மலையக வீரர்களால் இலங்கைக்கு 8 பதக்கங்கள்!!

சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்களை மலையக வீரர்கள் வென்றுள்ளனர்..

சிங்கப்பூர் கோவான் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 22,23 திகதியன்று நடைபெற்று முடிந்த சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குற்றிய மலையகத்தை சேர்ந்த பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் மற்றும் இராகலை மெய்யப்பன் சசிகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தமாக எட்டு பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர்.

13 நாடுகள் பங்குபற்றிய இவ் போட்டியில் இலங்கையிலிருந்து 44 வீரர்கள் பங்குகொண்டிருந்தனர்.

இதில் மலையகத்திலிருந்து சென்ற மெய்யப்பன் சசிக்குமார் 1500 மீற்றர், 800 மீற்றர் மற்றும் 80 மீற்றர் தடைத்தாண்டல் போட்டிகளில் 3 முதலாமிடம் பெற்று 3 தங்கப்பதக்கங்களையும் 4×100 அஞ்சலோட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அதேபோல துரைசாமி விஜிந்த் சுற்றியெரிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் ,4×400 அஞ்சலோட்ட போட்டியில் முதலாமிடத்துடன் தங்கப்பதக்கத்தையும் ,நீளம் பாய்தல்,உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

மொத்தமாக 5 தங்கப்பதக்கங்கள்,3 வெள்ளி பதக்கங்களையும் வென்று நேற்று மாலை நாடு திரும்பியதோடு மலையகத்திற்கும் பெருமை தேடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலி நீக்கம்!!

விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.

இருப்பினும், அவ்வப்போது பழைய கையடக்க தொலைபேசிகளில் இருந்து அதன் சேவையை நீக்கி வருகின்றது.

ஏனெனில், கையடக்க தொலைபேசிகளால் சேர்க்கப்படும் புதிய அம்சங்களை செயற்படுத்த முடியாமை அல்லது பாதுகாப்பு மேம்படுத்தல்களை பெற முடியாமை என்பதாகும்.

இந்நிலையிலேயே, எதிர்வரும் வாரங்களில் 35இற்கும் மேற்பட்ட அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சமீபத்திய புதுப்பிப்பின்படி, வாட்ஸப்பினை இயக்க பயனர்கள் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு அல்லது ஐ.ஒ.எஸ் 12 (IOS12) அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய சூழ்நிலையில், பயனாளர்களின் பாவனையில் உள்ள தொலைபேசி குறைந்தபட்சம் இந்தப் பதிப்புகளில் இல்லை என்றால், அவர்களின் தொலைபேசியின் மென்பொருளை அவர்கள் புதுப்பிக்க வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், WhatsApp நீக்கப்படும் 35 கையடக்க தொலைபேசிகளில் Galaxy Ace Plus, Galaxy Core,Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom ஆகியன அடங்குகின்றன.

மேலும், குறித்த பட்டியலில் Xperia Z1, Xperia E3, Ascend P6, Ascend G525, C199, GX1s, Y625 ,Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7, I5, I6, i6S, i6S Plus உள்ளிட்டவையும் உள்ளன.

இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவதால், இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக சந்தை தரப்பினர் கூறுகின்றனர்.

அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின் உரிமையைப் பெறுவார்கள் என்பதால், காணிகளின் தேவை குறைவதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், முந்தைய வரவு செலவு திட்ட ஆவணத்தில் ஸ்டேஷன் பிளாசா என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் மதிப்பின் கீழ் அவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே எந்தவொரு இடைத்தரகர் அல்லது அரசியல் உறவும் இல்லாமல் பயனுள்ள திட்டங்களுக்காக காணி வைத்திருக்கும் அமைச்சகங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒருவர் குத்தகை அடிப்படையில் அரச நிலத்தைப் பெற முடியும்.

இந்த நிலைமையின் அடிப்படையில், தனியார் காணி வியாபாரம் தொடர்பில் தற்போது விளம்பரங்கள் வெளியிடப்படுகின்ற போதிலும், விலை கேட்காமல் காணிகளை கொள்வனவு செய்ய மக்கள் முன்வருவதில்லை என சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இலங்கையில்!!

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) நேற்றையதினம் (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 ஹெலிகொப்டர் (MI-17 helicopter) ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்தது.

அதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

60 ஆயிரம் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை!!

இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள் தொடர்கின்றன.

கொழும்பு (Colombo) துறைமுகத் தரப்பினர் மற்றும் கப்பலின் உள்ளூர் முகவர் ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட மொத்தம் 75,927 மின்னஞ்சல்களில் இருந்து சுமார் 64,706 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டதாக ஏற்கனவே நீதிமன்றில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது 2021 மே 20ஆம் திகதியன்று தீயினால் எரியுண்டது. இந்த நிலையில் 2021 மே 10 முதல் மே 21 ஆம் திகதிகள் வரையிலான மின்னஞ்சல்கள் பிரதான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த குற்றம் தொடர்பில் பரந்த அளவிலான தடயவியல் ஆய்வை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான உண்மை தகவல்களை மறைக்க தரவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றில் அரச தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றில் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கப்பல் தொடர்பில் தற்போது பிணையில் உள்ள சந்தேகநபர்கள் அனைவரையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பயணிகளுடன் நேற்றிரவு ( 28) அம்பாறை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனான விபத்தை தவிர்ப்பதற்காக பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேரூந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான பேரூந்தை மீட்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்துள்ளனர். பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 

நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் மாயம்!!

நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய பெண் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன பெண் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

காணாமல்போன பெண் தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியுமென மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவொன்றை பகிர்ந்து கேட்டுக்கொண்டுள்ளது.

தென்னிலங்கை அரசியல்வாதியின் மகன் அதிரடியாக கைது!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம் தூண் மீ ஓயாவிற்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு!!

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கோயில்குளம் பகுதியில் நேற்று (28.06.2024) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஒரு புவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மணமேடையில் மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்த மணப்பெண்!!

மணமேடையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மணமகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள் பலர் முன்னிலையிலேயே அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமண நாள் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க போகும் தருணங்கள்.இதனால் அனைவரும் திருமண நாள் வைபவங்கள் மகிழ்ச்சியை மட்டுமே தரவேண்டும் என விரும்புகின்றனர்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மேடையில் நின்று கொண்டு உறவினர்கள், நண்பர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்தனர். ஏதோ பிரச்சனையால் கோபமாக இருக்கும் மணமகள், திடீரென விரக்தியை வெளிப்படுத்தி, இனிப்பை வாங்க மறுத்து விடுகிறார்.

மணமகன் வலுக்கட்டாயமாக இனிப்பை ஊட்டியதால் பொறுத்துக் கொள்ள முடியாத மணப்பெண், திடீரென மணமகனை 3 முறை அறைந்து ஊட்டிவிட்ட இனிப்பை கீழே துப்பிவிடுகிறார்.

இதனால், மணமகனும், அவரை சுற்றி நின்றிருந்த உறவினர்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

தீராத கடன் தொல்லை இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஓடக்கலி புளியம்பிள்ளை முகல் நெடும்புராத் இல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய சாந்தினி, கடனின் தவணையை கட்டுவதில் சிரமங்களை மேற்கொண்ட நிலையில், கடன் தொல்லைக் காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை கடன் தொகையைக் கேட்டு அவரது வீட்டிற்கு நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் வந்ததாக சாந்தினியின் உறவினர்கள் தெரிவித்தனர். குருப்பம்பட்டி போலீசார் சாந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரும்பாவூர் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு : மன உளைச்சலில் தந்தை மரணம்!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பீமலியில், வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயதுடைய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த தந்தை, மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு பார்கவ் (23) என்கிற மகன் இருந்தார். இவர்களது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாய்ஒன்றை வளர்த்து வந்த நிலையில், கடந்த மாதம் பார்கவை இவர்களது வளர்ப்பு நாய் கடித்துள்ளது.

இதனால் அவருக்கு ரேபிஸ் தொற்று பரவி உயிரிழந்தார். மகனை இழந்த துக்கத்தில் தந்தை நரசிங்க ராவும் படுத்த படுக்கையாகிவிட்டார். இந்நிலையில், அவர் நேற்று மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார். வளர்ப்பு நாயால் மகன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவரும் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர்!!

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர் ஒருவர் கவனம் ஈர்த்துவருகிறார்.

இலங்கையிலிருந்து யுத்தத்துக்குத் தப்பி வந்த ஒரு தம்பதியரின் மகள் உமா குமரன். லேபர் கட்சி சார்பில் Stratford and Bow தொகுதியில் போட்டியிடுகிறார் உமா குமரன்.

முதுகலை பயின்ற உமா குமரன், தலிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசத்தெரிந்தவர் ஆவார்.

மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்கவேண்டும், தான் சார்ந்த லேபர் கட்சிக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் விளக்கும் காட்சிகளை இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

 

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் பலி!!

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (28.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஜெர்மனியில் பெருந்தொகை யூரோக்களுக்கு விற்கப்பட்ட மாம்பழம்!!

தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேபோன்று சமீபத்தில் வவுனியாவில் உள்ள உக்குளாங்குளம் பிள்ளையார் கோவிலில் ஏலத்தில் மாம்பழமொன்று 162,000 ரூபாய்க்கு (500 யூரோ) விற்பனையாகியது.

அதேவேளை இதே பகுதியிலுள்ள மற்றொரு கோவிலில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு மாம்பழம் 95,000 ரூபாய் (300 யூரோ) விலைக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் ஜெர்மனி, கும்மெர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிகுமாரன் கோவிலில் நடந்த ஏலத்தில் தொடக்க விலை 25 யூரோவாக இருந்தது, இறுதியில் மாம்பழம் 1050 யூரோ விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முழு வருமானமும் கோவிலின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் மற்றும் சமூக நற்பணிகளுக்கும் நிதி திரட்டும் முகமாக இவ்வகையான ஏலங்கள் இலங்கையின் வட மாகாணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இப்படியான ஏலங்களுக்கு கிராமவாசிகளும், புலம்பெயர் மக்களும் பெரும் அளவில் தொடர்ச்சியாக பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் உற்பத்தி!!

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவி

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார்.

கொழும்பு 7 ஹெக்டர் கோபப்படுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ருவான் லங்காதிலக்க, தனது இந்த ஐஸ் கிறீம் உற்பத்தியை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அறிமுகம் செய்துள்ளார்.

கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை பச்சை மிளகாயைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாட்டுப் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவிக்கின்றார்.