இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் உயிரிழந்த தாய் – மகன்!!

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார்.

மகன் உயிரிழந்த தினத்திலேயே தாயாரும் இலங்கையில் உயிரிழந்துள்ளார். மகனின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் 12:00 மணியளவில் மெல்போர்னில் நடைபெறவுள்ளன.

உயிரிழந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்று மாலை 5.00 மணிக்கு களனி, பிலப்பிட்டிய மயானத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மகனுக்கு 40 வயதாகின்ற நிலையில் தாயாருக்கு 68 வயதென தெரியவந்துள்ளது.

இதேவேளை, லக்ஷ்மன் சுனில் விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெத்தியகொட அமைப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வீதி விபத்தில் நால்வர் வைத்தியசாலையில்!!

அனுராதபுரம், திருகோணமலை வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஹொரொவபொத்தான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் சொகுசு காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13.07) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் ஹொரொவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலை பகுதிக்கு தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம்!!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இசைநிகழ்வில் கலந்து கொண்டனர்.

இசைநிகழ்வு இடம்பெற்ற வேளை நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையில் இருந்து அனுப்பப்படவுள்ள செயற்கைக்கோள்!!

ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த அறிவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போது தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறித்த சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, தற்போதுள்ள 13 சட்டங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்படும், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

1935 இன் தொழிற்சங்க ஆணை எண் 14, 1941 இன் ஊதிய வாரிய ஆணை எண் 27, 1942 இன் தொழிற்சாலை ஆணை எண் 45, தொழில் தகராறுகள் சட்டம் 1950 இன் எண் 43, டர்மினேஷன் சிறப்பு விதிகள் சட்டம் 1971 இன் எண் 45 ,கடை மற்றும் அலுவலகச் சட்டம் 1954 இன் எண் 19 ஆகியவை புதிய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு மாற்றப்படும் 13 சட்டங்களில் அடங்கும்.

விடுமுறை

புதிய சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளில், ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மேலதிக நேரம் வேலை செய்தால் அவை கூடுதல் நேரத்தில் இணைக்கப்படாமல் அவருக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும்.

இதேவேளை ஓர் சுருக்கப்பட்ட வேலை வாரம் அறிமுகம் செய்யப்படும். அதாவது ஒரு தொழிலாளி நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட 45 மணிநேர வேலைகளை ஈடுகட்டினால், மூன்று விடுமுறை நாட்கள் வழங்கப்படும்.

மேலும், வீட்டு வேலை செய்பவர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தாயும் மகனும் செய்த செயல் : கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் 55 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம்(11) பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபரான பெண் தனது மகனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும், அதற்காகவே கஞ்சா கையிருப்பை வீட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

 

உலகின் முதலாவது மிஸ் ஏ.ஐ!!

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ (AI) பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல் மிஸ் – ஏ.ஐ பட்டத்தை பெற்றுள்ளது.

போட்டி தெரிவு

இந்த ஏ.ஐ மாடல், ஹிஜாப் அணியும் ஒரு வாழ்க்கை முறையை கொண்டவராக சமூக ஊடகங்களில் இயங்கி வருகின்றது.

அதேவேளை, குறித்த உலக அளவிலான மிஸ் – ஏ.ஐபோட்டியானது அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயற்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் 10 ஏ.ஐ மாடல்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இவற்றில், பிரான்ஸை சேர்ந்த மாடல் இரண்டாம் இடத்தையும் போர்த்துகலை சேர்ந்த மாடல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி இன்று (12) கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 181,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,562 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் பிரபல ஆலயத்தில் 60 பவுண் நகை மாயம் : நீதி கேட்டு வீதிக்கு இறங்கிய பக்தர்கள்!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண், பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் பணம் என்பன காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அது தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணம் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என ஆலய தலைவர் பதிலளித்தார்.

எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணம் என்பனவற்றை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஊரவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என சந்தேக வெளியிட்ட மக்கள், பொலிசார் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதேவேளை ஆலய நகைகள் காணாமல்போனமை தொடர்பில் ஊர்காவற் துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது , ஆலயத்தில் நகை பணம் காணாமல் போன தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

கைபேசியால் பறிபோன மாணவியின் உயிர்!!

குமரி மாவட்டம் பூதப்பாண்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு அக்ஷயா (வயது 19) என்ற மகனும், மகளும் இருந்தனர்.

