நாட்டில் அதிகரித்துள்ள டெங்குத்தொற்று : 27000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 27,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் நாகூர் ஆறிவ் (Nagoor Aarif) தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் அதாவது 37 வீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக வடமாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவிக் கொண்டிருக்கும் காலநிலையும் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாவதற்கான முதற் காரணியாக உள்ளது.

இந்நிலையில், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்துள்ளது.

எனினும்,மக்கள் மிகவும் அவதானமாக இல்லாத பட்சத்தில் அஜாக்கிரதையாக இருப்பார்களானால் திடீரென்று சிற்சில பகுதிகளில் நுளம்புகளின் பரம்பலின் அடிப்படையில் டெங்கு தொற்று சடுதியாக அதிகரிக்கும் என்றும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மம்!!

கொழும்பு, கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து பாடசாலை மாணவனுடன் குதித்து உயிரை மாய்த்ததாக சந்தேகிக்கப்படும் 15 வயதுடைய மாணவி இதற்கு முன்னரும் உயிரை மாய்க்க முயற்சித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு குருந்துவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவியும் மாணவனும் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் என்னவென்பது இதுவரையில் வெளியாகவில்லை.

எனினும் சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி படித்த பாடசாலையில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காதல் தொடர்பு

இதுவரை பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த மாணவிக்கும் மாணவனுக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 67வது மாடியில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிகரெட் பக்கட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

உயிரை மாய்த்ததாக சந்தேகிக்கப்படும் மாணவ, மாணவிகள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பாடசாலை

இவர்கள் குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளனர். இலங்கை – பாகிஸ்தான் நாடுகளை பின்புலமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாணவன், இந்த மாணவியுடன் ஒரே வகுப்பில் கற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவார். கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த மாணவனின் தந்தைக்கு சொந்தமான ஒரு குடியிருப்பு இருந்துள்ளது.

குறித்த மாணவனின் நட்பால் மாணவியும் சில நண்பர்களும் அடிக்கடி இந்த சொகுசு குடியிருப்பிற்கு சென்று வந்துள்ளனர். குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது மகன், நண்பர்களுடன் வந்தால் நுழைய அனுமதிக்குமாறு ஏற்கனவே தந்தை கூறியுள்ளார்.

அதற்கமைய நேற்று முன்தினம் மாலை பாடசாலை முடிந்து இந்த மாணவியும் மாணவனும் முச்சக்கர வண்டியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.

அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள உடற்பயிற்சி மையத்தின் தங்கும் விடுதிக்கு சென்று பாடசாலை சீருடைகளை மற்ற உடைகளை அணிந்து கொண்டு 67வது மாடிக்கு சென்றுள்ளனர்.

இமாமின் குடியிருப்பு 65வது மாடியில் உள்ளது. அவர்கள் அனைத்து பொருட்களையும் பெல்கனியில் வைத்துவிட்டு 67வது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

 

15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொன்றுவிட்டு, நாடகமாடிய நபர் : தற்போது சிக்கவைத்த மொட்டைக் கடிதம்!!

கலாவை காரில் ஏற்றி மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலைச்செய்ததும் இப்போது தெரியவந்துள்ளது. கலா கொலைச் செய்யப்பட்டது குறித்து அம்பலப்புழா போலீஸில் ஒரு மொட்டை கடிதம் சென்றதைத் தொடர்ந்தே மீண்டும் விசாரணை நடத்தி கொலையாளிகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் கலா (36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனில் என்பவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்தனர். அனில் அப்போது தென்னாப்பிரிக்காவில் பணி செய்துவந்துள்ளார்.

காதலுக்கு கலாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கலாவும், அனிலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். அந்த சமயம் இதுகுறித்து கலாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்கவில்லை.

இதற்கிடையே ஒரு குழந்தைக்கு தாயான கலா 2009-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அப்போது, மற்றொருவருடன் சென்றுவிட்டதாக அனில் கூறிவந்துள்ளார். அந்த சமயத்தில் மானார் காவல் நிலையத்தில் அனிலின் தந்தை புகார் அளித்திருந்தார்.

