லொட்டரியில் 8 கோடி பரிசு வெற்றியாளரை ஏமாற்றி சீட்டை சொந்தமாக்கிய ஆசிய நாட்டவர்!!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற இந்தியர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் பொலிஸ் காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,

உள்ளூர் நபர் ஒருவர் படேல் பணியாற்றும் கடைக்கு சென்று 40 டொலருக்கு வாங்கிய இரு லொட்டரி சீட்டுகளைக் கொடுத்து பரிசு கிடைத்துள்ளதா என்பதை பரிசோதிக்க கூறியுள்ளார்.

அதில் ஒரு சீட்டுக்கு 40 டொலர் பரிசாக கிடைக்க, அதை படேல் அந்த வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இன்னொரு சீட்டுக்கு 1 மில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.37 கோடி தொகை பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் அதை அப்படியே மறைத்த படேல், வெற்றிபெற்ற சீட்டை குப்பையில் வீசிவிட்டு, பரிசு விழவில்லை என ஏமாற்றியுள்ளார். அதை நம்பி அந்த வாடிக்கையாளரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

டென்னசி மாகாணத்தைப் பொறுத்தமட்டில் 200,000 டொலர் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை பரிசாக பெறுபவர்கள் Nashville தலைமையகத்தில் சென்று தொகையை பெற வேண்டும்.

அமெரிக்க லொட்டரி அமைப்பு குறித்து புரிதல் இல்லாத படேல், வாடிக்கையாளரிடம் இருந்து ஏமாற்றிய லொட்டரியுடன் 1 மில்லியன் டொலர் தொகையை கைப்பற்ற Nashville சென்றுள்ளார்.

உண்மையில் அந்த லொட்டரியானது Murfreesboro பகுதியில் ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுவான விசாரணையில் படேல் முரணான பதில்களை கூற, சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக தரவுகளை சமர்ப்பிக்க அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அத்துடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த லொட்டரி சீட்டின் உண்மையான வெற்றியாளர் படேல் அல்ல என்பதும் கண்கானிப்பு கமெரா பதிவுகள் உட்பட அனைத்து தரவுகளில் இருந்தும் உறுதியானது.

இதனையடுத்து படேல் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி, பொலிசார் உடனடியாக அந்த சீட்டுக்கு உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடித்து, 1 மில்லியன் டொலர் தொகைக்கு உரிமைக்கோர பணிந்துள்ளனர்.

பொலிசார் அந்த நபரை தொடர்புகொள்ளும் வரையில், தாம் வெற்றியாளர், படேலால் ஏமாற்றப்பட்டொம் என்பது அவருக்கு தெரியவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை நெரிக்கும் கடன்.. ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளரான தொழிலாளி!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கடனில் தத்தளித்த சுரங்க தொழிலாளி ஒருவர், ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளராகியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து ஒரு பெரிய வைரம் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அந்த 19.22 காரட் வைரமானது அரசாங்கம் முன்னெடுக்கும் ஏலத்தில் சுமார் 8 மில்லியன் ரூபாய் அளவுக்கு விற்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

என்றாவது ஒருநாள் தமது கடனெல்லாம் மொத்தமாக திருப்பிச்செலுத்தும் வகையில் ஒரு வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் தெரிவித்துள்ளார்.

பன்னா பகுதியானது வைர இருப்புக்களுக்கு பிரபலமானது. மட்டுமின்றி வைரம் உட்பட விலைமதிப்பற்ற கற்களை நம்பி மக்கள் பெரும்பாலும் மலிவான, ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து வருகிறார்கள்.

தனி நபர்கள், குடுபங்கள் அல்லது குழுக்கள் என வைர வேட்டயில் பலர் தற்போதும் ஈடுபட்டு வருகிறனர். இதில் எவருக்கேனும் வைரம் கிடைத்தால், அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அதிகாரிகள் அந்த வைரத்தை உரிய முறைப்படி ஏலத்தில் விடுவார்கள். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், தமது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்த சுரத்தில் இருந்தே, தற்போது வைரம் கிடைத்துள்ளது என்றார்.

மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதுடன், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், மழைக்காலத்தில் மட்டும் சுரங்கத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை வாழ்க்கையை மாற்றிய அந்த வைரம் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வைரம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

ஏலத்தில் கிடைக்கும் தொகையில் அரசாங்க ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை குத்தகை தாரர்களுக்கு அளிக்கப்படும். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், முதலில், தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க வேண்டும்.

நல்ல வீடு ஒன்று கட்ட வேண்டும் மட்டுமின்றி, பிள்ளைகளுக்கான கல்விக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டும் என்றார். அத்துடன் தம்முடன் இருக்கும் 19 குடும்பத்தினருக்கு அந்த தொகையில் பங்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய மாணவி மரணம்!!

