வவுனியாவில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பெண் : கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை பெண் ஒருவர் அமைத்து வரும் நிலையில் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காப்பகத்திற்கு முன்னால் இன்று (27.06.2024) காலை திரண்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். எனினும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர்.

நோர்வே நாட்டில் இருந்து வந்துள்ள பெண் ஒருவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைகளின் மத்தியில் உள்ள வெற்று காணி ஒன்றில் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை அமைத்து வருவதுடன், தற்போது கட்டக்காலியாக வீதிகளில் திரிந்த 42 நாய்களை அக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த காப்பகத்தினால் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடிமனைக்குள் நாய்கள் காப்பகத்தை அமைக்க யார் அனுமதி கொடுத்தது எனவும் தெரிவித்து அக் காப்பகத்தை மக்கள் இல்லாத பகுதியில் அமைக்குமாறு கோரி அக் கிராம மக்கள் காப்பகம் முன் ஒன்று கூடினர்.

அப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், காப்பகத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் காப்பக உரிமையாளரிடம் காப்பகம் அமைப்பதற்கான அனுமதிகளை கேட்டிருந்தனர்.

எனினும் காப்பக உரிமையாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவினர், கால்நடை வைத்தியர் ஆகியோரின் அனுமதியை பெறவில்லை என்பது இதன்போது தெரிவய வந்தது. இதனையடுத்து புதிதாக நாய்களை கொண்டு வருவதை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், முறையான அனுமதி பெற்ற பின் நடத்துமாறு உரிமையாளருக்கு தெரிவித்தனர்.

பொதுமக்கள் நாய் காப்பகத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்கும் முறைப்பாடு செய்து கடிதம் வழங்கியுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (27.06.2024) கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை முழுவதும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 57 வது நாளாகவும் தமது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சத்யாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (26.06.2024) கொழும்பில் பாடசாலை ஆசிரியர், அதிபர்களது போராட்டத் தளத்தில் அவர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், தமது நியாயமான கோரிக்கையாக காணப்படுகின்ற சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனக் கூறியும் இவ் ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்பீட கட்டிட தொகுதியிலிருந்து ஆரம்பித்த ஊர்வலமானது நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்திருந்தது.

வவுனியா வைத்தியசாலை நோயாளர்விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (27.06.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கபட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

கல் நெஞ்சையும் கரைக்கும் காதல் தம்பதிகளின் அடுத்தடுத்த மரணம்!!

சேலம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த காதல் கணவரும் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 22 வயதாகும் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் பாஸ்ட் புட் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அவரை கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஓராண்டாக நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் வீசியது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சல் அடைந்த பூபாலன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேகலாவிடம் டாக்டர்கள் தெரிவித்தார்களாம்.

இதை கேட்டதும் கணவரை அருகில் இருந்து கவனித்து வந்த மேகலா திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அப்போது பழைய புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே உள்ள ஒரு மரத்தில் மேகலா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஷம் குடித்த பூபாலன் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் மேகலாவிடம் தெரிவித்ததால் தான் மேகலா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி உறவினர்கள் , கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

இதற்கிடையே சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த பூபாலன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கேட்டவுடன் பூபாலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள்.

காதல் கணவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

 

 

ஜிம்மிற்கு செல்லாமல்.. 10 மாதங்களில் 23 கிலோ எடையை குறைத்த தொழிலதிபர்!!

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜிம்மிற்கு செல்லாமலேயே 23 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிராஜ். இவர், 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்துள்ளார்.

பின்னர், தனது எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ்கோஹெலை சந்தித்துள்ளார். அப்போது அவர் கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை தொழிலதிபரால் பின்பற்ற முடியவில்லை.

இதையடுத்து, தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையையும் பின்பற்ற முடியவில்லை.

இதனால், நிராஜிற்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கு சதேஷ் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். மேலும், வீட்டில் சமைக்கின்ற உணவுகளுடன் பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டெப்ஸ்களை நடந்ததுடன் உணவையும் நிராஜ் பின்பற்றியுள்ளார். இதனால், 10 மாதங்களில் 23 கிலோ எடை நிராஜ் குறைந்ததாக உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ் தெரிவித்துள்ளார்.

 

கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19) முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தப்படியே தினமும் கல்லூரிக்குச் சென்று பயின்று வந்த தாரணி திடீரென கல்லூரியின் விடுதியறையில் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் தாரணியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் தந்தை பாலாஜி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், “எனது மகள் B.தாரணி அவர்கள், சமயபுரம் தனலெட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் B.Tech.

முதலாமாண்டு படித்து வத்தாள். மதியம் 12.30 மணியளவில் எனது மகள் தாரணி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மெண்டர் (mentor) இருவரும் சேர்ந்து தன்னைக் கடுமையாக திட்டுவதாகவும், என்னை வந்து உடனடியாக வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறினாள்.

உடனடியாக சிவகங்கையில் இருந்து திருச்சி சமயபுரத்திற்கு நான் எனது மகளைப் பார்க்க மாலை 4.30. மணியளயில் கல்லூரிக்கு வந்தேன். நான் விடுதிக்கு சென்று, எனது மகளைச் சந்திக்க வேண்டும் என கூறினேன்.

மாலை 6.30 மணி வரை எனது மகளை சந்திக்க உள்ளே அனுமதிக்காமல் காத்திருக்க வைத்திருந்தனர். நான் ஏன் காலதாமதம் படுத்துகிறீர்கள் என கூறி உள்ளே செல்ல முயற்ச்சித்த போது தான், கல்லுாரி நிர்வாகத்தினர் என்னை ஐந்தாவது மாடிக்கு அழைத்து சென்று, அறை எண் 512ல் படுக்கையில் எனது மகள் பிணமாக கிடப்பதை காட்டினர்கள்.