ஆனாலும், தொடர் நடவடிக்கை இல்லாமல் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் கலா கொலைச் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை காரில் ஏற்றி மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலைச்செய்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

கலா கொலைச் செய்யப்பட்டது குறித்து அம்பலப்புழா போலீஸுக்கு ஒரு மொட்டை கடிதம் சென்றதைத் தொடர்ந்தே மீண்டும் விசாரணை நடத்தி கொலையாளிகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இஸ்ரேல் நாட்டில் பணிசெய்யும் கலாவின் கணவர் அனிலை ஊருக்கு வரவழைத்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இது குறித்து ஆலப்புழா எஸ்.பி சைத்ரா தெரசா ஜான் கூறுகையில், “கலா கொலைச் செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்தன.

அதன்படி விசாரணை நடத்தியதில் கலாவை கொலைச் செய்த வழக்கின் பின்னணில் அனில்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. கலாவை கொலைச் செய்து அவரது உடலை அழிப்பதற்காக ஒருகாரில் உடலை எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆதாரங்களை அழிக்கும் செயலிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அனிலின் வீட்டு வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து சில உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது, கலாவின் உடலின் பாகங்கள் என சந்தேகம் உள்ளது. அதை உறுதிபடுத்துவதற்காக ஃபாரன்சிக் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் பயன்படுத்தும் லாக்கெட், கிளிப் உள்ளிட்டவையும் செப்டிக் டேங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் குற்றவளியாக சேர்க்கப்பட்டுள்ள அனிலை இஸ்ரேலில் இருந்து வரவழைத்து கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2, 3 மற்றும் 4-ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜினு, சோமன், பிரமோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்றார்.

வேறு ஆணுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்தே கலா கொலைச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடல் மட்கிப்போகும் வகையில் ரசாயன திரவங்கள் செப்டிக் டேங்கில் ஊற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் கிளம்பி உள்ளது.

செப்டிக் டேங்கிலிருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்ள் குறித்து அறிய டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கைகளைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்த காதலர்களுக்கு நேர்ந்த சோகம்!!

தங்களது கைகளைக் கயிற்றால் கைகளைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு தலகட்டாபுரா அருகே அஞ்சனாபூரைச் சேர்ந்தவர் அஞ்சனா(20). இவர் பிபிஏ படித்து வந்தார். கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(24) பி.காம் படித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் காதலித்து வந்தனர். இதில் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே திருமணமானவர். இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி காணாமல் போனார்கள். இது தொடர்பாக அவர்கள் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோணனகுண்டே மற்றும் தலகட்டாப்புரா ஆகிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நைஸ் சாலை அருகே உள்ள ஏரியில் கயிற்றால் கைகளைக் கட்டிய நிலையில் அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் இன்று இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஞ்சனா, ஸ்ரீகாந்த் காதலுக்கு கடும் எதிர்ப்பால், இருவரும் ஒன்றாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெற்கு பிரிவு டிசிபி லோகேஷ் ஜகலாசர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ” அஞ்சனா இறப்பதற்கு முன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், நாங்கள் ஒன்றாக வாழ முடியாது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று பேசி பதிவிட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோவில் செல்போனை வைத்து விட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதலில் ஏரியில் ஸ்ரீகாந்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலைத் தூக்கும் போது தான் அஞ்சனாவின் சடலமும் வெளியே வந்தது. அப்போது தான் அவர்கள் கைகளில் கயிறு கட்டப்பட்டது தெரிய வந்தது” என்றார்.

உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்த 22 வயது பெண் அடுத்து நேர்ந்த சோகம்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர் உடற்பயிற்சி கூடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் பெங்களுருவின் தாசரஹள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தவர் ஷ்ராவணி.

தாவங்கேரியைச் சேர்ந்த 22 வயதான இவர், பாகல்குண்டேயில் பகுதியில் பணிக்காக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஷ்ராவணி உடற்பயிற்சி கூடத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

அடுத்து அவர் மயங்கி விழுந்ததால் பதறிய சக ஊழியர்கள் உடனடியாக ஷ்ராவணியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஷ்ராவணியின் இறப்பினை இயற்கைக்கு மாறான மரண அறிக்கையின் கீழ் பகல்குண்டே பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 5 பேர் பலி : கடைசியாக எடுத்த கடைசி செல்ஃபி!!

கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்த 5 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு அவர்கள் எடுத்த செல்ஃபி வெளியாகியுள்ளது.

மன்னார் – தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர். அதனை குடித்த அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

கருவாட்டுக் கறிச் சட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!

