வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!!

இலங்கையில் வங்களில் நிலையான வைப்புக்களை வைத்துள்ள சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதங்களை அதிகரிக்க நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலையான வைப்புக்களுக்கான 8.5 வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை காரணமாக அதிகளவான சிரேஷ்ட பிரஜைகள் தமது நிலையான வைப்புக்களிலிருந்து பணத்தை மீற பெற்றுக்கொள்ளவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 60 வயதிற்குட்பட சிரேஷ்ட பிரஜைகளால் நிலையான வைப்பிலிடப்படும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு பத்து வீத வட்டி வழங்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.

 

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை!!

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனை தருசி கருணாரட்ன சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கியுள்ளார். தருசி தான் போட்டியில் பங்கேற்பதற்காக பயன்படுத்திய ஆடையொன்றை இவ்வாறு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த ஆடை (competition kits) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. சுவிட்சர்லாந்தின் லுசானோவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

தருசியின் நன்கொடையை பாராட்டும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நற்சான்று பத்திரமொன்றை வழங்க உள்ளது. இனிவரும் காலங்களில் தருசி போட்டியில் பயன்படுத்திய ஆடை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒரு நாள் 25 மணிநேரமாக மாறும்… நிலவுக்கும் பூமிக்கும் இடையில் நிகழும் மாற்றம்!!

எதிர்காலத்தில் ஒரு நாளினுடைய அளவு 25 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் Wisconsin madison பல்கலைக்கழகம் பூமிக்கும் நிலவுக்குமான வரலாற்று தொடர்பையும் அது எவ்வாறு பல மில்லியன் வருடங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது எனவும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கமைய நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாகவும் இதனால் ஒரு நாளினுடைய அளவு 24 மணித்தியாலங்களில் இருந்து 25 மணித்தியாலங்களாக மாறும் எனவும் ஒரு நாளினுடைய இரவு அல்லது பகலின் அளவு மாறும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை ஒரு வருடத்துக்கு 3.8 சென்ரிமீட்டர் அளவு படிப்படியாக நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வானில் இருக்க கூடிய இரு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு தொடர்பால இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

பூமியின் புவியியல் கடந்த காலத்தை பற்றிய நுண்ணறிவுகளை பெற ஆராய்ச்சியாளர்கள் சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை அமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

நிலவின் தாக்கத்தால் பூமியின் சுழற்சி இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாக கொண்டு இந்த ஆய்வை செய்ததாக கூறியுள்ளனர்.

இதனூடாக ஏறக்குறைய 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடன் பூமியின் உறவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நிலவு, பூமியிலிருந்து விலகி செல்லும் தற்போதைய விகிதம் இவ்வாறே தொடர்ந்தால், பூமியில் ஒரு நாளின் நீளம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் 25 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாம நிலவு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, ​​இந்த செயல்முறை படிப்படியாக நடைபெறும் என்றும் ஆனால் நிலவு இரவு வானில் இருந்து விரைவில் மறைந்துவிடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில்15 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன்!!

முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்து சென்று சிறுமியுடன் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் மோசடிகள் அதிகரிப்பு!!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் பணியகம் கேட்டுள்ளது.

011 2 864 241 அல்லது 011 2 864 123 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும்.

அண்மைய காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பல கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் குடிவரவு கொள்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றம்!!

கனடாவின் (Canada) குடிவரவு கொள்கையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் செமி – ஸ்க்கில்ட் தொழிலாளர்கள் (semi-skilled workers) எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை எளிதில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தினால் (IRCC) குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் (IRPA) இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்போது, பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புக்கள் (TEER) நிலைகள் 4, 5 ஆகியவற்றில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான புதிய நிரந்தர பொருளாதார குடிவரவு வகுப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக திறன்கள் மற்றும் அனுபவங்களை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதன் மூலம் பொருளாதார குடிவரவு முறைமையினையும் (economic immigration system) நவீனமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், TEER (Training, Education, Experience, and Responsibilities) முறையானது தேசிய தொழில் வகைப்படுத்தல் (NOC) முறையின் புதுப்பிப்பாக 2022இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்தின் மூலம் TEER முறைமையானது, தொழில்களுக்கான பழைய ‘திறன் நிலைகள்’ என்பதற்கு பதிலாக, TEERS என்று அழைக்கப்படும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, TEERS இன் 0 – 3 என்பது பொதுவாக இரண்டாம் நிலைக் கல்வி அல்லது குறிப்பிட்ட நீளம் கொண்ட பயிற்சி தேவைப்படும் வேலைகளுக்கானது. மேலும், TEERS 4 மற்றும் 5 ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வி, வேலையில் பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது ஆகும்.

குறிப்பாக, TEER 5ஆனது எவ்வித முறையான கல்வியும் இல்லாமல், குறுகிய கால பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாற்றங்கள் TEER 4 மற்றும் 5 வேலைகளில் கனேடிய வேலை அனுபவம் பெற்ற வெளிநாட்டு நபர்களுக்கு எளிதாக நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

 

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.08.2024) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை வசிக்கும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கொள்ளையனாக மாறிய சிறுவன்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 14 வயதுச் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என ஐந்து கடைகளும் கொள்லையிடப்பட்டிருந்தன.

அதோடு , புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளது.

கொள்லைச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் கைதான சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட 46,230 ரூபா பணமும், திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய சோகம் : உடல் இல்லை மகளின் கைக்கு இறுதிச்சடங்கு : கதறி அழுத தந்தை!!

