உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞ ன் பலியான சோகம்!!

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.

இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு, கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதாவது இவர் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தற்போது, இவரின் தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

இவரின் முகத்தில் முடி வளர்ந்திருப்பதை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். மீசை வளர்ந்திருக்கிறது என்றும், அழகில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால், நெட்டிசன்கள் பதிவிடும் கருத்துக்களை கண்டித்து பலரும் மாணவிக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பெண்களை பாதிக்கும் Polycystic Ovarian Syndrome காரணமாக அவர் முகத்தில் முடி வளர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவி பேசுகையில், “நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். இன்ஜினீயராக விரும்புகிறேன். IIT-JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஆசை” என்று பேசியுள்ளார்.

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் குறித்த நடவடிக்கை இன்று (24.04.2024) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சமுதாய பொலிஸ் குழுவால் குறித்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சமுதாய பொலிஸ் குழுவினரும் இதில் கலந்து கொண்டு டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

இதில் புதிய பேரூந்து நிலையம், கண்டி வீதியோரம் என்பவற்றில வீசப்பட்டிருந்த போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன அகற்றப்பட்டதுடன், நீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபர் : அதிர்ச்சியில் மாணவியின் தாய் மரணம்!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார்.

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச் சம்பவத்தில் மனமுடைந்து மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் உள்நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னாரில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!!

 

மன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது இன்று (24) காலையில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரிய வருகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண் மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக மெல்பேர்னுக்கு சென்ற இலங்கை மருத்துவ அதிகாரி ஓஷிகா விஜயகுணரத்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்திய அதிகாரி தனது கணவர் மற்றும் சிறிய மகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த நிலையில், அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சிகிச்சையின் போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்த போதிலும், புற்றுநோய் செல்கள் மீண்டும் கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மிகவும் தீவிரமானதாக இருப்பதால், கூடிய விரைவில் சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த சிகிச்கைக்காக ஒரு முறைக்கு ஒரு லட்ச டொலர் செலவிடப்படுகின்றது. அவர் ஒரு சர்வதேச மாணவி என்பதால், அவுஸ்திரேலியாவில் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் அல்லது தனியார் புற்றுநோய் காப்பீடு எதுவும் இல்லாமல் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓஷிகா விஜயகுணரத்னவின் கணவர் பணிபுரிந்து வருவதால், பிள்ளைகள் மற்றும் கல்வி காரணமாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவருக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த இலங்கையின் பால் சோறு!!

சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ‘MasterChef Australia’ சமையல் போட்டியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா பால் சோற்றை சமைத்து அதன் சுவையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பால் சோற்றை காட்சிப்படுத்திய விதம் மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார்.

அதேவேளை, அங்கிருந்த நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என பால் சோறை குறிப்பிட்டுள்ளார். சாவிந்திரி பெரேரா போட்டியில் பால்சோற்றுடன் ஸ்னாப்பர் மீனை வைத்து கித்துல் பாணியை மேலாக ஊற்றி நடுவர்களுக்கு வழங்கினார்.

அதோடு உணவை சுவைத்த நடுவர்கள் ஒரு கொண்டாட்டத்திற்கு ஒப்பிட்டனர். ‘நிஜமாகவே சிறந்த இலங்கை உணவு வழங்கியதற்காக சாவிந்திரியை பாராட்டினார்கள்.

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது மணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை எட்டு முப்பது மணியளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து ஒன்பதரை மணியளவில்  எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.

தொடர்ந்து பத்து  மணியளவில் இரதோற்சவம் இடம்பெற்று காலை பதினொரு மணியளவில்  ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன.இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் மதியம் பன்னிரண்டு  மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது.

 

பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தால் பதின்ம வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலை செய்ய குறித்த சிறுமி வந்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக சிறுமியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்… இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?

மரத்தை கட்டிப்பிடிப்பதற்கு நபர் ஒருவரின் டிக்கெட்டிற்கு ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யும் நிறுவனத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

பொதுவாகவே எல்லோருக்கும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய வாழ்க்கை முறையில் ஏதாவது ஒரு நேரத்தில் பயணமோ, ஓய்வோ எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இன்னும் சிலர் இயற்கையோடு நாம் நேரத்தை செலவழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பது உண்டு.

இந்த நிலையில், மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1,500 கட்டணத்தை பெங்களூரு நிறுவனம் ஒன்று வசூல் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,500 கட்டணம்

`A Forest Bathing Experience’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ள விளம்பரத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1,500 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் மார்க்கெட்டில் ஒரு புதிய மோசடி உள்ளது எனக் கூறியுள்ளார்.

இயற்கையோடு தொடர்புடைய ஒரு ஜப்பானிய முறைக்கு ஷின்ரின் யோகு (Shinrin Yoku) என்று பெயர். இதனை வனக் குளியல் (Forest Bathing) எனவும் அழைக்கின்றனர்.