பாணந்துறையில் பொசன் தினத்தன்று வழங்கப்பட்ட உணவு “தன்சலின்” போது கருவாட்டு கறி சட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் லேடி ரிட்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பெக்கேகம பிரதேசத்தில் வசிக்கும் ஷயானி மெதும்சா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு தன்சல் வழங்கப்பட்ட நிலையில் சிறுமி அங்கு தனது தாயாருடன் சென்றிருந்த போதே தவறி விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வீரரின் தலையெழுத்தை மாற்றிய விராட் கோலி!!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பின்னால் புகழப்படும் இலங்கை வீரராக நுவான் செனவிரத்ன திகழ்கின்றார்.

நுவான் செனவிரத்ன, இலங்கையில் இரண்டு முதல்தர போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

இதன்பின்னர் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமையால், வாழ்க்கையை நடத்த பணம் இல்லாத நிலையில் பாடசாலை சேவை பேருந்து ஓட்டுனராக நுவான் செனவிரத்ன தனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதன்போது அவருக்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீச்சு பயிற்சியின் போது சைட் ஆர்ம் (side arm) மூலமாக பந்து வீச்சு பயிற்சி வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

முதன் முதலில் இலங்கை ‘ஏ’ அணிக்கு அந்த பயிற்சியை வழங்கியுள்ளார்.

அதன்பின் அவர் உலகிலேயே மிக வேகமாக வீசக்கூடிய வீரர் என்பதை அறிந்த இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளர் அவரை தேசிய அணி வீரர்களுக்கு பந்து வீச சில வாய்பபுக்களை கொடுத்துள்ளார்.

ஆனால் இலங்கை தேசிய அணி வீரர்கள் அவர் மிக வேகமாக பந்தை சைட் ஆர்ம் மூலம் வீசுவது தங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம் என்று முறையிட்டதால் அவருக்கு தேசிய அணிக்கு பந்து வீசி பயிற்சி வழங்க நிரந்தர வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதன்போது நுவான் செனவிரத்ன பற்றி அறிந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி , தனது விசேட கோரிக்கையின் அடிப்படையில் இந்திய அணிக்கு பயிற்சி வழங்கும் அணியில் நுவான் செனவிரத்னவிற்கு நிரந்தர இடம் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்தியா சென்ற நுவான் செனவிரத்ன, விராட் கோலிக்கு மிக வேகமாக பந்து வீசலாமா? அதனால் தனது வேலைக்கு பாதிப்பு வரலாமோ? என்று யோசித்துள்ளார்.

அப்போது கோலி, “உன்னை நாங்கள் எடுத்தது அந்த வேகமான பந்துகளை வீச வேண்டும் என்பதற்காகவே, யோசிக்காமல் வீசு” என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் நுவான், விராட் கோலியின் வலை பயிற்சியின் போது ஆஸ்தான சைட் ஆர்ம் பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

நுவான் உள்ளிட்ட அணியினர் தனது துடுப்பாட்டம் மேம்பட எந்தளவு முக்கியமானவர்கள் என விராட் கோலி பேசும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்துள்ளது.

அதில் விராட் கோலி, நுவான் பற்றி சொல்லும் போது “நுவான் இலங்கையர் என்றாலும் , இப்போது இந்தியர் போல் ஆகிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

இலங்கை அணியால் புறக்கணிக்கப்பட்டவரை இந்திய அணி, குறிப்பாக கோலி, உள்வாங்கி இன்று உலகத்தில் உள்ள சிறந்த ஒரு throwdown specialist ஆக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரைப் பயன்படுத்தி தங்கள் துடுப்பாட்ட திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!!

கொழும்பில் நேற்று உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 15 வயதான குறித்த இருவரும் காதல் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்று முன்தினம் (02.04) விழுந்து 15 வயதுடையவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாடசாலை முடிந்ததும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு உடைகளை மாற்றிக்கொண்டு, காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, பாடசாலை பைகளை உடற்பயிற்சி மையத்திற்குள் வைத்துவிட்டு, உடற்கட்டமைப்பு மையத்துக்கு வெளியே உள்ள படிக்கட்டுகள் வழியாக 67வது மாடிக்கு சென்றனர்.