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்த செய்த சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ளது.

வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரையில் 360 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது

அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை தந்தை ராமசாமி உறுதி செய்தார்.

தன் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகள் ஜிசாவின் ஒரு கை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு தகன மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதைப் பார்க்கும் ராமசாமி தன் முகத்தை மூடியபடி கதறி அழுகிறார். பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்யக்கூடியதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் தலைக்குள் பேன் இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

பெண்ணின் தலையில் பேன் இருந்தமையால், விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு 12 மணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறங்கியது. கடந்த மாதம் 15 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,

மருத்துவ காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஈதன் ஜுடல்சன் என்ற நபர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சம்பவம் நடந்தபோது அவரும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், எனினும் முழுமையான விவரத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

“விமானத்தில் பயங்கரமான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்றும் யாரும் மயக்கமடையவில்லை, யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியபோது ஒரு பெண் விமானத்தின் முன்பகுதியை நோக்கி வேகமாக ஓடினார்.

அது குறித்து சக பயணிகளிடம் நான் விசாரித்தபோது, விமானத்தில் இருந்த ஒரு பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக கூறி 2 பெண்கள் கூச்சலிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விமான ஊழியர்களிடமும் அந்த பெண்கள் முறையிட்டதன் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவருக்கும் மீண்டும் அதே இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஜுடல்சன்,

பேன்கள் குறித்து குற்றச்சாட்டு கூறிய 2 பெண்கள் அதே இருக்கை வேண்டாம் என்று வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண : இலங்கைக்கு புதிய அங்கீகாரம்!!

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சாதனையை அருண பெற்றுள்ளார்.

06 தகுதிகான் சுற்றுப் போட்டிகளைக் கொண்ட இந்தப் தொடரில் 5ஆவது சுற்றில் அருண கலந்துகொண்டார்.

இதன்படி போட்டி தூரத்தை அவர் 44.99 வினாடிகளில் கடந்து 3ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார். இது அருணாவின் தனிப்பட்ட சிறந்த நிகர சராசரி ஆகும்.

அதன்படி, 400மீற்றர் தொடரில் இலங்கை சார்பில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இலங்கை தடகள வீரர் என்ற சாதனையை, அருண பெற்றுள்ளார்.

 

மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசட்டையீனம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (4) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூரை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த்தெரியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போது உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் : திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் E-passport நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையினால், பழைய முறையில் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கு மட்டுமே விசா வழங்கப்படுவதாகவும், நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விமான அனுமதிப்பத்திரங்களுக்கு விசா வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தாண்டு புதிய E-passport முறை அமல்படுத்தப்பட்டதால், பழைய முறைப்படி கடவுச்சீட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் வாங்கப்படவில்லை.

இதன் காரணமாக திகதி நேர முன்பதிவு முறையின் அடிப்படையில் குறைந்தது 400 பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளதாக பதிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்!!

பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று காலை T56 ரக ஆயுதத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை, இகினியாகல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு எடுத்துச் சென்று அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் வேறொரு வீட்டிற்கு சென்று ஒரு தாய் மற்றும் மகள் சுட்டுக் கொலை செய்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னைத்தானே சுட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் 54 வயதுடைய பெண் எனவும் மகளுக்கு 17 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாயும் மகளும், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டின் அயலவர்கள் எனவும் இரு குடும்பங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக காணி தகராறு இருந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்ட அதிகாரி வசிக்கும் வீட்டிற்கு 13 கிலோமீற்றர் தூரத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி வசிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தரை கொன்றுவிட்டு 13 கிலோமீற்றர் தூரம் வந்து தாயையும் மகளையும் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பியவர், மனைவிக்கு அழைப்பேற்படுத்தி தன்னைத் தேடவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

தனது வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை எடுத்து 3 பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பினால் பதற்றமடைந்த மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து பதற்றமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவியை அருகில் வர வேண்டாம் என சத்தமிட்டு கூறிய நிலையில் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.

அவர் அதிகாலை 2.05 மணியளவில் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 32 கிலோமீற்றர் தூரம் சென்ற பிறகு அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையின் பின்னர், அதிகாலை 3.15 மணியளவில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர். பொலிஸ் நிலையத்திற்கு வந்த இந்த அதிகாரி அதிகாலை 4.10 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பி புதிய நகரைச் சேர்ந்த லஹிரு உதார என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 43 வயதான அவர் 20 வருட சேவையில் இருந்த அதிகாரியாகும்.

மூவரைக் கொலை செய்ததுடன், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் 14 வருட சேவையில் இருந்த அதிகாரி எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. காணி தகராறில் தாய் மற்றும் மகளின் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளே முறைப்பாடு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டித்தொடரில் சாதனை படைத்த கனடிய சிறுமி!!

ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர் ஒன்றில் கனடாவின்(Canada) சார்பில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த சம்மர் 17 வயது சிறுமியான சம்மர் மெக்கினோஸ்(Summer McIntosh) என்ற நீச்சல் வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இதுவரையில் மூன்று தங்கப் பதக்கங்களை எந்தவொரு கனேடியரும் ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்றதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் 200 மீற்றர் மெட்லே, 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லெ ஆகிய நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கனடாவிற்கு பெருமை சேர்க்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக சம்மர் தெரிவித்துள்ளார்.