சவாலால் விபரீதம்.. அளவுக்கு மீறி சாப்பிட்டதால் பெண் யூடியூபருக்கு நேர்ந்த சோகம்!!

இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது.

சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங். இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார். ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 14-ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார். சியோட்டிங்-ன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியோடிங்கின் இந்த மரணம் சமூக ஊடகங்களில் கவலையைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற சவால்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் கூறிய காரணம்!!

தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

நர்மதா திருப்பூரின் சுக்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில் குடியிருப்பில் தங்கி, அங்கேயே வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், மனைவியை 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த சிவகுமார், தனது மகன் குருபிரசாத்தின் பிறந்தாளை கொண்டாட வெள்ளக்கோயில் சென்றுள்ளார்.

மில் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் குருபிரசாத்தின் பிறந்தாளை சிவகுமார் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

இரவு அனைவரும் தூங்கிய நிலையில் மறுநாள் காலை சிவகுமார் அவசரமாக பதற்றத்துடன் வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.

மேலும் அவரது வீட்டில் இருந்து பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நர்மதா வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து காங்கேயம் காவல் நிலையில் தனது மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக சிவகுமார் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மனைவி நர்மதாவுடன் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரத்தில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திக்கொலை செய்துவிட்டதாக சிவகுமார் கூறியுள்ளார்.

 

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்!!

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.

விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.

இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.

அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.

இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா திருஞானசம்மந்தர் வித்தியாலய அதிபரை மாற்றுமாறு கோரி ஆர்பாட்டம்!!

வவுனியா, ஶ்ரீஇராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (24.07) காலை பாடசாலை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

எமது பாடசாலை கல்வி நிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை. அங்கு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை.

இவ்வாறான காரணங்களால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்ப்படும். எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது…. நான் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.

குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளோம். வறுமைப்பட்ட மாணவர்களின் தேவைகருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம். அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சில நபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்ப்படாது என்றார்.

 

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!!

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆப்பிளின் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி யோசனை மிகவும் மேம்பட்டது என்றும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து அதற்கான உதிரிபாகங்களை உருவாக்கி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் அல்லது பழைய கிளாம்ஷெல் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip or old clamshell flip phone) போன்று அதன் அகலம் முழுவதும் மடிந்துவிடும் என்று கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கையடக்க தொலைபேசி 2026ல் சந்தைக்கு வந்தால், சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தி 7 வருடங்கள் ஆகிவிடும்.

இருப்பினும், இந்த ஆண்டு ஐபோன் 16 வரிசைக்கு, AI அம்சங்கள் மற்றும் புதிய கேமராவில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தில் பெறப்பட்ட Counterpoint Research அறிக்கைகளின்படி, முதல் காலாண்டில் உலகளாவிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தை 49% வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக, 2026 ஆம் ஆண்டளவில், ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய தொலைபேசியை கணிசமாக நிறுவப்பட்ட சந்தையில் நுழைவது மிகவும் சாதகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டிக்குள் கொலை செய்யப்பட்ட சடலம்… கொலையாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (23.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

பாடசாலை மாணவர்களின் நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.

90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து எடுத்து தனது ஆசிரியரிடம் கொடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.

இந்த மாணவர்கள் கண்டி மெனிக்ஹின்ன உயர்தரப் பாடசாலையில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றனர்.

மதுசங்க ருக்ஷான் (13), யசித் சமல் ரத்நாயக்க (13), மற்றும் இசுரு சமத்சேனாதிர (13) ஆகியோர் நடன வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​தரையில் கிடந்த பணப்பையை கண்டு அதனை எடுத்து பாடசாலை நடன ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து அதிபர் ஊடாக உரிமையாளரின் விபரங்களை உறுதிப்படுத்தி பாடசாலைக்கு அழைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்கள் அடங்கிய பணப்பையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களின் செயற்பாட்டிற்கு பலரும் தமரு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

1000 ரூபாவை தாண்டிய சில மரக்கறிகளின் விலை.. அதிர வைக்கும் சந்தை நிலவரம்!!

நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாவை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக உள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை 600 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட்டின் விலை ரூபா 480 முதல் 500 வரையும் உள்ளது.

ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகும் ஒரு கிலோ போஞ்சி ரூபா 800 இற்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு கிலோ முருங்கைக்காய் 800 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோவா 500 ரூபாவுக்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை!!

பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கோதுமை மா விலை குறைக்கப்பட்டால் நிச்சயமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுகர்வோரினால் உணரக்கூடிய வகையில் விலை குறைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

யாழில் கோவில் நகைகைகளை கொள்ளையிட்ட பூசகர்!!

யாழ்ப்பாணம் (Jaffna) – ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகரிடமிருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மேலதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, பூசகரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டட்டுள்ளன. ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன.

இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

மேலும், விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்ற மக்களின் குற்றச்சாட்டு, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றினார்.

அதன்பின்னர், குறித்த அதிகாரிகள் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் 28 வயதுடைய பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆலயத்திருவிழாவின் போது உதவி பூசகராகச் செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொலிஸாரின் விசாரணைகளின் போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் தற்போது மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவி : பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

காய்ச்சல் காரணமாக கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

தெவலேகம பமுனுகம மலியதேவ மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹஷினி மதுபாஷினி விக்கிரமாராச்சி என்ற 14 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் (08) காய்ச்சல் காரணமாக கேகாலை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 10ஆம் திகதி வயிற்றின் இரு பக்கங்களிலும்,கை,கால்களிலும் வலி ஏற்பட்டதால் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவியின் பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி நிரஞ்சலா குலதுங்க மேற்கொண்டுள்ளார்

மாணவியின் இதயம் மற்றும் சிறுநீரகங்களில் ஒரு வகை விசக்கிருமி நுழைந்துள்ளமையே மாணவியின் மரணத்திற்கு காரணம் எனவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பாடசாலை மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (24) இம்புல்கஸ்தெனியில் இடம்பெறவுள்ளன.

 

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

அதி வேகத்தால் நேர்ந்த விபரீதம்!!

அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (23) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : இன்று நள்ளிரவில் அபூர்வ நிகழ்வு!!

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு சந்திரனால் ஏற்படும் சனி கிரகணத்தை காணக்கூடிய அரிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது இன்று 24ஆம் திகதி காணப்படும் என்று கூறப்படுகின்றது இந்த நிகழ்வானது மீண்டும் 2037ஆம் ஆண்டு மக்களுக்குப் புலப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தின் மாபெரும் கிரகமான சனியின் அபூர்வ நிகழ்வு இன்று நள்ளிரவில் சந்திரனிடம் இருந்து மறைகிறது. அதன்படி, சந்திரன் சனி கிரகத்திற்கு முன்னால் செல்லும்போது, ​​​​அது பூமியின் கண்ணுக்கு தெரியாததாக மாறி, சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சந்திரனால் மறைக்கப்படும்.

இந்த அரிய நிகழ்வை தங்கள் கண்களால் காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வானது இலங்கையை தவிர இந்தியா , மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்தை வெவ்வேறு காலகட்டங்களில் காண முடிகிறது.

வெறும் கண்களால் இந்நிகழ்வினைக் காணமுடியும் என்றாலும், சனியின் வளையங்களைக் காண்பதற்கு சிறிய தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும்.

வவுனியா வேப்பங்குளத்தில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

துவிச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாறி முற்பட்ட சமயத்தில் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுக்குள்ளாகியமையுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை CCTV காணொளி உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

தந்தை ஒருவரால் மகளுக்கு நேர்ந்த துயரம்!!

பதுளை(Badulla) – பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் தனது பத்து வயது மகளை தவறாக செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(22.07.2024) இடம்பெற்றுள்ளது.

பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.

மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, ​​கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறுமியின் தந்தை பசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.