அதாவது, வனத்திற்குள் மெதுவாக நடந்து சென்று அமைதியாகவும் நேரத்தை செலவு செய்ய வேண்டும். மேலும், மரத்தை தொட்டு பார்த்து உணர வேண்டும்.

அந்தவகையில் பெங்களூரு நிறுவனம் ஒன்று கப்பன் பார்க்கில் மரத்தை கட்டிப்பிடித்து, அமைதியான நடைபயிற்சி மேற்கொள்ள ரூ.1,500 கட்டணம் எனக் கூறியுள்ளது. இந்த நிகழ்வானது ஏப்ரல் 28-ம் திகதி காலை 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : 15000 கோடி ரூபா பெறுமதி!!

உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.

கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.

பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.

மேலும் இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை. இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்றாகும்.

தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை.. பொலிசார் தீவிர விசாரணை!!

சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு ஒரு மகனும், 6 வயது தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், தன்னுடன் வேலை செய்து வந்த சீனிவாசன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக திவ்யா வீட்டில் சீனிவாசன் இருந்து வருகிறாராம். இந்நிலையில், திவ்யா நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். சீனிவாசன், 2 பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி தேஜஸ்வினியை மயங்கியநிலையில் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திவ்யாவின் மகன் புழல் போலீஸாரிடம் கூறியதாவது: தாயார் திவ்யா வேலைக்கு சென்ற பிறகு சீனிவாசன், சிறுமியை அடித்தாராம். பின்னர், சிறுமியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கதவை அடைத்து கொண்டார்.

வெகு நேரமாக கதவு திறக்கப்படவில்லை. ஆனால்,சிறுமி அழும் சத்தம் மட்டுமேகேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து குளியலறையிலிருந்து சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் என்று சிறுவன் தெரிவித்துள்ளார்.

எனவே, சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் சீனிவாசனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கிய அக்காவும் தங்கையும் ஒன்றாக பலியான சோகம்!!

தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கேரள மாநிலம், வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடி அலவி என்பவரின் மகள்களான முபாஷிரா ( 26) மற்றும் அஜ்மலா தஸ்னி (21) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரிவித்தனர்.

வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடியைச் சேர்ந்தவர் அலவி. இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மலப்புரத்தில் இருக்கும் திருமணமான தங்களது சகோதரியின் வீட்டிற்கு முபாஷிராவும், அஜ்மலா தஸ்னியும் சென்றுள்ளனர்.

தங்கள் மூத்த சகோதரியின் வீட்டிற்கு அருகில் உள்ள கடலுண்டி ஆற்றுக்கு குளிக்க இருவரும் சென்றிருந்த நிலையில், ஆற்றில் மூழ்கியுள்ளனர். இளம்பெண் இருவர் நீரில் மூழ்கி கூச்சலிடுவதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

அவர்களது உடல்கள் மலப்புரம் அரசு தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சகோதரி வீட்டிற்கு வந்திருந்த அக்கா-தங்கை இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடுரோட்டில் மனைவியை சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்த கணவன்!!

திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர்.

ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபகாலமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம் போல் நேற்றும் காலை ரேவதி வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.

ரேவதிக்குப் பின்புறமாக வந்த சதீஷ், ரேவதியைக் காலால் எட்டி உதைத்து, கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தலையில் தாக்கத் தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ரேவதி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதில் சதீஷ் தப்பி ஓடி விட்டார். அத்துடன் ரேவதியை மீட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ரேவதியின் பாட்டி சீத்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர். மனைவியை கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பறவையை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியை குழந்தை தவறுதலாக அழுத்தியதில் இளம்பெண் பலி!!

சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக இளம்பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது அண்ணன் மகன் சதீஷ்குமார் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு ரித்திக் ஸ்ரீ (10, தனிஷ்கா ஸ்ரீ (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளர். தந்தை வீட்டில் தங்கி இருந்த தமிழரசி அடிக்கடி பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். செல்வராஜ் தனது வீட்டில் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார்.

இவற்றை அடிக்கடி கழுகுகள் தூக்கிச் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்காக ஏர்கன் ஒன்றை சரத்குமாரும், சதீஷ்குமாரும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த சரத்குமாரின் நான்கு வயது மகன் அந்த துப்பாக்கியின் ட்ரிகரை தெரியாமல் அழுத்தி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளியேறிய குண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கிக் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழரசி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து தமிழரசியின் கணவர் முருகேசன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஏர்கன்னை குண்டுடன் வைத்து விட்டு சென்றது சரத்குமாரும், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்தே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், இன்று போலீஸார் கைது செய்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அதற்கு காரணம் என சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கணவர் : 4 மாதத்தில் மனைவி தற்கொலை!!

தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷர்மிளாவை பிரவீன் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இதனால் பிரவீன் மீது ஷர்மிளா வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரவு பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தொடர் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14ம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை பிரவீன் குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷர்மிளா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.