ஆசிரியையின் வாகனத்தில் மோதுண்டு இளைஞன் பரிதாபமாக மரணம்!!

பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை ஹொரண வீதியில் பின்கொட்டுவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாணந்துறை நிவ்டாவ சந்தியில் வசித்து வந்த அவித்யா ரசிது பெர்னாண்டோ என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகவில் இருந்து பாணந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த மோட்டார சைக்கிள் ஓட்டுநரான இளைஞன் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மழை நிலைமை மேலும் தொடரும் சாத்தியம் : பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், தென் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன்,

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்!!

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று(15.05.2024) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து லங்காபேயுடன் இணைந்து இலங்கையில் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்வதைச் செயற்படுத்தியதாக PhonePe அறிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வருகை தரும் தமது செயலி பயனர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள LankaPayQR வணிகர்கள் மூலம் UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று போன்பே அறிவித்துள்ளது.

அத்துடன் PhonePe பயனர்கள் ரொக்கத்தை எடுத்துச் செல்லாமல் அல்லது நாணய மாற்றங்களைக் கணக்கிடாமல் பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் செலுத்த LankaPayQR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் PhonePe அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில், இந்தியாவின் உடனடி கட்டண தொழில்நுட்ப சேவையான யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI இலங்கை மற்றும் மொரீசியஸில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி மாநாட்டு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமென்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி : இலங்கையில் நடந்த துயரம்!!

நுவரெலியாவில் இருந்து பயணிகளுடன் பயணித்த பேருந்தின் சாரதி திடீரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்தி செல்கையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பேரூந்ததை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பயணிகளுடன் பயணித்த பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட தமிழ் சிறுவன் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

கம்பளையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க வளையல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை நில்லம்ப அலுவலக சந்தி பகுதியில் உள்ள வரிசை வீடொன்றில் சிறிய தந்தையுடன் இருந்த சிறுவனை பொலிஸார் தங்கள் பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கலஹா நகரில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்து 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடியதுடன், அதே ஊரில் உள்ள தொலைபேசி கடைக்குள் நுழைந்து ஐபோன்களும், அலுவலக சந்தியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைச்சிள் மற்றும் அதே பிரதேசததில் உள்ள வீட்டில் இருந்த உண்டியல் உட்பட மின்னணு உபகரணங்களும் சிறுவனால் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட சைக்கிளை குறித்த சிறுவனின் மற்ற நண்பர் வயல்வெளியில் ஓட்டிச் சென்றபோது திருட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறுவயது முதலே கடும் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் இருந்த இந்த சிறுவன் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, இதனையறிந்த குற்றப் பிரிவின் நிலைய அதிகாரி விசாரணைகளை நிறுத்தி, சிறுவனை அமைதிப்படுத்தி அவருடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் அவரிடம் அன்பு காட்டி சாக்லேட், ஐஸ்கிரீம் கொடுத்து அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளார்.

சிறுவன் தனது தந்தையை சிறுவயதில் இருந்து பார்த்ததில்லை. தாய் மறுமணம் செய்து கொண்டதால், சித்தப்பாவின் கட்டளைக்கு உட்பட்டு, அன்றிலிருந்து கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்.

தாய் ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளதாகவும், அவர் அனுப்பும் பணம் சித்தப்பா மதுபானத்திற்காக செலவிடப்பட்டதாகவும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலம்ப தமிழ் கல்லூரியில் 9ஆம் ஆண்டு படிக்கும் இவர் இந்த நிலை காரணமாக பாடசாலைக்கு செல்வதும் குறைந்துள்ளது.

அன்பும், கருணையும் இழந்து தனக்கு பிடித்த சாப்பாடு போன்றவற்றை வாங்க பணம் இல்லாததால் இயல்பாகவே இவ்வாறு திருடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஒருதலைக் காதலால் நடந்த பயங்கரம்.. வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!!

ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அதே போல ஒரு கொடூரக் கொலை, ஹூப்ளியில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா(20). இவரை கிரீஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதையறிந்த அஞ்சலியின் குடும்பத்தினர் கிரீஷை கண்டித்துள்ளனர். இந்த நிலையில், அஞ்சலியை மைசூரு வருமாறு கிரீஷ் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அஞ்சலியின் பாட்டி கங்கம்மா, காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேஹாவிற்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்படும் என்று அஞ்சலியை கிரீஷ் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அஞ்சலி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கிரிஷ் கத்தியோடு உள்ளே புகுந்தார். அவரது குடும்பத்தினர் முன்பாகவே அஞ்சலியை அவர் சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்டிகேரி போலீஸார், விரைந்து சென்று அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த கிரீஷை போலீஸார் தேடி வருகின்றனர். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்!!

காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடையில் இருந்து குருமூர்த்தி வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவரது மனைவி திவ்யா இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த தங்கச்செயின் காணாமல் போய் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி உடனடியாக கெங்கேரி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீஸார், திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது நகைக்காக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இக்கொலை தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய போது, திவ்யா வீட்டில் வாடகைககு குடியிருக்கும் மோனிகா(24) மீது சந்தேகம் ஏற்பட்டது. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த மோனிகா, கடந்த ஒரு வருடமாக ஒரு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்தார். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குருமூர்த்தி வீட்டில் அவர் வாடகைக்கு வந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டிற்கு ஒரு இளைஞர் வந்து சென்றுள்ளார். அவரை தனது கணவர் என்று மோனிகா கூறியுள்ளார். ஆனால், அவர் காதலன் என்று கூறப்படுகிறது. அவருக்கு டாடா ஏஸ் வாகனம் வாங்குவதற்காக பணம் திரட்ட மோனிகா முயற்சி செய்துள்ளார். அப்போது தான், திவ்யா கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி அவர் கண்ணில்பட்டுள்ளது. திவ்யாவின் மாமியாரும் காலையில் வேலைக்குச் சென்று விடுவார். திவ்யா அவரது 2 வயது குழந்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

இதை கவனித்த, ஸ்கெட்ச் போட்ட மோனிகா, யாரும் இல்லாத நேரத்தை பார்த்து, பின்னாலிருந்து வந்து, திவ்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அத்துடன் திவ்யா கழுத்தில் கிடந்த 36 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மோனிகாவை கெங்கேரி போலீஸார் இன்று கைது செய்தனர். நகைக்காக வீட்டின் உரிமையாளரை கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலன் எரித்து கொலை காதலி கவலைக்கிடம்!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி ஆகாஷ், சிந்துஜா இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தனர். ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிந்துஜா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கணவன்… கடைசி சந்திப்பை இழந்த மனைவி.. விமானம் ரத்தானதால் சோகம்!!

தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த கணவனை காப்பாற்றும் வாய்ப்பை அவரது மனைவி இழந்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (24). இவரது கணவன் நம்பி ராஜேஷ் ஓமனில் உள்ள மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்ரிதாவுக்கு அண்மையில் தகவல் வந்தது. பதறிப்போன அம்ரிதா, கணவருக்கு மருத்துவமனையில் உதவியாக இருக்கும் பொருட்டு மஸ்கட் விமானப் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்தார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த அம்ரிதா குடும்பத்தினர், அவரை வழியனுப்ப திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மே 8-ம் தேதி அன்று சென்றனர். அவர்களுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அன்று காலை 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போதிய பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து, கடைசி நேரத்தில் விமான பயணத்தை ரத்து செய்தது. அதன்படி அடுத்த நாளுக்கு அம்ரிதாவின் விமான டிக்கெட்டை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மாற்றித்தந்தது.

ஆனால் அடுத்த நாளும் அதே காரணத்தை முன்வைத்து விமான சேவை ரத்தானது. அம்ரிதா துடித்துப்போனார். இதனிடையே மஸ்கட் மருத்துவமனையிலிருந்து தொடர்பு கொண்ட ராஜேஷ் தான் நலமுடன் இருப்பதாகவும், மே 11-ம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மே 16-ம் தேதி அன்று திருவனந்தபுரத்துக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அம்ரிதா பெருமூச்சு விட்டார். ஆனால் அடுத்த இரண்டாம் நாளில் ராஜேஷ் எதிர்பாரா விதமாக தனது கடைசி மூச்சை அங்கே இழந்திருக்கிறார்.

ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்த தகவல் அம்ரிதாவுக்கு மே 13-ம் தேதி அன்று வந்தது. மே 8-ம் தேதி அன்று விமானம் ரத்தாகாது இருப்பின், ‘மஸ்கட் மருத்துவமனை தனிமையில் தவித்த கணவன் ராஜேஷை உடனிருந்து எப்படியாவது காப்பாற்றி இருக்கலாம்’ என இப்போது அம்ரிதா புலம்பிக்கொண்டிருக்கிறார்.

போதிய பணியாளர் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து விமான சேவையை ரத்தானதில், கடைசி நேரத்தில் கணவரை காப்பாற்ற முடியாமல் போனதாக அம்ரிதா வருந்தி வருகிறார்.

அம்ரிதாவின் விமானப் பயண டிக்கெட் ரத்தானதில் அதற்கான தொகையும் அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனிடையே கணவரின் சடலத்துக்காக தற்போது அதே திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அம்ரிதா சோகத்துடன் காத்திருக்கிறார்.

குளியாப்பிட்டிய இளைஞர் கொலை விவகாரம் : விசாரணையில் சிக்கிய அரசியல்வாதிகள்!!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள மற்றுமொரு சக்திவாய்ந்த அரசியல்வாதியிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன்,கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போது காணாமல்போயிருந்தார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் இருந்து இளைஞனின் சடலத்தை மீட்டிருந்தனர்.

குறித்த இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் காதலிக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரின் மனைவி இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரின் உறவினர் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரான பெண்ணிக் தந்தை (சிகிதி) மற்றும் அவரது மனைவியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்போம் என கூறி ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

மேலும், இக்கொலையின் பிரதான சந்தேகநபரான சிகிடி வடமேற்கு மாகாணத்தில் உள்ள பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் சட்டத்தரணிகளான இரண்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளிடமும் சிகிதி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொலைபேசி வலையமைப்புகள் தொடர்பான விசாரணையின் போது, ​​சிகிடி அந்த நாட்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் ஏனைய அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், இளைஞனை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், ஆனால் இறந்த விதம் இதுவரையில் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுசித் ஜெயவம்சவின் காதலி என கூறப்படும் சிகிதியின் 17 வயது மகள் வீட்டில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முடிவதற்கு சுமார் 06 வாரங்கள் ஆகும் என ஹலவத்தை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எஸ். அன்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!!

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது.

இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.

இந்தநிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 ஆசிரியர்களுக்கும் 12,500 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில், தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சுகி கணேசநந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு பிறந்த வி. வி. சுகி கணேசநந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் ஆவார். மேலும், இவர் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆவார்.

கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் தி வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் டிக்டொக் வீடியோவால் தவறான முடிவெடுத்த கணவர்!!

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வந்துள்ளார்.

TIKTOK சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் என குறித்த பெண்ணின் கணவர் கூறி வந்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் கணவரின் கருத்தை பொருட்படுத்தாமல் குறித்த பெண் வீடியோக்களை தொடர்ந்தும் பதிவேற்றியுள்ளார். இதையடுத்தே, கணவர் பனடோல் மாத்திரைகளை அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

சாதாரணத் தர பரீட்சைக்கு சென்ற இரு மாணவிகள் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று (2024.05.15) காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அதில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கினிகத்தேன, அக்ரஓயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பிகள் என தெரியவந்துள்ளது. பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவர்கள் பார்த்துள்ளனர்.

காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பெற்ற சிசுவை விட்டுச்சென்ற பாடசாலை மாணவி : காதலனுடன் கைது!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வாரம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாயாரும் மாணவிகடகு உதவியாக தாயாரும் நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான் இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதானவர் என தெரிவித்த பொலிஸார், இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு!!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

அவதானத்துடன் செயற்பட வேண்டும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமைமேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.