இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி!!

இலங்கையில் பிரபல பேஸ்பால் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க விளையாடி இருந்தார்.

இன்று (22.06) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த கேஷான் மதுஷங்க, கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.

இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை!!

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது, பின்னர் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது.

இன்ப்ளூயன்ஸா வைரஸின் பல திரிபுகள் மற்றும் துணை திரிபுகள் உள்ளன. சமீபத்தில், இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்தியாவில் அடையாளம் காணப்பட்டார்.

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்ப்ளூயன்ஸா ஏ (எச்.9.என்.2) வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அந்த சிறுமியாகும்.

இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்தும் விலங்குகளிடமிருந்து வந்தவையாகும், மேலும் பறவைக் காய்ச்சல் மனிதனிடம் இருந்து மற்றுமொரு மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், H5, H7 மற்றும் H9 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறன் இலங்கையில் உள்ளது.

பறவைக் காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் பறவைக் காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் சுற்றித் திரிபவர்கள் எப்போதும் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள் என மருத்துவர் ஜூட் ஜெயமஹா மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் பாட்டிக்கு நேர்ந்த நிலை : சோக சம்பவம்!!

இந்தியாவில் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானியங்கி கதவில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, மலப்புறம் மாவட்டம் வயலத்தூரை சேர்ந்த அப்துல் கபூர் மற்றும் சாஜிலாவின் மகன் தான் முஹம்மது சினான். இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சிறுவன் சினான் தொழுகைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து முன்பக்கம் இருந்த வேறு ஒருவரின் வீடு வழியாக பள்ளிவாசல் சென்றுள்ளான்.

அப்போது அங்கிருந்த தானியங்கி கதவை திறந்து உள்ளிருந்தபடியே கதவு அடையும் விதமாக ஸ்விட்சை அழுத்திவிட்டு சிறுவன் வெளியேறி உள்ளான்.
அதற்குள்ளாக தானியங்கி கதவு சிறுவனின் கழுத்து பகுதியை நெறித்துள்ளது.

தானியங்கி இருந்த சென்சார் வேலை செய்யாத காரணத்தினால் சிறுவன் கழுத்துப் பகுதி கதவில் சிக்கி உயிருக்கு போராடி இருந்திருக்கிறான்.

தானியங்கி கதவு உள்ள வீட்டில் தற்போது யாரும் இல்லாத காரணத்தினாலும் அந்த வழியாக யாரும் வராத காரணத்தினாலும் சிறுவன் தானியங்கி கதவில் சிக்கி உயிருக்கு போராடியதால் யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

சிறுது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்ததன் பேரில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனின் பாட்டி மருத்துவமனையிலேயே அதிர்ச்சியில் உறைந்து உயிரிழந்துள்ளார்.

கோர விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : அவசர சிகிச்சை பிரிவில் தந்தை, மகன் அனுமதி!!

அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே இன்று உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போது, ​​தம்புள்ளை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர், அந்த முகச்சக்கர வண்டியை மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயதான மகள் சசினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகனும், பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 வருடமாக கடமை புரிந்த பேருந்தை மனமுருகி பணிந்து வணங்கிய சாரதி!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் திருகோணமலை சாலையில் சுமார் 30 வருடமாக சாரதியாக கடமையில் ஈடுபட்டுவந்த s. சாலிய குணசேகர என்பவர் கடமையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் தான் கடமை செய்த NC – 2171 பேருந்தை மனமுருகி பணிந்து வணங்கும் காட்சி கண்கலங்க செய்துள்ளது.

 

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தயாரித்த மதுபானத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட மதுபான தயாரிப்பு ஒன்று விருதை வென்றுள்ளது. இலங்கையின் உள்ளூர் பியர் தயாரிப்பான Two Rupees நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனி பெரேரா இந்த விருதை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற Australian Distilled Spirits விருதுகளில், அவர் தயாரித்த ஜின் தயாரிப்பு புதிய உலக சமகால ஜின் பிரிவின் கீழ் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இதற்காக இலங்கை மசாலாப் பொருட்களும் இந்திய மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

டேனி பெரேரா 2000 ஆம் ஆண்டில் நுண்ணுயிரியல் படிப்பதற்காக விக்டோரியா பல்கலைக்கழகத்திற்கு வந்தார், மேலும் தனது படிப்பின் போது மதுக்கடை மற்றும் சமையல்காரராக பணியாற்றினார்.