குறித்த இருவரும் திட்டமிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் இணைப்பு 

கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

இரத்தினபுரி, பொத்தப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்திவெல திருவானை பிரதேசத்தில் திடீரென நபர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், பாரிய கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக, சம்பாதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் கண்டி பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்,குறுகிய காலப்பகுதியில் சுமார் 2 கோடி ரூபா செலவில் வீடொன்றை நிர்மாணித்துள்ளார். இதற்கான பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 45 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் அவரிடம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இணைந்திருந்தமையும் பின்னர் அங்கிருந்து வெளியேறியமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெறுமதி 22 லட்சம் ரூபாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து : ஒருவர் பலி : சிலர் ஆபத்தான நிலையில்!!

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து கோர விபத்திற்கு முகங்கொடுத்த நிலையில், அதற்கு சாரதியின் செயற்பாடு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் அதிக வேகமே விபத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்த விபத்தின் போது லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த ஏனைய இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால் தான் அரச ஊழியர்களுக்கு சம்பளம்!!

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணில் ஏற்றுக் கொண்ட சவால்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது.

எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

கடந்த காலங்களில் திறைசேரியில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாடு கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் உருவாகின.சமூகம் முழுமையாக வெறுப்புக் கலந்த சமூகமாக மாறி, நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டன.

நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத வேளையில், பிரதமராகவும், முதிர்ந்த அரசியல்வாதியாகவும் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க அந்தச் சவாலை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் செய்த முதல் விடயம், சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

அத்துடன், ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம்

இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.

அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு அடையாத நாடாக நாம் கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.

இத்தகைய பரிவர்த்தனைகள் உலக விதிகளின்படி மட்டுமே நடக்க வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது. எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவுசெலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகிறது.

வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்கள் போன்றவற்றுக்கு பணம் கண்டிப்பாகத் தேவை. இந்த முறையைத் தவிர, வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்தைப் பெற வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்!!

கம்பஹா பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்ணின் சடலம் பியகம பொலிஸாரால் இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் வீட்டில் ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்த நபரிரனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வலயத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 29 வயதான ஷம்மி மதுஷிகா என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், நேற்றைய தினம் பிற்பகல் கொஸ்கொட கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது, ​​அவர் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதுடன், கொஸ்கொட பொலிஸார் இது தொடர்பில் பியகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த நேரத்தில், அவர் சில இரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேகநபர் நிரந்தர தொழில் இல்லாதவர் எனவும் 32 வயதான எல்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பியகம பொலிஸார் மஹர நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்கமைய, மஹர நீதவான் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்து நீதவானின் அவதானிப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ!!

தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது.

இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் அது சுழன்று கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னர் கீழே விழுந்ததாகவும் நகர சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கூமி நகர மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கான தொழில்நுட்ப காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சாமியாரை தரிசிக்க சென்ற 121 பேர் உயிரிழப்பு : கூட்ட நெரிசலால் துயரம்!!

சாமியாரை தரிசிக்க சென்ற 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா (Bhole Baba) என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா (Bhole Baba) பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

‘போலே பாபா’ (Bhole Baba)என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். அதோடு இவர் உத்தரப் பிரதேச காவல் துறையின் உளவுத் துறையில் பணியாற்றிவர்.

இதுவரை 10 லட்சத்தைத் தாண்டும் எண்ணிக்கையில் போலே பாபாவின் (Bhole Baba) பக்தர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தனது கூட்டங்களை போலே பாபா அந்தந்த பகுதியிலுள்ள சீடர்கள் மூலம் நடத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும், தனக்கு கிடைக்கும் நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்களை பிரச்சாரக் கூட்டங்களில் பக்தர்களுக்கே வாரி வழங்கி விடுவதும் இந்த பாபாவின்(Bhole Baba) பாணியாக உள்ளது. இதுவே, பாபாவின் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணம் எனவும் கூறப்படுகின்றது.

யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த அதிர்ச்சி : அற்றோனிக் பவர் கொடுப்பவர்கள் அவதானம்!!

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழரின் காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றார். இந்நிலையில் யாழில் உள்ள தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு புலம்பெயர் தமிழர் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக அந்த காணிக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார்.

காணி உரிம மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து ,அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், காணி மோசடி செய்த புலம்பெயர் தமிழரின் சகோதரியைக் கைது செய்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பெண்கள் முற்படுத்தப்பட்ட போது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஆள்மாறாட்டம் செய்து, சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்த போது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றோனிக்பவர் கொடுக்கும் நம் புலம்பெயர் உறவுகள் சித்தித்து செயல்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.