழந்தைகளுக்கிடையே இனங்காணப்பட்ட பிரச்சினை : ஆய்வில் வெளியான தகவல்!!

இலங்கையில் குழந்தைகளுக்கிடையே உறக்கமின்மை பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியர் மேலும் தெரிவித்தாவது,

“பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும்.

இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் உறக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் உறக்கமின்மை பிரச்சினை உள்ளது.

இதேவேளை, இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு தூக்கமின்மையின் விளைவுகள் உள்ளன.

இந்நிலையில், ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, பிறந்த மூன்று மாதங்களில், குழந்தைகள் சுமார் 14 – 17 மணி நேரம் தூங்க வேண்டும்.

4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை, 11 முதல் 14 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 13 மணி நேரம் வரை 50% உறக்கம் தேவை.

இவ்வாறு ஒழுங்கான உறக்கம் இன்மை மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!!

வவுனியாவில் காசோலை மோசடி வழக்கில் ஆசிரியை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் 37 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியையின் அரச தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் 5 வருட கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 6 காசோலைகளை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியை ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் அரச செலவாக 50 ஆயிரம் ரூபாவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 37 இலட்சம் ரூபாவும் செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 2006 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அரச சட்டவாதி ஆறுமுகம் தனுசன் வழக்கு தொடுத்தவர் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.

ஆசிரியை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றில் வைத்து வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் 3 மாத காலத்தில் மீதி தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பணம் செலுத்த தவறினால் உடனடியாக சிறைத்தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 14 ஆண்டுகள் ஏமாற்றியது போதும் இனியும் பணம் செலுத்தாது ஏமாற்ற முடியாது என தெரிவித்து 3 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சிரியாவில் வீட்டு வேலை செய்யும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகல் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இந்த சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் (Dubai) நகரிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீடொன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

எனினும், அந்த வீட்டு உரிமையாளர்கள் வேறு நாட்டிற்கு சென்றமையால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டை துஷாரிகாவிடம் கொடுத்து அவரை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான டிக்கெட் கையிலிருந்த போதும் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை சிரியாவில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்களிடம் விற்றுள்ளது.

தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம் குறித்து விசாரித்த போது, வீட்டில் இருந்த பெண்கள் துஷாரிகாவை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் துஷாரிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வீட்டுக்கூரை மீது 25 அடி பாய்ந்த கார் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

மொரவக்க – அலபதெனிய பிரதேசத்தில் காரொன்று வீதியை விட்டு விலகி, வீடொன்றின் கூரை மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் காயமடைந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவயிலிருந்து மொரவக்க நோக்கி சென்றுகொண்டிருந்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பாய்ந்து, வீடொன்றின் கூரை மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் கார் விழுந்ததில் அவ்வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் அபாயம்!!

ஐஎம்எப் உடனான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். 2025ஆம் ஆண்டுக்கான வருடம் வரவு செலவுத் திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள கடன் உடன்படிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது. அதன் பிரதிபலனாக இன்று நாட்டுக்கு தேவையான எரிபொருள், உரம் மருந்து உணவு ஆகியவை கையிருப்பில் உள்ளன.

ஹர்ஷ டி சில்வா எம்பி கூறுவது போல் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை ரத்து செய்தால் அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தைக் கூட முன் வைக்க முடியாது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உட்பட நலன்புரி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விடும். அது மட்டுமன்றி அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய நினைக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த அரசாங்கத்தை இரண்டு வாரங்களுக்கு கூட முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையே உருவாகும்.

அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

குளத்தில் ஒழித்துவைக்கப்பட்ட 20 கோடி பெறுமதியான தங்கம்!!

 

புத்தளம் – கற்பிட்டி தோரடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே 4 கிலோ 740 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம், பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி : 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி!!

3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய பத்தும் நிசங்க, அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுத் தந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ அதிக பட்சமாக 96 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார். அவருடன் சேர்ந்து குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 45 ஓட்டங்களையும் அதிக பட்சமாக குவித்தனர். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்தது.

வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

ரோகித் சர்மா 35 ஓட்டங்களிலும், சுப்மன் கில் (6), விராட் கோலி(20), ரிஷப் பண்ட்(6), ஸ்ரேயாஸ் ஐயர்(8), அக்சர் படேல் (2) என சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

வாஷிங்டன் சுந்தர் கடுமையாக போராடி 30 ஓட்டங்கள் குவித்தார், ஆனால் அவரும் தீக்‌ஷனா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் மூலம் 26.1 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 3வது ஒருநாள் போட்டியில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதில் ,முதல் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததுடன் இரண்டாவது போட்டியை இலங்கை அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 110 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றியுள்ளது.

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!!

மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்யும் விசாரணையாக இருக்கக்கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (07.08.2024) உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகள் மூலம் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் வருகை தர உள்ளனர்.அவர்களுடைய பாதுகாப்பையும் நாம் எல்லோரும் சேர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு உறுதிப்படுத்தப்படாத நிலை ஏற்படுமாக இருந்தால் அந்த 9 வைத்தியர்களும் எமது வைத்தியசாலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை!!

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு காலை வேளையில் விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

வாரத்தில் 4 நாட்கள் அதுவும் ஒரு முறை மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

யாழில் வாடகைக்கு வீடு எடுத்து கசிப்பு காய்ச்சி விற்பனை செய்த 21 வயது இளைஞன்!!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 21 வயது இளைஞர் இன்று (07.08) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் கைதான சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.

 

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி… தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த நிலை!!

யாழ்ப்பாண பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பிரான்ஸிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழிற்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில் தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்று (06) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.