மேலும் எனது மகள் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள். எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.எனது மகளின் இறப்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது.

எனவே எனது மகள் தாரணி இறப்பு குறித்து உரிய விசாரனை மேற்கொண்டு, இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பனிவுடன் வேண்டுகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பெண் ஊழியரை பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரிக்கு 13 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை!!

திருகோணமலையில் பலவந்தமாக பெண் ஊழியரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்திற்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (24.06.2024) தீர்ப்பளித்தது.

2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7இலட்சத்து 50ஆ யிரம் ரூபா இழப்பீடு மற்றும் அரசுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்று குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீதியரசர்களான சம்பத் பி.அபயகோன் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகியோர் மேற்படி தீர்ப்பினை வழங்கி இருந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் கணவன்.. மருத்துவர்கள் சொன்ன வார்த்தைய கேட்ட மனைவி எடுத்த விபரீத முடிவு!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் (22) என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் துரித உணவு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த பூபாலன், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பூபாலனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு கணவனை கவனித்து வந்த மேகலா, திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அருகே உள்ள மரத்தில் மேகலா தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷம் குடித்த பூபாலன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் மேகலாவிடம் கூறியதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.

இதையறிந்த பூபாலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.சேலம் அரசு மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காதலின் மனைவி தற்கொலை செய்து கொண்டதுடன், கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் கூட வாழறதுல என்ன பிரச்சனை.. இளம்பெண்ணைக் கொன்ற கணவர்!!

என் கூட ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என்று இளம்பெண்ணை 2வதாக திருமணம் செய்துக் கொண்ட கணவர் வெறித்தனமாக குத்திக் கொலைச் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் மேகலா எனும் இளம்பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் மேகலாவுக்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இருவருக்குள்ளும் தகராறு எழுந்துள்ளது.

அதன் பின்னர் மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்த மேகலா, மணிகண்டன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை பெரிய கடை பஜார் பகுதியில் கடை ஒன்றில் தனது தாயாருடன் மேகலா இருந்த போது அங்கே சென்ற மணிகண்டன், ‘ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்?’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகரிக்கவே, மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மேகலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் மேகலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒன்றரை வயது குழந்தையின் மேல் விழுந்த தொலைக்காட்சி.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது ஒன்றரை வயது குழந்தை அப்துல் சமத்.

நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்த டிவி ஸ்டாண்ட் உடன் குழந்தை மேல் விழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக படுகாயமடைந்த குழந்தை அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டிவி ஸ்டாண்ட்டை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குளத்தில் குளித்த 13 வயதுச் சிறுமி அமீபிக் வைரஸ் தாக்கி உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் 13 வயது தக்சினா. 8ம் வகுப்பு படித்து வரும் தக்சினாவுக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல் : களுத்துறையில் சம்பவம்!!

களுத்துறையில் பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீடொன்றிற்கு சென்ற மூவர், அங்கு பேய் வேடம் அணிந்திருந்த சிறுவன் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் களுத்துறை வடக்கு , பெல்பொல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே காயமடைந்துள்ளார். பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீட்டிற்கு பார்வையாளர்களாக சந்தேக நபர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் பேய் வேடம் அணிந்து இவர்களைப் பயமுறுத்தியதனால் , கோபமடைந்த மூவரும் சிறுவனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (2024.06.26) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,397 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,060 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 183,800. ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள் : நடந்தது என்ன!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பைக்களுக்குள் போடப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்கள் இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை காணாமல் போன நகைகள் தொடர்பாக எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.

யாழில் கொள்ளைகளும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக தங்கள் பொருட்களை வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னராக சாவகச்சேரியில் இது போன்றதொரு சம்பவம் நடந்த நிலையில் சாவகச்சேரி நகரசபையின் ஊழியர்கள் தேடுதல் நடத்தி தவறுதலாக குப்பை மேட்டை வந்தடைந்த 18 பவுண் நகை களை மீட்டு உரிமையாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாவது போதைக்கு அடிமையாவதை போன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பிள்ளைகள் இணையத்தில் இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மிக அதிகம். இணையத்திற்கு கடுமையாக அடிமையாகி இருக்கும் பிள்ளைகள் இருந்தால், அவர்களை கைத்தொலைபேசியில் இருந்து முற்றாக நீக்குவது அவசியம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி மற்றும் கணினி வழங்கக்கூடாது. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெற்றோரின் கடுமையான கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என ரூமி ரூபன் கூறியுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையானவர்களுக்கு இவ்வாறான சாதனங்களை வழங்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

கையடக்கத் தொலைபேசி, கணனி போன்றவற்றுக்கு அதிகம் அடிமையானால் முதல் நிலையிலேயே அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள் வீடியோ கேம்களுக்கு அதிகம் அடிமையாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து வீடியோ கேம்களை பார்ப்பதன் மூலம் சிறுவர்களின் நடத்தை வன்முறையாக மாறுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக ரூபன் கூறியுள்ளார். இதுபோன்ற செயல்களுக்கு அடிமையான பிள்ளைகள், பெற்றோர்களை கூட அவர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையம் மற்றும் வீடியோ கேம்களில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற சிறப்பு அறிவியல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்திய நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தற்போது, ​​மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவு H5 மற்றும் H7 விகாரங்கள் மற்றும் H9 இன்ப்ளூயன்ஸா போன்றவற்றையும் கண்டறிய தேவையான PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் மத்தியில் பரவும் பறவைக் காய்ச்சல், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கும் என்பதால், பறவைகள் மற்றும் அவற்றின் கழிவுகளை தொடுவதை தவிர்க்கவும், அவதானமாக செயற்படவும் சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொடக்கூடாது. கோழிப்பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்கவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

அத்துடன் தமது பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் காணப்பட்டால், அவை உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.