பியர் தயாரிக்கும் ஆசையின் அடிப்படையில் சிறுவயது முதல் நண்பரான அமில மெண்டிஸுடன் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு Two Rupees என்ற பியர் தயாரிப்பு அலுஸ்திரேலியா சந்தையில் வெளியிடப்பட்டது.

அவர் தற்போது மெல்போர்னில் வசிக்கிறார் மற்றும் 2022 ஆம் ஆண்டு முதல் ஜின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, அவர்கள் வசித்த வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் சோதனைகளை மேற்கொண்டனர், மேலும் கொவிட் தொற்றுநோய்களின் போது, ​​சோதனைகளை நடத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்தது.

இந்த இரண்டு இலங்கையர்களும் சராசரியாக மாதமொன்றுக்கு சுமார் 1200 லீற்றர் ஜின் உற்பத்தி செய்வதாகவும், மெல்பேர்னில் உள்ள பல பிரபல உணவகங்களில் இவை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

வட இந்தியாவை தாக்கும் வெப்ப அலை : ஒரு வாரத்தில் 200 பேர் பலி!!

வட இந்தியாவை தாக்கும் வெப்ப அலை, கடந்த வாரத்தில் மாத்திரம் புதுடில்லியில் கிட்டத்தட்ட 200 வீடற்ற மக்கள் பலியானதாக வீடற்றவர்களுக்கு உதவும் ஒரு தன்னார்வக் குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களில் 52 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் திறந்த வெளியில் வேலை செய்யும் ஏழைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கமான வெப்ப அலையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வெப்பம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அலுவலகம் தகவல்படி, புதுடில்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்றைய இரவு நேர வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பரன்ஹீட்) ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை சென்ற 645 பேர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில்(Saudi Arabia) நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர் ஜோர்டானியர்கள், 68 பேர் இந்தியர்கள் என்றும் மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹஜ் பயணம்

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் , இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிவதோடு, வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

தமிழர் பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையை பார்த்த இளைஞன் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

திருகோணமையில் உள்ள பகுதியொன்றில் வீதியில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவரின் நேர்மையான செயல் தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்துள்ளார்.

அந்த பணப் பையில் 19560 ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் காணப்பட்டிருந்தன. இதில் பணப்பையின் உரிமையாளரை தொடர்பு கொள்வதற்கான எதுவித தொலைபேசி இலக்கங்களும் இருக்கவில்லை.

இருப்பினும் அந்த பையில் அவரது ஆவணங்கள் இருந்தமையால், அதனை ஆதாரமாக வைத்து பணப்பையை கண்டெடுத்த நபர், சமூக வளைத்தளங்களில் உரியவருக்கு தகவல் சேரும்படியாக பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த பதிவினை பணப்பையை தொலைத்த நபர் பார்வையிட்டு உரிய நபரை தொடர்பு கொண்டு தனது பணப் பையை இன்று காலை பெற்றுக் கொண்டதோடு, உதவிய நிஜாமுதீனுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜெஸாகிர் (சலீம்) ஊடாக குறித்த பணப்பையும், ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டது. பணப்பையை தொலைத்த நபர் பிபிலைப் பகுதியைச் சேர்ந்த செனைவிரத்ன முதியன்சலாகே சதுரங்க குமார என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா DCDB யினரால் 20இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் (DCDB) மீட்கப்பட்டுள்ளதுடன், அதேபகுதியை சேர்ந்த 30வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர. இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP) மாலின் அஜந்த பெரேரா உத்தரவின் பேரில்,

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்(DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே (DCDB) சூட்சுமமாக செயற்பட்டு குறித்த மரங்களை மீட்டெடுத்துள்ளமையுடன் சந்தேக நபரையும் கைது செய்திருந்தனர்.

வவுனியா கோவில்புளியங்குளம் பாடசாலை சாதனை!!

