உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இந்த சாதனை பயணத்தை 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் காணொளியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.
மேலும் இவர் அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனையை முறியடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவை நிறைவேற்றிகொண்டதாக ஈசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்த – அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பஹ்வவத்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜிதா (45) என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேசு என்பவரை அணுகி 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து இலங்கைக்கு வர முயன்றுள்ளார்.
நேற்று புதன்கிழமை (17) இரவு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக நின்ற விஜிதாவையும், இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப உதவிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளாந்தம் மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டியில் கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தி பெற்று நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே யுவதியின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் தந்தை மகள் தொடர்பில் தெரிவித்தாவது, “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்ற இலங்கையர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவத்தில் 23 வயதான ரமேஷ் கணேகெடெர என்ற இலங்கையரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞனை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய பிரஜை மல்யுத்த வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் விலை குறைப்பிற்கான சலுகைகளை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி நேற்று தனது குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு 11 மணிக்கும், நேற்று அதிகாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் ஊமை பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ளதால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இயங்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு பருவ நிலையால், நாடு முழுவதும் தற்போதைய காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சப்ரகமுவ மாகாணம், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி. காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவானது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கணவர் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரால் கழுத்து வெட்டப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (17.07) மாலை குருணாகலில் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடிகமுவ பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபரான கணவர் மது போதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், மனைவி குளிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கிணற்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது கணவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள தெரிவித்த பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் ஏமாந்த யாழ்ப்பாண மக்கள் இந்த மோசடி தொடர்பில் , பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்திருந்தனர்.
கைதான பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணினை வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண் , பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களிடையே வெளிநட்டு மோகம் தலைதூக்கியுள்ளநிலையில் , இவ்வாறானவர்களிடம் ஏமாறச்வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியும் , அதனை பொருட்படுத்தாது பெரும் தொகையை யாழ் மக்கள் பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார்.
விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.
அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிக்கின்ற விடயம் இதனூடாக வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார். ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.
குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.
நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 19 வயது அனுஷா . இவர் அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வேணு என்ற இளைஞருடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அனுஷாவால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் விரைவில் ஆடி மாதம் பிறக்க இருப்பதால் அனுஷா தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
அங்கு தனது காதலனை சந்தித்த அனுஷா தான் தற்கொலை செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞரும் தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறி இருவரும் சேர்ந்து திட்டமிட்டனர்.
அதன் பிறகு இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை என்பதால் இப்படி ஒரு விபரீத முடிவை இருவரும் எடுத்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகளும், 13 வயதில் பார்கவ் என்ற மகனும் இருந்தனர்.
அவர்கள் பெங்களூரு எலகங்காவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். 19 வயது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள விடுதியில் அவர் தங்கி உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீதருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து 13 வயது மகனுடன் ரம்யா குடியிருப்பில் வசித்து வந்தார். அவரால் வாடகை செலுத்த முடியாமல் போனது. மேலும் குடும்ப செலவுகளுக்கு போதிய அளவு வருவாய் கிடைக்காததால் ரம்யா மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி விடுதியில் தங்கி உள்ள தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு ரம்யா பேசினார்.
பின்னர் அன்றைய தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையை கொண்டு தனது மகனை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அதே சேலையில், ரம்யாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே தாய் தன்னை செல்போனில் அழைக்காததால் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதைப் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எலகங்கா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டில் சோதனை செய்தபோது ரம்யா கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தங்களது சாவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாய், மகன் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.