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர், கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலதிக கல்விக்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளின் மனிதாபிமானமற்ற செயல் : வீதியில் தவிக்கும் தாய்!!

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தனது மகளால் கைவிடப்பட்ட இந்த தாய் தற்போது கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும், தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு பொலிஸ் மற்றும் சமூக சேவை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீதியில் இறக்கிவிட்டு சென்றதாகவும், கல்வி அறிவு இல்லாத காரணத்தினால் தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதை அறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது தனது கணவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் தானும் தனது மகளும் கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் வீடுகளில் கூலி வேலை செய்தும், விறகு விற்றும் மகளை உயர்கல்வி கற்பித்ததாகவும், திருமணமான பின்னர் தன்னை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் இறக்கும் வரை தங்கியிருக்க இடமொன்றினை பெற்றுத்தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்தது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா இரட்டைக் கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்த வவுனியா மேல் நீதிமன்றம்!!

இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390ஃ23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரச சட்டத்தரணி ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று, அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது. இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை வழங்கியதுடன், 7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.

காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து உயிரை மாய்த்த இளைஞனால் அதிர்ச்சி!!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்த இளைஞன் நேற்று (24) இந்த முடிவை எடுத்துள்ளார்.

காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தனது உயிரை விட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு!!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

அதேசமயம் மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றம் நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான சுற்றறிக்கை!!

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போராட்டங்களால் பணிக்கு சமூகம் அளிக்காத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

அந்த மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போராட்டங்கள் காரணமாக பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞன் ரயிலில் மோதி பலியான சோகம்!!

பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக தந்தையுடன் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

பாணந்துறை. எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேர்முகப் பரீட்சை ஒன்றில் கலந்து கொள்வதாக வீட்டில் இருந்து சென்ற நிலையில், பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தையை கொடூரமாக தாக்கி வெளிநாட்டிற்கு காணொளி அனுப்பிய தந்தை!!

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்படுவதாக எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு நேற்று (24) இரவு கிடைத்த அவசர குறுஞ்செய்தியின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரும், குழந்தையும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

குழந்தை கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட்டு சாப்பாடு கேட்ட போது குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டி, குழந்தையின் கால் ஒன்றை துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தாய்க்கு சந்தேகநபர் அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் அடகு வைத்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அதற்கான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வங்கிகளால் உரிய நிவாரணம் வழங்கப்படுமாயின், வங்கிகளுக்கு பணம் எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நிவாரண வழங்குவதாக அறிவித்துள்ள போதும், அது எப்போது முதல் அமுலாகும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர்,

அந்த நிவாரணம் வழங்குவதற்கான பணம் நிதி அமைச்சு ஊடாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அது நிதிக் கொள்கை நடவடிக்கையாகும். அது என்ன முறையில் வழங்கப்படும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியாது. அது நிதி அமைச்சின் ஒரு அறிவிப்பாகும்.

நிதி அமைச்சு எவ்வாறு பணத்தை அனுப்பி அதனை செய்யும் என்பது அவர்களுக்கே தெரியும். அந்த நடவடிக்கை நடவடிக்கைக்கும் எங்களும் தொடர்பில்லை. அது நீண்ட தாமதத்தை ஏற்படுத்த கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற கடன் தொகைக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என, அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருக்கும் சிறுகோள்… நாசாவின் அதிர்ச்சித் தகவல்!!

பூமியை நோக்கி 2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சிறுகோள் சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கோள் நாளை சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் இது பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது. மேலும் இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.

முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்… வீதியில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த நிலை!!

முல்லைத்தீவில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதான கமக்கார அமைப்பின் செயலாளரான செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி உயிரிழந்த சோகம்.. அதே மருத்துவமனையில் கணவரும் எடுத்த விபரீத முடிவு!!

மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் அதே மருத்துவமனையில் கணவரும் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சுமேல் தனியார் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறைக்குள் மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அவரது கணவரும் உயிரிழந்தார்.

ஆலங்காட்டைச் சேர்ந்த இம்மானுவேல் (29) என்பவர் தனது மனைவி மரிய ரோஸ் (21) இறந்ததால் மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சனிக்கிழமை மாலை மரியா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், இம்மானுவேல் அவரை அருகில் உள்ள மஞ்சுமேலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், இரவு 10.30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரிய ரோஸ் உயிரிழந்தார்.

போலீசாரின் கூற்றுப்படி, நேற்று அதிகாலை 3 மணியளவில் அதே மருத்துவமனையின் எக்ஸ்ரே அறையில் இம்மானுவேல் தூக்கில் தொங்கிய நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் கண்டனர்.

பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடந்த 28 நாட்களுக்கு முன்பு மரியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. மரியாவுக்கும் இம்மானுவேலுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.

இயற்கைக்கு மாறான மரணத்திற்காக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194யைப் பயன்படுத்தி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.