தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வீதியில் இரண்டு மகிழுந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இன்று (21) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி பின்னால் வந்த மற்றுமொரு மகிழுந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது குழந்தையும், இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பத்தேகம மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கதிர்காமத்திலிருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பரீட்சைக்கு செல்ல மறுத்த மகளினால் தவறான முடிவெடுத்த தாய்!!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடன பாட செய்முறைப் பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் தனது மகள் செல்ல மறுத்ததால் தாயொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது யாழ். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தாய் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்த வேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(19) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில் குழந்தையையும் கணவனையும் தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்!!

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் ஊரை விட்டு சென்று இருந்தார்.

இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

மூதூர் இளம் யுவதியின் கொலை : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

மூதூர் 25 வயதான இளம் யுவதி வினோதினி கொலை தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் விசாரணையை திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்துள்ளார். யுவதியின் கொலை வழக்கு இன்றைய தினம் (19) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் திருப்திகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுவதாக விண்ணப்பித்திருந்தார்.

அதோடு, இந்த வழக்கு விசாரணையை வேறு தரப்பினருக்கு கையளித்து முறையான விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும் வாதங்களை முன்வைத்தனர்.

குற்றவாளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கேற்ப 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்தார். அதோடு, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்திருந்தார்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த நடேஷ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல் போயிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேக நபரான யுவதியின் காதலன் உட்பட அவரது தந்தை, சிறிய தந்தை, சகோதரி, வீட்டில் வேலை செய்யும் நபர், ஜேசிபி வாகனத்துடன் தொடர்புடைய 2 நபர்கள் உட்பட 7 பேர் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் : பெண்கள் மீது மோதிய கார் : ஒருவர் பலி!!

தென்னிலங்கையில் வீதியில் சென்ற பெண்கள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நகருக்கு அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.

பலத்த காயமடைந்த நான்கு பெண்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மத்துகம – பொல்கம்பலா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த கார் கோட்டையில் இருந்து காலி நகரை நோக்கி பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பளம் தரவில்லை : துன்பப்படுத்தி நாட்டுக்கு அனுப்பினார்கள் சவுதியில் இருந்து நாடு திரும்பிய பணிப்பெண் குற்றச்சாட்டு!!

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளங்கள் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பிட்டார்கள்.

அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி தெரிவித்துள்ளார்.

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக இடம்பெய்ர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

தோட்ட வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள்.

இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் வடமாகாண இஸ்லாமிய காலசார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

வடமாகாண இஸ்லாமிய காலசார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று (19.07) பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண இஸ்லாமிய கலாசார விழாவானது நேற்று முன்தினம் (18.07) முருங்கன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது களிகம்புக் கலை கோலாட்டம் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களான ஆர்.எம்.அர்க்கம், ஏ.எம.சியா, என்.எம்.றிஸ்னி, என்.றிஸ்கான், எப்.எம்.பசால், என்.எம்.முப்தி, ஆர்.எம்.இமாஸ், எம்.எம்.பாசித், எச்.எம்.ஹஸ்னி ஆகிய மாணவர்கள் 2ம் இடத்தையும், கிராத் போட்டியில் அதே பாடசாலை மாணவி ஜே.ஜெனீரா 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் வெற்றியாளர் என பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு : அதிஸ்டவசமாக உயிர்பிழைத்த இருவர்!!

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்துவீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர்.

குறித்த வீட்டில் நேற்று (19.07) மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர். இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்தது. குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்தது.

அனர்த்தம் இடம்பெற்ற சமயத்தில் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது.

இதேவேளை சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது.

தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ் நெடுந்தீவு கடலில் பிறந்த குழந்தை!!

 

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.

தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மர்ம மரணம் : இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்!!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (18) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 54 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட 5000 கோடி : அவசரமாக இலங்கைக்கு விரையும் சர்வதேச பொலிஸ்!!

இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையம் மூலம் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப்பிரஜைகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் அந்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பான 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பெற்று அதனை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5000 கோடி ரூபாய் மோசடி

இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர் வீட்டில் நடந்த சம்பவம் – பெண்ணொருவரின் அதிர்ச்சி செயல்!!

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகரின் வீடொன்றிற்கு பணிப்பெண்ணாக வந்த ஒருவர், 20 நிமிடங்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருடப்பட்ட தங்கப் பொருட்களில் சங்கிலி, மோதிரங்கள், காதணிகள், வளையல்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர், பணிப்பெண் தேவை என, தமிழ் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார் தொழிலதிபரின் தொலைபேசி எண்ணுடன் வெளியான விளம்பரத்திற்கமைய, குறித்த பெண், வர்த்தகரின் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, கடந்த 15ஆம் திகதி கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த பெண், தாம் களுத்துறையை சேர்ந்தவர் எனவும், மாதச் சம்பளம் எவ்வளவு எனவும் வயோதிபரிடம் வினவியுள்ளார்.

அதற்கமைய சில மணி நேரங்களில் புறக்கோட்டைக்கு தாம் வந்து விட்டதாகவும், பணியாற்றுவதற்காக வீட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதன்படி,சில நிமிடங்களில் அந்த பெண் முச்சக்கரவண்டியில், வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது, முச்சக்கரவண்டிக்காக வர்த்தகரிடம் இருந்து, 150 ரூபாயை பெற்றுள்ளார். அத்துடன் சாப்பிடாததால் பசியாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்கமைய,வீட்டில் இருந்த வயோதிப பெண் தேனீர் தயாரித்துவிட்டு, பார்த்தபோது,வீட்டிற்கு வந்த பணிப்பெண்ணைக் காணவில்லை. இதனையடுத்து மூன்று மாடி வீட்டில், முழுமையாக தேடியபோதும், அவரை காணாததால், அறைக்குச் சென்று பார்த்த போது நகை பொதி காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த சீலாவதி என்ற பெண், இருபது நிமிடங்களில் தனது அறையின் மேசையில் இருந்த தங்கப் பொருட்கள் திருடி சென்றுள்ளதாக, வர்த்தகர் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது!!

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை களனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை (Kadawatha), எல்தெனிய (Eldeniya) பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்!!

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி – கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த மார்கரெட் ஐராங்கனி (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த ஐரங்கனியின் சடலம் நேற்று (17) டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கவீனமடைந்த தனது கணவர் மற்றும் மூன்று மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த பெண் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

இந்நிலையில், தாயின் மரணம் தொடர்பில் மகள் தெரிவிக்கையில், நீர்கொழும்பில் தந்தை விபத்திற்குள்ளான நிலையில் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா வெளிநாடு சென்று எனக்கும், அக்காவுக்கும் பணம் அனுப்பினார்.

கடந்த 5 ஆம் திகதி தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அம்மா உடன் இருந்த பெண் அழைப்பினை ஏற்படுத்தி அம்மாவிற்கு மூச்சு விடுவதற்கு கடினமாக உள்ளதாக கூறினார்.இதன் பின்னர் அன்று அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த 6 ஆம் திகதி அம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து டுபாயில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் உதவியுடன் தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் எட்டு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அம்மாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வந்தோம் என்றும் மகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாவின் பூதவுடல் இன்று (19) பிற்பகல் ஹல்லொலுவ தொரகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகள் அறிவித்துள்ளார்.

 

இராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் வட கொரியா!!

தென் கொரியாவின்(South Korea) சியோல் நகரத்திற்கு வடக்கே, வட கொரியா அனுப்பிய இராட்சத பலூன்கள் பறந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும், இது தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் இணைந்து அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

இதனிடையே சமீப காலமாக வட கொரியா ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. அந்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.