2024ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பெருவிளையாட்டு போட்டியானது 19.06.2024. அன்று வவுனியா கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் பங்கு பற்றிய வவுனியா கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் 15 வயத்தின் கீழ் ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் வலயமட்டதில் 3ஆம் இடத்தினை பெற்று மாகாண மட்டதிற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் ஜெ.முகுந்தினி பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் மற்றும் போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கிராம மக்களும் பழைய மாணவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படசாலையானது பின்தங்கிய கிராமப்புர பாடாசாலையாக இருந்தாலும் கூட பல நிகழ்வுகள் போட்டிகள் என வலய மட்டம் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் பல பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாகப்பாம்பிடம் இருந்து உரிமையாளரைக் காப்பாற்றிய நாய்!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்று, நாகப்பாம்பு கடியில் இருந்து தனது எஜமானர் ஸ்ரீகுமாரைக் காப்பாற்றி உள்ளது.

கிட்டு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாய், ஸ்ரீகுமாரின் வழிகாட்டியாகவே துணையாக இருந்து வந்த நிஅலியில், அதன் கூண்டுக்கு அருகில் இருந்த நாகப்பாம்பை கடித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில், கிட்டத்தட்ட பார்வையற்ற ஸ்ரீகுமார், கிட்டுவின் கட்டை அவிழ்க்கச் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவர் தனது இடது பக்கத்திலிருந்து சலசலக்கும் சத்தத்தைக் கேட்டு, ஏதோ எலி ஒன்று சத்தம் போடுகிறது என்று அந்த சத்தத்தை நிராகரித்தார், ஆனால் சலசலப்பு தொடர்ந்ததால், விழிப்புடன் இருந்த கிட்டு ஏற்கனவே அதன் கோரைப் பற்கள் வெளியே இருந்த நாகப்பாம்பை நோக்கி குதித்து, பாம்பை கடித்து உயிரிழந்தது. சீரகடவு ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக ஸ்ரீகுமார் பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீகுமாரின் நிலையான தோழராக துணையிருந்து வந்த அந்த நாய் அவருக்கு, அவரது மகள் பரிசாக அளித்தது. நரம்பு பாதிப்பு காரணமாக ஸ்ரீகுமாருக்கு கண்பார்வை ஏற்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீகுமார் பொருட்களை தெளிவாகப் பார்ப்பதில் சிரமத்தை அனுபவிக்கத் தொடங்கினார்.

அறுவை சிகிச்சை என தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையிலும் அவரது வலது கண் பார்வை முழுவதுமாக முடங்கியது. அவர் கிட்டுவை மட்டுமே நம்பியிருந்து சில வேலைகளைச் செய்து வந்தார். தற்போது அவரது இடது கண்ணின் பார்வையும் குறைந்து வருகிறது.

மனைவி – பிள்ளைகளை தாக்க முயன்றவர் தீயில் கருகி பலியான சோகம்!!

எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (20) வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று (20.06) அதிகாலை 3.30 மணியளவில் மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் மண்வெட்டி ஒன்றினால் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்க முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மனைவியும் பிள்ளைகளும் உயிர் தப்புவதற்காக அயல் வீட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மது போதையில் தந்தை வீட்டில் இருந்த வேளை, திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்ட போது வீட்டின் அறையொன்றில் எரிந்த நிலையில் தந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த காதலர்களுக்கு நேர்ந்த கதி!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த காதலர்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய பெரகல வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.

நெதர்லாந்தை சேர்ந்த 29 லோனி ஹைமன்ஸ் தனது காதலனுடன் சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பெண்ணே இந்த முச்சக்கரவண்டியை ஓட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியலும நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞனும் பெண்ணும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

வீதியில் சென்ற லொறிக்கு முன் திடீரென வந்த யானை : நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பயணித்துகொண்டிருந்த லொறியை கவிழந்து, நபரொருவரை தாக்கி யானை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (19.06.2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மின்னேரியாவில் இருந்து வாழை மற்றும் பலாக்காய்களை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் எதிரில் திடீரென யானை ஒன்று வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லொறியின் சாரதி லொறியை விட்டு இறங்கித் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, யானை லொறியை கவிழ்த்து லொறியினுள் இருந்த நபரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ஹிங்குரங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.06.20) சற்று அதிகரித்து கொண்டே வருகின்றது.

அந்தவகையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 713,906 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,190 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,100 ரூபாவாகவும் அதற்கமைய 22 கரட் தங்கம் கிராம் பவுண் ஒன்று 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,050 ரூபாவாகவும் அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 176,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.