மகன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். மகள் அக்ஷயா திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அக்ஷயா தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். வீட்டில் செல்போனில் மூழ்கி இருந்ததாக தெரிகிறது.

இதை கவனித்த அவரது தாய் நிர்மலா அவருக்கு அறிவுரை கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அக்ஷயா செல்போனை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்ததால் நிர்மலா திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அக்ஷயா , விட்டில் உள்ள அறைக்கு சென்று திடீரென விஷம் குடித்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற நிர்மலா அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு அக்ஷயா மயங்கி கிடந்து உயிருக்கு போராடினார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்ஷயா பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீண்ட நேரம் செல்போனை பார்த்த தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பேர் காதல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

நல்கொண்டா மாவட்டம் குக்கடம் கிராமத்தில் இரண்டு ஆண்களின் ஒருதலைப்பட்ச காதலால் கல்யாணி என்ற 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் மரணத்திற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்களே காரணம். இருவரும் தொடர்ந்து சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்றுக்கொள். இல்லை என்றால் உன் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த இளம்பெண், பெற்றோர் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தனது பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, நான் பூச்சி மருந்து சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவரது சகோதரரும் கல்லூரிக்கு சென்றிருந்தார். இதனால், சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மிரியலகுடா மருத்துவமனைக்கும், பின்னர் நல்கொண்டாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமி இறந்ததையடுத்து, சிறுமியின் சடலத்துடன் சிறுமியின் உறவினர்கள் அத்தாங்கி – நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

குழந்தை பிறந்த 10 நாளில், கணவர் கறுப்பாக இருப்பதால் பிரிந்து சென்ற மனைவி!!

கணவர் கறுப்பாக இருக்கிறார் என்று நிறத்தை காரணம் காரணம் காட்டி மனைவி பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). இவருக்கு கடந்த வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இவருக்கு திருமணமானதில் இருந்து கருப்பாக இருப்பதால் நிறத்தை காரணம் காட்டி இவருடைய மனைவி கிண்டல் செய்து வந்துள்ளார். பின்னர், நாளடைவில் இதனை வைத்து அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

இதனிடையே, இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையை தனது கணவர் வீட்டில் வைத்துவிட்டு தனது தாய் வீட்டிற்கு மனைவி சென்றுவிட்டார்.

இதையடுத்து, மனைவியை அழைக்க விஷால் மோகியா சென்றபோது, நிறத்தை காரணம் காட்டி அவருடன் வருவதற்கு மனைவி மறுத்துள்ளார்.

பின்னர், தனது தாயுடன் சென்று மகளிர் பொலிஸ் நிலையத்தில் விஷால் மோகியா புகார் அளித்தார். அப்போது, தான் கருப்பாக இருப்பதால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் வரும் சனிக்கிழமை கவுன்சிலிங் கொடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த பெண்!!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இதன்போது, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதுடைய ஷிவானி ராஜா என்ற பெண்ணே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவர் லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

லீசெஸ்டர் கிழக்கு இருக்கை உண்மையில் தொழிலாளர் கட்சிக்கு ஒரு முக்கிய இடமாகும். எனினும், ஷிவானி ராஜா மூலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பழமைவாத கட்சி அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

பதவியேற்பு நேரத்தில் இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன் என்று கூறிய அவர், பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஷிவானி ராஜா குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரது பெற்றோர் 1970ஆம் ஆண்டுகளில் கென்யாவிலிருந்து லெய்செஸ்டருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

அத்துடன்,இவர் டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பார்மசி மற்றும் காஸ்மெடிக் சயின்ஸ் கற்கைகளை பயின்றுள்ளார்.

பிலிப்பைன்ஸில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் பலி!!

வடக்கு பிலிப்பைன்ஸில் பிக் அப் ட்ரக் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நேற்று(10) நள்ளிரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பேருந்தில் பயணித்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பயணிகளில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் வீதி விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!!

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வேகத்தடை தொடர்பான விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு இதன் விளைவாக 2,321 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,103 சாலை விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு 1,154 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை வேகக் கட்டுப்பாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 50 மில்லியனை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது .

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய வேகக்கட்டுப்பாடு வரம்பு விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சகம் வெளியிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

 

நடு வீதியில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.

அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.